பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரணிடுதலும் முற்றுகையும்

181

அரணிடுதலும் முற்றுகையும்

ஸர்களின் நாசத்தையும் எதிர்த்து நின்றது. சுரங்க வெடிகள் அரண் அமைப்பைத் தூள்தூளாகத் தகர்க்கும் வரை ஜப்பானியர் முன்னேற முடியவில்லை. ஆகையால் தற்காலப் படைக்கலங்கள் தோன்றிய பின்னரும் அரண்கள் பயனற்றுப் போகவில்லை என்ற நம்பிக்கை வளர்ந்தது.

முதல் உலகப்போர் தொடங்கும் சமயத்தில் அரணிடுதலைப் பற்றி வழங்கிய கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறலாம். முக்கியமான பகுதிகளை அரணீட்டுப் பாதுகாக்க வேண்டும். சங்கிலிபோல் பிணைந்திருக்கும் இந்த அரண்கள், பகைவரது குண்டுகள் அந்த இடத்தை அடையாதவாறு, அதிலிருந்து பல மைல் தொலைவில் அமைந்திருக்கவேண்டும். பதுங்கு குழிகளோடு கூடிய காலாட்படை அணிவகுப்பு இக்கோட்டைகளை இணைக்க வேண்டும். கம்பிகளும், மற்றத் தடைகளும் அமைத்துப் பகைவரின் முன்னேற்றத்தைத் தடைசெய்ய வேண்டும். குண்டுகளால் சேதமடையாத பதுங்கிடங்கள் (Shelters) கட்டப்படவேண்டும். முக்கியமான சில பீரங்கிகள் கோட்டைக்குள்ளும் மற்றவை வெளியில் தக்க பாதுகாப்புடனும் மறைவாகவும் அமைக்கப் படவேண்டும். கோட்டைகளுக்கிடையே தக்க பாதைகளும், ரெயில் போக்குவரத்து வசதிகளும், தந்தி, தபால் வசதிகளும் இருக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் அதிகமான துருப்புக்களைப் பயன்படுத்தாமல் பகைவரது முன்னேற்றத்தைத் தடைசெய்ய முடியும் என்று நம்பினார்கள்.

பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லையில் இத்தகைய வலிவான அரண்கள் இருந்தமையால் ஜெர்மனி போரைத் தொடங்கியபோது பிரான்சை நேரடியாகத் தாக்காது பெல்ஜியத்தை ஆக்கிரமித்து, அந்நாட்டின் வழியே பிரான்சின்மேல் படையெடுக்க நேர்ந்தது. ஆனால் பெல்ஜியத்தில் இருந்த கோட்டைகள் ஜெர்மானியரது தாக்குதலினால் விரைவில் வீழ்ந்தது வியப்பையும் அச்சத்தையும் ஊட்டியது. ஆனால் அவற்றின் அமைப்பில் இருந்த குறைகளினாலேயே இவை இவ்வாறு அடிபணிய நேர்ந்ததே தவிரத் தற்காலப் போரிலும் கோட்டைகளும் அரண்களும் பயன்பட வழியுண்டு என்பது, பின்னர் வெர்டன் போரின்போது தெளிவாகியது. குறிப்பிட்டதோர் இடத்திற்கு அரணிட்டுப் பாதுகாப்பதைவிட முக்கியமான பிரதேசங்களை அரண்களால் பாதுகாக்கும் முறை எளியதும், நல்ல பயன் தருவதும் ஆகும் என்று முதல் உலகப்போர் காட்டியது. நச்சு வாயுவைப் பயன்படுத்தியும், அயக் கான்கிரீட்டினால் ஆன கட்டடங்களில் பதுங்கி இருந்தும், டாங்கிகளின் முன்னேற்றத்தையும், விமானத் தாக்குதல்களையும் சமாளிக்கலாம் என்பது தெரியவந்தது. போக்கு வரத்து வசதிகளைப் பாழாக்கியும், தாமதமாக வெடிக்கும் சுரங்க வெடிகளை ஏராளமாகப் பயன்படுத்தியும் எதிரிகளின் முன்னேற்றத்திற்குப் பெருந் தாமதம் விளைவிக்கலாம் என்பதும் அறியப்பட்டது.

இப் படிப்பினைகளிலிருந்து தற்கால எல்லைப் பாதுகாப்பு அரண்கள் தோன்றின. இவற்றுள் புகழ் வாய்ந்தது பிரெஞ்சு ஜெர்மானிய எல்லையில் பிரான்சினால் அமைக்கப்பட்ட மாஜினோ அரண் (Maginot line). பிரெஞ்சுத் தளபதி மார்ஷல் பெட்டெயின் (Marshal Petain) குறிப்பிட்டதுபோல் இவை "குறைவான ஆபத்தும் அதிகமான சௌகரியங்களும்" உள்ளவாறு கட்டப்பட்டன. இந்த அரணின் நீளம் சுமார் 250 மைல். இதில் பூமிக்கடியே அமைக்கப்பட்ட பல கோட்டைகள் நூற்றுக்கணக்கான மைல் நீளமுள்ள குடைவுகளால் இணைக்கப்பட்டன. ஒவ்வொரு கோட்டையும் பல அடுக்குக்களாக அமைக்கப்பட்டது. அவற்றில் வெடிமருந்துக் கிடங்கும், உணவுக் களஞ்சியமும், படுக்கை யறைகளும், ஆஸ்பத்திரியும், போர்த் தளவாட சேமங்களும், காரியாலயங்களும், டெலிபோன் வசதி.களும், காற்றைப் பதப்படுத்தும் சாதனங்களும் இருந்தன கனமான குண்டுகளும், விமான வெடிகுண்டுகளும் இவற்றைப் பாதிக்காதவாறு இவை பூமியின் அடியே ஆழத்தில் கட்டப்பட்டிருந்தன. இந்த அரணை அமைக்க ஒரு மைலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவாயிற்று என மதிப்பிட்டார்கள். கடற்கரைவரை இதை அமைக்காதது இதன் பெருங்குறையாகும். இதனால் 1940-ல் ஜெர்மானியர் இந்த அரணைச் சுற்றிவந்து நாட்டிற்குள் புகுந்துவிட்டனர். 1944-ல் பிரிட்டிஷ் அமெரிக்கப் படைகள் நாட்டில் படையெடுத்த போதும் ஜெர்மானியர் இந்த அரணைத் தற்காப்புக்காகப் பயன்படுத்தவில்லை. ஆகையால் இது இரண்டாம் உலகப் போரில் பயன்படவே இல்லை.

பிரெஞ்சு எல்லையில் ஜெர்மானியர் சீக்பிரீடு அரணை (Siegftied Line) அமைத்திருந்தனர். இதில் மாஜீனோ அரணைப்போல் பெரிய கோட்டைகள் இல்லை. ஆனால் இது இரு வரிசைகளில் அமைக்கப்பட்டிருந்தது. ஜெர்மனியின்மேல் நேசநாடுகள் படையெடுத்துச் சென்ற போது ஜெர்மானியருக்கு இது பெரிதும் பயன்பட்டது.

நிலையான அரண்களுக்கும், அவ்வப்போது போர்க்களத்தில் அமைக்கப்படும் தாற்காலிக அரண்களுக்கும் ஒரு நூற்றாண்டிற்குமுன் இருந்த வேறுபாடு இப்போது இல்லை. ஓர் இடத்தைப் பாதுகாக்கப் பெரிய கட்டடங்கள் தேவையில்லை. மிக விரைவில் குறைவான பொருள்களைக்கொண்டு வலிவான அரண்களை அமைக்க முடிகிறது. பகைவனைத் தடை செய்வதே முதல் நோக்கமாக இருந்ததுபோய்த் தற்காலத்தில் மறைவும் பாதுகாப்புமே முக்கியமாய் விட்டன. ஓரிடத்தின் இயற்கை அமைப்பிற்கேற்றவாறு அரணிடும் முறையை மாற்றிக்கொள்வதன் தேவை தற்காலத்தில் நன்கு அறியப்பட்டுள்ளது. பதுங்கு குழிகள் முதலியன மலை அல்லது ஆற்றின் போக்கிற்கேற்றவாறு அமைக்கப்படுகின்றன. குழிகள், கம்பித்தடைகள் முதலியவை இக்காலத்திலும் ஓரளவு பயன்படுகின்றன. தற்காலத்தில் போர்க்களத்தில் அரணிடுதலின் இன்னொரு நோக்கம் பகைவர்க்குப் பதுங்கிடங்கள் இல்லாமற் செய்வது. இதனால் பகைவர்கள் வரும் வழியைக் கட்டாந்தரையாக ஆக்கிச் செல்வது தற்கால அரணிடுதலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. விமானங்களிலிருந்து குண்டுவீசும் முறையும், தாழ்வாகப் பறந்துவந்து எந்திரத் துப்பாக்கியால் சுடும் முறையும் அரணிடுதலைப் பற்றிய பழங்காலக் கருத்துக்களை அறவே மாற்றிவிட்டன.

முதல் உலகப் போருக்குப்பின் டாங்கிகளின் அமைப்பிலும், விமானத் தாக்குதல் முறையிலும் நிகழ்ந்த பெரு முன்னேற்றங்களால் தாக்குதல் என்பது தற்காலத்தில் தற்காப்பைவிட எளிதாய்விட்டது. இதனால் அரணிடப்பட்ட போர்க்களப் பகுதிகளிலிருந்து பீரங்கிகளையும் எந்திரப் துப்பாக்கிகளையும் சுடும் இடங்களையும் மின்னற்போர் (Blitz) முறையினால் எளிதில் கைப்பற்ற முடிகிறது. மண் சுவர்களாலும் மேடுகளாலும் தற்காப்பைப் பெற முடியாது என்பது 1939-ல் போரின் தொடக்கத்திலேயே தெளிவாயிற்று. கவசப் பாதுகாப்பும், பதுங்கியிருத்தலுமே நல்ல தற்காப்புச் சாதனங்கள். தற்காலப் போர் முறையையே டாங்கிகள் மாற்றி யமைத்துவிட்டன. விமானங்களும் போர். முறையில் வேறொரு புரட்சியை விளைவித்துவிட்டன.