பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலங்கார சாஸ்திரம்

213

அலங்கார சாஸ்திரம்

கூறாமலும் சொல்லணிகளை அதிகமாக வழங்காமலும், தொடர் நடையை மிகையாகக் கையாளாமலும், எளிதில் பொருள் ஏற்படாத அரும்பதங்களை அதிகம் சேர்க்காமலும், மிகைப்பட்ட கற்பனைகள் செய்யாமலும் எழுதிய தெளிவான இனிய நடையை வளர்த்தனர். இதிலிருந்து இந்நடை வைதர்ப்பம் என்று பெயர் பெற்றது. இதைத் தண்டி தம் காப்பியமான தசகுமார சரிதத்திலும், இலக்கண நூலான காவ்யாதர்சத்திலும் கையாண்டு, சீரிய காப்பிய நடையாய்ப் போற்றிப் பேசுகிறார். இதற்கு எதிராகக் கிழக்கே கௌடம் என்ற வங்காள தேசத்தில் கவிகள், மிகைப்படக் கூறுதல், நீண்ட தொடர் நிலை, புலமையைக் காட்டும் கடினமான சொற்கள் ஆகிய இவைகளைக் கொண்ட நடையைக் கையாண்டதால் அந்நடைக்குக் கௌடம் என்று பெயர் வந்தது. இதைத் தண்டி கண்டிக்கிறார். பாமகரோ, “நடை என்று ஒரு பாகுபாட்டை நாம் கற்பித்துக்கொண்டு, எல்லா வைதர்ப்பமும் மேல், எல்லாக் கௌடமும் கீழ் என்று சொல்வது தவறு. பொருட் பொலிவும் சொல்லழகும் பொருந்திய எந்த நடையும் காப்பியத்திற்கு ஏற்றதே” என்று சொல்லுகிறார்.

இதற்குப் பிறகு சில நூற்றாண்டுகள் அலங்கார சாஸ்திரம் காச்மீர தேசத்தில் விசேஷமாக ஆராயப்பட்டு மேன்மேலும் வளர்க்கப்பட்டது. இன்று அலங்கார சாஸ்திரத்தின் சிறப்பான அமிசங்களாகக் கொண்டாடப்படும் முக்கியமான சீரிய கொள்கைகளை யெல்லாம் நமக்குத் தந்தது காச்மீர தேசமே. காச்மீரத்தை ஆண்ட ஜயாபீட மகாராஜன் (கி. பி. 779-813) இலட்சம் தீனாரங்கள் சம்பளம் கொடுத்து, உத்படர் என்ற புலவரைத் தன் சபாபதியாக வைத்திருந்தான். அவனது தூண்டுகோலின்மேல் உத்படர் நாட்டிய சாஸ்திரத்திற்கு முதல் உரையையும், பாமகர் எழுதிய காவ்யாலங்காரத்திற்கு ஓர் உரையையும், தாமே அலங்காரங்களை முக்கியமாய் விளக்கும் காவ்யாலங்கார சாரசங்கிரகம் என்ற புது நூலையும் எழுதினார். இவற்றில் மூன்றாவது நூல்மட்டும் தற்போது கிடைத்திருக்கிறது. ஜயாபீடனுக்கு மந்திரியாயிருந்த வாமனர் என்பவர் உத்படரிடமிருந்து வேறுபட்ட முறையில் சூத்திரங்களும் உரையுமாகத் தம் காவ்யாலங்கார சூத்திரங்களை எழுதினார். உத்படர் பாமகரைப் பின்பற்றினார். வாமனர் தண்டியைப் பின்பற்றினார். வாமனர் தம் நூலில் விசேஷமாக ஆராய்ந்து, சாஸ்திர வளர்ச்சிக்கு அளித்த கொள்கைகள் நான்கு : முதலில் பாமகர், தண்டி இருவரும் குணம், அலங்காரம் என்ற இரண்டு அமிசங்களும் பயன்படும் அளவில் ஒன்றென்றும், குணத்தை அலங்காரம் என்று கொள்ளலாம் என்றும் கருதியதையும், உத்படர் மேலும் திண்ணமாய்ச் சொன்னதையும் மறுத்து விளக்கிக் காட்டினார். இரண்டாவதாக வாமனரே முதலில் குணங்களைச் சப்தத்தின் குணம், அர்த்தத்தின் குணம் என்று பாகுபாடு செய்து, தனியே உதாரணங்களுடன் விளக்கினார். மூன்றாவதாக, அலங்காரம் என்ற சொல்லிற்கு மொத்தமாகப் பொருள் சொல்லும்போது சௌந்தரியம் (அழகு) என்று வாமனர் சொல்லியது, பண்டையிந்தியக் கலையாராய்ச்சிக்கே முக்கியமான கொள்கையைக் கொடுத்தது. நான்காவதாகத் தண்டியை முக்கியமாகப் பின்பற்றி, அவர் சொல்லிய காவிய நடைகளையே தலைமை பெற்ற அமிசமாக விளக்கப்புகுந்த வாமனர் நடையே (ரீதி) காப்பியத்தின் உயிர் என்றார். தண்டி புகழ்ந்த வைதர்ப்ப நடையை வாமனரும் புகழ்ந்து, தண்டி சொல்லிய இரண்டு நடைகளுக்குமேல் பாஞ்சால தேசத்தில் வழங்கும் மூன்றாவது நடையொன்றையும் சொன்னார். இவற்றைத் தவிர அவரது நூலிலுள்ள வேறு சில கருத்துக்களும் பிற்கால ஆராய்ச்சிக்கு உதவின.

இவர்களையடுத்து ருத்ரடர், ருத்ரபட்டர் என்று இரு அணியாசிரியர்கள் தோன்றினர். ருத்ரடர் தாம் சொல்லப்போகும் 66 அலங்காரங்களுக்கும் அடிப்படையாய் நான்கு பிரிவுகளைக் கொடுத்தார். உள்ளது உள்ளபடியே சொல்லும் அணிகளைக் கையாளும் முதற் பிரிவுக்கு 'வாஸ்தவம்' என்று பெயர். உவமையை அடிப்படையாகக்கொண்டு எழும் அலங்கார வகைகள், ஔபம்யம் என்ற இரண்டாம் பிரிவு ; மிகைப்படக்கூறல் என்ற அதிசயத்தை ஆதாரமாகக் கொண்ட அணிகள் மூன்றாம் பிரிவு; சிலேடையைக் கொண்டு வளர்ந்த அணிகள் நான்காம் பிரிவு. காப்பியத்திற்கும் நாடகத் திற்கும் வேற்றுமை யுண்டாதலால், ரசம் என்ற சுவை நாடகத்திற்கே முக்கியமானது ; அது காப்பியத்தில் அணியாகவே கருதப்பட வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராக ருத்ரடரும், ருத்ரபட்டரும் இவ்வேற்றுமையைப் புறக்கணித்து, ரசங்களைக் காப்பியத்திலும் கையாண்டு, ரச விஷயங்களை விரிவுபட உரைத்து, அவற்றைக் காப்பியங்களில் கையாளும் முறையையும் விளக்கியது காப்பிய ஆராய்ச்சியில் மிகவும் முக்கியமானதொரு கட்டமாகும்.

கவிகள் செய்யும் பிரயோகங்களில் முதற்பொருளல்லாது சொற்களுக்கு மேன்மேல் பொருள்கள் தோன்றுகின்ற விஷயம் உத்படர், வாமனர் ஆகியோர்க்குப்பின் முக்கியமாக ஆராயப்பட்டது. முதலில் வரும் பொருள் முக்கிய அர்த்தம் எனவும், இதைத் தரும் ஆற்றல் முக்கிய-விருத்தி அல்லது அபிதா-சக்தி எனவும் கூறப்படும். இதன்மேல் எழும் பொருள் இலக்கணை, குறிப்பு என்ற ஆற்றல் மூலம் வரும் இலக்கியார்த்தம். காப்பியத்தின் உட்பொருளான ரசம் என்ற உணர்ச்சியைச் சொற்களின் முதலாற்றலின் மூலம் தெரிவிக்கவே முடியாது. சிருங்காரம் என்று சொன்னால், அச்சொல்லிலிருந்து காதற்சுவை ஏற்படாது. அச்சுவையை எழுப்பும் பல அமிசங்களைச் சொன்னால், அவற்றுடன் தொடர்பு கொண்ட இச்சுவை தொனிக்கும். இவ்வுண்மை கொஞ்சம் கொஞ்சமாகத் தலையெடுத்து, ரசிகர்களுக்கிடையே பேசப்பட்டு, அணிகளைப் பற்றிய பழங் கொள்கைகளையே நம்பிவந்த சிலரால் பரிகசிக்கப்பட்டுக் கடைசியில் பெரும்பாலானவரால் ஒப்புக் கொள்ளவும்பட்டது.

இதை ஏற்றுக்கொள்ளும்படி தூண்டி, இதன் உருவம், பாகுபாடு, உதாரணம் ஆகியவற்றை ஏற்றபின், மற்ற அமிசங்கள் இருக்கவேண்டிய தன்மை ஆகியவற்றை எடுத்துரைத்தவர் ஆனந்தவர்த்தனாசாரியர் என்ற அறிஞர். இவர் காச்மீரத்தில் அவந்திவர்மனின் (கி. பி. 853-883) சபையில் இருந்த கவி ; இவர் நூல் த்வன்யாலோகம் ; இது உலக இலக்கிய ஆராய்ச்சி நூல்களில் ஒன்றாகும் சிறப்பு வாய்ந்தது. எந்த ரசம் காவியத்திற்கு ஆன்மா போன்றதோ, அந்த ரசம் தொனி வாயிலாகவே அனுபவமாகிறது!. ரசத்தைப்போல் எந்த அபிப்பிராயமும், அணியும் நேரே வெளிப்படையாய்ச் சொல்லப்படாமல் தொனிக்கும்படி மறைத்துக் கூறப்பட்டால் சிறப்பான அழகு கொள்கிறது. ரசத் தொனியை ஆன்மாவாகக் கொண்டபின் குணம், அணி, நீதி என்னும் இவற்றின் தன்மை, இவை கையாளப்பட வேண்டிய முறை, ஓர் எழுத்திலிருந்து முழுநூல் உட்பட ஒரு ரசமோ ஒரு பெருங் கொள்கையோ தொனிக்கும்படி மகாகவிகள் செய்யும் முறை, ரசத்தை வருணிக்க வேண்டிய முறை, கதாபாத்திரங்களின் தன்மை, கவியின் வருணனைக்கு உயிராயிருக்கும் ஔசித்தியம்