பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கட்சிகள்

160


இருகட்சி முறை வழங்கிவரும் நாடுகளில் பிரதிநிதித்துவ அரசியல் பலம் பொருந்தி, நீண்ட காலமாக ஒழுங்காய் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுவதற்குச் சம்பலம் பொருந்திய கட்டுப்பாடுடைய கட்சி இருப்பதால், அரசாங்கம் திறமையோடு நடைபெறும் நாட்டில் யதேச்சாதிகாரம் தோன்ற முடியாது. பொறுப்புள்ள ஆட்சி இயலுகிறது. பார்லிமென்டுத் தேர்தல்களில் அதிக வாக்குக்களையும் ஸ்தானங்களையும் பெறும் கட்சியே அரசாங்கத்தை நடத்துமாகையால் மக்களே நேராக அரசாங்கத்தை ஏற்படுத்துகிறார்கள் எனலாம். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அறிந்து, அதை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ மக்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. தேர்தல் காலத்தில் வாக்களித்த காரியங்களை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் அதற்குப் பொறுப்பாளி யார் என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். ஏனைய ஐரோப்பிய நாடுகளில் 1850க்குப் பின்னரே அரசியல் கட்சிகள் தோன்றின. முதலில் பொது மக்களிடையே அமைக்கப்பெற்றுப் பின்னர்ச் சட்டசபைகளில் புகுந்த கட்சிகளும் உள்ளன. தொழிலாளர் கட்சிகள் எல்லாம் இவ்வாறு எழுந்தவையே. சென்ற முப்பதாண்டுகளில் சில நாடுகளில் ஒரே கட்சியின் ஆதிக்கம் தோன்றியது. இவற்றுள் முக்கியமானவை ஜெர்மனி (1932-1945), இத்தாலி (1922-- 1945), துருக்கி (1921-1949), போர்ச்சுகல், ஸ்பெயின், சோவியத் சோஷலிஸ்டு ஐக்கிய நாடுகள் என்பவை. இறுதியில், குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டும் தனிக்கட்சி ஆதிக்கம் இன்னும் நிலைத்திருக்கிறது. தனிக் கட்சிகள் பாசிஸ்டு, கம்யூனிஸ்டு என்று இருவகையின. பாசிசம் (Fascism) முதல் உலக யுத்தத்தின் பின் இத்தாலியில் தோன்றியது. அதன் உதவியால் 1922-ல் முசொலினி அரசாங்கத்தைக் கைப்பற்றினார்; பின்னர் பிற கட்சிகளை எல்லாம் ஒழித்து, நாட்டின் சர்வாதிகாரியானார். ஜெர்மனியில் நாஜிக் கட்சி என்னும் தேசிய சோஷலிஸ்டுத் தொழிலாளர் கட்சியும் இவ்வாறே எழுந்தது. இக்கட்சியின் வளர்ச்சிக்கு ஜெர்மனியின் அப்போதைய சீர்கேடான நிலைமையே காரணம். பொருளாதார நிலைகெட்டு, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருந்தது. 1932-ல் பார்லிமென்டுத் தேர்தல்களில் நாஜிக் கட்சிக்கே பெரும்பாலான வாக்குக்கள் கிடைத்தன. ஹிட்லர், இராச்சியத்தின் முதன் மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவர் பார்லிமென்டையும் இதர கட்சிகளையும் ஒழித்து, 1933-ல் தம் சர்வாதிகாரத்தை நிறுவினார். மற்ற நாடுகளிலும் ஒருகட்சி ஆதிக்கம் இவ்வாறுதான் எழுந்தது. அரசியல் கட்சிகளைப் பலவகையாகப் பிரிக்கலாம். அவற்றிற்கு ஆதரவளிப்போர்களைக்கொண்டு, நடுத்தர வகுப்பினர் கட்சிகள் (Bourgeois), தொழிலாளர் கட்சிகள் எனவும், அமைப்பு வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒருமுகப்படுத்திய கட்சிகள் (Centralised parties), பன்முகப்படுத்திய கட்சிகள் (Decentralised p.), தனி அங்கத்தினர் கட்சிகள் (Direct p), கூட்டு அங்கத்தினர் கட்சிகள் (Indirect p.), வடிவ அமைப்புக் கட்சிகள் (Cadre p.), பொதுமக்கட்கட்சிகள் (Mass p.) எனப் பல வழிகளில் வேறுபாடு செய்யலாம். கொள்கைகளை அனுசரித்து முதலாளித்துவ, சோஷலிஸ்டு, பாசிஸ்டு, கம்யூனிஸ்டுக் கட்சிகள் எனவும் கட்சிகளைப் பாகுபாடு செய்யலாம். அவை ஈடுபட்டுள்ள வேலைகளை அனுசரித்துப் பூரண ஆதிக்கக் கட்சிகள் (Totalitarian p.) எனச் சிலவற்றைத் தனிப்படுத்தலாம். கட்சிகள் அமைப்பின் சில முக்கியக் கூறுகளையே இங்குக் குறிப்பிடமுடியும். அரசியல் கட்சிகள், கமிட்டி, செக்ஷன், ஸெல் (Cell), குடிப்படை(Militia) என்னும் நான்கு வகையான அமைப்பைக் கொண்டுள்ளன. முதன் முதலில் தோன்றிய கட்சிகள் கமிட்டிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. தேர்தல் காலத்தில் மட்டும் அவை தீவிரமாக வேலைசெய்கின்றன. ஒருசில தலைவர்களே கட்சியை நிருவாகம் செய்கிறார்கள். கட்சி வேலைக்கு அவசியமான நிதி உதவியை ஒருசில பணக்காரர்களிடமிருந்து இக்கட்சிகள் பெறுகின்றன. அரசியல் துறையில் மட்டும் இவை வேலை செய்கின்றன. இங்கிலாந்தில் கன்செர்வெடிவ், லிபரல் கட்சிகள், அமெரிக்காவில் ரிப்பப்ளிக்கன், டெமகிராடிக் கட்சிகள், பிரான்சில் ராடிகல் சோஷலிஸ்டுக் கட்சி, இந்திய நாட்டில் காங்கிரசு, முஸ்லிம் லீக், லிபரல் கட்சிகள் இவ்வகுப்பினைச் சேர்ந்தவையே. ஐரோப்பிய நாடுகளில் சோஷலிஸ்டுக் கட்சிகள் செஷன்கள் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளன. செஷன்கள் ஆயிரக்கணக்கான அங்கத்தினர்களை உடையவை. தேசத்தின் பல பாகங்களிலும், ரெயில்வே முதலிய முக்கியத் தொழில்களிலும் செக்ஷன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஸெல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஸெல் மூன்று முதல் பத்துப் பதினைந்து அங்கத்தினர்களைக் கொண்டது; ஒரே தொழிற்சாலை அல்லது காரியாலயத்தில் வேலை செய்வோரையே அங்கத்தினர்களாகக் கொண்டது. ஸெல்கள் தம்முள் தொடர்பில்லாமல் நேர் மேலுள்ள ஸ்தாபனங்களுடன் மட்டிலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பாசிஸ்டுக் கட்சிகள் படை அமைப்பைக் கொண்டிருக்கின்றன. பொறுக்கி எடுத்த சிலரே கட்சியில் அங்கம் பெறுகிறார்கள். இக்கட்சிகளுக்கு ஒருநிற உடுப்பு, கொடி முதலிய படைச் சின்னங்கள் உண்டு. கட்சிக்கு ஒரே தனித் தலைவர். பலாத்கார முறைகளால் அரசியலைக் கைப்பற்றுவது பாசிஸ்டுக் கட்சியின் நோக்கம். தேர்தல்களில் கலந்து கொள்வதுகூடப் பிரதிநிதித்துவ அரசியலை ஒழிக்கும் பொருட்டே, 1932 பார்லிமென்டுத் தேர்தல்களில் நாஜிக் கட்சி, பார்லிமென்டில் அதிக ஸ்தானங்களைப் பெற்றதும், ஹிட்லர் அதை ஒழித்துத் தம் யதேச்சாதிகாரத்தை ஸ்தாபித்தார். கம்யூனிஸ்டுக் கட்சிகளும் பாசிஸ்டுக் கட்சிகளும் பல பொது அமிசங்களை உடையன. இரண்டும் பூரண ஆதிக்கக் கட்சிகள், மக்களின் வாழ்க்கை முழுவதையும் கட்டுப்பாடு செய்கின்றன; அவர்கள் வாழ்க்கையையும் கருத்தையும் அடிமைப்படுத்துகின்றன. பார்லிமென்டு முறையில் அவற்றிற்கு நம்பிக்கை இல்லை. எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவான ஓர் அமிசத்தை இங்கே குறிப்பிடலாம். வெளிப்படைக்குக் கட்சிகள் எல்லாம் ஜனநாயக முறையில் அமைந்தவையாகக் காணப்படுகின்றன. ஆனால், உண்மையில் கட்சிகளை நிருவகிப்போர் தம்மைத்தாமே தேர்ந்துகொள்ளும் ஒருசிலரே (Oligarchy). ‘ராபர்ட் பிஷெல்ஸ் என்ற பேரறிஞர் எடுத்துக் காட்டியதுபோல் ஜனநாயகக் கட்சிகளிலும் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ ஒருசிலரே கட்சி நிருவாகத்தைச் செய்கிறார்கள்.’