பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியலமைப்புப் பற்றிய சட்டம்

159

அரசியற் கட்சிகள்

மிகச் சில திருத்தங்களும் மட்டுமே காணப்படுகின்றன.

அரசியலமைப்புக்களை வேறு பலவகையாகவும் பகுக்கலாம். இப்போது. எங்கும் சமூகங்கள் ஜனநாயகத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு விட்டதால், முடியரசு, பிரபுத்துவம், ஜன நாயகம் என்று இதுவரை கூறிவந்த பாகுபாடுகள் இன்று நடைமுறையில் பொருளற்றுப் போயின.

ஜனநாயக அரசாங்கங்கள் இக்காலத்தில் சட்டசபை வகை என்றும், ஜனாதிபதி வகை என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. முந்திய வகையில், தேர்ந்தெடுக்கப் பெற்ற சட்டசபைக்குப் பொறுப்புள்ள மந்திரிசபையால் அரசாங்கம் நடத்தப்படுகிறது. பிந்திய வகையில், அரசாங்க அதிகாரம் சட்டசபைக்குப் பொறுப்பு வாய்ந்ததாக இல்லாத நிருவாகத்தின் கையில் உள்ளது. இங்கிலாந்தும் இந்தியாவும் முந்தியதற்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகள் பிந்தியதற்கும் எடுத்துக்காட்டுக்கள். அமெரிக்க - ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பை வகுத்தவர்கள் முற்கூறிய மூன்று அரசாங்க அதிகாரங்களைப் பிரிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்களா யிருந்தபடியால், அரசியலை ஜனாதிபதி வகையில் அமைத் தார்கள். ஆனால், அரசாங்க அதிகாரங்களை முற்றிலும் தனியாகப் பிரித்துவிட முடியாது என்பது அனுபவத்திலிருந்து தெரியவருகிறது. அதிகாரப் பிரிவினைக் கொள்கை என்பது, அரசியல் நிருவாகம் நடத்துவோர், சட்டம் செய்வோர், நீதிவழங்குவோர் ஆகிய இவர்கள் தமது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தாதிருக்கும் படி அதற்கு வேண்டிய தடைகளை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட உபாயம். இதுவே இதன் முக்கியத்துவமாகும்.

அரசியலமைப்புக்களை ஒற்றையாட்சி அரசியலமைப்பு (Unitary constitution) என்றும், கூட்டாட்சி அரசியலமைப்பு (Federal c.) என்றும் பகுப்பதுண்டு. முந்தியதில், அரசாங்க அதிகாரம் அதா வது சட்டம் செய்யும் அதிகாரமும், அரசியல் நிருவாக மும் ஓரிடத்தில் இருக்கும். பிந்தியதில் சில அதிகாரங்கள் இராச்சிய அரசாங்கத்திடழும், மற்றவை மத்திய அரசாங்கத்திடமும் இருக்கும். இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சியாகும். அரசியலமைப்பு எழுதப்பட்டதாக இருக்கும் நாடுகளில்கூட அரசாங்கம் நடைபெற வேண்டிய முறையை வகுக்கும் விதிகள் அனைத்தும் எழுதப்பட்டிரா. எழுதப்படும் விதிகளுடன், அவற்றை அமல் நடத்த வேண்டிய முறைகளைப் பற்றி எழுதப்படாத வழக்கங்கள் பல நாளடைவில் தோன்றி நிலைத்துச் சட்டத்துக்கு நிகரான வலுப்பெற்றிருக்கும். இத்தகைய வழக்கங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இங்கிலாந் தில் அரசருக்குள்ள வீட்டோ (Veto) அதிகாரமாகும். சட்டசபை இயற்றும் எந்தச் சட்டத்தையும் வேண் டாம் என்று நிராகரிக்கும் அதிகாரம் சட்டபூர்வமாக அரசர்க்கு இருப்பினும், 1704 முதல் இங்கிலாந்து மன்னர் யாரும் அதைச் செலுத்தியதில்லை.

இராச்சியம் இருப்பது குடிகளுடைய பொது நலனைப் பெருக்குவதற்காகவே என்றாலும், ' பொது நலன்' என்னவென்பது பற்றி நாட்டுக்கு நாடு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அரசாங்கத்தின் வேலைகளும் கடமைகளும் நாளடைவில் மாறிவருகின்றன. இவ்வுண்மையை அந்தந்த நாட்டின் அடிப்படை நோக்கங்களை உருவாக்கும் அரசியலமைப்பில் காணலாம். மேலும் அரசியலமைப்பு, பொதுச் சமூகத்தின் பொருளாதார அமைப்பையும், மக்களின் சொத்து நிலைமையையும், மக்கள் கூட்டத்தின் உறுப்புக்களின் அமைப்பையும், கல்வி நிலையையும், பண்பாட்டு வகையையும், பெரும்பான்மையான மக்களின் சாதி பேதங்களையும், மதத்தையும், அவர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் வகையையும், அவர்களிடையிருக்கும் ஒருமை யுணர்ச்சியையும் பொறுத்ததாக இருக்கிறது. இத்த கைய காரணங்களால் அரசியலமைப்புக்கள் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் மாறுபடக் கூடும். ஒரு நாட்டின் அரசியலமைப்பு, குறிப்பிட்டகாலத்தில் அதன் நலத்தையும் முன்னேற்றத்தையும் வளர்ப்பதாக இருந் தால் மட்டும் போதாது. வருங்காலத்தின் புதுத் தேவை களுக்கேற்பப் புரட்சியின்றி எளிதில் மாற்றி அமைத் துக் கொள்ளும்படியும் இருப்பது நன்று.

அரசியற் கட்சிகள்: பண்டை நாட்களிலிருந்து ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் கட்சிகள் இருந்துவந்திருக்கின்றன ; எனினும், அவற்றைத் தம் கால அரசியல் கட்சிகளுடன் ஒப்பிட முடியாது. அவை தலைமை ஸ்தானத்திற்காகப் போட்டியிட்ட சில குடும்பங்களையும் தலைவர்களையும் ஆதரித்துவந்த கூட்டங்களே. தற்கால அரசியல் கட்சிகள், கொள்கை வேறுபாட்டால் எழுபவை. பிரதிநிதித்துவ அரசியல் தோன் றிய பின்னரே அவை ஏற்பட்டன. சட்டசபைகளில் ஒரேவிதமான கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்ட அங்கத்தினர் கள் ஒத்துழைக்கத் தொடங்கின போது கட்சிகள் தோன்றின எனலாம். பொதுமக்கள் வாக்குரிமையைப் பெற்றதும்; அவர்களிடையும் கட்சிகள் அமைக்கப்பட்டன. அரசியல் கட்சிகள் 19-20 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ந்தவையே - எனலாம்.

அரசியல், மத வேறுபாடுகளால் காவலியர்ஸ் (Cavaliers), ரவுண்ட் ஹெட்ஸ் (Round Heads) என இரு கட்சிகள் 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றின. 1688-ல் நிகழ்ந்த அரசியல் புரட்சிக்குப்பின் அவை டோரி (Tory), விக் (Whig) என்ற புதுப் பெயர்களைப் பெற்றன. 19ஆம் நூற்றாண்டில் அவை கன்சர்வெட்டிவ், லிபரல் கட்சிகளாக மாறின. தொடக்கத்தில் இரு கட்சிகளும் பார்லிமென்டு அங்கத்தினர்களை மட்டும் கொண்டிருந்தன. 19 ஆம் நூற்றாண்டில் பொதுமக்கள் வாக்குரிமை பெற்றபின் அவை தேசம் முழுவதிலும் பரவின. வார்டுகளிலும், தேர்தல் தொகுதிகளிலும், முக்கிய நகரங்களிலும், ஜில்லாக்களிலும் ஒவ்வொரு கட்சியும் சிறு கமிட்டிகளை நிறுவி, வாக்காளர்களின் ஆதரவைத் தேட ஆரம்பித்தது.

பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் ஆரம்பம் வேறு வகையானது. பார்லிமென்டுத் தேர்தல்களில் தொழிற் கட்சி தனிக்கட்சியாகப் போட்டியிட ஆரம்பித்தது. சென்ற ஐம்பது ஆண்டுகளில் இக்கட்சியின் பலம் அதிகரித்து, இன்று தேசத்தின் முதலிரண்டு கட்சிகளில் ஒன்றாய் விளங்குகின்றது. 'பிரிட்டிஷ் வரலாற்றில் இருகட்சி முறையே பெரும் பாலும் வழங்கி வருகின்றதெனினும், அப்போதைக்கப்போது மூன்றாம் கட்சிகளும் இருந்திருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஆரம்பத்திலிருந்து ரிப்பப்ளிக்கன், டெமகிராடிக் கட்சிகள். மூன்றாம் கட்சிகள் அமெரிக்கச் சரித்திரத்தில் , அப்போதைக்கப்போது தோன்றி மறைந்துள்ளன. எனினும் - இரு கட்சி முறை நிலைபெற்றிருக்கிறது. கானடா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, தென் ஆப்பிரிக்கா முதலிய ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளும் இருகட்சி முறை யையே அனுசரித்து வருகின்றன.