பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்பாக்கா

204

அல்புமின்

யத்தை வரம்பற்ற அதிகாரத்தின் நிலைக்களமாகக் கருதவில்லை. குடும்பம், நகரம், மாகாணம், நாடு என்பவைபோன்ற சமூக வரிசையில் தலைமையானது இராச்சியம் என்று அவர் கருதினார். “இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டவுடனேயே சிறு சமூகங்களின் உரிமைகள் மறைந்துபோகமாட்டா; சிறு சமூகங்களின் அதிகாரத்திற்கு உதவியாகத் தமது பரந்த கடமைகளைச் செய்யவேண்டியதற்குத் தேவையான அளவு அதிகப்படி உரிமை மட்டும் இராச்சியத்துக்கு உண்டு ; மக்களிடையே ஏற்படும் ஒரு சமூக ஒப்பந்தத்தின் மூலமே இராச்சியம் ஏற்படுகிறது” என்று அவர் கூறுகிறார். ஆயினும் ஹாப்ஸ் கூறுவதுபோல இராச்சியம் ஒப்பந்தத்தின் மூலம் செயற்கை முறையில் அமைந்தது என்று கூறாமல் மனிதனுடைய இயற்கைப் பண்பிற்கேற்ப அமைந்தது என்பர். ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் உரிமை, சிறு சமூகத்துக்கு இயல்பாக அமைந்துள்ள, நீக்க முடியாத ஓர் உரிமையாகும் என்பது. அவர் கருத்து. அவர் கருத்துப்படி இரண்டு சமூக ஒப்பந்தங்கள் உண்டு. இராச்சியத்தை அமைப்பது முதல் ஒப்பந்தம் ; அரசாங்கத்தை அமைப்பது இரண்டாவது ஒப்பந்தம். ஆகவே அரசாங்கத்திற்கு அவர் கருத்துப்படி ஆதிபத்தியம் (Sovereignty) இல்லை. மேலும் பொதுமக்கள் நல்வாழ்வுக்குச் சாதனமாக உதவும் பல பல சிறு குழுக்கள் முதலிலிருந்தே சுயேச்சையுடன் தோன்றி வளர்ந்தவையாதலால் நாட்டு அரசாங்கத்துக்கு அவற்றை அடக்கவோ முறிக்கவோ உரிமையில்லை என்ற இவரது கொள்கை பின்னர் கீர்க்கி (Gierke), மெயிட்லண்ட் (Maitland)போன்ற ஆசிரியர்களால் விளக்கி விவரிக்கப்பட்டது.

அல்பாக்கா தென் அமெரிக்காவிலுள்ள புல் மேயும், அசைபோடும் விலங்கு. ஒட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது. திமில் கிடையாது. இதன் மயிர் நீண்டு பட்டுப்போல் மிகவும் நயமாக இருக்கும். மிகவும் உயர்ந்த இந்த ரோமத்திற்காகவே இதை வளர்க்கின்றனர். குட்டிகளைச் சில சமயம் இறைச்சிக்காக அடிப்பதுண்டு. பெரு, பொலீவியா, சிலி நாடுகளின் மலைப்பிரதேசங்களில் கடல் மட்டத்திற்கு மேல் 8-12 ஆயிர அடி உயரங்களில் இது நன்றாகப் பெருகுகின்றது. அத்துணை உயரத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு இதன் நுரையீரல் அமைந்திருக்கிறது. இது பார்ப்பதற்கு லாமா விலங்கைப்போலத் தோன்றும்; அவ்வளவு உயரமில்லை. தோளருகில் 4 அடி உயரமிருக்கும். மயிரைக் கத்தரிக்காமல் விட்டால் 8-16 அங்குல நீளம்

அல்பாக்கா

வளரும்; அடர்த்தியாக இருக்கும் ; கருமை, வெண்மை , சாம்பல் முதலாகப் பல நிறமாக இருக்கும் ; மென்மையும் கதகதப்புமான அழகிய ஆடை நெய்வதற்கு மிக நேர்த்தியான பொருள். இதைக்கொண்டு உயர்ந்த சால்வைகள் நெய்கிறார்கள். பெரு இந்தியர் பல நூற்றாண்டுகளாக இதனாற் செய்த அல்பாக்கா ஆடைகளை அணிந்து வந்திருக்கின்றனர். அல்பாக்கா என்று சொல்லும் துணியில் ஆட்டுமயிரும் பருத்தியும் பெரிதும் கலந்து விடுகிறார்கள். உண்மையான அல்பாக்கா சிறிதளவே இருக்கிறது. இப்போது சுமார் 10, 15 இலட்சம் அல்பாக்காக் கால்நடை இருப்பதாகக் கணக்கிடுகின்றனர். அல்பாக்கா வயிற்றிலிருந்து கோரோசனை எடுப்பதுண்டு. இதன் சிவப்பு இரத்த அணு ஒட்டகத்தின் இரத்தத்தில் இருப்பதுபோல் நீள்வட்ட வடிவுள்ளது. மற்றப் பாலூட்டிகளில் அது வட்டமாக இருக்கும். இந்தப் பிராணி ஒட்டகக் குடும்பத்தில் லாமா சாதியில் லாமா பாக்காஸ் (Lama pacos) என்னும் இனமாகும்.

அல்பான்சோ XIII (1886-1941) : இவன் தந்தை ஸ்பெயின் நாட்டு மன்னனான அல்பான்சோ XII என்பவன். தாய் ஆஸ்திரியா ஆர்ச் டச்சஸான மேரியா கிறிஸ்தினா. இவன் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்பே இவன் தந்தை யிறந்துபோனதால் இவன் பிறந்தவுடனேயே ஸ்பெயின் நாட்டு மன்னனானான். 1902ஆம் ஆண்டுவரையில் இவன் தாய் இவனுக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தாள். அக்காலத்தில் ஸ்பெயின்-அமெரிக்க யுத்தம் நடந்தது. கியூபா, பிலிப்பீன் முதலிய தீவுகளை ஸ்பெயின் இழந்தது. விக்டோரியா அரசியின் பேர்த்தியான விக்டோரியா யூஜீனியாவை அல்பான்சோ மணந்துகொண்டான்.

இவன் ஆட்சிக் காலத்தில் நாட்டில் குழப்பம் இருந்தது. இவனைக் கொலை செய்ய இவனுடைய அரசியற் பகைவர்கள் எட்டு முறை முயன்றனர். 1923-ல் இவன் நாட்டின் ஆட்சியை பிரீமா டெ ரீவெரா (Prima de Rivera) என்னும் ராணுவச் சர்வாதிகாரி வசம் ஒப்புவித்தான். 1931-ல் ஸ்பெயினிலிருந்த குடியரசு வாதிகள் முடியாட்சியைக் கவிழ்த்து, அரசனை நாடுகடத்திவிட்டுக் குடியரசு நிறுவினர். ஸ்பானியப் பார்லிமென்டு அல்பான் சோவை நாட்டுத் துரோகி என்று தீர்மானித்தது. இம்மன்னன் 1941-ல் ரோம் நகரில் இறந்தான்.

அல்புமின் உயிரிகளில் உள்ள ரசாயனப் பொருள்களில் ஒருவகை கோழிமுட்டையிலுள்ள. வெள்ளை அம்பலி அல்லது வெண்கரு இதற்கு நல்ல உதாரணம். இது பிசுபிசுப்பான ஊன் தசை போன்றது. புரோட்டீன் என்னும் வகுப்பைச் சேர்ந்தது. கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன், நைட்டிரஜன், கந்தகம் கூடியது. இதில் பலவகைகளுண்டு. முட்டையிலிருப்பது ஒருவகை. பாலிலிருப்பது மற்றொரு வகை. இரத்தத்திலிருப்பது சீரம் அல்புமின் என்னும் இன்னொருவகை. தாவரங்களிலும் அல்புமின் உண்டு. வெண் கருவானது வெப்பம், அமிலம் அல்லது சில உப்புக்கள் பட்டால் இறுகி ஒளிபுகாத் திடப்பொருளாகிறது. நீர்ப்பொருள்களில் கலக்கிச் சுடவைத்தால், அல்புமின் அடியில் படிவாக நிற்கும். அல்லது மேலே கசடுபோல மிதக்கும். அப்போது அந்த நீர்ப்பொருள் தெளிந்து சுத்தமாகும். இதற்குக் காரணம் இது திடப்பொருளாக மாறும்போது நீர்ப்பொருளிலுள்ள அழுக்குக்களை யெல்லாம் திரட்டிக்கொண்டு வந்துவிடுவதேயாம். இந்தப் பண்பினாலே இது சர்க்கரை சுத்தி செய்தலிலும், சாயத் தொழிலிலும், போட்டோ மருந்துகள் தயாரிப்பதிலும் பயன்படுகின்றது. சில நஞ்சுகளுக்கும் இது மாற்று. சவ்வீரம் என்ற நஞ்சை உட்கொண்டுவிட்டால் அதற்கு வெண்கருவைக் கொடுக்கவேண்டும். வெண்கரு வயிற்றிற்குப்போய், அந்த விஷ உப்போடு சம்பந்தப்பட்டதும், அதன் கணங்களைச் சுற்றிக் கடினமான ஒரு திடப் பொருளாக மாறி அதை மூடிக்கொள்ளுகிறது. இந்தத் திடப்பொருளை இரைப்பையிலோ, குடலிலோ உண்டாகும் செரிமான நீர்கள் செரிக்கச் செய்ய முடிவதில்லை. நஞ்சு தீங்கு விளைவிக்காமல் வெளிவந்துவிடும்.

அல்புமின் எளிதாகச் செரிக்கக்கூடிய புரோட்டீன். ஆதலால் உடம்பை வளர்ப்பதற்கு இது மிக நல்ல,