பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்ஸ்டர்

208

அலகாபாத் உடன்படிக்கைகள்

மானவை. பிறகு பழுப்பு நிறமாக மாறும். இந்த இனத்தில் ரோஜா நிறம் முதல் கருஞ்சிவப்பு வரையில் பல நிற மாறுபாடுகள் தோன்றும். இது மலரும்போது முழுவதும் கிடைமட்டமாக மலராமல் சற்று ஏறக் குறைய 10° குவிந்து நிற்கும்.

அல்லி வகைகள் தோட்டங்களிலுள்ள குளங்களிலும் தொட்டிகளிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. கிழங்கிலும் விதையிலுமுள்ள மாப்பண்டம் பல நாடுகளில் உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. அல்லிக்காயையும் விதையையும் பச்சையாகவும் தின்பதுண்டு. அல்லியின் பூ, கொடி, இலை, கிழங்கு, காய் எல்லாம் மருந்தாகப் பயன்படும்.

அல்லிக் குடும்பம் நிம்பியேசீ (Nymphaeaceae) எனப்படும் இரட்டைவிதையிலைத் தாவரங்கள். அயனமண்டலத்திலும் சமதட்ப வெப்ப வலயங்களிலும் வாழ்பவை. இக் குடும்பத்தில் 8 சாதிகளும் 50 இனங்களுமுண்டு. இவை நீரில் அல்லது சதுப்பு நிலத்தில் வாழ்பவை. தண்டு மட்டத்தண்டுக் கிழங்கு அல்லது கிழங்கு. அது சேற்றில் புதைந்திருக்கும். இலைகள் நீரில் மிதப்பவை, அல்லது நீருக்குள்ளழுந்தியிருப்பவை, நீருக்கு வெளியில் காற்றில் வளர்பவை. பூக்கள் தனித்தவை, சாதாரணமாகப் பெரிதாக இருக்கும். பல வித அமைப்புள்ளவை. இந்தச் செடிகளில் ஒருவித பால் உண்டு. புல்லி 3-5, அல்லி 3-பல, கேசரம் 6-மிகப்பல, சூலிலை 3-பல. அல்லி கேசரங்கள் திருகல் அமைப்பின. இவற்றினிடையே படிப்படியான மாறுதல்களைக் காணலாம். கபோம்பா வெப்ப அமெரிக்காவில் உள்ள நீர்ப்பூண்டு. மிதக்கும் இலைகள் கேடக வடிவின. நீருக்குள்ளிருக்கும் இலைகள் பலபிரிவின. பூவின் உறுப்புக்கள் அடுக்குக்கு மூன்றாக அமைந்துள்ளன. சூலகம், சூலறைகள் முற்றிலும் பிரிந்தது. தாமரை (நிலம்பியம்)யிலும் சூலகத்தின் அறைகள் பிரிந்திருப்பினும் ஒரு பொகுட்டின்மேல் அழுந்தியிருக்கின்றன. இது ஆசியாவிலும் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவிலும் உண்டு. இதன் விதைகளைச் சிலவிடங்களின் உணவாகக் கொள்கின்றனர். நூபார் (Nuphar) வட சமதட்ப வெப்ப, வடதட்ப வலயங்களில் இருப்பது. அல்லி (நிம்பியா) அயனமண்டலம், வட தென் சமதட்ப வெப்ப வலயத்தில் பரவியிருப்பது. யூர்யேல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ளது. சூலகம் உள்ளடங்கியது. இதன் விதையும் வேரும் சீனத்தில் உணவாகப் பயன்படுகின்றன. விக்டோரியா என்னும் சாதியில் மூன்று இனங்களுண்டு. அயனமண்டல அமெரிக்காவில் வளர்வது. விக்டோரியா ரீஜியா அமேசான் ஆற்றிலுள்ளது. மிகப் பெரிய இனம். இலை ஆறு ஏழு அடி அகலமிருக்கும். ஓரம் தட்டுப்போல மேல் வளைந்திருக்கும். விதைகளை வறுத்து உண்கிறார்கள். அல்லி, தாமரை, விக்டோரியா முதலியவற்றைப் பற்றித் தனிக் கட்டுரைகளுண்டு.

அல்ஸ்டர் (Ulster) அயர்லாந்து பிரிக்கப்படு வதற்குமுன் அதன் ஐந்து மாகாணங்களுள் ஒன்று. அப்போது அதில் தற்போதுள்ள வட அயர்லாந்தும், அயர் நாட்டின் வட பகுதியிலுள்ள கவான், டானிகால், மொனகான் என்னும் மாவட்டங்களும் அடங்கி யிருந்தன.

இப்போது மேற்கூறிய மூன்று மாவட்டங்கள் மட்டும் அல்ஸ்டர் என்னும் பெயருடன் வழங்கி வருகின்றன. பரப்பு : 3,123 ச. மைல். மக் : 2,65,654 (1943). துணி நெசவும் வேளாண்மையும் முக்கியத் தொழில்கள். பெல்பாஸ்டும் லண்டன்டெரியும் முக்கிய நகரங்கள்.

ஆயினும் பொதுவாக மக்கள் வட அயர்லாந்தையே அல்ஸ்டர் என்று குறிப்பிடுகிறார்கள்.

அல்ஹாம்பிரா (Alhambra) ஸ்பெயினிலுள்ள கிரனடாவில் 13-ஆம் நூற்றாண்டில் அரசாண்ட மூர் சாதி அரசர்களுடைய கோட்டையும் கோயிலுமாகும். சிவப்பு நிறமான கற்களைக்கொண்டு கட்டியதால் சிவந்த கோட்டை என்ற பொருளுடைய அல்ஹாம்பிரா என்னும்பெயர் பெற்றது. இதிலுள்ள அரசதூதர் மண்டபம் புகழ் வாய்ந்தது. சுவர்களில் குர்ஆன் வாக்கியங்கள் அழகான செதுக்குச் சித்திரங்களாகப் பொறிக்கப்பட்டுள. 13 கோபுரங்கள் உள. மூர்களின் கலைக்குச் சிகரமாக இது உள்ளது. இதன் பரப்பு : 35 ஏக்கர். இது 1482-ல் ஸ்பெயின் மன்னர்கள் வசமாயிற்று.

அல்ஹாஜன் (Alhazon) 11 ஆம் நூற்றாண்டிலிருந்த அராபியக் கணித அறிஞர். ஒளியியல் நிபுணர், என்று பேர் பெற்றிருந்தவர்.

அலகாபாத் இந்தியாவின் புண்ணியத் தலங்களில் ஒன்று. அலகாபாத் என்பதன் பொருள் கடவுளின் நகரம் என்பதாம். அது அக்பர் இட்ட பெயர். அதற்குப் பிரயாகை என்பது பழைய பெயர். அது கங்கையும் யமுனையும் கூடுமிடத்தில் கி. மு. 200-ல் அமைக்கப் பெற்றது. அங்கு அக்பர் கட்டிய கோட்டையும் அரண்மனையும், ஜம்மா மசூதியும் புகழ் வாய்ந்தவை. கோட்டையினுள் வாயிலருகே உள்ள அசோகர் தூண் 35 அடி உயரம். அதில் அசோகர் கட்டளைகளும். சமுத்திரகுப்தருடைய வெற்றிகளும் பொறிக்கப்பட்டுள. சர்க்கரை, பருத்தி வியாபாரம் மிகுதி. ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேள விழாவுக்கு இலட்சம் மக்கள் வந்து, நதிகள் கூடுமிடத்தில் நீராடுவார்கள். இந்நகரம் உத்தரப் பிரதேச இராச்சியத்தில் உள்ளது. பல்கலைக் கழகமும் உயர் நீதிமன்ற மும் உள. மக்: 3,22,295 (1951).

அலகாபாத் உடன்படிக்கைகள் : 1765-ல் ராபர்ட் கிளைவ் இரண்டாம் முறையாக இந்தியாவிற்கு வந்து வங்காள கவர்னர் பதவியை ஏற்றுக்கொண்ட போது, தமக்கு முன் வங்காள கவர்னராயிருந்த வான் சிட்டார்ட்டு என்பவர் 'ஒளது' என்று ஆங்கிலேயர் வழங்கிவந்த அயோத்தி மாகாணத்தை டெல்லி சுல்தா னான ஷா ஆலமிற்குக் கொடுத்துவிட்டார் என்பதையறிந்தார். உடனே, ஔதில் மொகலாயப் பிரதிநிதியாயிருந்த ஷூஜாவுத்தௌலாவோடு பேச்சு வார்த்தைகள் தொடங்கி இரண்டு உடன்படிக்கைகள் செய்துகொண்டார். இவற்றிற்கு அலகாபாத் உடன்படிக்கைகள் என்று பெயர்.

இவ்வுடன்படிக்கைகளின் பயனாக நடந்தவை: வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய மூன்று மாகாணங்களின் திவானியைக் கம்பெனியார் பெற்றனர். 'வடசர்க்கார்' களைக் கம்பெனியாருக்கு எழுதிவைத்ததை டெல்லி சுல்தான் ஒப்புக்கொண்டார். ஆர்க்காட்டு நவாபின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது. ஷா ஆலமிற்கு அலகாபாத், கோரா ஆகிய இரு மாவட்டங்கள் அளிக்கப்பட்டன ; அன்றியும், ஆண்டுதோறும் 26 இலட்சம் ரூபாயும் கொடுப்பதென்று தீர்மானமாயிற்று. ஔதில் அலகாபாத், கோரா நீங்கலாக ஏனைய மாவட்டங்களை ஷூஜா வுத்தௌலா பெற்றுக்கொண்டு, போர் நஷ்டஈடாக 50 இலட்சம் ரூபாய் கம்பெனிக்கு அளிப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. வங்காள நவாபு வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாகாணங்களை ஆளுவதென்றும், அங்கு வரி வசூல் உரிமை மட்டும் கம்பெனியாரிடம் இருப்பதென்றும், கம்பெனியார் வங்காள நவாபுக்கு 5 இலட்சம்