பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

168

அரசியற் கருத்துக்கள்

கலைக்கே அடிப்படையாக அமைந்துள்ளன. பெந்தாமும், ஜேம்ஸ் மில், ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற அவர் சீடர்களும் இங்கிலாந்தில் நிகழ்ந்த பிரதிநிதிச் சபைச் சீர்திருத்தங்களுக்கும் ஆங்கிலேயப் பேரரசின் பல பகுதிகளிலும் தோன்றிய பல நிருவாகச் சீர்திருத்தங்களுக்கும் காரணமாவர்.

18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசாங்கத்தின் தனி ஆட்சியைப் பலமாக எதிர்த்தவர்களில் வால்ட்டேர் (Voltaire 1694-1778) சிறந்தவர். அவர் மதாதிபத்தியத்தை எதிர்த்தார். சட்டசபை, தேர்தல்கள், பத்திரிகைகள் முதலியவைகட்குச் சுதந்திரமும் இடைத்தர வகுப்பினருக்கு அரசியல் உரிமைகளும் கொடுக்கப்படவேண்டுமென்று வால்ட்டேர் வாதாடினார். "ஏழைகளின் குடியரசைவிடக் காருணிய முடியரசே மேல்; ஆனால் மன்னர் பொறுப்பின்றி ஆளக்கூடுமாதலால் ஜனநாயகமே விரும்பத் தக்கது' என்பவை அவர் கொள்கைகள்.

18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வெளியான அரசியல் நூல்களில் மான்டெஸ்க்யூ (1689-1755) இயற்றிய சட்டங்களின் சாரம் (Spirit of the Laws) என்னும் நூலே பலநாட்டு மக்களின் அரசியற் கொள்கைகளைப் பாகுபாடு செய்யவும், அரசியல் சீர்திருத்தங்களைத் தூண்டவும் உதவிற்று. மான்டெஸ்க்யூ வரலாற்றுக் கொள்கையினரைச் (Historical School) சார்ந்தவர். அவர் பலநாட்டு அரசாங்கங்களையும் ஆராய்ந்து, ஒப்பிட்டுப் பார்த்துப் பிறகே தம் கருத்துக்களை வெளியிட்டார். மான்டெஸ்க்யூவின் கொள்கைகளில் மிகச் சிறந்தது அதிகாரப் பிரிவினைக் கொள்கை. அரசாங்க அதிகாரம் நிருவாகப் பகுதி, சட்ட மியற்றும் பகுதி, நீதிப்பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும், அவை வெவ்வேறு இலாகாக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும், அவ்வாறு பிரிக்கப்படாமலிருந்தால் அரசாங்கம் தனி ஆட்சிக்கு உள்ளாகும் என்றும் அவர் கருதினார். மான்டெஸ்க்யூ சுதந்திரத்தின் தன்மை, வகைகள் முதலியனவற்றைப் பற்றித் தீர ஆராய்ந்தார். அரசியல் சுதந்திரம் கட்டுப்பாடுள்ள அரசாங்கத்திலேதான் இயலுமென்று அவர் நம்பினார்.

பிரெஞ்சு ஆசிரியரான ரூசோவை (1844-1910) 18ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் சிறந்த அரசியல் அறிஞர் எனக் கூறலாம். அவர் இயற்றிய சமூக ஒப்பந்தம்(Social Contract) என்னும் நூலில் சமூக ஒப்பந்தம், இயற்கைநிலை முதலிய கருத்துக்கட்குப் புத்துயிர் அளித்துப் புதிய முறையில் ஆராய்ந்ததின் மூலம் குடியரசே மேன்மையான அரசியல் முறையென விளக்கியுள்ளார். ஹாப்ஸ், லாக் ஆகியோரைப் போலல்லாமல் ரூசோ இயற்கை நிலையை மிகவும் புகழ்ந்துள்ளார். சமூக அரசியல் ஒப்பந்தங்கள் செய்யப் பட்டதால் மக்கள் தங்கள் பூரண சுதந்திரத்தை இழந்து, தாங்களே தங்களுக்கு விலங்குகளை மாட்டிக்கொண்டனராம். ரூசோ, கிரேக்க, ரோமானிய ஜனநாயக நகரராச்சியங்களை (Democratic City States) மிகவும் விரும்பினார். ரூசோவின் கொள்கைகள் பிரான்சில் நேர்ந்த புரட்சிக்கு மூலம் என்பர்.

பிரெஞ்சுப் புரட்சி நடந்த சமயம் ஜெர்மனியில் இமான்யுவல் கான்ட் (1724-1804) என்னும் புகழ்பெற்ற அரசியல் அறிஞர் இருந்தார். அவர் கருத்துக் கொள்கையை (Idealism) நிறுவியவர். இது லாக், ஹியூம் போன்றவர்கள் போதித்த கொள்கைகட்கு எதிரிடையான கொள்கைகளைக் கொண்டது. இவருடைய முக்கியக் கொள்கை. அரசியற்கலை நீதிநெறியைத் தழுவியது என்பதுதான். இவர் உரிமை, சொத்து, சட்டம், இராச்சியம் முதலிய கருத்துக்கட்குப் புதுப் பொருள் கற்பித்தனர். இராச்சியம் மக்களின் ஒப்பந்தத்தினால் ஏற்பட்டதென நம்பினர். அரசியல் விஷயங்களில் ரூசோவையும் அதிகாரப் பிரிவினையில் மான்டெஸ்க்யூவையும் கான்ட் பின்பற்றினார். கான்டின் கருத்துக்கொள்கைகளை 19 ஆம் நூற்றாண்டில் பிக்டே (Fichte), ஹேகல், கிரீன், போசன்கிட் (Bosanquet) என்பவர்கள் வளர்த்துப் பரப்பினர். ஏ. கே. வ,

தற்காலம்: பிரெஞ்சுப் புரட்சி, 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற முழக்கங்களோடு தொடங்கியது. பிரத்தியேக உரிமையைக் கொண்டாடியவர்களுக்கு எதிராகச் சட்டப்படி நாட்டு மக்கள் யாவருக்கும் சம உரிமை உண்டு என்னும் கருத்துப் பரவிற்று. பிரெஞ்சுப் புரட்சியை அடக்க அயல் நாடுகள் முயன்றபோது, சகோதரத்துவம் தேசியமாக மாறிற்று. நெப்போலியன் ஐரோப்பிய யுத்தங்களில் வெற்றிபெறவே, ரூசோ கூறிய பொதுமக்கள் கருத்து (General will) தேசத்தலைவரிடம் விளங்குவதாகக் கொள்ளப்பட்டது. இராச்சியத்தை மதத்துக்கு மேலாக மதிக்கும் முறை தோன்றியது.

இராச்சியத்திற்குப் பூரண அதிகாரம் உண்டு என்னும் கொள்கையை இக்காலத்தில் ஆதரித்தவர் ஹேகல் (1770-1831). " பல நாடுகள் ஒன்றோடொன்று சண்டையிடுவது உலக வரலாற்றின் போக்கு; இது இயற்கை முறை ; போர் புரிய வலிமை வேண்டும்; வலிமை நாட்டிற்கு இலட்சணம். போரில் வெற்றி பெறும் இராச்சியமே கடவுள் தன்மை கொண்டது. அவ்வித இராச்சியத்திற்குப் பணிவது உண்மையான சுதந்திரமாகும். அவ்விராச்சியம் செய்வது அனைத்தும் நியாயமாகும் " என்று அவர் கருதினார். அவருடைய கொள்கையைப் பின்பற்றிய பிஸ்மார்க் ஜெர்மானிய ஏகாதிபத்தியத்தை அமைத்தார். இரண்டு உலக யுத்தங்களுக்கும் ஹேகலின் கொள்கைகள் ஒரு முக்கியமான காரணம் என்று கருதலாம்.

ஹேகலின் கொள்கையை ஆங்கில நாட்டில் பின்பற்றியவர்களில் முக்கியமானவர்கள் கிரீன் (1836-1882) போசன்கிட் (1848-1923) ஆகிய இருவர். கிரீன் பூரண அதிகார இராச்சியத்திற்குப் பதிலாகப் பூரண அதிகார சமூகத்தை ஏற்றுக்கொண்டார் ; அவர் கொள்கைப்படி, இராச்சியம் சமூகத்திற்கு உட்பட்டது ; தனி மனிதருடைய உரிமை சமூகத்திலிருந்து பெறப்படுவது; அதுவே உண்மையான இயற்கை உரிமை; அவ்வுரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அது சட்டப்படியுள்ள உரிமையாகும். சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் வேறுபாடு உண்டாயின் சமூகம் அரசாங்கத்தை மாற்றலாம். தனி மனிதன் சமூகத்தின் ஒரு பகுதியாகையால் சமூகத்திற்கு முரணான எதையும் அவன் செய்யலாகாது.

போசன்கிட் ஹேகலை அதிகமாகப் பின்பற்றினார். "அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய அறநெறி ஒன்றுமில்லை. அரசாங்கம் குற்றம் செய்ய முடியாது. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி யிருப்பதால், அரசாங்கத்திற்கு எதிராகவோ, புறம்பாகவோ எதுவும் இருக்க முடியாது" என்பது அவர் கருத்து.

பிரெஞ்சுப் புரட்சியின் பயனாகத் தேசியம் அரசியல் துறையில் தோன்றிற்று. தொழிற்புரட்சியின் பயனாகத் தேசியம் பொருளாதாரத் துறையிலும் புகுந்தது. கச்சாப்பொருள்களைச் சேகரிப்பதிலும், விற்பனைப் பொருள்களாக மாற்றுவதிலும், விற்பனை செய்வதிலும்