பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்லங்கீரனார்

206

அல்லி


அல்லங்கீரனார் சங்க காலப் புலவர். மலையாள மாவட்டத்திலே அல்லம் என்னும் ஓரூர் உளது. கீரனார் பலருளராதலின் அல்லங்கீரனார் என ஊர்ப் பெயருடன் சேர்த்து வழங்கப்பட்டார். (நற். 245).

அல்லாஹூ : இப் பிரபஞ்சத்தையும் இதிலுள்ள எல்லாப் பொருள்களையும் படைத்தவனைக் குர்ஆனில் அல்லாஹூ என்ற பெயரால் அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் எந்த நாட்டிலிருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் தனி முதல்வனான எல்லாம் வல்ல இறைவனை அல்லாஹ் என்ற பெயராலேயே அழைக்கிறார்கள். முழு முதல்வன் குர் ஆனில் ரப்பு என்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகிறான். அதன் பொருள் பரிபாலனம் செய்வோன் என்பது. அல்லாஹு என்ற பெயர் முழு முதல்வனுடைய முக்கியப் பெயராகும். ரப்பு முதலிய பெயர்கள் அவனுடைய சிறப்புப் பெயர்களைக் குறிக்கும். அல்லாஹுவின் சிறப்புப் பெயர்கள் தொண்ணூற்றொன்பது என்று முகம்மது நபி நாயகம் சொல்லியிருக்கிறார். அப்பெயர்களுக்கு அஸ்மா-அல்-ஸிபாத் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அல்லாஹு என்பது நூறாவது பெயராகச் சேர்த்து, ஏக ஈசுவரன் பெயராகக் கூறப்படுகிறது. அல்லாஹு என்பதை முதலிலும் தொண்ணூற்றொன்பது பெயர்களுக்குப் பிறகு நூறாவது பெயராகவும் வழங்குவது வழக்கம். இந்த நூறு பெயர்களை முஸ்லிம்கள் செபமாலையைக் கொண்டு பாராயணம் செய்வது வழக்கம். இச் சிறப்புப் பெயர்களை இரண்டு பிரிவுகளாகக் கொள்ளலாம். ஒன்று தன் அடியார்களுக்கு அவன் செய்யும் கிருபை, உபகாரம் இவற்றை விளக்குவது. மற்றொன்று அவனுடைய சக்தியை நிரூபிப்பது. இஸ்லாம் மார்க்கக் கொள்கைப்படி, “அல்லாஹு ஒருவன்; அவனுடைய சக்தியை மீற எவராலும் முடியாது; அவன் எப்பொழுதும் நிலைத்திருப்பவன்” என்ற கருத்துக்களை விளக்கக்கூடிய 'லா இலாஹ இல்லல் லாஹ' (வணக்கத்துக் குரியவன், அல்லாஹுவைத் தவிர வேறு ஒரு கடவுளும் இல்லை) என்ற வசனத்தை முஸ்லிம்கள் உள்ளன்போடு ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. குர்ஆனில் அல்லாஹு வினுடைய இயல்பு, தத்துவம் முதலியவற்றைப் பற்றித் தெளிவாகப் பலவகையில் குறிப்பிட்டிருக்கிறது. சை. மு.

அல்லி : நீரில் வாழும் பலவகையான செடிகளை அல்லி என்று ஒருவாறு சொல்லிவிடுவதுண்டு. எனினும் ஆம்பல், கழுநீர், குவளை, நெய்தல், உற்பலம், குமுதம் முதலிய பல பெயர்களால் வழங்குவதும், நீர்ப் பூண்டுகளிலெல்லாம் அழகுக்கும் மென்மைக்கும் இணையற்று விளங்குவதும், மனிதனுடைய கண்ணையும் நெஞ்சையுங் கவர்ந்துள்ளதும், மிகப் பழைய காலந்தொட்டே எகிப்து, சீனம், இந்தியா முதலிய நாடுகளின் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் இடம் பெற்றுள்ளதும், உலகப் பேரிலக்கியங்களிலெல்லாம் கொண்டாடப்பட்டுள்ள துமான அல்லி அல்லது அல்லித்தாமரை என்பது அணங்கு அல்லது அரமகள் எனப் பொருள்படும் நிம்பியா (Nymphaea) என்னும் சாதியைச் சேர்ந்த செடிகளையே பொதுவாகக் குறிக்கும். அல்லி உலகத்தைச் சுற்றிலும், அயன மண்டலத்திலும் வட தென் சமதட்பவெப்ப வலயங்களிலுமுள்ள பல இடங்களிலே குளம், குட்டை , சுனை முதலிய ஆழமில்லாது அமைதியாகத் தெளிந்துள்ள நன்னீர் நிலைகளிலே பெரும்பாலும் செழித்து வாழ்கிறது. சேறும் வண்டலும் நிறைந்த கலங்கல் நீர் இதற்கு உதவாது. மெல்ல ஓடும் ஆறுகளின் ஓரங்களிலும் இதைக் காணலாம். நெய்தல் நிலச் சமவெளிகளிலும், கழிமுகத்துக்கு அருகிலுள்ள நிலங்களிலும், அவற்றையடுத்த கழிகளிலும், கூவல்களிலும் உள்ள சற்று உவர்ப்பான நீரிலும் சில இனங்கள் இருக்கின்றன. சதுப்பு நிலங்களிலும் இரண்டொரு வகைகள் தென்படுகின்றன. ஹங்கேரியிலுள்ள வெந்நீர் ஊற்றுக்களிலும் ஓரினம் நிலைத்திருக்கிறது. அல்லி பெரும்பாலும் கடல் மட்டத்திற்கு

அல்லி
(இலையும் கனியும்)

1. உதிராத சில இதழ்களுடன்கூடிய கனி
2. கனி : நெடுக்கு வெட்டு
3. கனி : குறுக்கு வெட்டு
4. பத்திரி கவிந்த விதை
5. விதை நீக்கிய பத்திரி

6. பத்திரி நீக்கிய விதை

அதிக உயரமில்லாத இடங்களில் வாழும் சாதி. ஆயினும் காச்மீரம் முதலிய நாடுகளில் சுமார் 4500-5000 அடியுயரத்திலும் சில இனங்கள் காணப்படுகின்றன. நியூசீலந்திலும், வட அமெரிக்காவின் பசிபிக் சமுத்திரக் கரையையடுத்த சரிவுகளிலும் இந்தச் சாதி காணப்படுவதில்லை. இந்தியாவிலே பலவேறு வகைகள் மிகச் செழிப்பாக வளர்கின்றன.

அல்லிச் சாதியில் சுமார் நாற்பது இனங்கள் உண்டு. அவற்றில் சில உலக முழுவதும் பரவியுள்ளவை. ஆதலால் அத்தகைய இனங்களில் பல உள்ளினங்களும் வகைகளும் உண்டு. இரண்டினங்களின் கலப்பால் உண்டான கலப்பினங்கள் இயற்கையிலேயே காணப்படுகின்றன. விஞ்ஞானிகளும், தோட்டக் கலைஞரும் பல புதிய கலப்பினங்களைப் படைத்தும் இருக்கின்றனர். இவை தட்ப வெப்பங்களைத் தாங்குதல், ஆண்டு முழுவதும் வளர்ந்து பூவிடுதல் முதலிய பண்புகள் உடையன. நிறத்திலும் மணத்திலும் சிறந்த மலர்கள் இக்கலப் பினங்களில் உண்டு. அல்லியிலை, காய் முதலியவற்றின் பாசில்கள் கீழைக் கிரிட்டேஷஸ் காலத்துப் பாறை அடுக்குக்களில் ஐரோப்பாவில் அக்ப்பட்டிருக்கின்றன.

அல்லி இரட்டைவிதையிலைத் தாவரம். நிம்பியேசீ குடும்பத்தைச் சேர்ந்தது. இது பலபருவச் (Perennial) செடி. இதன் தண்டு கிழங்கு வடிவானது. சேற்றில் புதைந்திருக்கும். நீர்நிலை வற்றிச் செடி காய்ந்து போனாலும், கிழங்கில் உயிர் நிலைத்திருக்கும். திரும்ப நீர் வந்ததும் கிழங்கிலுள்ள குருத்துக்கள் வளர்ந்து புதிய இலைகளும் பூக்களும் உண்டாகும். கிழங்கிலிருந்து வேர்கள் சேற்றுக்குள் வளரும். அவற்றில் வேர்த்துய்கள் இல்லை.

இலைகளும் பூக்களும் நீண்ட காம்புள்ளவை. காம்பு சில அங்குல முதல் 16, 18 அடி நீளமிருக்கும். நீர்மட்டம் சற்று உயர்ந்தால் இந்தக் காம்புகள் நீளும். இத-