பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

169

அரசியற் கருத்துக்கள்

நாடுகள் ஒன்றோடொன்று போட்டி யிட்டுக்கொண்டு புதுப் பிரச்சினைகளை எழுப்பின.பொருளாதார விஷயங்களில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்னும் தலையிடாமைக் (Laissez faire) கொள்கையை ஆதம்ஸ்மித் தமது பொருளாதார நூலிற் கூறினார். இவைகளை எதிர்த்து முக்கியமான கொள்கைகளை வெளியிட்டவர் மார்க்ஸ் (1818-83)- 'மனித வரலாறு பரிணாம முறையில் சமூகம் வளர்வதைக் காட்டும்' என்ற கொள்கையுடையவர் மார்க்ஸ். இயற்கையை மனிதன் எந்திர சக்தியால் ஆட்கொள்வதால் இம்முன்னேற்றம் இயலும் என்று அவர் கருதினார். தொழிலாளிகளின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு இராச்சியம் என்னும் ஸ்தாபனமே மறைந்துவிடும், அதற்குத் தேவையிராது என்பது அவர் கொள்கை. "வருக்கமில்லாத சமூகத்தில் இராச்சியம் மறைந்துவிடும்; வரலாற்றுமுன் காலம் முடிந்து வரலாறு தொடங்கும்" என்றார் மார்க்ஸ். இவரும் எங்கெல்சும் (1820-95) சேர்ந்து இயற்றிய கம்யூனிசப் பிரகடனம் (Communist Manifesto) என்னும் நூலுள் இக்கொள்கை முதன் முதல் விரித்துரைக்கப்பட்டது. கம்யூனிஸ்டு ரஷ்ய ஆட்சியை நிறுவிய லெனின் இக்கொள்கைகளை முழுவதும் ஏற்றுக்கொண்டார்; ஆயினும் ஸ்டாலின் உலக நிலையை ஒட்டி முதலாளித்துவமும் கம்யூனிசமும் அடுத்தடுத்து வாழ முடியும் என்று தம் கொள்கையை மாற்றிக்கொண்டார்.

செயின்ட் சைமன் (1760-1825) என்பவர் விஞ்ஞான முன்னேற்றத்தால் அரசியலைவிடப் பொருளாதாரமே அதிக முதன்மை பெறுவதாகக் கூறினார். "சொத்தைத் தனியுரிமையாகக் கொள்ளாமல் ஒப்படைத்த பொருள் போலக் காத்துப் பயன்படுத்தவேண்டும்" என்று அவர் கருதினார். ஓகஸ்ட் காம்ட் (Auguste Comte 1798-1857) என்னும் பிரெஞ்சு ஆசிரியர் செயின்ட் சைமனால் கருத்தூட்டம் பெற்றவர். இயற்கையை ஆராயும் விஞ்ஞானக் கலைகளைப்போலச் சமூகவியலொன்றை ஏற்படுத்தி, விஞ்ஞான முறையில் சமூகப் பிரச்சினைகளை யாராய வேண்டுமென்றார். இவருடைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர் ஜான் ஸ்டூவர்ட் மில் என்ற ஆங்கில அறிஞர். இவர் பெந்தாமின் பயன்முதற் கொள்கையைப் புது முறையில் அமைக்க முயன்றார். எல்லா மனிதர்களும் சமம் என்னும் தீவிர ஜனநாயகத்திற்கும், மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் தலையிட இராச்சியத்திற்கு உரிமையுண்டு என்னும் கொள்கைக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் தனிமனிதன் சுதந்திரத்தையும், பிரதிநிதி சபை மூலம் இயங்கும் ஜனநாயகத்தையும் தகுந்த காரணங்களோடு ஆதரித்துப் பல நூல்கள் எழுதினார். பொருளாதார நூல் ஒன்றும் இயற்றினார். அங்கும் முதலாளித்துவத்திற்கும் பொது உடைமைக்கும் இடையே நடுநிலை கண்டு கூறியிருக்கிறார்.

கடவுளால் நியமிக்கப்பட்டு, அந்த நியமனப்படி உலகு இயங்குகிறது என்னும் கொள்கைக்குப் பதிலாக, இயற்கையின் செயலாக யாவும் நடைபெறுகின்றன என்னும் கொள்கை இன்று மேலிட்டு வருகிறது. டார்வின் இனங்களின் தோற்றம் (Origin of Species) என்னும் நூலில் பரிணாமக் கொள்கையைக் கூறியதிலிருந்து மானிட இயல் அறிஞர்களும் அப்பரிணாம முறையையொட்டித் தங்கள் கருத்துக்களையும் கூறிவந்தனர். தனி மனிதரேயன்றி, சமூகங்களும் பரிணாம முறையில் வளர்கின்றன என்று ஹெர்பர்ட் ஸ்பென்சர் (1820-1903) கூறினார். உயிரியல் முறையில் தனிமனிதனைப்போல உறுப்புக்களோடு இயங்குவது சமூகம் என்று அவர் கூறினார். அங்கங்கள் மறையினும் முக்கியமான உடல் இருப்பதுபோலத் தனிமனிதர் தோன்றி வளர்ந்து மறையினும், இராச்சியம் நிலைபேறாக இருக்கும் என்பது அவர் கருத்து. இதனை உறுப்புக் கொள்கை (Organic Theory) என்பர். இதை ஓர் உவமையளவிலேயே கருதுவது நல்லது என்பர் பலர்.

பாஜட் (Bagehot) என்பவரும் பரிணாமத்தைத் தழுவியே மானிடவியலை வருணித்தார். சமூகத்தில் கூடி வாழ்வதும் போரிட்டுக்கொள்வதும் மனிதனுடைய இயற்கைப் பண்புகள் என்று இவர் சொன்னார். கம்ப்ளொவிக்ஸ் (Gumplowicz) என்னும் மற்றொரு மானிடவியல் அறிஞர், “மனிதன் கூடிவாழும் இயல்பீனனாதலின் சமூகம் ஏற்பட்டது; ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை ஆக்கிரமிப்பதிலிருந்து அரசாங்கம் ஏற்படுகிறது. வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்கள்மீது செலுத்தும் ஆதிக்கமே சட்டமாகும்” என்று கூறினார்.

மானிடவியலின் பகுதியாக இனத்துவம் (Racism) என்னும் கொள்கை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சியுற்றது. இந்தக் கொள்கையை நிறுவினவர் கோபினோ (Gobineau). சேம்பர்லேன், "யூதர்கள் இனத்தூய்மைக்கு இடையூறாக இருத்தலால், அவர்களை நாட்டினின்றும் வெளிப்படுத்தல் வேண்டும்" என்னும் கொள்கையை வெளியிட்டார்.

புறவழி யுண்மைக் கொள்கையை (Pragmatism) ஏற்படுத்திய வில்லியம் ஜேம்ஸ் என்பவர் அனுபவத்தில் கண்டறிந்ததே உண்மை என்றார். இதைப் பின்பற்றிய ஆன்ரீ பெர்க்சன் (Henri Bergson 1859-1941) "அறிவைக் காட்டிலும் இயற்கை உணர்ச்சியே மேலானது" என்று கூறினார். மனிதன் பெரும்பாலும் உணர்ச்சியால் தூண்டப்படுகிறானேயன்றி அறிவால் தூண்டப்படுவதில்லை என்று கூறிய மக்டூகல் (McDougall 1881-1938) மனிதனுடைய அடிப்படையான உணர்ச்சிகளைப் பலவகையாகப் பிரித்துக் கூறினார். "மனிதன் எண்ணமிடுவதாக நினைக்கும்போது எந்தத் தொகுதியைச் சேர்ந்தவனாயிருக்கிறானோ அந்தத் தொகுதியின் சிந்தனை வரம்பிற்குட்படுகிறான். அவன் பல தொகுதிகளைச் சேர்ந்தவனாக இருப்பினும், எல்லாத் தொகுதிகளுக்கும் மேலான அரசாங்கத்தின் பகுதியாக உயர்ந்த எண்ணங்கள் பூர்த்தியாகின்றன" என்பவை அவர் கருத்துக்கள். நீச்செ (Nietsche 1844-1900) என்பவர், "மேன்மக்களே ஆளப்பிறந்தவர்; நன்மையும் உண்மையும் பிறரை மேற்கொள்வதில் அடங்கி யிருக்கின்றன " என்றார். இவர் யுத்தங்களைத் தீமை யாகக் கருதவில்லை.

அரசாங்கம் இன்றியமையாத ஒரு ஸ்தாபனம் அன்று என்றும், அதை முற்றிலும் நீக்கிவிடலாம் என்றும் கூறுவது ஆட்சிவேண்டாக் கொள்கை (Anarchism). அரசாங்கத்திற்குத் தனிப்பண்பு இல்லை என்றும், அது மற்ற ஸ்தாபனங்களைப்போல் ஒரு சாதாரண ஸ்தாபனந்தான் என்றும் கூறும் பன்மைவாதம் (Pluralism) ஆஸ்ட்டினுடைய (1790-1859) ஆதிபத்தியக் கோட்பாட்டிற்கு எதிராகத் தோன்றியது. ஆஸ்ட்டின் சட்ட முறைப்படி (Juristic method) ஆதிபத்தி யத்தை விவரித்தார். “ ஒருவனுடைய கட்டளைக்கு ஏனையவர்களில் பெரும்பான்மையோர் வழக்கமாகப் பணிந்து நடந்தால், அந்தக் கட்டளை சட்டமாகும்; கட்டளையிடுபவன் அதிபதியாவான்; அவனது அதிகாரம் ஆதிபத்தியமாகும்" என்று ஆஸ்ட்டின் கூறினார். பன்மைவாதியாகிய துகுயி (Duguit), " சட்டம் அர சாங்கத்தினால் ஏற்படுவதில்லை; மக்களின் பொதுத்-