பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கு, கொட்டகை அமைப்பு

148

அரங்கு, கொட்டகை அமைப்பு

திலும் சீனாவில் பழங்கால மரபுகள் கையாளப்பட்டு வருகின்றன. சீன நாடகக் கொட்டகை தனது அமைப்பில் எலிசபெத் காலத்திய ஆங்கிலக் கொட்டகையை ஒத்தது. ஆனால் கொட்டகை முழுதிற்கும் கூரை இருக்கும். அரங்கு எளிய அமைப்புள்ளதாகவே இருக்கும். அரங்கின் பின்புறத்தில் சித்திரத் தையலினால் அலங்கரித்த சீலையொன்று தொங்கவிடப்பட்டிருக்கும். நடிகர்கள் இதன் இடமாகவும் வலமாகவும் அரங்கிற்கு வருவார்கள். அரண்மனைக் கொட்டகைகளில் அரச குடும்பத்தார் அமரும் உப்பரிகைகளும், பொதுமக்கள் நிற்கும் குழியும் இருந்தன.

ஜப்பானில் நாடகங்கள் நடைபெறும் அரங்கு மரத்தினாலான மேடை. இதன் மேலுள்ள கூரையை நான்கு தூண்கள் தாங்கி நிற்கும். மூன்று பக்கங்களில் இது திறந்திருக்கும். இதன் பின்புறத்தில் மட்டும் தேவதாரு மரத்தின் சித்திரத்தையுடைய திரையொன்று இருக்கும். அரங்கின் வலப்புறத்தில் குறுகிய உப்பரிகையொன்று இருக்கும். இதை மூன்று தேவதாரு மரங்களின் சித்திரம் அலங்கரிக்கும். இம்மரங்கள் புவியையும், வானத்தையும், மக்களையும் குறிக்கும். இசைக் கருவிகளை வாசிப்பவர்கள் அரங்கின் பின்புறத்திலும், பின்னணிப் பாடகர்கள் அரங்கின் இடப்புறத்திலும் இருப்பது வழக்கம். காபூகி என்ற நாடகங்கள் விரிவான அமைப்புள்ள அரங்கில் நடைபெறும். இந்த அரங்கு ஐரோப்பிய அரங்கைவிடப் பெரிதாகவும், சுழலும் அரங்குகள் போன்ற எந்திரச் சாதனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். அரங்கிற்கு நீளவாட்டமாகப் பூஞ்செடிகளால் அலங்கரிக்கப்பட்ட பாதை யொன்று உண்டு. இது ஊர்வலம் முதலிய நிகழ்ச்சிகளுக்கும், நடிகர்கள் அரங்கிற்கு வரவும் ஏற்றவாறு அமைந்திருந்தது.

தற்காலக் கொட்டகை : படச் சட்டத்தைப் போன்ற முகப்பையுடைய அரங்கும், குதிரை லாட வடிவான ஆசன வரிசைகளும் பல உப்பரிகைகளும் கொண்ட கொட்டகை தற்காலத்தில் மாற்றி யமைக்கப்பட்டு விட்டது. பழங்கால அமைப்பில் உப்பரிகையில் உள்ளவர்களும், வரிசையின் கோடிகளில் இருப்பவர்களும் அரங்கு முழுவதையும் நன்கு பார்க்க முடியாமல் இருந்தது. இதற்குப் பதிலாக ஆசனங்களின் வரிசை படத்திலுள்ளது போல் அமைக்கப்படுகிறது. கொட்டகையின் தரை அரங்கிலிருந்து சாய்வாக இருப்பதால், முன் வரிசையிலுள்ளோர் பின் வரிசையிலுள்ளோர்க்கு அரங்கு சரி வரத் தெரியாமல் மறைப்பதில்லை. சமூகத்தில் ஜன நாயகக் கருத்துக்கள் பரவியபின் கொட்டகையின் அமைப்பும் மாறியது. செல்வர்கள் சிலருக்காகப் பிரத்தியேகமாக இருந்த தனி அறைகள் மறைந்தன. தற்காலக் கொட்டகையின் பின் புறத்தில் ஒரே ஒரு உப்பரிகை மட்டும் இருக்கும். இரும்பையும் கான்கிரீட்டையும் பயன்படுத்தும் கட்டட முறைகளால் தூண்களே இல்லாமல் கொட்டகையை அமைக்க முடிகிறது. அரங்கிற்குள் நடைபெறும் நாடகம் காண்போரது உள்ளங்களையும், நடிகர்களது உணர்ச்சிகளையும் ஒருமைப்படுத்தி, அங்கு நடைபெறுவது செயற்கை நிகழ்ச்சி என்ற எண்ணத்தையே மறக்கச் செய்ய வேண்டும். ஆனால், படச் சட்டத்தையொத்த முகப்புள்ள அரங்கு உள்ளவரை இது இயலாது எனச் சிலர் கருதுகின்றனர். அத்தகைய அரங்கை அமைப்பதிலும் சிலர் வெற்றிபெற்றுள்ளனர். வேறு புதுவகை அமைப்புள்ள கொட்டகைகளை அமைக்கப் பல அறிஞர்கள் திட்டம் வகுத்துள்ளனர். அமெரிக்க நாடக அரங்கு அமைப்பில் பெரு மாறுதல்களுக்குக் காரணமாக இருந்த நார்மன் பெல் கெட்டெஸ் (Norman Bel Geddes) என்ற அறிஞரது திட்டத்தில் கொட்டகையின் ஒரு மூலையில் முக்கோண வடிவான அரங்கு இருக்கும். பெரிய கும்மட்ட வடிவான கூரையின் கீழ் அரங்கும், காண்போரது ஆசனங்களும் இருக்கும். காட்சி மாற்றத்தின்போது அரங்கு, தரைக்குக்

தற்காலக் கொட்டகையும் அரங்கும்
அ–அரங்கு
ஆ–ஆசனங்கள்

கீழே தாழ்ந்து மீண்டும் மேலே வரும். ஆஸ்தீரிய அறிஞர் ஆஸ்கர் ஸ்ட்ரினாடு (Os ker Strinad). என்பவரது திட்டத்தில் கொட்டகை வட்டவடிவாக இருக்கும். காண்போரது ஆசனங்கள் அதன் மையத்தில் அமைந்திருக்கும். அரங்கு ஒரு பெரிய வளையம் போன்ற அமைப்புடன் சுழல ஏற்றவாறு இருக்கும். இந்த வளையம் சுழன்று, அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காட்சியைக் காண்போருக்கு முன் கொண்டுவரும். இத்தகைய பலமுயற்சிகளி லிருந்தே வருங்கால நாடகக் கொட்டகை தோன்றவேண்டும்.

சினிமாக் கொட்டகை அங்குக் காட்டப் பெறும் காட்சிக்கு ஏற்பச் சில மாறுதல்களுடன் அமைந்திருக்கிறது. இதில் குறைவான இடத்தில் மிகப் பல ஆசனங்களை அமைக்க வேண்டியிருப்பதால் இதை மிக நீளமாக அமைக்கத் தொடங்கினார்கள். இதை மிக அகலமாகக் கட்டினால், இரு பக்கங்களிலும் கோடியில் இருப்பவர்களுக்குப் படக்காட்சி விகாரமாகத் தெரியும். இதனால் இக்கொட்டகைகளில் ஒன்றன்மேலொன்றாக உள்ள உப்பரிகைகள் ஏற்றவை. கொட்டகைக்குள் நுழையும் கூடத்திற்குமேல் உள்ள காலி இடத்தில் சிற்றுண்டிச்சாலையையும் தாவன அறைகளையும் (Water closets) அமைக்கிறார்கள். 1927-ல் பேசும் படம் தோன்றியபின் சினிமாக் கொட்டகையின் அமைப்பு மேலும் மாறியது. கொட்டகையிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒலியானது தெளிவாகக் கேட்கும் வகையில் கட்டடத்தின் அமைப்பும், ஒலிபெருக்கிகளின் அமைப்பும் இருக்கவேண்டும். கொட்டகை நல்ல மேளக்கட்டுடன் இருக்கவேண்டுமானால், அது ஏறக்குறைய மனித மண்டையோட்டின் வடிவமாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் சினிமாக் காட்சி குறிப்பிட்ட காலங்களில் மட்டுமல்லாமல் 12 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆகையால், மக்கள் கொட்டகைக்குள் எந்நேரத்திலும் சென்று, தேவையானபோது வெளியே செல்வார்கள். ஆகையால், ஒருவர் உள்ளே வரும்போதும், வெளியே போகும்