பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அராபிய தத்துவ சாஸ்திரம்

188

அரிக்கமேடு

4. தத்துவ சாஸ்திரம்: இஸ்லாம் மதம் ஏற்படு முன்னர் பாரசீகத்திலுள்ள ஜுன்டிஷபூர், மெசப்பொட்டாமியாவிலுள்ள ஹரான், எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா என்னும் இந்நகரங்கள் கிரேக்க நாகரிகத்துக்குப் பேர்போனவையாக இருந்தன. இவற்றிலிருந்துதான் அது கீழ்நாடுகளுக்குப் பரவிற்று. உமயத் அரசாட்சிக் காலத்தில் அராபிய ஏகாதிபத்திய வாதிகள் அராபியரல்லாதவருடன் பழகுவது தங்கள் பெருமைக்கு இழுக்காகும் என்று கருதினர். அப்பாஸ் கட்சியினர் (Abbasides) ஆட்சிக்கு வந்தபொழுது ஆள்வோரும் ஆளப்படுவோரும் தங்குதடையின்றிக் கலந்து வாழ்ந்தனர். ஆல்-மாமூன் என்பவர் கிரேக்க நாகரிகக் கல்வியை முஸ்லிம் அறிஞரிடையே பரவும்படி செய்தார். அராபியர்கள் அந்த நாகரிகத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர். அவர்கள் அதைத் தங்கள் அராபி உலகத்தில் உலவி வந்த மதக் கருத்துக்களுக்கும் தத்துவ சாஸ்திரக் கருத்துக்களுக்கும் ஏற்ப ஒரு புதிய தத்துவ சாஸ்திர முறையாக மாற்றி அமைத்துக்கொண்டார்கள். முதன்முதல் புகழ்பெற்ற தத்துவ சாஸ்திரியாக இருந்தவர் ஆல்-கிண்டி (இ.873). அவர் கிரேக்கத் தத்துவ சாஸ்திர நூல்கள் பலவற்றை அரபு மொழியில் பெயர்க்கவும், முன்பேயுள்ள மொழி பெயர்ப்புக்களைத் திருத்தவும் செய்தார்.

இஸ்லாமிய தத்துவ சாஸ்திரிகளில் தலையாயவரும் புதிய பிளேட்டானிக் கொள்கையினருமான பாராபி (இ.950) என்பவரே பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியவர்களுடைய கொள்கைகளின் சிறந்த உரையாளராகக் கருதப்படுகிறார். அவர் அரிஸ்டாட்டிலுடைய கருத்துக்களின் மறைபொருள்களை மிகத் தெளிவாக விளக்கியபடியால், முஸ்லிம்கள் அரிஸ்டாட்டிலை முதல் ஆசிரியர் (குரு) எனவும், பாராபியை இரண்டாவது ஆசிரியர் எனவும் கூறுவர். அவருக்கு அரிஸ்டாட்டிலிடம் பக்தியிருந்ததுபோலவே புதிய பிளேட்டானிக்கொள்கையிடமும் மோகம் இருந்தது. அவர் உலகு கடவுளிடமிருந்தே கீழ்நோக்கும் வரிசைக் கிரமமாகத் தோன்றியது என்பதில் நம்பிக்கை உடையவராக இருந்தார்.

இபின் சீனா (இ.1036) அறிவுக் களஞ்சியமாகவும், திறமையான மருத்துவராகவும், பெரிய தத்துவ சாஸ்திரியாகவுமிருந்தார். அவரும் அரிஸ்டாட்டிலின் கொள்கையையே உடையவர். அவர் கொள்கையில் புதிய பிளேட்டானிக் கொள்கையின் அடையாளம் ஒரு சிறிதே காணப்படும். அவர் பல நூல்கள் எழுதியிருந்த போதிலும் அவருடைய ஷீபா என்னும் நூலே மிக முக்கியமானது. அதைப் பௌதிகம், தத்துவம், கணிதம் மூன்றின் களஞ்சியம் என்று கூறலாம்.

இப்னி ருஷத் (அவரோஸ்) (இ. 1198) சிறந்த முஸ்லிம் தத்துவ சாஸ்திரிகளில் ஒருவர், "அரிஸ்டாட்டிலின் நூல்களுக்கு ஆழ்ந்த உரைகள் எழுதியவர்களில் ஒருவர்" என்று மங்க் என்பவர் இவரைப் பற்றிக் கூறுகிறார். அவர் அத்துடன் சிறந்த இஸ்லாமியச் சட்ட விளக்க உரை ஆசிரியராகவுமிருந்தார்.அவருடைய நூல்கள் நீண்ட நாள்வரை ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் பயின்று வரப்பட்டன.அவருடைய தத்துவ சாஸ்திரத்துக்கு ஐரோப்பிய மொழிகளில் உரைகள் எழுதப்பட்டன.

இபின்-இ-பாஜா (இ.1138), இபின் மிஸ்கவயா (இ.1030), ஷேக் ஷெஹாபுதீன் (இ.1190) ஆகியவர்களும் புகழ் வாய்ந்த தத்துவ சாஸ்திரிகள்.

ஆகவே முஸ்லிம் தத்துவ சாஸ்திரிகள் கிரேக்கத் தத்துவ சாஸ்திரத்தை ஆராய்ந்து, அதிலுள்ள முரண்பாடுகளை நீக்க முயன்றனர் என்று கூறலாம். மீ. வ.

அராவான் (இராவான்) அருச்சுனனுக்கும் உலூபி யென்னும் நாக கன்னிகைக்கும் பிறந்தவன். பாரதப் பெரும்போரிலே களப்பலியாகப் பாண்டவருக்குதவியவன்.

அரிக்கமேடு என்பது புதுச்சேரிக்குத் தெற்கில் இரண்டு மைல் தொலைவில் வராக நதி யென்னும் செஞ்சியாற்றின் பழங்கிளையான அரியாங்குப்பத்தாறு என்ற காயல் பெருக்கத்தால் அறுத்தோடியும் அணையப்பட்டும் உள்ள ஒரு மேடு. ஆற்றையடுத்திருப்பது பற்றி அருகு மேடு எனப் பெயர் வந்தது போலும். அடுத்துள்ள பரதவர்குப்பமான வீராம்பட்டினம் பண்டை வணிகர் நியமங்களான வீரபட்டினங்களில் ஒன்றாம். புகார் நகருள் அடங்கிய மருவூர்ப்பாக்கம் போல் இங்கும் ஆற்றின் அக்கரை மருங்கைப்பாக்கம் என்ற பழம் பெயர் திரிந்து முருங்கைப்பாக்கமா யிருக்கிறது. அரியாங்குப்பத்தில் இன்றும் ஒரு புத்தர் சிலை காணக்கிடக்கிறது. அண்மையில் முறைப்படி அகழ்ந்தாராயப்பட்ட இம்மேடு கிறிஸ்து அப்தத் தொடக்கத்தில் இக்கயவாய் மருங்கில் திகழ்ந்த சோழமண்டலத் துறைமுகப்பட்டினங்களில் ஒன்றின் சிதைவைத் திறந்து காட்டியது. சங்க காலத்தே தமிழகம் ரோமானிய சாம்ராச்சியத்துடன் நிகழ்த்திய கடல் வாணிபத்தால் கொழித்த பட்டினங்களில் ஒன்றான இப்பழம்பதியை எஞ்சிய சங்க நூல்கள் குறிக்காது போயினும், முதல் நூற்றாண்டு யவன நூலான பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) இதைப் பொதுகை (Poduke) எனக் குறிக்கும். 1945-46 ஆம் ஆண்டுகளில் இங்கு அகழ்ந்து கண்ட இடம் இப்பழம்பதியின் யவனச்சேரியாம். கி.பி. 50 முதல் 200 ஆம் ஆண்டுவரை எனக் காலம் இடக்கூடியதும், சுடுமண்ணால் (செங்கல்) கட்டப்பெற்றதுமான பண்டகச் சாலைகளும், சாயச் சாலைகளின் சிதைவுகளும், மற்றும் கண்ணாடி, பளிங்கு, சூதுபவழம் (Carnelian) முதலியவைகளில் கடைந்த மணிகளும், உருவப் படங்கள் செதுக்கிய பதக்கங்களும், பொன்னின் மணிகளும், முற்றுப்பெற்றதும் பெறாததுமான நிலையில் காணப்பட்டமைபற்றி யவனத்து மணி வினைஞர்களும் பொற்கொல்லர்களும் இங்குத் தொழில் நடத்தியது விளங்கும். இந்தியரிடமிருந்து ரோமானியர் பெரிதும் விரும்பி வாங்கிய மெல்லிய மஸ்லின்கள் இங்கேயே சாயமேற்றப்பட்டன போலும். மற்றும் கண்ட பல தடையங்களில் மேனாட்டு மட்கலங்கள் பல இங்குக் கொணர்ந்து புழங்கப்பட்டமையும், அவைபோன்று இங்கேயே வனையப்பட்டமையும் தெளிவாகின்றன. இத்தாலி நாட்டின் பெயர் பெற்ற அரிஸ்ஸோ (Arezzo) நகரத்துக் குயவர்கள் இயற்றித் தம் முத்திரைகள் பதித்து விற்ற உயர்ந்தவகை அரிட்டைன் (Arretine) மட்கலங்களின் சிதைவுகளே இவ்விடத்தின் காலத்தை நுணுகியளவிடுவதற் குதவிய சிறந்த திறவுகோலாயின. புறநானூறும் (செய். 56, வரிகள் 18-20) மற்றும் பல சங்க நூல்களும் கூறுவதுபோல் அக்காலத்தே யவனர் தமிழரிடம் கொண்ட பொருள்களுக்கு விலையாகப் பொன்னுடன் உயர்ந்த மதுபான வகைகள் கொணர்ந்து இறக்கி வழங்கியதற்கு இங்குக் கண்ட இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் (Amphorae) சிதைவுகளும், கண்ணாடிக் கோப்பைகளுமே சான்றாகும். இவற்றுடன் கலந்து காணப்பட்ட இந்திய நாட்டுக் கல வகைகள், சங்கறுத்த வளைகள், அணிகள் முதலிய புதைபொருள்களின் கால அறுதி அவற்றுடன் கூடிக்கிடைத்ததும் காலத்தை நுணுக்கமாக அள்-