பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரேபியா

202

அரேனியூஸ்

லிம் பேரரசின் தலைநகரம் தமாஸ்கஸிலிருந்து பக்தாதிற்கு மாற்றப்பட்டது. அவனோடு அப்பாசிது வமிசம் ஆளத் தொடங்கிற்று. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கார்மேத்தியர்கள் என்னும் ஒரு கூட்டத்தாருடைய கலகம் ஏற்பட்டது. அவர்கள் தலைவன் அபுதாகிர் என்பவன். அவன் இருந்தவரையில் அக்கலகக்காரர்கள் மத்திய, தென் அரேபியா முழுவதையும் வென்று ஆண்டனர். கி. பி. 985க்குப் பிறகு அவர்களுடைய ஆட்சி ஒடுங்கி மறைந்தது. ஆயினும் அவர்களுடைய அதிகாரம் தென் அரேபியாவிலுள்ள பெதுவினர் கைக்கு மாறிற்று. 10ஆம் நூற்றாண்டில் அரேபியா சிறு நாடுகளாகப் பிரிந்து போயிற்று. மக்காவும் மதீனாவும் அரபுப் பிரபுக்கள் இருவரால் ஆளப்பட்டு வந்தன. அவர்கள் பக்தாதிலிருந்த கலீபாவின் மேலதிகாரத்தை ஏற்றுக்கொண்டனராயினும், சுயேச்சையாகவே இருந்தனர்.

11ஆம் நூற்றாண்டில் அப்பாசிது கலீபாவையே தலைவராக அராபியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதற்கு அக்கலீபாவின் படைத் தலைவனான செல்ஜுக் மாலிஷா போரில் அடைந்த வெற்றிகளே காரணம். 16ஆம் நூற் றாண்டில் நாட்டின் பெரும்பகுதி துருக்கியின் ஆதிக்கத் தின்கீழ் வந்தது. 1633-ல் காசிம் என்னும் யெமன் பிரதேசப் பிரபு ஒருவன் துருக்கர்களை விரட்டிச் சுதேச ஆட்சியை நிறுவினான். அவ்வாட்சி 1871 வரையில் நடந்தது.

18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முகம்மது இபன் அப்துல் வாகாபு என்பவன் முகம்மது இபன்சவுத் என்னும் சிற்றரசனோடு சேர்ந்துகொண்டு, இஸ்லாமில் மிகுந்த நம்பிக்கையுள்ள வீரர்கள் சேர்ந்த ஒரு பெரும் படையைத் திரட்டித் துருக்கியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, அராபிய ஐக்கியத்தைச் சாத்தியமாக்கினான். ஆயினும் 1872-ல் துருக்கியின் உத்தரவின் மேல் எகிப்தியப் படைகள் அரேபியாவில் வந்து மக்கா முதலிய இடங்களைக் கைப்பற்றின. வாகாபி இயக்கம் சில ஆண்டுகளில் மறைந்தது. ஆயினும் அரேபியாவில் தொடர்ந்திருந்து அந்நாட்டை அடக்கியாள எகிப்தியர்களுக்கும் முடியவில்லை. 1842-ல் பைசால் என்பவன் எகிப்திற்கு அரேபியாவிலிருந்த செல்வாக்கையொழித்து, வாகாபி ஆட்சியை மறுபடியும் நிறுவினான். இவன் 1867-ல், இறந்தபின் இவன் மகன் அப்துல்லா ஐந்து ஆண்டு ஆண்டான். இவனுக்குப் பிறகு அந்நூற்றாண்டு இறுதிவரையில் ஆண்ட மன்னர்கள் காலத்தில் அரேபியாவில் அரசியல் குழப்பமே மிகுந்திருந்தது. ரஷ்ய விவகாரங்களில் துருக்கி தலையிட்டுக் கொண்டிருந்ததால், அரேபியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படவில்லை. அக்காலத்தில் முகம்மது இபன் ரஷீது என்பவன் தன்னுடைய திறமையால் தன் அதிகாரத்தை அரேபியாவில் நிலைநாட்டிக் கொண்டான். அவன் ஆட்சியைப் பலரும் புகழ்ந்தனர். 1900-ல் வாகாபி இயக்கத்தை மறுபடியும் தொடங்க முயன்ற அப்துர் ரஹிமான் என்பவன் தோல்வியே கண்டான். அவனுடைய மக்களில் ஒருவனான இபன்சவுத் என்பவன் அராபிய வரலாற்றில் பெரும் புகழ் பெற்றவன். அவன் முதலில் ஒரு சிறு படையோடு கிளம்பி ரியாதைக் கைப்பற்றினான். அதன் பிறகு அவன் ஆட்சி விரைவில் அரேபியாவில் பரவிற்று. புகாரையாவில் நடந்த போரில் துருக்கர்களை அவன் முறியடித்தான்.

இபன்சவுத் தற்கால அரேபியாவை இணைத்த பெருமையுடையவன். முதல் உலக யுத்தத்தில் அரேபியா பிரிட்டனுக்கு உதவி புரிந்தது. சவுத் ஆட்சி புரியும் அரேபியாவிற்குச் சவுதி அரேபியா என்னும் பெயர் 1932-ல் ஏற்பட்டது.

அரசியலமைப்பு: முதல் உலகப்போர் நடை பெற்றபோது அராபிய அரசியலமைப்பு வலுவுற்றது. அரசியல் உணர்ச்சியால் தன்னாட்சி பெற்றுள்ள நாடுகளில் முக்கியமும் பரப்புமுடையவை சவுதி அரேபியா, யெமன் (Yemen), ஓமன் என்பவை. சிறியவை : குவிட் (Kuwait), பாரேன் (Bahrein), ஓமான் கரைப் பிரதேசம், ஏடன் என்பவை.

சவுதி அரேபியா : பழைய அரசாகிய ஹெஜாஸ் (Hejaz), நெஷ்டு (Nejd) ஆகிய இரண்டும், அவற்றின் ஆதிக்கத்திலிருந்த நிலப்பரப்புக்களும் ஒன்றுசேர்ந்து, 1932-ல் சவுதி அரேபியா நாடு தோன்றியது. இரு நாடுகளாலான ஒரு நாடு என்பதற்கு அறிகுறியாக மக்கா, ரியாத் என்னும் இரு பட்டணங்களும் தலைநகரங்களாக இருக்கின்றன. அரசாங்கம் நான்கு மந்திரிகளின் உதவியால் நடைபெறுகிறது. அரசனின் மூத்தமகன் அரசப் பிரதிநிதியாகவும் படைத்தலைவனாகவும் நெஷ்டில் வசிக்கிறான். ஹெஜாஸ் நாட்டு அரசியல் திட்டம் 1926-ல் வகுக்கப்பட்டுப் பின்னர்த் திருத்தப்பெற்றுள்ளது. அந்த அமைப்பின்படி அமைச்சர் குழுவொன்று ஒரு தலைவன் கீழ் ஆட்சி புரிகின்றது. மன்னனின் இரண்டாவது மகன் உள்நாடு, அயல்நாடு ஆகிய இரு துறைகளின் அமைச்சனாயுள்ளான். தந்தை இல்லாதபோது அவனே ஹெஜாஸ் பகுதிக்கு அரசப்பிரதிநிதி. இஸ்லாமிய விதிகளே நாட்டுச் சட்டங்கள். இச்சட்டங்களைச் சமய சம்பந்தமாயுள்ள நீதிமன்றங்களே நிருவகிக்கின்றன. ஷாரியத் என்னும் இஸ்லாமியச் சட்ட இலாகாவிற்குத் தலைமை நீதிபதியே பொறுப்பாளி.

நாட்டு அரசியல் திட்டத்தில் சில ஆலோசனைச் சபைகள் இடம் பெற்றிருக்கின்றன; அவற்றில் ஒன்று மக்காவில் உள்ள சட்டசபை. மற்றவை மக்கா, மதீனா, ஜெட்டா (Jedda) நகரசபைகளும், நாடெங்குமுள்ள கிராமக் குடிகள் சபைகளுமாகும். முக்கிய அதிகாரிகளும் அரசனால் ஒப்புக்கொள்ளப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட அறிஞர்களும் ஆலோசனைச் சபைகளில் உறுப்பினர்களாயுள்ளனர். தேசப் பாதுகாப்பிற்கு ஹெஜாசில் உள்ள நிலையான மூலப்படை ஒன்றையும், அவ்வப்போது சேர்க்கப்படுகிற பலதிறப்பட்ட படை வீரர்களையும் வேந்தன் நம்பி இருக்கிறான். சவுதி அரேபியா ஐக்கிய நாடுகளின் அமைப்பில் ஓர் உறுப்பாக இருக்கிறது. (மானிடவியல் பற்றியும், மொழி பற்றியும் தனிக் கட்டுரைகள் உண்டு). பார்க்க : அரபு மொழி; ஆசியா-தென்மேற்கு ஆசியா. தி. வை. சொ.

அரேனியூஸ் (Arrhenius 1859-1927) ஸ்வீடன் தேசத்திய விஞ்ஞானி. இவர் உப்சாலா நகரத்தருகே ஒரு செல்வரது குடும்பத்திற் பிறந்தார். இளமையிலேயே கணிதத்தில் வியக்கத்தக்க திறமை காட்டினார். தமது இருபத்தைந்தாம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இதற்காக இவர் செய்த ஆராய்ச்சியின் பயனாகக் கரைவுகளில் மின்சாரம் பாயும்போது நிகழும் விளைவுகளை விளக்க இவர் தமது அயான் கொள்கையை (lonic theory) வெளியிட்டார். அக்கொள்கைக் கருத்துக்கள் புதுமையாக இருந்ததால் இவருடைய ஆசிரியரும் அதை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் அவை சரியெனப் பின்னர் அறியப்பட்டபோது. இதற்காகவே இவருக்கு 1903-ல் நோபெல் பரிசளிக்கப்பட்டது. இவருடைய முக்கியமான ஆராய்ச்சிகள் அனைத்தும் இதைப்பற்றியே செய்யப்பட்டன. இதனால் பௌதிக ரசாயனத் துறையை நிறுவியவர்களில் இவரும் ஒருவரெனக் கருதப்படுகிறார். இவருக்கு வேறு பல