பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிசி

193

அரிசி

பச்சைப் பயறு, உளுந்து, கொள்ளு, கடலை போன்ற விரைவில் உண்டாகும் அவரைக் குடும்ப வகைகளைப் பயிராக்குவர். இவ்வாறு நெல்லையும் இவ்வவரை வகைகளையும் மாறி மாறிப் பயிரிடுவது நெற்பயிருக்கு நல்லதாதலால் இந்த முறையைக் கையாள்வது நல்லது. மிகுந்த குளிர் இல்லாத பகுதிகளில் ஆண்டில் இரண்டு முறை நெற்பயிர் விளைவிக்கப்படும். சென்னை இராச்சியத்திலும், மற்றத் தென்னிந்திய இராச்சியங்களிலும், பாசனவசதியுள்ள பகுதிகளில் நெல்லையும், நிலக்கடலையையும் மாறி மாறிப் பயிரிடுதல் நன்றாம். இவ்வாறு சிறந்த உரங்களையும் மாறி மாறிப் பயிரிடும் முறைகளையும் பயன்படுத்தினால் நெல் விளைவைப் பெருக்கலாம்.

சென்னையில் நெற்பயிர்: சென்னை இராச்சியத்தில் நெற்பயிராகும் நிலம் ஒரு கோடியே மூன்று லட்சம் ஏக்கர். அதில் விளையும் அரிசி 71 இலட்சம் டன்; அதனால் சராசரி விளைவு ஏக்கருக்கு 1133 ராத்தல் அரிசியாகும். நெல் பயிராகும் நிலத்தில் 90%-ல் நடவு முறையில் பயிர் செய்யப்படுகிறது. 75% நிலத்திற்கு வாய்க்கால், குளம், கிணறு முதலியவற்றிலிருந்து நீர் பாய்ச்சப்படுகிறது.

நெற்பயிர் நடைபெறும் பகுதிகளில் (1) கோதாவரி, கிருஷ்ணா, காவேரி தீரங்கள் பாசன வசதியுடையவை. (2) கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் மழையும் கிணற்று நீரும் கொண்ட விவசாயம் உடையது. (3) நடு மாவட்டங்களும், தென் மாவட்டங்களும், மழையும் குளத்துநீரும் கொண்டு விவசாயம் நடத்துபவை. (4) மேற்குக் கடற்கரையில் 100 அங்குல மழைக்கு மிகுதியாதலால் முற்றிலும் மழை நீர் கொண்டே பயிர் செய்வர்.

நீர் வசதியைப் பொறுத்து ஆண்டில் ஒரு முறையோ இரண்டு முறையோ பயிரிடுவர். சில இடங்களில் மூன்று முறை நடைபெறுவதுண்டு. சில இடங்களில் மட்டுமே நெல் அறுத்தபின் அவரை வகைகளைப் பயிரிடுகின்றனர். சில பகுதிகளில் நெல் பயிரிடுவதற்கு முன்போ அல்லது பின்போ கேழ்வரகையாவது கம்பையாவது பயிரிடுவர். கோதாவரி, கிருஷ்ணா, கோயம்புத்தூர், திருச்சி மாவட்டங்களில் மேட்டுப் பூமிகளில் நெல் பயிரிட்டபின் மஞ்சள் கரும்பு முதலியவைகளைப் பயிரிடுகிறார்கள்.

வட ஆர்க்காடு, சேலம், தென் ஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் கிணற்றிலிருந்து நீர் இறைத்தே நெல்லைத் தோட்டப் பயிராக உண்டாக்குகிறார்கள். கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவேரி, பெரியாறு, தாமிரபரணி தீரங்களில் பாசன முறையிலேயே பயிராகிறது. நீர் பாய்ச்சிப் பயிர் செய்வது வேறு பல் பகுதிகளிலும் நடைபெறுகின்றது.

சென்னை இராச்சியத்தில் நெற்பயிர் செய்யும் பருவங்கள் மூன்று : (1) தென்மேற்குப் பருவமழைக் காலம் (ஜூன்- செப்டம்பர்), (2) வடகிழக்குப் பருவமழைக் காலம் (அக்டோபர்-ஜனவரி), (3) கோடைக்காலம் (பிப்ரவரி-மே).

விசேஷ விவசாய முறைகள்: (1) ஊடு விவசாயம் : தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று திங்கட் பயிராகிய குறுவை நெல்லை ஏழு திங்கட் பயிராகிய ஓட்டடன் நெல்லுடன் ஒன்றுக்கு நாலாகக் கலந்து, நாற்று உண்டாக்கி, 25 நாள் வயதான நாற்றை, பல நாற்றுக்களை ஒன்றாகச் சேர்த்து ஆறு அங்குலத் தொலைவில் நடுவார்கள். குறுவையைச் செப்டம்பர் அக்டோபரில் அறுத்துவிட்டு, நிலத்தைக் கிளறிவிட்டு, அதன் அரிதாளை மண்ணில் புதையச் செய்வர். ஒட்டடனைப் பிப்ரவரியில் அறுப்பர்.

(2) உப்பு நிலத்துப் பயிர், (a) மலையாளத்தில் 'கைப்பாடு ' முறை: மேற்குக் கடற்கரையில் ஆறுகள் கடலில் சேருமிடங்களில் உப்புநீர் எதிர்த்து வருவதால் அங்குள்ள நீரும் உப்புடையது. மார்ச்சுத் திங்களில் மண்ணைக் குவித்துவைத்து, ஜூன் திங்களில் பருவமழை ஆரம்பித்தபின், சில குறிப்பிட்ட நெல்வகைகளை முளைக்கவைத்து விதைப்பார்கள். நாற்று 15 அங்குல உயரம் வளர்ந்ததும் மண் குவியலைச் சிறு துண்டுகளாக வெட்டி விட்டு, அவற்றில் நாற்றுக்களை நட்டு, அவை 9 அங்குலத் தொலைவில் இருக்கும்படி செய்து நீர் பாய்ச்சி வருவார்கள். நல்ல விளைவு காணும்.
(b) கடற்கரை உப்பு நிலங்கள்: கடல் நீர் பெருகும் நிலங்களில் அணைபோல் கட்டி, வந்த கடல் நீர் போக வழிவிட்டுப் பின் நல்ல நீர் பாய்ச்சி,உப்பைக் கரைந்து போகுமாறு செய்வர். இத்தகைய நிலங்களில் வண்டல், கரிம உரங்கள், நகரக் கலப்புரம் முதலியவற்றை நிறையப்போட்டுப் பண்படுத்துவர். இத்தகைய நிலங்களுக்குச் சிலாசத்துப் போன்ற ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது. உவர்கொண்டான், களர்சம்பா, தெல்லதோக என்னும் நெல் வகைகளைப் பயிரிடுதல் பயன் தருவதாகும்.

(3) மேற்குக் கடற்கரை கோல் முறை:- மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதுண்டு. கடல் நீர் வராதபடி அணை போட்டு, வந்த நீரை இறைத்துவிட்டுச் 'சீரா' என்னும் மூன்று திங்கட் பயிரை, விதையை முளைக்க வைத்து, ஜனவரியில் விதைத்து, இரண்டு மூன்று முறை நீர் பாய்ச்சுவர்.

(4) ஆழ்ந்த நீர் நெல் வகைகள்: மேற்குக் கடற்கரையிலுள்ள கரிங்கோரா அல்லது பெட்லா என்னும் பகுதியில் மழை நீர் மட்டம் குறையும் ஆகஸ்டுத் திங்களில் நீண்ட காலக் குட்டாடன் நெல்லைப் பயிர் செய்து ஜனவரியில் அறுப்பர்.

நெல் அரைத்தல்: நெல்லை அரைத்து அரிசியாக்கும்போது, அரிசி சேதப்படாமலும், தூயதாகவும், ஊட்டப் பொருள்கள் கெட்டுப் போகாமலும் இருத்தல் வேண்டும். அரிசியாக்குவதற்குப் பழைய முறை கை உலக்கையாலோ, ஏற்ற உலக்கையாலோ குத்துவதாகும். ஏற்றத்தை வடநாட்டார் தேங்கி என்பர். இக்காலத்தில் எந்திரங்கள் ஏற்பட்டுள்ளன. அவை குத்தும் எந்திரம் என்றும், அரைக்கும் எந்திரம் என்றும் இரண்டு வகைப்படும். அரைக்கும் எந்திரமே குத்தும் எந்திரத்தை விட மிகுந்த வேலைத்திறமையுடையது. நாட்டில் விளையும் நெல்லில் 60-70% கையால் குத்தப்படுகிறது. இந்த முறையில் கிடைக்கும் அரிசி சேதமடைவது குறைவு. அதில் ஊட்டப் பொருள் மிகுதி.

இந்தியாவின் தெற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் புழுங்கலரிசியும், வட இந்தியாவில் பச்சரிசியும் விரும்பப்படுகின்றன. புழுங்கலரிசி செய்வது பண்டைக் காலமுதல் நடந்து வருவது. அப்படிச் செய்வதால் உமி நீக்குவது எளிது ; அரிசி உடைவதில்லை ; அரிசி குறைவாகவே சேதமாகும் ; அரிசியில் பூச்சிகள் எளிதில் பற்றுவதில்லை. பச்சரிசி தயாரிக்கும்போது கருவும் தவிடும் பிரிந்து விடுவதால் அவற்றிலுள்ள வைட்டமின் பீ, புரோட்டீன்கள், தாதுப் பொருள்கள் ஆகிய முக்கிய ஊட்டப் பொருள்கள் போய்விடுகின்றன. அரிசியைப் புழுக்கும்போது இப்பொருள்கள் அரிசியின் உட்பாகத்திற்குச் சென்றுவிடுகின்றன.

புழுங்கலரிசி செய்வதற்காக நெல்லை 12-24 மணி அளவு நீரில் ஊறவைத்துப் பின் வேகவைத்துப் பின்னர் உலர்த்திக் குத்துவார்கள். எந்திரம் வைத்திருக்கும்