பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கம்

146

அரங்கு, கொட்டகை அமைப்பு

முதலியார், திருமணம் செல்வக்கேசவராய முதலியாரவர்களின் தந்தையாரான சுப்பராய முதலியார் ஆகியோரிடம் தமிழ் கற்றுச் சிறந்தார்; கச்சிக்கலம்பகம் என்னும் நூலை யியற்றினார்.

கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக இருந்தாலும், எல்லாத் துறையிலும் சிறப்புற்று விளங்கினார். இவர் காலத்தில்

பூண்டி அரங்கநாத முதலியார்
உதவி: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

உயர் நீதிமன் றத்திலே தலைவராக இருந்த திருவாரூர் முத்துசாமி ஐயரவர்களும் வியக்கும்படி சிக்கலான ஒரு வழக்கை ஒரு நள்ளிரவிலேயே படித்து விட்டுத் தீர்ப்பெழுதிக் கொடுத்தார். சென்னை உயர்நீதி மன்றத்திலே முதன் முதல் ஷெரீப் ஆக நியமிக்கப்பட்ட இந்தியர் இவரே. கல்வி, பூண்டி அங்கநாத முதலியார் சமூகச் சீர்திருத்தம், பெண்கள் முன்னேற்றம் அரசியல் முதலியவற்றைப் பற்றி இவர் முக்கால் நூற்றாண்டுக்குமுன், கட்டுரைகளின் மூலமாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் வெளியிட்ட அரிய கருத்துக்கள் இன்றும் சிறந்தனவாகவே இருக்கின்றன.

அரங்கம் : பார்க்க : ஸ்ரீரங்கம்.

அரங்கு, கொட்டகை அமைப்பு (Stage and Theatre design): அரங்கு என்பது நாடகமோ, நடனமோ நடைபெறும் மேடை. மக்கள் உட்கார வசதியையும், அரங்கையும் கொண்ட கட்டடம் கொட்டகை எனப்படும். திறந்த வெளியில் ஒரு சிறு மேடையை அமைத்துத் தெருக்கூத்து நடத்தும் இடத்திலிருந்து நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களிலுள்ள மிகப் பெரிய கொட்டகைகள் வரை பலவேறு வகையான அரங்குகளும், கொட்டகைகளும் உண்டு. சினிமா என்னும் பொழுதுபோக்கு வகை தோன்றியபின் இதற்காகவும் பல கொட்டகைகள் தோன்றியுள்ளன.

பழங்கால இந்தியா : பழங்காலத்தில் கிராமங்களில் திறந்த வெளியில் நாடகங்கள் நடத்தப்பட்டன. கோயில்களில் அபிநயத்திற்குரிய அரங்கு கூத்தம்பலம் என அழைக்கப்பட்டது. நாடகசாலை என வழங்கிய பழங்கால நாடகக் கொட்டகையின் அமைப்பு, அக் காலத்தவரது கருத்தைப் பெரிதும் கவர்ந்திருந்தது. என்பதற்குச் சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் நூல்களும், பரதருடைய நாட்டிய சாஸ்திரம் போன்ற வட மொழி நூல்களும் சான்றாகும். இந்நூல்களில் அரங்கிற்கும், நாடகசாலைக்கும் மிக விரிவான இலக்கணம் கூறப்பட்டுள்ளது. (பரதர் விவரிக்கும் மூன்றுவகை நாடகசாலைகளைப்பற்றி, நாடகம்-சமஸ்கிருத நாடகம் என்ற தலைப்பில் பார்க்க.)

நகரத்தின் மையமாகவும், பலர் வந்து கூட ஏற்றதாகவும், தேரோடும் வீதிகளுக்கு எதிராகவும் உள்ள இடத்தில் நாடகசாலை அமைக்கப்படவேண்டும். அது தக்க காவல் உள்ளதாக இருக்கவேண்டும். நாடக சாலையை அமைக்கும் நிலத்தின் தன்மையையும் பழங்கால நூல்கள் திட்டமாக வரையறுத்தன. நுண்ணியதும், உறுதியுடையதுமான மண்ணின் மேலேயே நாடகக் கொட்டகையை அமைக்கலாம். அம்மண் நறுமணமும், இன்சுவையும் உடையதாக இருக்கவேண்டும். நாடகசாலையின் தரை சமதளமாகச் சீராக இருக்க வேண்டும். நாடகசாலை தெய்வங்கள் கூடுமிடம், முனிவரது உறைவிடம், பறவைகளின் இருக்கை, பாம்புப்புற்று, யானைகளையும் குதிரைகளையும் கட்டும் கூடங்கள், போர்வீரர் யுத்தப் பயிற்சி செய்யும் இடங்கள் முதலியவற்றிற்கு அருகில் இருந்தால், அவை நாடகத்திற்கு இடையூறாகவும், நாடகம் அவற்றிற்கு இடையூறாகவும் அமையும்.

இவ்வளவையும் மனத்திற்கொண்டு அமைக்கப்பட்ட நாடகசாலையில் நேபத்தியம், அரங்கு, காணுநர் இருக்கை என்ற மூன்று பகுதிகள் இருக்கும். அவற்றுள் நேபத்தியம் என்பது நாடகத்திற்கு வேண்டிய இசைக் கருவிகளும், அவற்றை இசைப்போரும், வேடம் புனையத் தேவையான ஆடை, அணிகலன்களும் உள்ள இடம். அவையோர் அறியாது நடிகர்கள் வேடமணியவும், அரங்கை அடையும்வரை மறைந்திருக்கவும் அதில் வசதி இருக்கும்.

நாடகசாலையின் முகம்போல அதன் அரங்கு அமைந்திருக்கும். அது உயரமானதும் சமதளமானதுமான மேடை. ஆதியில் அரங்கில் வர்ணத்திரைகளும், மற்றக் கருவிகளும் இருக்கவில்லை. அழகிய பல திரைகளையும், எந்திர வசதிகளையும், சூரியவொளியையொத்த பிரகாசமான ஒளியமைப்பையும் உடைய அரங்கு பிற்காலத்தில் தோன்றியது. அரங்கில் தூண்களின் நிழல் விழாத வகையில் விளக்குக்களை அமைக்கவேண்டும். அரங்கானது கைப்பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட ஒரு முழு அளவு கோலால் ஏழு கோல்கள் அகலமும், எட்டுக் கோல்கள் நீளமும், ஒரு கோல் குறட்டின் உயரமும் கொண்டிருக்க வேண்டும். உத்தரத்திலுள்ள பலகைக்கும் அரங்கில் அகலவாட்டாக உள்ள பலகைக்கும் இடையே நான்கு கோல் உயரமிருக்கவேண்டும். அரங்கினுள் நுழையவும், வெளியே செல்லவும், அதில் இரு வாயில்கள் இருக்கவேண்டும். அரங்கின் இடப்புறத்திலுள்ள தூணிலிருந்து ஒருமுக எழினியும், வலப்புற முள்ள இரு தூண்களிலிருந்து நெருங்கி வருமாறு அமைந்த பொருமுக எழினியும், மேலே மறைந்திருக்குமாறு அமைக்கப்பட்டுத் தேவையானபோது கீழிறக்கப்பட்ட கரந்துவரல் எழினியும் அமைக்கப்பட்டன.

காணுந ரிருக்கை, அரங்கில் நிகழும் அனைத்தையும் வசதியாக இருந்து பார்க்க ஏற்றவாறு காண்போரது தரத்திற்குத் தக்கபடி அமைந்த ஆசனங்களைக் கொண்டிருக்கும். இதில் அரசரும், அரச குடும்பத்துப் பெண்களும் அமரும் அவையரங்கமும், அதைச் சுற்றிலும் பொதுமக்கள் அமரும் பகுதியும் இருக்கும். இப்பழங்கால அரங்கு அமைப்பு முறை அக்காலத்திய நாடகக் கலையின் மேம்பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது.

பழங்கால ஐரோப்பா : பழங்காலக் கிரேக்க நாடகங்கள் கோயில்களினருகே நடத்தப்பெற்றன. நாடகத்தில் இசையும் நடனமுமே பிரதானமாக இருந்ததால், அக்காலத்திய அரங்கு வட்ட வடிவும் சமதளமுமான நிலமாக இருந்தது. இந்த நடனமேடை ஆர்க்கெஸ்ட்ரா என அழைக்கப்பட்டது. இதிலிருந்து இசைக் கருவிகளைக்கொண்டு இசை கூட்டும் குழுவிற்கே இப்பெயர் இக்காலத்தில் வழங்குகிறது. அதனருகே இருந்த மேடு ஒன்றில் மக்கள் இருந்து நாடகம் பார்த்தனர். சாதாரணமாக ஒரு சிறு குன்றினருகே அரங்கை அமைப்பது வழக்கம். நாடகத்தைப் பார்க்க மக்கள் குன்றின்மேல் கூடினர். பிற்காலத்தில் இக்குன்றையே படிப்படியாக