பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரணை

182

அரதத்தாசாரியார்

விமானத் தாக்குதலினால் ஓரிடத்திய தற்காப்பு அமைப்பைப் பாழாக்கி, மின்னல் வேகத்தில் மோட்டார்களில் துருப்புக்களை முன்னேற்றி, அதைக் கைப்பற்றும் முறையை ஜெர்மானியர் மிக வெற்றிகரமாகக் கையாண்டார்கள். இப்போர்முறையில் வரிசையாக உள்ள அரண்களினால் பயன் அதிகம் ஏற்படுவதில்லை.

இப்போரில் வேறொரு தற்காப்பு முறையும் ரஷ்யர்களால் கையாளப்பட்டது. இது சிலந்தி வலை முறை (Web method) எனப்படும். இம் முறையில் வரிசையாக அமைந்த நீண்ட அரண்களை அமைக்காது முக்கியமான சில இடங்களில் தற்காப்பு அமைப்பைப் பெருக்கி, அதைச் சுற்றிலும் பகைவர்கள் வந்து சூழ்ந்த பின்னரும் நெடுநாள்வரை அந்த இடத்திலிருந்து போரிடுகிறார்கள். இதனால் ஜெர்மானியரது மின்னல் தாக்குதல்கள் அனைத்தும் அவ்வளவாகப் பயன் தராமற் செய்யமுடிந்தது. இம்முறையில் இலட்சக்கணக்கான சுரங்க வெடிகள் அந்த இடத்தைச் சுற்றிலும் புதைக்கப்படுகின்றன. வரிசையாக அமைந்த அரண்களை டாங்கிகள் தகர்த்துச் செல்வதைப்போல் இம்முறையில் முன்னேற முடிவதில்லை. வருங்காலத்திலும் இத்தகைய முறைகள் பயன் தரலாம்.

விமானப் போக்குவரத்து முன்னேறிவிட்ட இக் காலத்தில் வேறொரு வகையிலும் வலிவான அரண்களையும் பயனற்றவைகளாகச் செய்யலாம். எதிரி அணிகளுக்குப் பின்புறத்தில் விமானங்களிலிருந்து துருப்புக் களையும், தளவாடங்களையும் இறக்கி அவர்களைப் பின்னிருந்து தாக்கும் முறை சென்ற போரில் பயனாகியது. நிலையான தற்காப்புச் சாதனங்களுக்காக 1939க்கு முன் பிரான்சு முதலிய நாடுகள் செலவழித்ததுபோல் ஏராளமாகப் பொருட் செலவு செய்ய, வருங்காலத்தில் எந்த நாடும் முன்வராது என எதிர்பார்க்கலாம். அணு குண்டின் தோற்றத்தினால் அரணிடல் மேலும் பயனற்றதாய் விட்டது. ஆனால் இதற்கு எதிராகப் பூமியின் ஆழத்தில் அமைக்கப்படும் பதுங்கிடங்கள். வருங்காலத்தில் பெருகலாம் என்று எதிர்பார்க்கலாம். எந்திரங்களின் வளர்ச்சியினால் போர்க்களத்தில் போரிடும் படைகளும் கொரில்லா (Guerilla) முறைகளைக் கையாளும் நாள் வந்துவிட்டது. இவ்வகைப் போருக்கு அரணிடுதல் அவசியமில்லை. நூல்கள்: V. R. R. Dikshitar, War in Ancient India; Col. Portway. Military Science Today; Gen. Hamley, Operation of War. கா. வா. ரா.

அரணை ஊர்வன வகுப்பில் ஓணான், பல்லி முதலியவற்றைப் போன்ற ஒரு குடும்பம். இதில் சுமார் 40 சாதிகளும் 600 இனங்களும் இருக்கின்றன. அரணைகள் உலகத்தின் பல பாகங்களிலும் உண்டு. ஆயினும் பழைய உலகத்தின் வெப்பநாடுகளில் இவை மிகுதியாக

அரணை

வாழ்கின்றன. இவை சில அங்குல நீளமே வளரும் சிறு பிராணிகள். ஆஸ்திரேலியாவிலுள்ள ஓர் இனந்தான் இரண்டடி நீளம் வளர்கிறது. அரணையின் உடலில் செதில்கள் ஓடு போல ஒன்றின் மேலொன்று சிறிது படியும்படி அடுக்கப்பட்டிருக்கின்றன. அவை சிலவற்றில் மிகப் பளபளப்பாக மழமழவென்று இருக்கும். சிலவற்றில் சொரசொரப்பாகவும் முள் போலவும் இருப்பதுண்டு. செதில்களுக்கு அடியில் தோலிலே சிறு எலும்புத் தகடுகள் உண்டு. சாதாரணமாக ஐந்து விரல்களுள்ள நான்கு கால்கள் நன்றாக வளர்ந்திருக்கும். சில இனங்களில் முன்கால்களோ, பின்கால்களோ, இரண்டு ஜதைகளுமோ வளர்ச்சி குன்றிச் சிறுத்திருக்கலாம். கால்கள் முழுவதுமே இல்லாமலும் இருக்கலாம். இந்தப் பிராணிகள் மணற்பாங்கான இடங்களிலும், வளைகளிலும், கல் இடுக்குகளிலும் வாழ்வதற்குத் தகுதியாக அமைந்திருக்கின்றன. பிராணிகள் நீரில் முழுகுவதும் நீந்துவதும் போலச் சில அரணைகள் மணலில் முழுகியும் நீந்தியும் செல்லத்தக்கன. அரணைகளில் கண்ணிமைகளின் அமைப்பும் பலவாறுள்ளது. பாலைவனத்தில் மணற் பிரதேசத்தில் சிலவற்றிற்குக் கண்ணின் கீழ் இமையில் ஒளியூடுருவத்தக்க ஓர் இடம் உண்டு. இன்னும் சிலவற்றில் முழு இமையுமே இவ்வாறு கண்ணாடிபோல இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு இமைகளும் ஒன்றாக ஒட்டிக் கொண்டு, பல்லி அல்லது பாம்புக்கு இருப்பது போலக் கண்ணாடி மாதிரியிருக்கும். இப்படியிருப்பது மணலாற் கண்ணுக்குக் கேடு நேராமற் காக்கவுதவும்.

அரணைகள் பெரும்பாலும் குட்டிபோடும். முட்டைகள் வயிற்றிலேயே தங்கி முதிர்ந்து சிறு குட்டிகள் வெளிவரும். சிலவற்றில் உள்ளே வளரும் குட்டிக்குத் தாயின் உடலிலிருந்து உணவு வரக்கூடிய சம்பந்தமும் ஏற்படுகிறது. முட்டையிடும் அரணையினங்களும் ஒன்றிரண்டு உண்டெனத் தெரிகிறது. நமது வீடுகளிலும் தோட்டங்களிலும் ஓடும் அரணைகள் சாதாரணமாக லைகொசோமா, மபூயா என்னும் சாதிகளைச் சேர்ந்த மிகவும் அழகான பிராணிகள். அரணை கடித்தால் மரணம் என்பது உண்மையன்று. பல்லி முதலியவற்றைப் போல அரணையும் தனக்கு ஆபத்து வரும்போது தன் வாலைத்தானே முரியச் செய்துவிடும். துண்டுவால் துடித்துக் கொண்டிருக்கும். அரணையைப் பிடிக்க வந்த பிராணி அந்த வாலைப் பற்றிக்கொள்ளலாம். அரணை உயிர் தப்பிப்பிழைப்பதற்கு இது ஒரு வழி. வால் திரும்ப வளர்ந்துவிடும்.

அரத்தை இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மருந்துச் செடிச் சாதி. இந்தச் சாதியில் சுமார் 40 இனங்களுண்டு. முக்கியமானவை இரண்டு. அவற்றுள் ஒன்று பேரரத்தை. இது கிழக்கு இமயமலைப் பிரதேசத்திலும், தென்மேற்கு இந்தியாவிலும் விளைகிறது. 6-7 அடி உயரம் வளரும். பலபருவ மட்டத் தண்டு தரைக்குள் இருக்கும். அது கிச்சிலிப் பழுப்பு நிறமுள்ளது; மணமும் காரமும் சிறு கசப்பும் உள்ளது. கனி 1 அங்குல நீளம். 3-6 விதைகளுண்டு. மற்றொன்றான சிற்றரத்தை சீன தேசத்திலிருந்து இறக்குமதியாகிறது. இதன் மட்டத்தண்டு சிறிதாகவும் செம்பழுப்பு நிறமாகவும் இருக்கும். பேரரத்தையை விட மணமும் காரமும் மிக்கது. இவை குடைச்சலுக்கும், இருமல், மார்சளி, சளிப்பு முதலியவற்றிற்கும் பயனாகின்றன. இவற்றை முறையே தும்பராஷ்டிரம், சன்ன ராஷ்டிரம் என்றும் சொல்வார்கள். குடும்பம் : ஜிஞ்ஜிபரேசீ (Zingiberaceae) ; சிற்றரத்தை : ஆல்ப் பைனியா அபிஷினேரம் (Alpinia officinarum); பேரரத்தை : ஆல்ப்பைனியா காலங்கா (Alpinia galanga).

அரதத்தாசாரியார் சோழநாட்டில் கஞ்சபுரத்திருந்த மதுசூதனாசாரியார் மகனார். தந்தை வைணவராயினும் இவர் சிவபக்தர். இவர் வைணவரோடு வாதம் செய்து வென்றதால் தந்தையும் சிவபக்தராயினர். சதுர்வேதசாரம், தத்துவ நிரூபணம், அரியர தாரதம்மியம் முதலிய பல நூல்கள் இயற்றியுள்ளார்.