பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கட்சிகள்

161

அரசியற் கருத்துக்கள்

முன் கூறியவற்றிலிருந்து பிரதிநிதித்துவ அரசியலை நடத்தக் கட்சிகள் இன்றியமையாதன என்பதும், பல கட்சிகள் இல்லாவிடில் ஜனநாயக அரசியல் உலகில் இருக்க முடியாதென்பதும் விளங்கும். நா. ஸ்ரீ.

இந்திய அரசியற் கட்சிகள் : 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே இந்தியாவில் அரசியற் கட்சிகள் தோன்றத் தொடங்கின. 1885-ல் பம்பாயில் முதல் காங்கிரசு கூடியபோது, மேனாட்டுக் கல்வி கற்றுத் தேசியக் கொள்கைகளை மேற்கொண்டு, நாட்டு நன்மையைக் கருதிப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரிடம் வேண்டுகோள் விடுக்கும் அறிஞர்கள் குழுவாகவே அக்காங்கிரசு இருந்தது. திலகர் முதலிய தீவிரவாதிகள் காங்கிரசிற் புகும்வரையில் அது மிதவாத சபையாகவே இருந்தது. கோகலே முதலியவர்களே அக்காலத்தில் காங்கிரசின் பிரதிநிதிகளாயிருந்தனர். அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் சிறைக்குச் செல்லும் வழக்கம் அன்னி பெசன்ட் அம்மை ஆரம்பித்த 'ஹோம் ரூல்' இயக்கத்தின்போது ஏற்பட்டது. 1920-ல் காந்திஜி காங்கிரசைப் பலாத்காரமற்ற சத்தியாக்கிரக முறைகளை மேற்கொள்ளச் செய்து, அரசியலில் ஒத்துழையாமையைப் புகுத்தினார். அக்காலத்தில் காங்கிரசு தன்னை ஒரு தேசியப் பிரதிநிதித்துவ சபை என்று கூறிக்கொண்டது; ஓர் அரசியல் கட்சி என்னும் கருத்தை அது ஏற்றுக்கொள்ளவில்லை. பிறநாட்டு அரசாங்கம் அரசு செலுத்தி வந்ததாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் கலந்துகொள்ள இடமில்லாதிருந்ததாலும், அரசாங்கத்தில் கலந்துகொள்ளும் ஜனநாயக அரசியல் கட்சிகள் அக்காலத்தில் இந்தியாவில் தோன்றவில்லை. முஸ்லீம் லீகும், தீவிரக் கட்சியும், லிபரல் கட்சியும் 1920க்கு முன்பே ஏற்பட்ட அரசியல் கட்சிகள். வெளிநாட்டார் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் கட்சிகளாகவே இவை இருந்தன. போராடும் முறையில் கருத்து வேறுபாடுகள் சில இருந்தமையால் அவை வெவ்வேறு கட்சிகளாகப் பிரிந்திருந்தன. 1935-ல் இந்திய அரசியல் சட்டம் வந்தபிறகு, காங்கிரசு சட்டசபைத் தேர்தல்களில் கலந்துகொண்டபோது அது அரசியல் கட்சியின் அலுவல்களைச் செய்யத் தொடங்கிற்று.

அரசியல் துறையில் சுயராச்சிய உரிமை பெறுவதில் எல்லாக் கட்சிகளுக்கும் கருத்து ஒன்றாயிருந்தபோதிலும், பொருளாதார, சமூகத் துறைகளில் செய்யவேண்டிய சீர் திருத்தங்களைப்பற்றிய கருத்து வேறுபாடுகள் தோன்றின. தொழிற்சாலைகளும் தொழிலாளிகளும் மிகுந்துள்ள இடங்களில் கம்யூனிஸ்டுக் கட்சி தோன்றி,அதன் கோட்பாடுகள் வேரூன் றலாயின. இவர்கள் கம்யூனிஸ்டு முறையில் இந்தியப் பொருளாதார அமைப்பையும் அதற்குத் தேவையான அளவு அரசியல் அமைப்பையும் மாற்றவேண்டும் என்று கருதுகின்றனர். இவர்களினின்றும் சிறிது வேறுபட்ட சோஷலிஸ்டுகள் காங்கிரசினின்றும் பிரிந்து வந்தவர்கள். எம். என். ராய் ஆரம்பித்த தீவிர ஜனநாயகக் கட்சியும், சுபாஷ் சந்திர போசின் முன்னேற்றக் கட்சியும் (Forward Bloc) பெரிய இலட்சியத்தோடு தொடங்கினவாயினும் விரைவிலேயே பலம் குன்றின. 1951-ல் ஆச்சாரிய கிருபளானி காங்கிரசிலிருந்து விலகிப் 'பிரஜாக் கட்சி' என்ற புது அரசியல் கட்சியை நிறுவினார். 1952-ல் இக் கட்சியும் சோஷலிஸ்டுக் கட்சியும் இணைந்து பிரஜா-சோஷலிஸ்டுக் கட்சி தோன்றியது. 1953-ல் இக்கட்சியுடன் சுபாஷ் போசின் முன்னேற்றக் கட்சியும் இணைந்தது.

இந்தியாவில் மக்கள் தொகையில் முஸ்லிம்களைவிட இந்துக்கள் மிகுதியாயிருப்பதால் சிறுபான்மையோரான முஸ்லிம்களின் நலன்களைக் காக்கும் எண்ணத்தோடு முஸ்லிம் லீகு தோன்றியது. காங்கிரசிடம் இக்கட்சிக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை 1947-ல் இந்தியப் பிரிவினைக்குக் காரணமாயிற்று. இக்கட்சிக்கு ஆதாரமாயிருந்தவர் ஜனாப் ஜின்னா. பெருவாரியான முஸ்லிம்கள் இக்கட்சியை யாதரித்தனர். முஸ்லிம் லீகின் கொள்கைகளை நேரடியாக எதிர்க்கும் அரசியற் கட்சி இந்துமகா சபையேயாகும். சவார்க்கரும், சியாம பிரசாத் முக்கர்ஜியும் இக்கட்சியின் முக்கியத் தலைவர்கள்.

இந்தியா அரசியல் சுதந்திரம் எய்திய பிறகு, பார்லீமென்டு ஜனநாயகக் கட்சி அரசாங்க முறையை (Parliamentary Democratic Party Government) ஏற்றுக்கொண்டது. தற்போது டெல்லியிலும், இராச்சியங்களிலும் சட்டசபைகளில் கட்சிமுறை அரசாங்கம் நடைபெறுகிறது. பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதம மந்திரி. இந்திய அரசியலில் இரு பெருங்கட்சிகள் இல்லாமை பூரண ஜனநாயகத்திற்குத் தடையாக இருக்கிறது. தான் விழிப்போடு இல்லாவிடில் எதிர்க் கட்சி தன்னைக் கவிழ்த்துவிடும் என்னும் அச்சம் இல்லாத அளவிற்குப் பலமுள்ள ஒரு பெரும்பான்மைக் கட்சி ஆளும்போது பிரிட்டிஷ் முறையில் பார்லிமென்டு ஜனநாயக மரபு ஏற்படுவது கடினம்.

பெரிய கட்சிகளைத் தவிரத் தேர் தல்களை முன்னிட்டு ஆங்காங்குத் தோன்றுகிற சிறிய தலக் கட்சிகளுக்கு அரசியல் தேசிய முக்கியத்துவம் மிகுதியாக இல்லை யெனினும், வருங்காலத்தில் நாட்டில் பல அரசியல் கட்சிகள் நிலைக்கக்கூடும் என்பதற்கு அறிகுறிகள் போல் இவை தோன்றுகின்றன.

அரசியற் கருத்துக்கள் : கிரேக்க அரசியற் கருத்துக்கள்: முற்காலத்தில் கிரேக்கர்கள் சிறு நகர இராச்சியங்களில் வசித்து வந்தனர். அவர்களுடைய அரசியல் மலர்ச்சி ஹோமருடைய பெருங்காப்பியக் காலங்களில் தோன்றியதாகக் கொள்ளலாம். நாளடைவில், அங்கிருந்த 'முடியாட்சிகள்' மறைந்து, ஆலிகார்க்கி என்னும் 'சிலராட்சிகள் ' தோன்றிப் பொது மக்களைப் பகைத்துக் கொண்டன. கி.மு. 7ஆம், 6ஆம் நூற்றாண்டுகளில் பொதுமக்களின் சார்பாகச் சிலர் கிளம்பிச் 'சிலராட்சிக்'காரர்களை நீக்கிவிட்டுத் தாங்களே அதிகாரத்தைக் கைப்பற்றினர். இவர்களை 'இராச்சிய அபகாரிகள்' (Tyrants) என்பர். இவர்களில் சிலர் நல்ல முறையில் ஆட்சி புரிந்தனராயினும், படைப் பலத்தையே நம்பி ஆண்டு வந்ததால், இவர்களும் மக்களுடைய வெறுப்பிற்கு ஆளாயினர். பிறகு வந்த ஆட்சி கிரேக்க ஜனநாயக ஆட்சி ; அதில் கி. மு. 5ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த பெரிக்ளீசின் நிருவாகம் மிக்க புகழ்பெற்றது. கிரீசின் தென் பகுதியில் இருந்த ஸ்பார்ட்டர்கள் தமக்கு ஒருவகைக் கம்யூனிசச் சமத்துவத்தையும், அச்சமூகத்திலிருந்த தாழ்த்தப்பட்டோரிடம் அடக்குமுறையையும் கையாண்ட இருவகைப் போக்குக்கள் காணப்பட்டன.

கிரேக்க அரசியல் அறிஞர்களுடைய பொதுவான கருத்துக்களாவன : 1. மனிதனுடைய வாழ்க்கை இயற்கைக்கும் அறிவுக்கும் பொருத்தமானதா யிருக்க வேண்டும். 2. எல்லா மனிதருக்கும் அறிவு உண்டாகையால், அறிவுக்குட்பட்ட மிக உயர்ந்த முறையில் வாழ்க்கை அமையவேண்டும். 3. இல்வாழ்க்கை சாத்தியமாவதற்கு மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகப் பொது அலுவல்களில் ஈடுபடவேண்டும். 4. ஆதலால் தனி மனிதனின் நலங்கள் இராச்சியத்தோடு இணைந்து நிற்கின்றன. 5. இவ்விணைப்பு இயலுமாறு தனி மனி-