பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரவிந்தர்

185

அரவிந்தர்

விடுதலை செய்தார். அரவிந்தரும் புதிய மனிதராக வெளிவந்து, தம் சிறையனுபவங்களையும், யோகக் காட்சிகளையும் ஆவேசமாகப் பொழிந்தார். பிறகு இவர் கர்மயோகி, தர்ம என்ற பத்திரிகைகளால் பகவத் கீதையின் அறத்தை உபதேசித்து, நாட்டிற்கு வழியும் காட்டி, அரசியலிலிருந்து விலகிக் கொண்டார். ஒரு

ஸ்ரீ அரவிந்தர்
உதவி : அரவிந்த ஆச்சிரமம்

மாதம் சந்திர நாகூரில் தவமிருந்து, பிறகு கப்பலேறி புதுச்சேரிக்கு 4-4-1910-ல் வந்தார்.

15-8-1914-ல் அரவிந்தர் ஆங்கிலத்தில் ஆரியா என்ற அறிவுக் களஞ்சியத்தைத் தொடங்கி ஆறரை ஆண்டுகள் நடத்தினார். அதுவே அவருடைய மெய்ஞ்ஞான பூரண யோக வேதம். அதில் வந்த அரிய கட்டுரைகளே இப்போது நூல்களாக வெளிவருகின்றன. யோக இணைப்பு (Synthesis of Yoga), தெய்விக வாழ்க்கை (Life Divine), கீதைக் கட்டுரைகள், வேத ரகசியம் ஆகியவை அரவிந்த சித்தாந்த விளக்கங்களே யாம்.

” இந்த உலகிலேயே விண்ணுலக ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்; கலி மாறிச் சத்திய யுகம் வர வேண்டும்; மானிட வாழ்க்கை அமரத் தன்மை பெற வேண்டும்; உடலிலும் தெய்வ ஒளி வீச வேண்டும்; உலகம் பொய், உடல் அநித்தியம் என்ற கொள்கை ஒழிய வேண்டும்” என்பவை அரவிந்தரின் அடிப்படையான கோட்பாடுகள். “இந்த உலகில் தெய்வ ஒளி வீசி, அழகும் ஆனந்தமும் வாழ்வில் நிலவக் காண்பதே எனது முயற்சி. அதற்கு மனத்திற்கு மேற்பட்ட விஞ்ஞான சக்தி இறங்கி வரவேண்டும். இந்த இறக்கத்திற்கு மனிதன் தன்னைப் புனிதனாக்கி, அடைக்கலம் புகுந்து, ஆர்வமுடன் அன்னையை உபாசிக்கவேண்டும்” என்கிறார் அரவிந்தர். ”இன்று மனிதன் கீழியற் கையில், ஆசை யாணவ மாயத்தில், மடமை இருளில் ஆழ்ந்து வருந்துகிறான். அவன் மனத்தில் நிகழும் போராட்டத்தினின்று மேலே உயரவேண்டும். உடல், உயிர், மனம், புத்தி எல்லாம் ஆணவத்தைத் துறந்து, ஆசை வலைகளை நீத்து, மெய்ஞ்ஞானச் சக்தி வடிவமான அன்னையைச் சரண் புகுந்தாலே உய்வுண்டு. பராசக்தி அன்னை அழுக்குப் பிடித்த மானிடக் குழந்தையை மாசு நீக்கித் தூய்மையாக்கி உருமாற்றுவாள்” என்பது அவர் நம்பிக்கை. ரூபாந்தரம் அல்லது மாறிப்பிறத்தலே அரவிந்த சித்தாந்தப் பயன். ”ரூபாந்தரம் என்பது கீழியல்பை முற்றிலும் மாற்றித் தெய்வத் தன்மை பெற்று, அன்பு, அமைதி, ஆற்றல், இன்பம், அறிவு, அருட்புலமைகளுடன் மனிதரை வாழச் செய்தலேயாம். இதற்குச் சிற்சத்தி மனிதனுள் செயல்புரிதல் வேண்டும். பழைய யோகங்களின்படி நான் சந்நியாசத்தையோ, சமாதி சித்தியையோ நோக்கமாகக் கொள்ள வில்லை. மனித தத்துவம் எதையும் அசட்டை செய்யாமல் பூரணமாக்கிப் புதுக்கித் தேவமனிதனை, பூசுரனை, நர நாரணனை இந்த உலகில் உண்டாக்குதலே எனது யோகக் குறிப்பு. இது புது யோகம். பழைய யோகங்களைப்போல் உலகைத் துறந்து, சுவர்க்கம், நிருவாணம் என்று தேடித்திரியும் யோகம் அன்று என்னுடையது. தெய்வ நிறைவேற்றமும் புதிய விஞ்ஞான மாற்றமுமே எனது குறிப்பு” என்று அரவிந்தர் சொல்லுகிறார்.

ஸ்ரீ அரவிந்தர் 1950 டிசம்பர் 4-ல் தமது பூத உடலை நீத்தார். சு. பா.

அரவிந்தர் கொள்கை : அரவிந்தருடைய தத்துவக் கொள்கையானது வெற்றுச் சிந்தனையின் விளைவுமன்று ; புலன்கள் வாயிலாகப் பெற்ற அனுபவங்களைக் கொண்டு வகுத்ததுமன்று ; வேதங்கள், உபநிடதங்கள், கீதையாகியவற்றை அவர் தமது ஆத்ம அனுபூதியைக் கொண்டு விளக்குவதாகும். ஆகவே அவருடைய கொள்கையானது அவர் மனத்துக்கு அப்பாற் சென்று கண்ட உண்மைகளை அறிவுக்கு ஏற்றவாறு பொருள் கூறுவதாகும்.

அவருடைய கொள்கையை அகண்ட விஞ்ஞான வாதம் என்றும், பூரண அத்வைத வாதம் என்றும் கூறலாம். அவர், மனத்துக்கு அதீதமான யோக முறை என்னும் பூரண யோக முறைக்கு அறிவு பூர்வமான அடிப்படை வகுத்தார். பூரண யோகம் என்பது அகண்ட வஸ்துவுடன் ஒருவன் தான் மட்டுமன்றி எல்லோரும் ஒன்றித்து வாழும் கலையாகும். தெய்விகச் சக்தி மனிதனிடம் பாயும்படி செய்யும் கலையே அது.

பிரபஞ்சத்துக்கு அடிநிலையாகவுள்ள உள்பொருனானது ஒரு பொருளுமன்று, பல பொருளுமன்று, ஒன்றும் பலவுமாயுள்ள ஒரு தத்துவமாகும். அதுவே பலதிறப்பட்ட நனவுடன் கூடிய பூரணப் பிரமமாகும். அதன் பண்பை ஊன்றி ஆராய்ந்தால், அதனிடம் தனித்துவம், அகண்டத்துவம், அகண்டாதீதத்துவம் என மூன்று நித்திய அமிசங்கள் காணப்படும். அகண்ட அதீதநிலையில் அது பராத்பர பரப்பிரமமாக உளது. அது மனத்துக்கு எட்டாதது; குறைவு படாதது ; எல்லையற்றது. அதுவே ஈசுவரத்துவமும் சீவத்துவமும் உடையதாகும். அவ்விரண்டும் உள்பொருள்களே யல்லாமல் மாயா வாதிகள் கூறுவதுபோல் வெறும் தோற்றங்களல்ல. பிரமமே இருப்பு அமிசமாகிய சிவமாகவும், தோற்ற அமிசமாகிய சக்தியாகவும் இருக்கின்றது. ஆனால் சிவத்துக்கும் சக்திக்குமுள்ள உறவு இத்தகையது என்று தருக்க முறையாக வகுக்க முடியாது. பொருள் - பண்பு, காரணம் - காரியம், ஆன்மா -