பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருணமச்சிவாயதேவர்

199

அரு மண்கள்

உருவம் அழியக் கூடியதால் பிறவியின் நோக்கத்தை மறவாது உருவம் உள்ளபோதே இறைபணி நின்று உய்வதற்கான வழி தேடவேண்டும்.

5. இறைவன் உயிர்களை ஒறுத்தற்குக் காரணம் : தாய்தந்தையர் தம்புதல்வர்கள் நன்னெறியில் செல்லுவதற்காகச் சிற்சில வேளைகளில் அவர்களை ஒறுத்தல் போலவும், மருத்துவன் சில நோய்களை இனிய மருந்து கொண்டு போக்கினும், வேறு சிலவற்றை அறுத்துக் கீறித் தீர்த்தல் போலவும், இறைவன் உயிர்களுக்கு வினைப்பயன்களை ஊட்டி வினையறுப்பான்.

6. உயிர்களுக்கு அன்பு செய்தல் : உயிர்களுக்கு அன்பு செய்யும் முயற்சிக்கு அடிப்படை இறைவனிடத்தன்பு. இறைவனிடத் தன்பில்லார் அடியவர்க் கன்பில்லார் ; எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும் அன்பில்லார். அன்பற்ற அவர்கள் பிணத்தையொப்பர். அவர்களோடு இணங்குவதும் தவறு. வ. ஆ. தே.

அருணமச்சிவாயதேவர் சித்தாந்த சைவாசாரியர்களில் ஒருவர் ; உமாபதி சிவாசாரியாருடைய மாணாக்கர்.

அருணாசலக் கவிராயர் (1712-79) சோழ நாட்டிலே தரங்கம்பாடியையடுத்த தில்லையாடியில் வேளாளர் மரபில் பிறந்தவர். தந்தை நல்லதம்பிப் பிள்ளை ; தாயார் வள்ளியம்மை. தந்தை இளமையில் ஜைனராக இருந்து பின்னர்ச் சைவரானவர். அருணாசலர் சிறுவயதிலேயே இசையுடன் பாடக்கூடியவராக இருந்தார். இவருக்குப் பன்னிரண்டாம் வயதில் தாய் தந்தையர் இறக்கவே, இவர் கல்வி கற்பதற்காகத் தருமபுர ஆதீனம் சென்றார். அங்கு இலக்கிய இலக்கணங்களிலும் சமய நூல்களிலும் தக்க புலமை எய்தினார். வடமொழியிலும் வடுகிலும் ஓரளவு பயிற்சி பெற்றார். இயற்றமிழ்ப் பாடல்களும் இசைத் தமிழ்ப் பாடல்களும் இயற்றும் ஆற்றல் உடையவராயிருந்தார். முப்பதாவது வயதில் திருமணம் செய்துகொண்டு, காசுக்கடை வைத்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். ஒரு சமயம் சீகாழி சென்றபொழுது அங்கிருந்த சிதம் பரத்தம்பிரான் இவருடைய புலமையைக் கண்டு வியந்து, அவ்வூரில் வீடு கட்டிக் கொடுத்து, அங்கேயே வதியுமாறு செய்தார். அதனாலேயே இவர் சீகாழி அருணாசலக் கவிராயர் என அழைக்கப்படுவர். சீகாழிக்கு அடுத்த சட்டநாதபுரத்திலிருந்த வேங்கட ராமய்யரும் கோதண்டராமய்யரும் இவரிடம் பாடம் கேட்டனர். அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி இவர் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூலைச் செய்தார். அது எளிய இனிய சொற்களால் அமைந்து, இசை நாடகங்கட்கு ஏற்ற முறையில் இயற்றப்பட்டிருத்தலால் எல்லோராலும் களிப்புடன் வரவேற்கப்பட்டது. கம்பர் தமது இராமாயணத்தை அரங்கேற்றிய திருவரங்கத்திலேயே அதை இவர் அரங்கேற்றினார். அதன்பின் பல குறுநில மன்னர்களுடைய அவையிலும் பல பிரபுக்கள் முன்னிலையிலும் விவரித்துப் பல பரிசுகள் பெற்றார். இவர் இராம நாடகக் கீர்த்தனை பாடியது தமது அறுபதாம் வயதிலாகும். அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் வாழ்ந்து இறைவன் திருவடி அடைந்தார். இவர் பல தனிப்பாடல்கள் பாடியிருப்பதுடன் அசோமுகி நாடகம், சீகாழித் தலபுராணம், சீகாழிக் கோவை, அனுமார் பிள்ளைத்தமிழ் முதலிய பல நூல்களும் இயற்றியுள்ளார்.

அருணாசலக் கவிராயர், மு. ரா. சேற்றூர் இராமசாமிக் கவிராயர் மக்களில் ஒருவர். சிவகாசித் திருப்பதிப் பெருமான் மீது பல சிறு காப்பியங்கள் செய்துள்ளார். சிவகாசிப் புராணமும் இயற்றியிருக்கின்றார். மேலும் பல அந்தாதிகளும் பிள்ளைத்

மு. ரா. அருணாசலக் கவிராயர்

தமிழ்களும் பதிகங்களும் இயற்றி யிருக்கிறார். குறுக்குத்துறைச் சிலேடைவெண் பாவும் - இவர் பாடியதே. ஆறுமுக நாவலர் வரலாற்றையும் செய்யுளில் எழுதியுள்ளார். பல உரைநடை நூல்களும் உரைகளும் செய்திருக்கிறார். திருக்குறளைத் தெளிவான உரைநடையில் எழுதியிருக்கிறார். அதற்கு ஓர் உரையும் இயற்றியிருக்கிறார். சுப்பிரமணியக் கவிராயரும் கந்தசாமிக் கவிராயரும் இவர்க்கு உடன் பிறந்தவர்கள். 19ஆம் நூற் றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் இருந்தவர்.

அருணாசல முதலியார் திருமயிலையில் இருந்த புலவர் ; கொடியிடைமாலை, சிதம்பரம் சிவகாமியம்மை பதிகம், திருமுல்லைவாயில் மாசிலாமணியீசர் பதிகம் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

அருந்ததி வசிட்டர் மனைவி ; மகாபதிவிரதை; பஞ்ச கன்னிகளில் ஒருத்தி. துருவமண்டலத்தருகில் ஏழு விண்மீன்களுக்கிடையில் வசிட்டர் என்ற மீனும், அருகில் அருந்ததி மீனும் இருப்பதாகப் புராணங்கள் கூறும். இந்துக்கள் மணம் செய்துகொள்ளும்போது கற்பிற்கு இலக்காக மணமகளுக்கு மணமகன் அருந்ததியைக் காட்டுதல் மரபு.

அருநெல்லி அழகான சிறிய மரம். இலையுதிர்வது. 2-3 அங்குல நீளமுள்ள தனியிலைகள் கிளைகளிலே இரண்டு வரிசையாக மாறொழுங்கில் அமைந்திருக்கும். இந்தக் கிளைகள் மெல்லியவாகப் பார்வைக்குக் கூட்டிலைகள் போலக் காணும். பூக்கள் மிகச் சிறியவை. செந்நிறமானவை ; நெருக்கமாக அடர்ந்திருக்கும்; ஒரு பாலின. கனி மஞ்சள் நிறமானது. சற்று உருண்டையாக வரி வரியாக உப்பிக் கொண்டிருக்கும். சதைக் கனி. புளிப்பும் சிறிது தித்திப்பும் உள்ளது. வெயிற்காலத்தில் காய்ப்பது. பச்சையாகத் தின்பதற்கும், கறி சமைப்பதற்கும், ஊறுகாய் போடுவதற்கும் பயன்படுவது. வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக வைத்து வளர்ப்பது குடும்பம்: யூபோர்பியேசி (Euphorbiaceae); இனம் : பில்லாந்தஸ் டிஸ்டிக்கஸ் (Phyllanthus distichus).

அரு மண்கள் (Rare Earths) : ஆவர்த்த அட்டவணையின் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்த தனிமங்களின் உப்பு மூல ஆக்சைடுகள் இப் பொதுப்பெயரால் வழங்குகின்றன. இவற்றின் பொதுக் குறியீடு R203. ஆனால் சில அரு மண்கள் மட்டும் RO2 என்ற குறியீட்டை உடையவை. ஸ்காந்தினேவியா, சைபீரியா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய இடங்களில் மட்டும் இவை மிகச் சிறு அளவு காணக்கிடைக்கின்றன. ஆகையால் இவற்றின் கூட்டுக்கள் மிக விலையுயர்ந்தவை. இவற்றின் பண்புகள் இன்னும் முற்றிலும் அறியப்படவில்லை. இத்தனிமங்கள் ஒன்றையொன்று மிகவும் ஒத்திருப்பதால் இவற்றை வேறாகப் பிரித்தறிவதும் கடினம். தென்னாட்டில் திருவிதாங்கூர்க் கடற்கரை மணலிலுள்ள மானசைட்டு என்னும் பொருள் அரு மண் தனிமங்களது