பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

177

அரசியற் கருத்துக்கள்

நாட்டுமக்களிற் சிலரோ ஆக்கிரமிப்பதிலிருந்து காப்பாற்ற முயலவேண்டும். மூன்றாவது பொருளாதார ஜனநாயகக் கொள்கை. எல்லாருக்கும் நிலத்திற்கு உரிமையுண்டு என்பதும், அரசாங்கம் பல பொருளாதாரச் செயல்களை மேற்கொள்வதன் மூலம் மூலதனத்தை நேர்முறையில் வினியோகிக்கும் என்பதும் இக்கொள்கையாம். நிலங்களைப் பற்றியும் நிலவரியைப் பற்றியும் அரசாங்கம் சட்டங்கள் இயற்றவேண்டும். நிலத்தின் தரத்தை நிருணயித்த பிறகு அதன் மதிப்பை ஒவ்வொரு நிலச்சுவான் தாரும் அரசாங்கத்திற்கு அறிவிக்கவேண்டும். பிறகு அரசாங்கம் விகித முறையில் வரி விதிக்கும். ஏக உரிமையான (Monopoly) தொழில்களை யெல்லாம் அரசாங்கமே எடுத்து நடத்தவேண்டும். திறமையுள்ளவன் புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தவேண்டுமாயினும் புரட்சிக்குப்பின், சட்ட அடிப்படையிலே ஆட்சி அமையவேண்டும். அவருடைய நாற்பகுதி ஆட்சி முறைப்படி மற்ற அரசாங்க முறைகளில் உள்ளவாறு நிருவாகப் பகுதி, சட்டசபைப் பகுதி, நீதிப் பகுதி என்று மூவகைப் பாகுபாடு இல்லாமல் நிருவாகப் பகுதி, சட்டசபைப் பகுதி, விசாரணை நீதிப் பகுதி, மேற்பார்வை நீதிப் பகுதி என நால்வகைப் பாகுபாடு. இருக்கும். 1920க்குப் பிறகு சீனாவில் கன்பூஷியக் கொள்கைக்குப் பதிலாகச் சுன்யாட்சென் கொள்கை நிலைபெறலாயிற்று. சுன்யாட்செனைச் சீனக் கம்யூனிசத்தின் தந்தை என்று கூறலாம். நவ சீனத் தலைவரான மௌ ட்சு - துங் (MaoTse-Tung) 1940-ல் தாம் வெளியிட்ட புது ஜனநாயகம் என்னும் நூலில் சீனக் கம்யூனிசக் கொள்கைகளை விளக்கிக் கூறியுள்ளார். அவர் கருத்துப்படி சீனக் கம்யூனிசம் புது ஜனநாயகம், சோஷலிசம் என்னும் இரு நிலைகளைக் கடந்து வந்துள்ளது. முதற்படி ஏகாதிபத்தியம், படைமானியம், அதிகாரி ஆட்சி ஆகியவற்றை எதிர்த்துத் தொழிலாளிகளும் விவசாயிகளும் நடத்திய போராட்டம். அரசாங்கம் சாமானிய மக்களுடைய சர்வாதிகாரமன்று; மேற்கூறிய வகுப்பினருடைய ஆட்சியேயாகும். பெரிய பாங்குகளும், கைத்தொழில்களும் இராச்சியத்தின் உடைமையாயிருக்கும். ஏனையவை தனிமனிதர்கள் உடைமையாயிருக்கும். உழுபவர்களுக்கு நிலம் உடைமையாகும் வகையில் நில உரிமை மாற்றியமைக்கப்படும். சீனாவின் நிலைமைக் கேற்ப, மார்க்சிசம் சில மாறுதல்களோடு ஏற்றுக்கொள்ளப்படும். குடும்பம், கல்வி முதலியவற்றின் பெருமையைக் கூறிய கன்பூஷீயசின் கொள்கைக்கு மறுதலையாக தொழிலாளி - விவசாயிச் சர்வாதிகாரத்தை மேலாக்கும் கம்யூனிசம் நிலைபெற்று வருகிறது. பண்டைய கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்த மௌ ட்சு - துங் நாட்டில் ஏற்பட்டுவிட்ட, தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களையொட்டித் தமது கொள்கைகளை அமைத்துக் கொண்டுள்ளார். வீ.வெ.

முஸ்லிம் அரசியற் கருத்துக்கள்: இஸ்லாம் மார்க்கத்தில் காணப்படும் ஆட்சித் தத்துவத்தில் லௌகிகக் கொள்கை, வைதிகக் கொள்கை என்கிற வேறுபாடு இல்லை. இஸ்லாமிய மனித வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளும் ஒரே துறையாகக் கருதப்படுகின்றன. ஆதலால், இஸ்லாமிய நெறி சமய, அரசியல், சமூக, குடும்ப நிலைகளையெல்லாம் ஒருவழிப்படுத்துவதற்கான விதிகளைக் கூறியுள்ளது. இந்நெறிக்கு 'ஷரியத்' என்று பெயர். அச்சொல் வழி அல்லது நெறி என்று பொருள்படும். ஷரியத் என்னும் சொல் குர் ஆனிலேயே கூறப்பட்டிருக்கிறது. "உங்கள் ஒவ்வொருவருக்கும் நாம் ஒரே தெளிவான வழிகாட்டியுள்ளோம்" என்று குர் ஆன் கூறுகிறது. ஆதலால், ஷரியத் என்பது உலகத்தில் மனிதன் தன் உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்று அறிந்து, அதன்படி ஒழுகுவதால் மறுமைக்கான உணர்வைப் பெறுவதற்கு. உதவும் மார்க்கம் என்று ஆகிறது. ஷரியத்தின் விவரங்கள் குர் ஆனில் கூறப்பட்டுள்ளன. அதன்படி இறைவனே உண்மையான அதிபதி ; மனிதன் இறைவனுடைய பிரதிநிதியாகப் பூவுலகத்தில் இருப்பவன். கடவுள் கூறும் ஒழுக்கங்கள் உலகத்திலுள்ள ஜீவராசிகளின் நன்மைகளைக் கருதியவை. அந்த நோக்கங்களை நிறைவேற்றிவைக்கும் தருமகர்த்தாவே மனிதன். ஆகவே, தன் கடமையை நிறைவேற்றுவதுதான் முக்கிய நோக்கமே ஒழியத் தன் உரிமைகளைக் கொண்டாடுவது முக்கிய நோக்கமன்று. “இறைவனே உங்களைத் தன்னுடைய பிரதிநிதியாகப் பூவுலகில் நியமித்துள்ளான் ; உங்களில் சிலர் உயர்வாகவும், சிலர் தாழ்வாகவும் இருப்பது அவன் உங்களைப் பரிசோதிப்பதற்காகவே. அவன் உங்கள் தகுதியை விரைவாகக் கணக்கிட்டுக்கொண்டே யிருப்பான்” என்னும் குர்ஆன் வசனம் மேற்கூறிய கருத்தைத் தெளிவாக்குகின்றது.

இஸ்லாமிய அரசியற் கொள்கைப்படி நிருவாகத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அத்தேர்தல் வழியாகத்தான் அவர் தமது அரசுரிமையைப் பெறுகிறார். இவரைக் 'கலிபா' என்பர். சிலர் சமுதாயத்திலுள்ள குறிப்பான ஒருசில முக்கியஸ்தர்களால் நியமிக்கப்பட்டுப் பிறகு பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இஸ்லாமிய அரசியற் கொள்கைப்படி ஒவ்வொரு முஸ்லிமும் கலிபா ஆதற்கு உரியர். கலிபா சட்டப்படியும், நீதி தவறாமலும் அரசாளும்வரையில் குடிமக்களின் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கலாம். ஆயினும் அவர் கொடுங்கோலராய்விட்டால், அவரை நீக்கிவிடும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு.

இஸ்லாமியக் கொள்கைப்படி, குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஷரியத் விதிகளுக்கு விரோதமாக நடந்துகொள்ள நபிநாயகம் உட்பட யாருக்கும் அதிகாரமில்லை. நிருவாக முறையில் எழும் சில சிறு விவரங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ஷரியத்தில் விளக்கம் இல்லாமலிருக்கலாம்; இவற்றை இஸ்லாமிய மார்க்க நிபுணர்கள் ஆராய்ந்து முடிவு செய்வர். இஸ்லாமிய விதிகளுக்குப் பொருள் கூறுவதற்கும், அவற்றை நிருணயிப்பதற்கும் இஸ்லாமியநெறியில் தேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உரிமை உண்டு.

ஆகையால், இஸ்லாமிய அமைப்பு ஒரு ஜனநாயகமாக ஆயிற்று எனலாம். அதில் சாதி, மதம், இனம், இடம், மொழி முதலிய வேறுபாடுகள் இல்லை. ஆதலால் இஸ்லாமிய அரசியல் நிலைமை ஒரு தீர்க்கமான நிலைமையாய் இருப்பதுடன் இதற்கு மாறான விஷயங்களுக்கு இடம் கொடுக்காது. இவ்வித சமத்துவ ஜனநாயக்மாய் இருப்பதனால் ஒருவரை ஒருவர் மோசம் செய்வதைத் தடுப்பதோடுகூட நீதியையும், அறநிலையையும், ஒழுக்க நெறியையும் அது கற்பிக்கிறது. இவ்வித அரசியல் நிலை உலகமெங்கும் பரவ இடம் இருக்கிறது. ஆனால், அது பலவந்தமாகச் சர்வாதிகார ஆதிக்கத்தைப்போல இருக்க முடியாது. ஏனெனில், மனித வாழ்க்கையில் எல்லாப் பகுதியையும் அது சீர்திருத்தம் செய்ய முயல்கிறது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் அவனுடைய உரிமையைப் பூரணமாக அளிக்கும்படி செய்கிறது. கருத்து வேறுபாடுகளையும் தாராளமாகத் தெரிவிக்க இடம்

கொடுக்கிறதினால் சர்வாதிகாரத்திற்கு அறவே இடம் கொடுப்பதில்லை. மேலே சொன்ன கருத்துக்களை முதற் கலிபாவான அபூபக்கர் கீழ்க்கண்டவாறு நன்கு விளக்குகிறார் :