பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரித்தல்

195

அரிஸ்டாட்டில்


அரித்தல் : தங்கம், வெள்ளி போன்ற ராஜ உலோகங்களைத் தவிர மற்றெல்லா உலோகங்களின் மேலும் காற்றுப்பட்டால் மேற்பரப்பு மங்கி, ரசாயன விளைவுகள் நிகழ்ந்து, அவை ஆக்ஸைடுகள் ஆகின்றன. இவ்விளைவை அரித்தல் எனலாம். பொதுவாய் இதனால் உலோகத்தின் மேற்பரப்பில் ஆக்ஸைடு இலேசாகப் படிந்து, உலோகம் மேலும் கெடாமல் பாதுகாக்கிறது. செம்பில் பச்சையான களிம்பேறுவதும், அலுமினியத்தில் ஆங்காங்கு வெண்மையான புள்ளிகள் தோன்றுவதும் இதற்கு உதாரணங்களாகும். ஆனால் இரும்பில் இவ்விளைவு வேறு வகையாக நிகழ்கிறது. அதன் மேற்பரப்பில் பழுப்பு நிறமான துரு உண்டாகி, உலோகத்தின்மேற் படிந்து, அதைப் பாதுகாப்பதற்கு மாறாக இவ்விளைவை விரைவுபடுத்திப் பொருள் முழுதும் கெடுமாறு செய்கிறது. பார்க்க: துரு.

ராஜ உலோகங்கள் காற்றாலும், ஈரத்தாலும் பாதிக்கப்படமாட்டா. நிக்கலும், கோபால்ட்டும் அதிகமாக மங்குவதில்லை. கந்தக வாயுக்கள் கலந்த காற்றில் வெள்ளி விரைவில் மங்குகிறது. வெப்ப நாடுகளில் அலுமினியம் விரைவில் அரிக்கப்படுகிறது. இதனால் அலுமினியப் பாத்திரங்களில் வைக்கும் தண்ணீர் ஒருவகை நாற்றத்தைப் பெறுகிறது. அலுமினியத்துடன் வேறு உலோகங்கள் கலந்திருந்தால், அது இன்னும் எளிதில் அரிக்கப்படும். தூய செம்பு அதிகமாக அரிக்கப்படாவிட்டாலும், வேறு உலோகங்களுடன் கலவையாக இருக்கும்போது அரிக்கப்படுகிறது. வெண்கலத்தைவிடப் பித்தளை எளிதில் அரிக்கப்படும். வெள்ளீயம் சாதாரண நிலையில் சற்றும் அரிபடாது. நாகம் எளிதில் அரிக்கப்படுகிறது.

இரும்பைத் துருவேறாது தடுக்கும் முறைகளையே மற்ற உலோகங்கள் அரிக்கப்படாமல் தடுக்கவும் பயன்படுத்தலாம். அரிக்கப்படும் பொருள்களை நீக்கியும், மேற்பரப்பில் உலோகக் கூட்டின் பூச்சொன்று படியுமாறு செய்தும், அரித்தலைத் தடுக்கும் பொருள்களை உலோகத்துடன் கலந்தும் இவ்விளைவைத் தடை செய்யலாம்.

அரிதாசர் வைணவப்புலவர் ; இருசமய விளக்கம் என்னும் தத்துவ நூலின் ஆசிரியர். இந்நூல் 2119 செய்யுட்களையுடையது; சைவ வைணவச் சமயக் கருத்துக்களை உரைப்பது; மதுரையினின்றும் வெளியாகி கொண்டிருந்த அரிசமய திவாகரம் என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியராகிய பண்டித அரங்கராமாநுஜர் இந்நூலை உரைநடையாக்கி வெளியிட்டார். அரிதாசர் நாகலாபுரத்திலே கிருஷ்ணதேவராயர் காலத்திலே 16ஆம் நூற். முற்பகுதியில் வாழ்ந்தவர்.

அரிமர்த்தன பாண்டியன் திருவிளையாடற் புராணத்திலும் திருவாதவூரர் புராணத்திலுங் கூறப்படும் பாண்டிய மன்னன். இவனிடத்திலே மாணிக்கவாசகர் அமைச்சராயிருந்தார். பார்க்க: மாணிக்கவாசகர்

அரியக்குடி இராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு இரண்டு மைல் தொலைவிலுள்ள ஒரு வைணவத்தலம்.

அரியநாத முதலியார், தளவாய் (?-1600) காஞ்சீபுரத்தை அடுத்த மெய்ப்பேடு என்னும் கிராமத்தில் ஓர் எளிய வேளாள குடும்பத்தில் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே தக்க உடற்பயிற்சியும், கல்விப் பயிற்சியும் பெற்றார். வயது வந்ததும் அரியநாதர் விஜயநகரத்துக்குச் சென்று, அங்கே செல்வாக்குடன் விளங்கிய நாகம நாயக்கரிடம் கணக்குப்பிள்ளை வேலையில் அமர்ந்தார். நாகமருடைய மகனான விசுவநாதரின் அரிய நண்பரானார்.

பின்பு விசுவநாத நாயக்கர் மதுரைக்கு நாயக்கராக நியமிக்கப் பெற்றார். அப்பொழுது அவர் அரியநாதரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அவருக்கு மந்திரி பதவியையும் அளித்தார். விசுவநாத நாயக்கருக்கும், அவருடைய சந்ததியார்களான குமாரகிருஷ்ணப்பர், வீரப்பர் என்னும் மதுரை மன்னர்களுக்கும் அரியநாதர் தளவாயாக விளங்கினார்.

அரியநாதர் மதுரை நகரைச் சுற்றிக் கோட்டை மதிலைக் கட்டினார்; அகழிகள் அமைத்தார்; எழுபத்திரண்டு கொத்தளங்கள் கட்டினார் ; இராச்சியத்திலுள்ள எழுபத்திரண்டு பாளையக்காரர்களையும் கொத்தளத்துக்கு ஒருவராகப் படையுடன் காக்க ஏற்பாடு செய்தார்; மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி முதலிய பாகங்களில் நீர்ப்பாசன வசதிகள் செய்வித்தார்; ஆலயத் திருப்பணிகள் பல செய்தார். மதுரைச் சுந்தரேசுவரர் கோயிலில் பல பாகங்களைப் புதுப்பித்தார். அங்கேயுள்ள ஆயிரக்கால் மண்டபத்தில் குதிரை மீது வீற்றிருக்கும் இவருடைய சிலையை நாம் இன்றும் காணலாம். இவர் திருவரங்கத்திலும் பல திருப்பணிகள் செய்தார். எஸ். ஆர். பா.

அரியலூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுகாவில் உள்ளது. சௌராஷ்டிரர் நெய்யும் சீலைக்குப் பேர்போனது. தென்னிந்தியாவிலுள்ள சிறந்த சந்தைகளுள் ஒன்று. நோயைக் குணப்படுத்துவதாகக் கருதும் கோவில் ஒன்று இருக்கிறது. புகைவண்டி நிலையம் உண்டு.

அரியாட்னி (Ariadne) கிரேக்கப் புராணக் கதையில், கிரீட் அரசனான மைனாஸ் என்பவனுடைய மகள். தீசியஸ் என்னும் வீரன் கிரீட் நாட்டில் சிக்கலான வழிகளுள்ள ஓரிடத்தில் புக நேரிட்டபோது அவனுக்கு இவள் ஒரு நூற்கண்டைக் கொடுத்து வழியறிந்துகொள்ளச் செய்தாள். அவன் இவளை மணந்து கொண்டான்.

அரியோபேகஸ் (Areopagus) கிரீசின் தலைநகரான ஆதென்ஸ் நகருக்கு வட மேற்கே அக்ரபோலிசிற்கு அருகிலுள்ள ஒரு குன்றம். பண்டைக்கால அதீனிய மன்னர் காலத்திற்குப்பின் கி. மு. 7 ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த பிரபுக்கள் 'அரச சபை' ஒன்றை ஏற்படுத்தினர். அச்சபை இக்குன்றத்தில் கூடுவது வழக்கம். அதனால் அச்சபைக்கும் அரியோபேகஸ் என்பது பெயராயிற்று. அதீனிய வரலாற்றில் இக்குன்றம் முக்கியமானது.

அரிவாள்தாய நாயனார் பெரிய புராணங் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். சோழ நாட்டில் கணமங்கலத்திலிருந்த வேளாளர். வறுமையால் மெலிந்த நிலைமையில் கால் இடறவே, தாம் சிவனுக்குக் கொண்டுவந்த செந்நெலமுதும் செங்கீரையும் மாவடுவும் கமரில் சிந்தியது கண்டு, கையிலிருந்த அரிவாளால் தம் கழுத்தை அரியப்புகுகையில் இறைவனது கை அந்தக் கமரினின்று எழுந்து அவரது கையைப்பற்றித் தடுத்தது. அதே சமயத்தில் கமரில் விடேல் விடேல் என்று மாவடுவைக் கடிக்கும் ஒலியும் கேட்டது.

அரிஸ்டாட்டில் (கி.மு. 384-322) : மேல்நாட்டின் நாகரிகத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய பெருமை அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க அறிஞரைச் சாரும். இவர் கிரேக்கக் குடியேற்ற நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த ஸ்டாகிரா என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை நிக்கொமேகஸ் என்பவர் புகழ் பெற்ற