பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோடின்

140

அயோனியக் கடல்

திரவத்துடன் கந்தகாமிலத்தையும் மாங்கனிச டையாக்சைடையும் சேர்த்து வாலைவடித்தால் அயோடின் தனியே பிரியும்.

இயல்புகள்: கருநீல வடிவான படிகங்களில் இது கிடைக்கிறது. இதன் ஆவி நீல நிறமானது. நீரில் சிறிது கரையும். குளோரோபாரம், கார்பன்டைசல்பைடு,சாராயம் முதலிய கரைப்பான்களில் இது கரையும். இது பொட்டாசியம் அயோடைடு கரைவில் மிக அதிகமாகக் கரைகிறது.

அயோடின் நேரடியாக ஹைடிரஜனுடன் கூடுவதில்லை. அனால் பாஸ்வரம், குளோரின், புளோரின் முதலியவற்றுடன் கூடும். தனி நிலையிலுள்ள அயோடின் மாப்பொருளுடன் சிறப்பான ஒரு நீலநிறத்தைத் தரும். இம்மியளவே உள்ள அயோடின் அதைப்போல் 5000.000 மடங்கு நீரிற் கரைந்திருந்தாலும் இச்சோதனையால் அதைக் கண்டறியலாம்.

பயன்கள்: இதில் பெரும்பகுதி மருத்துவத்திற்குப் போட்டோத் தொழிலிலும், சாயங்களின் தயாரிப்பிலும், சில தொழில்களில் ஊக்கியாகவும் இது பயனாகிறது.

கூட்டுக்கள்

ஹைடிரஜன் அயோடைடு (HI) : அயோடைடுகளைக் கந்தகாமிலத்துடன் வினைப்படுத்தி இதைப் பெற் இயலாது. ஏனெனில் அப்போது தோன்றும் ஹைடிரஜன் அயோடைடு ஆக்சிகரணிக்கப்பட்டுவிடும். அயோடின் கரைந்த நீருடன் பாஸ்வரத்தை வினைப்படுத்தி இதைப் பெறலாம். பல உலோகங்களின் உப்புக்களுடன் பொட்டாசியம் அயோடைடை வினைப்படுத்தி அவற்றின் அயோடைடுகளைப் பெறலாம். இவற்றுள் பல சூட்டினால் சிதையும் இயல்புள்ளவை. அம்மோனியம், பொட்டாசியம் அயோடைடுகள் மருத்துவத்திலும், வெள்ளி அயோடைடு போட்டோத் தொழிலிலும் பயனாகின்றன.

ஆக்சைடுகளும் ஆக்சி அமிலங்களும்: பின்வரும் ஆக்சைடுகளும் ஆக்சி அமிலங்களும் அயோடி னுக்கு உண்டு என அறியப்பட்டுள்ளது.

IO2 (அயோடின் டையாக்சைடு) HIO (ஹைப்போ அயோடிக் அமிலம்)
I4O9 இல்லை
I2O3 (அயோடின் பென்டாக்சைடு) HIO3 (அயோடிக் அமிலம்)

இவற்றுள் அயோடின் பென்டாக்சைடு முக்கியமானது. இது வெண்மையான படிகம். நீரிற் கரைந்து இது அயோடிக அமிலத்தைத் தரும். கார்பன் மானாக்சைடுடன் இது வினைப்பட்டால், அயோடின் வெளியாகிறது. ஆகையால் இவ்வினையைப் பயனாக்கிக் கார்பன்மானாக்சைடைக் கண்டறிய இது பயன்படுகிறது.

அயோடினின் ஆக்சி அமிலங்களில் ஹைப்போ அயோடச அமிலம் என்று ஒன்று உள்ளதா என்பதே தெளிவாக அறியப்படவில்லை. ஆகையால் அயோடிக அமிலம் ஒன்றே முக்கியமானது. அயோடின் கரைந்த நீரின் வழியே குளோரினைச் செலுத்தி இதைப் பெறலாம். இது வெண்மையான படிகம். இது சிறந்த ஆக்சிகரண இயல்புள்ளது. இதன் உப்புக்களில் பொட்டாசியம் அயோடேட்டு ஒரு வெண்மையான படிகம். இதன் கரைவு வாயைக் கொப்பளிக்கும் மருந்தாகப் பயனாகிறது. சோடியம் அயோடேட்டு முடக்கு வாதத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது. எஸ். ரா.

அயோடோபாரம் (Iodoform) : [குறியீடு CHI3) செருல்லாஸ் என்ற அறிஞர் 1822-ல் இதைக் கண்டுபிடித்தார். காரங்களையோ, காரக் கார்பனேட்டுக்களையோ ஆல்கஹாலுடன் கலந்து, அயோடினுடன் வினைப்படுத்தி அயோடோபாரத்தைப் பெறலாம். வாணிபத்திற்காகப் பெரும் அளவில் தயாரிப்பதற்கும் இதே முறை கையாளப்படுகிறது, பொட்டாசியம் அயோடைடுக் கரைவில் தேவையான அளவு ஆல்கஹாலையோ அசிட்டோனையோ கலந்து மின்பகுப்பால்இதைப் பெறுவது மற்றொரு முறை.

இது சிறப்பான மணமுள்ள மஞ்சள்நிறத் திண்மம். இதன் உருகுநிலை 119°. இது நீரில் கரையாது. ஆனால் ஆல்கஹாலிலும் ஈதரிலும் கரையும். வெளிச்சத்தில் இது காற்றுடன் வினைப்பட்டுச் சிதைகிறது. காயங்களுக்கு இது நச்சுநீக்கியாகப் பயனாகிறது. உயிர்ப் பொருள்களில் இது பட்டால் அயோடின் வெளிப்படுகிறது. அயோடின் பாக்டீரியாவை அழிக்கிறது. அயோடோபாரம் கெட்ட நாற்றமும், நச்சுத் தன்மையும் உள்ளதாகையால், இதற்குப் பதிலாக வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீ. பா.

அயோத்தி இராமன் பிறந்த நகரம் என்றும், ஏழு முத்தித்தலங்களுள் ஒன்று என்றும் கூறுவர். இது கோக்ரா நதியின் கரையில் பைஜாபாத்துக்கு அருகில் இருக்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் இராம நவமி விழாவுக்கு ஐந்திலட்சம் மக்கள் வருவர். அயோத்தி மாகாணமாக இருந்தது; இப்போது உத்தரப் பிரதேச இராச்சியத்தில் சேர்ந்துளது. இங்கு ஜைனக் கோவில்களும் பாபர் மசூதியும் உள்ளன.

அயோத்தியாசிங் உபாத்தியாயா (1865-1948) இந்தி எழுத்தாளர். இவர் உத்தரப் பிரதேசத்திலுள்ள நிஜாமாபாத் என்னும் ஊரிற் பிறந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தபின் இவர் சொந்த ஊரிலேயே பள்ளி ஆசிரியரானார். அப்போது இவருக்குச் சூமர்சிங் என்ற சாதுவிடம் தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவருக்கு இந்தி இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது. ஆங்கிலத்திலிருந்தும் உருதுவிலிருந்தும் இவர் பல நூல்களை மொழிபெயர்த்தார். பின்னர்ச் சட்டக்கல்வி பெற்று நீதிபதியாக வேலை பார்த்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் இவர் 1923-ல் காசிப் பல்கலைக் கழகத்தில் இந்திப் பேராசிரியரானார். அகில இந்திய இந்திக் கழகம் இவருக்குப் பரிசளித்துப் பாராட்டிற்று. சமூகச் சீர்திருத்தத்திலும் இவர் ஆர்வங் கொண்டிருந்தார். உருது, பாரசீகம், வடமொழி ஆகிய மூன்றிலும் இவர் புலமை பெற்றிருந்தார். பி .வெ. ச.

அயோனியக் கடல் இத்தாலிக்கும் கிரீசின் தென்பகுதிக்கும் இடையேயுள்ள மத்தியதரைக் கடற்பகுதி; ஆட்ரான்ட்டோ ஜலசந்தி இக்கடலுக்கும் ஏட்ரியாடிக் கடலுக்கும் இடையே உள்ளது. கிரீசின் மேலைக் கடற்கரையில் இக்கடல் குடைந்துள்ள பெரிய உள்வாய்தான் காரிந்த் வளைகுடா என்பது. சிசிலிக்கும் கிரீசின் தென்பகுதியான மாட்டபான் முனைக்கும் இடையே 420 மைல் தூரம் இருக்கிறது. புராதன

கிரேக்கக் கதைகளில் சொல்லப்பட்டுள்ள அயோ என்பவள் பெயரால் இக்கடல் பெயரிடப் பெற்றது. அயோவை ஜூபிட்டர் ஓர் எருமையாக மாற்றிவிட்டான். தன்னைக் கடிக்க வந்த ஓர் உண்ணியின் தொந்தரவைத் தாங்கமாட்டாமல் அயோ இக்கடலைக் கடந்து நீந்திச் செல்ல முயன்றதால் இக்கடல் இப்பெயர் பெற்றது என்பது கிரேக்கக் கதை.