பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரவிந்தர்

186

அராபிய தத்துவ சாஸ்திரம்

யாக்கை, ஒற்றுமை - வேற்றுமை போன்ற பதார்த்த லட்சணம் கூறுதல் இதற்குப் பொருந்தாது.

அகண்டத்துவ நிலையில் பிரமம், ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று பண்புகளுடைய தத்துவமாகும். அந்நிலையில் அதை ஈசுவரன் என்பர். ஈசுவரன் அதாவது சகுணப் பிரமம் நித்தியமானது என்று விசிஷ்டாத்வைதம் கூறுவது முற்றிலும் சரியே. ஆயினும் பூரணப்பிரமத்தின் அகண்டாதீத நிலையே அனைத்திலும் உயர்ந்த நிலை என்பதையும் கவனித்தல் வேண்டும். மொழிகளால் கூற முடியாத பிரமம் அறிவுக்கு விளங்கும் வண்ணம் தோன்றும் ஆதி அமிசமே சச்சிதானந்தமாகும். அதன் உள்பொருள் நிலையில் இருப்பு, நனவு, இன்பம் ஆகிய மூன்றும் அதன் இணைபிரியாப் பண்புகளாகும். அகண்ட உலகங்களை ஆக்குபவன் என்ற நிலையில் நித்திய சத்திய நனவாகக் காணப்படுகின்றது. அந்த நனவு, விஞ்ஞானம், பிரஞ்ஞானம், சஞ்ஞானம் என மூன்று அமிசங்களுடையது. ஈசுவரன் பல பொருள்களாகத் தோன்றுவதற்கு அடிநிலையாயிருப்பது இந்த அகண்ட நனவேயாகும்.

சீவான்மா : பிரமமானது தனித்துவ நிலையில் அறிவதும் அனுபவிப்பதும் தோன்றுவதுமான பல திறப்பட்ட அமிசங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. ஆன்மா என்பது லுக்ரீஷியஸ் கூறிய அணுவுமன்று ; லைப்னிட்ஸ் கூறிய 'மோனட்' என்பதுமன்று ; அல்லது ஸ்பினோசா கூறிய அகண்ட வஸ்துவின் அமிசமாத்திரமுமன்று; அல்லது மாத்துவர் கூறிய தெய்விகச் சத்தியைச் சார்ந்த உண்மையுமன்று. அது ஒருவிதத் தோற்றமுடைய உள்பொருளேயாகும். சீவான்மாவுக்குப் பிறப்பு இறப்பு இல்லை. அது எவ்வித மாறுதலும் அடையாதது. காரண காரியச் சுழலில் அகப்படாதது. அந்த நிலையில் அது சத்துவ சொரூபம் உடைய நித்திய வஸ்துவேயாயினும் தொழிலிலும் தோற்றத்திலும் அதனின்றும் வேறுபட்டதேயாகும். அதுதான் அகண்ட, அகண்டாதீத உள்பொருளின் தொழில் நடத்தும் அமிசம். ஆதலால் ஆன்ம அனுபூதி பெறும்போது 'தான்' என்பது மட்டும் மறையுமேயன்றிச் சங்கரருடைய சீடர்கள் கூறுவதுபோல் சீவான்மாவின் 'தனித்துவம்' அழிந்து போவதன்று. சீவன் அவித்தையை நீக்கி, வினைத் தளையை அறுத்து, ஆன்ம விடுதலை பெறும்போது அகண்டாதீத மௌன நிலையாகிய மோட்சத்தையோ, அல்லது உள்பொருளுடன் கூடும் இன்ப ஐக்கிய நிலையாகிய காதலையோ, அல்லது பிரபஞ்சத்தின் பரிணாமமாகிய உள்பொருளின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உள்பொருளுடன் ஒத்துழைப்பதையோ தேர்ந்து கொள்ளலாம். இக்காலத்தவர் மூன்றாவது கூறியதையே தேர்ந்துகொள்ள வேண்டும் என்று அரவிந்தர் கூறுகிறார். ஏனெனில் அப்பொழுதுதான் மன்பதையைத் தெய்விகம் அடையும்படி செய்ய முடியும். இவ்வாறு மனிதன் தெய்வத்துடன் ஒத்துழைத்து மனிதனைத் தெய்விகம் அடையும்படி செய்வதற்கான கலையே அரவிந்தர் வகுத்துள்ள பூரண யோக முறை என்பதாகும்.

உலகம் என்பது உள்பொருளானது படைப்புத் தொழிலிற் கொள்ளும் வெள்ளமாகும். பிரமமானது அகண்டாதீத நிலையில் மாறாத தன்மையுடையதாக இருப்பினும், தன்னுடைய எல்லையற்ற சக்திகளைத் தோற்றுவிப்பதற்காக உலகமாகப் பரிணமிக்கின்றது. இந்தப் பரிணாமம் காலம் இடம் என்னும் இரண்டு இணைபிரியா அமிசங்கள் வாயிலாகவே நடைபெறுகின்றது. உள்பொருளின் உறக்க நிலையே உலகமாகும். தன்னையே சிந்தித்து, அதன் பயனாகத் தன்னையே மறந்த நிலை என்றும் கூறலாம். சச்சிதானந்தத்திலுள்ள சத்து என்பதன் தாழ்ந்த தோற்றமே சடப் பொருளாகும். உயிர் என்பது சித்து என்பதன் தாழ்ந்த தோற்றமும், மனம் என்பது ரித சேதனம் அல்லது உண்மை அறிவு என்பதன் தாழ்ந்த தோற்றமுமாகும். ஆனந்தமே ஆத்மாவாகத் தோற்றுகிறது. ஆதலால் மனிதனுடைய அடி நிலையான குறிக்கோள்கள் வெற்றுக் கற்பனைகளல்ல, உள்பொருளின் குறிக்கோள்களேயாம்.

சாதாரணமான மனித அறிவுக்கு மேலாகப் பல அறிவு நிலைகள் உள. அவை ஊர்த்துவ மனம், பிரபுத்த மனம், பிரஞ்ஞை, அதிமானசம் என்பன. அதிமானசமே உள்பொருளின் பிரதிநிதியாக உலகத்துக்கு வந்து சேர்வது. அது உள்பொருளுடன் உறவு கொண்டதாயிருப்பினும், ஒன்றாயிருப்பதை விட்டுப் பலவாகத் தோன்றுவதற்காக அவித்தை நிலையையே மேற்கொள்கின்றது. அவித்தை என்பது வித்தைக்கு எதிர்மாறான தன்று, வித்தையினிடமுள்ள ஒரு சக்தியேயாகும். அது பிரமம் தன்னுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத் தன்னையே மறந்து நிற்பதாகும். பிரபஞ்சம் பரிணாம நிலையுடையது. அதனால் விலங்கினின்றும் மனிதன் பரிணமித்ததுபோலவே மனிதனின்றும் உயர்- மனிதன் பரிணமிப்பான். அப்பொழுது கடவுளுடைய அரசு பூலோகத்தில் அமையும்; அமைதியும் முன்னேற்றமும் ஆனந்தமும் உண்டாகும். ஹ.

அரவிந்தாச்சிரமம்: அரவிந்தர் புதுச்சேரியில் வந்து நிலைத்தபோது பல அரிய அன்பர்களும் அங்கு வந்து கூடினர். அரவிந்தாச்சிரமம் எழுந்தது. மற்றும் பல சாதகர் ஒருங்கு சேர்ந்தனர். அது ஒரு புது உலகமாக வளர்ந்து வந்தது. அரவிந்தரின் யோகக் கனவுகளை அன்னை யென்று ஆச்சிரம சாதகர் போற்றும் ஒரு பிரெஞ்சுமாது நனவாக்க உதவினர். அன்னையே ஆச்சிரமும் ஆச்சிரமமே அன்னையுமாயின. அரவிந்தர் பணியே அங்குத் தெய்வ வழிபாடாயிற்று. அன்னை பணியே யோகமாயிற்று. உலகத்தின் பல வேறிடங்களிலிருந்து மக்கள் ஆச்சிரமத்தைப் பார்க்கவும் அங்கு உறையவும் விரும்பி வந்தனர். அங்குச் சாதி மதப் பேச்சே கிடையாது. எல்லோரும் ஒரே குலமாக வாழ்ந்து வருவாராயினர். தூய உணவு, தூய உடை, தூய காற்று, தூய வாழ்வு அங்குண்டு. இரு பாலார்க்கும் வேண்டிய சுதந்தரம் உண்டு. அவரவர் புலமையை வளர்க்கப் பலவிதமான தொழில் துறைகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

அராபிய தத்துவ சாஸ்திரம் : அராபிய தத்துவ சாஸ்திரம் என்பதை முஸ்லிம் தத்துவ சாஸ்திரம் என்றழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். இது கிரேக்கத் தத்துவ சாஸ்திரத் தொடர்பினால் விரைவாக வளர்ச்சியடைந்தது. இதில் நான்கு விதக் கொள்கைகள் காணப்படுகின்றன.

1. முத்தாஜல் (அறிவுக் கொள்கை - Rationalism) : முகம்மதுநபி மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றதை ஹெஜிரா என்பர். அது 622-ல் நிகழ்ந்தது. அதிலிருந்தே முஸ்லிம் ஆண்டு தொடங்குகின்றது. அது தொடங்கி ஒரு நூற்றாண்டு ஆகும் அளவிலே இந்தக் கொள்கை ஏற்பட்டது. இதன் ஆதாரத் தத்துவங்கள் கடவுள் ஒருவரே என்பதும், அவர் நீதியுள்ளவர் என்பதுமாம். அவர் நிர்க்குணர். அவர் உளராந்தன்மையே அவருடைய குணங்கள் அனைத்தும் ஆகும். அவர் எல்லாமறிந்தவர் ; எல்லா ஆற்றலும் பொருந்தியவர். இவ்விரண்டும் அவருடைய உளராந் தன்மையிலேயே அடங்கினவேயன்றி வேறான குணங்கள் அல்ல. அவர் நீதி