பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருமருந்து தேசிகர்

200

அரேபியா

கனியங்களில் முக்கியமானது. சிரைட்டு (Cerite), அல்லனைட்டு (Allanite), சாமர்ஸ்கைட்டு (Samarskite), கடோலினைட்டு (Gadolinite), பெர்குசனைட்டு (Fergusonite), ஆர்தைட்டு (Orthite), கொலம்பைட்டு (Columbite) ஆகியவை மற்ற முக்கியமான அரு மண் கனியங்கள்.

ஸ்வீடனில் காணப்படும் ஒரு கருமையான கனியத்திலிருந்து கடோலின் (Gadolin) என்ற அறிஞர் 1794-ல் இட்ரியா என்ற பொருளைக் கண்டுபிடித்தார். 1804-ல் பெர்சீலியஸ், ஹைசிங்கர் (Hisinger) என்ற இரு விஞ்ஞானிகளும், கிளாப்ராத் என்பவரும் வேறொரு கனியத்திலிருந்து சீரியா என்ற பொருளைக் கண்டுபிடித்தார்கள். இதன்பின் வேறு பல அரு மண்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இக்காலத்தில் பதினாறு அரு மண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இனிக் கண்டுபிடிக்கப்படும் அரு மண் எதுவும் இல்லை என்பதை அணு அமைப்புப் பற்றிய தற்காலக் கொள்கைகள் தெளிவாக்குகின்றன. அரு மண் தனிமங்கள் அனைத்தும் மூவலுவெண் கொண்ட தனிமங்கள். இவை வலிவான உப்புமூலத் தன்மையுள்ள கார ஆக்சைடுகளுக்கும், வலிவற்ற மூலமான அலுமினியாவிற்கும் இடையே உள்ளன. இவற்றின் உப்புக்கள் நீர் முறிவதில்லை. இவற்றின் குளோரைடுகளையும், புளோரைடுகளையும் மின்பகுத்துத் தனிமங்களைத் தனியே பிரிக்கலாம். இவ்வுலோகங்கள் மஞ்சள் வெண்மை நிறமும், பளபளப்பும் கொண்டவை. காற்றில் இவை எளிதில் மங்குவதில்லை. இவற்றின் கனியங்களிலிருந்து காரங்கள் ஹைடிராக்சைடுகளைப் படிவிக்கும். ஆக்சைடுகளைச் சுட்டு, அவற்றின்மேல் குளோரின் வாயுவைச் செலுத்தி, இவற்றின் குளோரைடுகளைப் பெறலாம்.

இத்தொகுதியிலுள்ள தனிமங்களை மூன்று உப தொகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் முதலாவது உபதொகுதியில் லாந்தனம் (La 138.9), சீரியம் (Ce 140.2), பிரசியோதிமியம் (Pr 140.9), நியோதிமியம் (Ne 144.3), இல்லினியம் (11 ?), சமாரியம் (Sa 150.4) ஆகிய தனிமங்கள் உள்ளன. இரண்டாவது உபதொகுதியில் யூரோபியம் (Eu 152.2), கடோலினியம் (Gd 157.3), டெர்பியம் (Tb 159.2) ஆகிய மூன்று தனிமங்கள் உள்ளன. மூன்றாம் உபதொகுதியில் டிஸ்புரோசியம் (Dy 162.5), ஹாமியம் (Ho 163.5), இட்ரியம் (Y 89.0), எர்பியம் (Er 167.7), தூலியம் (Tu 169.4),இட்டர்பியம் (Yb 173.5), லூட்டிசியம் (Lu 175.0) ஆகிய தனிமங்கள் உள்ளன.

மேற்கூறிய தனிமங்களுள் சீரியம், லாந்தனம், நியோதிமியம் ஆகிய மூன்றும் பொதுவானவை. யூரோபியம், டெர்பியம், தூலியம் ஆகியவை மிக அரியவை.

இத்தனிமங்களுள் சிலமட்டும் தொழில்களில் சிறிதளவு பயனாகின்றன. மற்றவை ஆய்வுகளத்தில் மட்டுமுள்ள விந்தைப் பொருள்கள். சீரியத்தை இரும்புடன் கலந்து தயாரிக்கப்படும் கலவையைத் தேய்த்தால் தீப்பொறிகள் தோன்றும். இக்காரணத்தால் இது சுருட்டுப் பற்றவைக்கும் கருவியில் பயன்படுகிறது. விமான எதிர்ப்புப் பீரங்கியில் பயனாகும் குண்டு, தான் செல்லும் பாதையைக் காட்டுமாறு செய்ய, அதில் சிறிது சீரியத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

அருமருந்து தேசிகர் திருச்செந்தூரிலிருந்த புலவர். ஒரு சொல் பலபொருளுடையவாக அரும் பொருள் விளக்கம் என்னும் நிகண்டு இயற்றியவர். அது 700 செய்யுட்களுடையது. தில்லைமன்றில் அரங்கேற்றப்பெற்றது.

அருமன் சிறுகுடி என்னும் ஊரிலிருந்த செல்வன். வரையாது சோறு வழங்குவோன். இவனை நற்றிணையில் (367) நக்கீரர் பாடியுள்ளார்.

அருவாநாடு தென்னார்க்காட்டில் பெண்ணையாற்றுக்குத் தென்பாகம்.

அருவாவடதலை செங்கற்பட்டு மாவட்டம்.

அருவாளர் கொள்ளிடத்தின் வடக்கேயுள்ள அருவாநாட்டிலும் (தென்னார்க்காடு மாவட்டம்) அருவாவடதலை நாட்டிலும் (செங்கற்பட்டு மாவட்டம்) இருந்த பழங் குடிகள். இவர்களை அகத்தியர் வடநாட்டிலிருந்து கொண்டுவந்து இங்கே குடியேற்றியதாகத் தொல்காப்பியப் பாயிரம் கூறும். இவர்களைக் கரிகாலன் வென்று இங்கே சோழராச்சியத்தை அமைத்தான் என்பர்.

அருள் யாத்திரை(Pilgrimage of Grace) இங்கிலாந்தில் VIII-ம் ஹென்ரி மன்னன் ஆட்சியில் லிங்கன்ஷயர், யார்க்ஷயர்களில் இருந்த பொதுமக்களின் ஒரு கிளர்ச்சி. இக்கிளர்ச்சி சீர்திருத்தங்களை வேண்டி எழுந்ததன்று; சமயச்சீர்திருத்தங்களை எதிர்த்துக் கிளம்பியது. இது முக்கியமாகத் தாமஸ் கிராம்வெலின் போக்கைக் கண்டித்து எழுந்த ஒரு கிளர்ச்சி. லௌத் என்னுமிடத்தில் 1536 அக்டோபர் முதல் நாள் தொடங்கிய இக்கிளர்ச்சி விரைவில் நாடு முழுவதும் பரவிற்று. சபோக் (Suffolk) பிரபுவும், VIII-ம் ஹென்ரியும் சில நாட்களில் இக்கிளர்ச்சியை அடக்கிவிட்டனர். 1537 மார்ச்சில் இக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்த தலைவர்கள் மரண தண்டனை அடைந்தனர். ராபர்ட் ஆஸ்க் என்பவர் யார்க்ஷயரில் தொடங்கிய கிளர்ச்சி சிறிது அதிக வலுப்பெற்றிருந்தது. இதைப் 'பொது நன்மை அருள் யாத்திரை' என்று அவர்கள் கூறினர். இக்கிளர்ச்சியும் விரைவில் அடக்கப்பட்டுத் தலைவர்கள் மரணதண்டனை அடைந்தனர்.

அருளப்ப நாவலர் (19ஆம் நூ.) யாழ்ப்பாணப் புலவர். பூலோக சிங்கமுதலியார் எனவும் பெறுவர். திருச்செல்வர் என்னும் ரோமன் கத்தோலிக்க ஞானியாரின் வரலாற்றை எழுதியவர்.

அருளாள தாசர்: இவருக்கு மதுரகவி வரதராஜ ஐயங்கார் எனவும் பெயருண்டு; நெல்லி நகரில் இருந்தவர்; பாவன்மையுடையவர் ; பாகவத புராணம் ஒன்று தமிழிற் பாடியிருக்கிறார்.

அருளாளப் பெருமான் திருமால் அடியவர். ஞானசாரம், பிரமேயசாரம் என்னும் நூல்களை இயற்றியவர். இப்பெரியார் உடையவருடைய கட்டளைப்படி திருமாலைத் திருவாராதனஞ் செய்ய உரிமை பெற்றவர். 14ஆம் நூற்றாண்டு.

அரேபியா தென்மேற்கு ஆசியாவிலுள்ள பெரிய தீபகற்பம். மேற்கே செங்கடலும், தெற்கே இந்திய சமுத்திரமும், கிழக்கே பாரசீக வளைகுடாவும் உள்ளன. இது இஸ்லாம் பிறந்த நாடு. முஸ்லிம்களுடைய புண்ணியத் தலமாகிய மக்கா இந்நாட்டில் உள்ளது. இந்நாட்டின் பெரும்பகுதி பாலை நிலமாயிருக்கிறது. ஆறு ஒன்றேனும் இல்லை. வெப்பநிலை மிகுந்துள்ளது. மஸ்கட் என்னுமிடத்தில் 115° பா. வரை வெப்பநிலை உயர்கிறது. சிற்சில சமயங்களில் 130° பா. வரை போவதுமுண்டு. ஆயினும் ஈராக், இராஜபுதனம் முதலிய இடங்களைவிட இங்குப் பொதுவாக வெப்பம் குறைவே.

பேரீச்சம்பழம் இங்குள்ளவர்களின் முக்கியமான உணவு. காப்பி, கோதுமை, பார்லி முதலியவை சில இடங்களில் பயிராகின்றன. நெருப்புக்கோழி, நரி