பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

162

அரசியற் கருத்துக்கள்

தர்கள் தங்கள் தனித்துவத்தை இராச்சியத்தின் தன்மைக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வித ஐக்கியம் முற்காலத்தில் கிரீசில் இருந்த இராச்சியங்களில்தான் இயலும்; அந்நகர நகர இராச்சியங்களின் அரசாங்கத்தில் மகளிரும், அடிமைகளும் நீங்கலாக ஏனைய குடிமக்கள் யாவரும் கலந்து கொள்ள முடியும். இவ்வித ஜனநாயகத்தை நேர்முக ஜனநாயகம் என்று இப்போது கூறுகிறார்கள். கிரேக்கர்களுடைய கருத்துப்படி தனி மனிதர்கள்மீது இராச்சியம் செலுத்தக்கூடிய ஆதிக்கத்திற்கு அளவில்லை. அக்கால அரசாங்கங்களுடைய அலுவல் சட்டத்தை அமல் செய்வதேயன்றித் தற்கால இராச்சியங்களைப் போலச் சட்டத்தை உண்டாக்குவது அன்று.

கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பொதுமக்களின் உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டித் தங்கள் விருப்பம்போல் அரசியலில் ஆதிக்கம்பெறச் சில தலைவர்கள் தோன்றினார்கள். தனி மனிதர்கள் தங்கள் நலங்களைத் தாங்களே ஆராய்ந்து அறியவேண்டும் என்றும், இயல்பில் மனிதன் சுயநலமுடையவன், இராச்சியத்தின் சட்டங்கள் மனிதனுடைய அறிவின் போக்கிற்கு முரணாகக் கூடும். ஆயினும் அறிவே உண்மைக்கு வழிகாட்டி என்றும் இவர்கள் கூறினர். இவர்கள் சோபிஸ்டுகள் (Sophists) என்றழைக்கப்பட்டனர்.

சோபிஸ்டுக் கொள்கைகளைப் பின்பற்றிய பெரிய அறிஞர் சாக்ரட்டீஸ் (கி.மு. 469-399) என்பவர். ஐயம், வினா, விடை, அறிவுரை என்னும் முறையைப் பின்பற்றி, அதீனிய இளைஞர்கட்கு அறிவு புகட்டிவந்த சாக்ரட்டீஸ் அரசியல் கருத்துக்களுக்கு அற அடிப்படை ஒன்றைக் கற்பித்தார். “ஜனநாயகம் மக்களிடையே பொய்ம்மையான சமத்துவத்தையே நாட்டுகின்றது; திருவுளச்சீட்டு முறையில் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல முறையன்று; திறமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இராச்சிய நிருவாகம் நடத்தப்பெறுவதே நல்லது“ என்பவை அவருடைய கருத்துக்கள்.

டயஜினஸ் என்பவரைப் போன்ற சினிக்குகள் (Cynics) “வாழ்க்கையின் மேற்போக்குக்களையும் அர சியல் பிணக்குக்களையும் மறக்கவேண்டும்” என்றனர். டயஜினஸ் தம்மை 'உலகக்குடி' என்று கூறிக் கொண்டார்.

சாக்ரட்டீசின் மாணவரான பிளேட்டோ (கி.மு. 427-347) பொதுவாகச் சாக்ரட்டீசைப் பின்பற்றுபவராயினும், மிகுந்த திறமைசாலிகளே உண்மையையறியமுடியும் என்று கருதினார். அவருடைய குடியரசு என்னும் நூலில் மிகுந்த அறிவும் திறமையும் படைத்த தத்துவ சாஸ்திரிகள் அரசாங்கத்தை நடத்துபவர்களாயிருக்கவேண்டும் என்றார். அறிவின் எல்லையைக் கண்ட அவ்வறிஞர்களே அரசியலறிஞர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றார்.

ஜனநாயகம் என்பது பாமரர் ஆட்சி என்று பிளேட்டோ கருதினார் ; சிலராட்சியும், இராச்சிய அபகாரிகளின் ஆட்சியும்கூட நேர்முறைக்குப் புறம்பானவை என்பது அவர் கருத்து. அவர் பிற்காலத்தில் இயற்றிய பிறநூல்களில் குடியாட்சி, பிரபுக்களாட்சி, மித ஜனநாயகம் ஆகிய ஆட்சிமுறைகளை ஓரளவு அங்கீகரித்தார். நேர்முக ஜனநாயகம் அவரால் ஒதுக்கப்பட்டது. இராச்சியத்தின் அடிப்படை நீதியாதல் வேண்டும் என்பதே பிளேட்டோவின் முக்கியமான கருத்து.

பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் (கி.மு. 384-322) ஆசிரியரைப் போல அவ்வளவு இலட்சியவாதியல்லர் ; அரசியல் ஸ்தாபனங்களின் வளர்ச்சியையே அவர் முக்கியமாகக் கருதினார்; அரசியல் அமைப்புக்களின் ஒப்பு-ஆராய்ச்சி வேண்டும் என்றார். அவருடைய அரசியல் என்னும் நூல் இம்முறையையே கூறுகிறது. “சமுதாயம் என்பது குடும்பம், கூட்டம் என வளர்ந்து வரும் ஒரு ஸ்தாபனம்; மனிதன் சமூகமாகக் கூடி வாழ்பவன் ; தனி மனிதன் தன்னுடைய விருப்பங்களையும் இலட்சியங்களையும் எய்தி, நல்வாழ்வை அடைவதற்கு உதவவேண்டியதே இராச்சியத்தின் கடமை ; அந்நல்வாழ்க்கையை அடைய மனிதர்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும்; அதற்குப் போதிய ஒழிவு வேண்டும்; அடிமைகள் ஏனைய அலுவல்களைக் கவனித்தால் குடிகளுக்கு ஒழிவு கிடைக்கும்; ஆகவே அடிமைகள் என்போர் இருக்கவேண்டும்“ என்பவை அவருடைய கருத்துக்கள். அவர் அரசாங்க அமைப்புச் சமநிலையுடையதாயும், புரட்சிக்கு இடம் கொடாததாயும் இருக்கவேண்டும் என்று கருதினார்; அதற்குத் திருப்தியோடு வாழ்க்கை நடத்தும் நடுத்தர வகுப்பினர் வேண்டும் என்றும் கூறினார். தனி மனிதர்களின் முன்னேற்றம் பெரிதேயன்றி, மன்பதையின் மொத்த முன்னேற்றத்தைப் பண்பளவில் கூறுவது வேண்டுவதன்று என்றார். அவருடைய கருத்துக்கள் தற்காலம் வரையில் அறிஞர்களுடைய கருத்துக்களை ஊக்கியிருக்கின்றன என்பதே அவருடைய பெருமைக்குச் சான்றாகும். இராச்சியம் நிலைபெற்றிருப்பதும், மிதக் கொள்கைகளை மேற்கொள்வதும், இராச்சியத்தின் இரு நோக்கங்களாயிருக்கவேண்டும் என்று கூறினார். இவருடைய கருத்துக்களின் பெருமையால் இவரை 'அரசியல் நூலின் தந்தை' என்று உலகம் புகழும். நகரச் சுயாட்சியும், நல்வாழ்க்கை அமையும், தனி மனிதரின் சுதந்திரமும் முக்கியமானவை என்று கிரேக்கர்கள் பொதுப்படக் கருதினர் என்று கூறலாம்.

எபிக்யூரஸ் (கி.மு. 312-270) என்பவர் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் எந்த ஆட்சியையும் ஏற்றுக்கொள்ளலாம் என்றும், திறமை வாய்ந்த யதேச்சாதிகாரமும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே என்றும் கூறினார். அறிஞர்கள் அரசியலில் தலையிடக் கூடாதென்றும், அநீதியைத் தடுப்பதற்கு மக்கள் தமக்குள்ளே செய்து கொள்ளும் ஏற்பாடு சட்டம் என்றும் அவர் கூறினார். அவர் தத்தம் தேவைகளை ஒவ்வொருவரும் பூர்த்தி செய்துகொள்ள முயலவேண்டும் என்றார். எபிக்யூரியர்களுக்குப் பிறகு வந்தவர்கள் ஸ்டோயிக்குகள். ஜூனோ (சு.கி. மு.336 -சு. 264) என்பவர் இவர்களின் தலைவர். எல்லா மனிதர்களையும் எல்லாக் காலத்திலும் உட்படுத்தும் இயற்கைச் சட்டம் ஒன்று உண்டு என்பது அவர் கருத்து. பின்னர் இத்தகைய அரசியற் கருத்துக்கள் ரோமானிய அறிஞர்களிடையே பரவலாயின.

ரோமானிய அரசியற் கருத்துக்கள் : தொடக்கத்தில் ஒரு நகரராச்சியமாக இருந்த ரோம் முதலில் இத்தாலி மீதும், பிறகு நாளடைவில் கடல்கடந்தும் படையெடுத்துப் பெரிய சாம்ராச்சியம் ஒன்றை கி.மு. முதல் நூற்றாண்டில் நிறுவிக்கொண்டது. சாம்ராச்சியப் பளுவினால் நகரராச்சியம் மறைந்துபோய் ஜூலியஸ் சீசரின் ராணுவ பலத்தை அடிப்படையாகக்கொண்ட ஆட்சி ஓங்கிற்று. இதன் விளைவாக ரோமானியக் குடிமை சாம்ராச்சிய மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. சாம்ராச்சிய ஐக்கியத்தின் சின்னமாக விளங்கியவர்கள் ரோமானியச் சக்கரவர்த்திகள்; இவர்கள் தங்கட்கு ஒரு தெய்விக ஆட்சி உரிமை யுண்டென்று கருதலாயினர். இக்கருத்து நீண்ட நாள் நிலவி வந்தது. ரோமானியச் சாம்ராச்சியக் காலத்தில் அரசியல் ஒற்-