பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அர்பன்

144

அரக்கு

இப்பிளவு சுமார் 50 ஆண்டுகளுக்குத் தொடர்ந்திருந்தது. VII-ம் கிளமென்டை அர்பன் சமயவரம்பினின்று நீக்கினார். 1381-ல் சார்லஸ் என்னும் துராசோ மன்னனால் சிறையிடப்பட்ட VI-ம் அர்பன் ஜெனோவாவிற்குத் தப்பியோடினார். 1389-ல் ஒரு கோவேறு கழுதை மீதிருந்து கீழே விழுந்ததால் உண்டான காயங்களால் இறந்தார்.

அர்பன் VIII (1568-1644) 1623 முதல் 1644 வரை போப்பாக இருந்தார்; உற்றார் உறவினர்களுக்கு அதிகச் சலுகை காட்டியதாக இவர்மேல் புகார் ஏற்பட்டது. பிரெஞ்சு கார்டினலும், அரசியல் நிபுணருமான ரிஷலூ இவர் கொள்கைகளை எதிர்த்தார். முப்பது ஆண்டுப்போரில் இவர் பிரான்சை யாதரித்தார்.

அர்ஜுனர் (? 1606) அமிருதசரசில் இருந்த சீக்கிய மதகுரு. இராமதாசர் என்னும் குருவின் குமாரர். இவர் 1581-1606 வரை மதகுருவா யிருந்தார் ; அமிருதசரசில் சீக்கியர்களுடைய பொற்கோவிலைக் கட்டி முடித்தார். 1604-ல் சீக்கியப் புண்ணிய நூலாகிய ஆதிகிரந்தம் எழுதிப் பூர்த்தி செய்யப்பட்டது. இவர் காலத்தில் சீக்கிய மதம் அதிகமாகப் பரவத் தொடங்கிற்று. இவர் பிற மதத்தவர்களை அவமதிப்பதாகச் சிலர் அக்பரிடம் குறை கூறினர்; ஆயினும் அப்பேரரசன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஜகாங்கீருக்கும் அவன் மகன் குஸ்ருவிற்கும் நடந்த தகராற்றில் குஸ்ருவின் நிலைக்கு வருந்திய அர்ஜூனர் ரூபாய் 5.000 அவனுக்கு உதவியளித்தார் (1606). இதனால் சினமடைந்த ஜகாங்கீர் குஸ்ருவை யடக்கிய பிறகு அர்ஜுனருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தான். அர்ஜூனரின் சீடர்கள் அத்தொகையை யளித்துவிட முன்வந்தார்களாயினும் குரு அதற்கு இணங்கவில்லை. ஆகையால் ஜகாங்கீர் குரு அர்ஜுனரை லாகூரில் சித்திரவதை செய்து கொல்லுவித்தான். தே. வெ. ம.

அரக்கர்: இவர்கள் இராட்சதர் என்றும் கூறப்படுவர்; பதினெண் கணங்களில் ஒருவகையினர்; அசுரரின் வேறானவர். புலத்தியர் மரபினரென்று ஒரு சாராரும், காசிபர் மகன் ரட்சஸ் என்பவனுடைய மரபினரென்று விஷ்ணு புராணத்தாரும், பிரமன் கடல்களைப் படைத்து, அவற்றை இரட்சிக்க இவர்களைப் படைத்தானென்று வான்மீகியும் கூறுவர். இவர்கள் முனிவர்களுக்குத் துன்பமுண்டாக்கியும் வேள்விகளை யழித்தும் வந்தன ரென்றே புராணங் கூறும்.

அரக்கான் பர்மாவில் ஒரு மாகாணம் ; வங்காளக் குடாக்கடலின் வடகிழக்கு ஓரத்தில் உள்ளது. இது அக்கியாபு, வட அரக்கான் மலைப்பிரதேசம், சாண்டோவே, கியாக்ப்யூ என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. பரப்பு: சு. 16,000 மைல். 1826-ல் 1 இலட்சம் மக்கள் தொகையே யிருந்தது; 1941-ல் 11.86 738 ஆக மிகுந்துவிட்டது. இங்குள்ள யோமா மலைகள் முக்கியமானவை.நன்செய்ச் சாகுபடியே பெரும்பாலும் நடைபெறுகிறது. பழங்கள், மிளகாய், புகையிலை முதலியவை சிறு அளவில் கிடைக்கின்றன. அரக்கான் மக்கள் தங்கள் நாட்டு வரலாறு மிகப் பண்டையது என்று கூறிக்கொள்கிறார்கள்; இதற்கு வேறு சான்று இல்லை. இப்பிரதேசம் முதலில் போர்ச்சுகேசியர்களுக்குச் சொந்தமாயிருந்தது; பிறகு 1826 லிருந்து ஆங்கிலேயர் வசமிருந்தது. இந்நாட்டு மக்களுக்குத் தனி மொழியும் பழக்கவழக்கங்களும் உண்டு. பெரும்பான்மையோர் பௌத்த மதத்தினர். அரக்கான் என்னும் நகரம் முதலில் தலைநகரமாயிருந்தது; பிற்காலத்தில் அக்யாபு முக்கிய நகரமாயிற்று.

அரக்கு: அரக்கு என்பது ஓர் இயற்கைப் பிசின் லாக்கிபெர் லாக்கா (Laccifer Lacca) என்ற ஒரு வகைச் சிறு பூச்சியின் உடலிலிருந்து கசியும் திரவம் உறைந்து அரக்காகிறது. அரக்குப் பூச்சிகள் இலட்சம் இலட்சமாகக் குடியேறுவதிலிருந்து இதன் வடமொழிப் பெயர் லட்சம் அல்லது லாஹ் என்று தோன்றியதாகக் கருதுகின்றனர்.

அரக்குப் பூச்சி (Lac insect) : அரக்குப் பூச்சிகள் மூட்டைப் பூச்சி வரிசையில் காக்சிடீ குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை குஞ்சுகளாயிருக்கும்பொழுது சுமார் 1/50 அங்குலம் நீளமும், 1/150 அங்குலம் குறுக்களவும் உள்ளவையாக இருக்கும். நன்றாக முதிரும் பொழுது 1/8 அங்குலம் குறுக்களவுள்ள உருண்டை வடிவாகவோ, முட்டை வடிவாகவோ இருக்கும். இப்பூச்சிகள் சிலவகை மரங்களிலேயே குடியேறி உயிர்வாழ்கின்றன. தாவரங்களுள் பூவன், இலந்தை, பலாசு,காசுக் கட்டி, ஜாலாரி, துவரை முதலியவை முக்கியமானவை.

பயிரேற்றுதல் : அரக்குப் பூச்சிகள் இம்மரங்களில் இயற்கையாகவே குடியேறலாம். அல்லது செயற்கையில் குடியேற்றப்படலாம். பர்மாவிலும் சயாமிலும் இயற்கையாகவே அரக்குப் பயிராகிறது. இம்முறையில் அரக்குச் சேகரிப்பவர் தேவையானபொழுது பயிரைவெட்டி எடுப்பதைத் தவிர வேறு ஒருவித முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் இரண்டுமுறைகளும் கையாளப்படுகின்றன. அரக்குப் பூச்சிக் குஞ்சுகள் மிகச்சிறியவை யாகையாலும், தமது முயற்சியாலேயே ஊர்ந்து செல்லவேண்டி இருப்பதாலும் வெகு தூரம் செல்ல இயலுவதில்லை. இதனால் இயற்கையாகக் குடியேறும்பொழுது ஏற்கனவே பயிரான மரக்கிளைகளிலேயேதான் மீண்டும் குடியேறுகின்றன. தக்க வசதியுள்ள கிளைகள் கிடையாமல் பல பூச்சிகள் மடிந்தும் போகின்றன. இதைத் தவிர இப்பூச்சிகளின் பகைகள் இவற்றை அழிக்கலாம். மரங்களின்மேல் ஒட்டுண்ணிகளாக வாழும் இப்பூச்சிகள் ஒரே இடத்தில் பொருந்தியிருப்பதால் மரங்களுக்கு விரைவில் நாசம் விளைகிறது. இக்காரணங்களினால் இயற்கை முறையைவிடச் செயற்கைக் குடியேற்ற முறையே சிறந்தது. இம்முறையில் அரக்குப் பயிர் செய்வோர் குஞ்சுகள் வெளிவர நான்கைந்து நாட்களுக்குமுன் அரக்கைத் தாங்கி நிற்கும் கிளைகளை வெட்டி எடுத்து, இவற்றுள் நல்ல நிலையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து, முன்கூட்டியே தயார் செய்திருக்கும் மரங்களின்மேல் தேவையான அளவுக்கு ஆங்காங்கே கட்டுவார்கள். குஞ்சுகள் வெளிவந்தவுடன் அருகிலுள்ள இளங்கிளைகளில் குடியேறும்.

அரக்குப் பூச்சிகளின் வாழ்க்கை : இப்படிக் குடியேறும் குஞ்சுகளில் சராசரி 70% பெண்ணும், 30% ஆணுமாக இருக்கும். இவை ஊர்ந்து சென்று, இளங்கிளைகளின் மேல்தோலில் குழாய் போன்ற தமது வாயினால் குத்தி, அவ்விடங்களில் ஒட்டிக்கொண்டு, அக்கிளைகளின் வழியே வரும் மரச்சாற்றை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. தமது பாதுகாப்பிற்காக இவை உடலிலிருந்து பிசின் போன்ற பொருளை வெளிவிட்டுத் தம்மைச் சுற்றிலும் கூடுபோல் கட்டிக்கொள்கின்றன. குடியேறிய சில மாதங்களில் ஆண் பூச்சிகள் மீண்டும் வெளிக்கிளம்பிப் பெண்பூச்சிகளைச் சினைப்படுத்திவிட்டு, மூன்று நான்கு நாட்களில் இறந்து போகின்றன. பெண் பூச்சிகள் முதலில் குடியேறிய இடங்களிலிருந்து நகருவதே இல்லை. ஆண் பூச்சிகள் மடிந்தபின் பெண் பூச்சிகளின் உடல்களிலிருந்து இன்-