பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலாதீன்

217

அலாஸ்கா


அலாதீன் (Aladdin) அராபியக் கதைகள் ஒன்றின் கதாநாயகன். அலாதீனும் அவனுடைய அதிசய விளக்கும் என்பது உலகமுழுவதும் சுவைக்கும் ஒரு கதையாகும். அலாதீன் ஓர் ஏழைச் சிறுவன். ஒரு மந்திரவாதி, அவனை ஒரு குகைக்குள் சென்று ஒரு விளக்கை எடுத்துவரச் சொன்னான். அலாதீன் விளக்கை மந்திரவாதியிடம் கொடுக்க மறுத்தான். பிறகு, அதைத் தேய்த்ததும் ஒரு பூதம் வந்து அவனுக்குச் செல்வம் தந்தது. அவன் சீனாவின் இளவரசியை மணந்தான். ஆனால் மந்திரவாதி அவனை ஏமாற்றி விளக்கை வாங்கிக் கொண்டு போனான். அலாதீன் அவனைக் கொன்று, விளக்கைத் திரும்பப் பெற்று, இளவரசியுடன் இன்பமாக வாழ்ந்தான் என்பது கதையின் சுருக்கம்.

அலாவுதீன் கில்ஜி ( ?-1316) சுல்தான் ஜலாலுதீன் கில்ஜியின் சகோதரன் மகன். இவன் 1294-ல் தேவகிரியை முற்றுகையிட்டுக் கைப்பற்றிய திறமையைப் பெரிஷ்டா என்னும் வரலாற்றாசிரியர் புகழ்ந்துள்ளார். காரா என்னுமிடத்தில் இவனைச் சந்தித்துப் புகழவந்த சுல்தானை இவன் கொன்றுவிட்டு, 1296-ல் டெல்லி சுல்தானானான். 1299-ல் இராசபுதனத்திலுள்ள ரந்தம் போர் என்னும் இடத்தைக் கைப்பற்றினான். 1305-ஆம் ஆண்டிற்குள்ளாக வட இந்தியா முழுவதும் அலாவுதீன் ஆட்சிக் குட்பட்டுவிட்டது. இவன் காலத்திற்கு முன்பு வட இந்தியாவில் மட்டும் முகம்மதியர் ஆட்சி வலுத்திருந்தது. இவன் ஆட்சிக்காலத்தில், 1307-ல் இவனுடைய படைத் தலைவனான மாலிக்காபூர் தென்னிந்தியாவில் பெரும் பகுதியை வென்று திரும்பினான்.

இவன் ராஜத்துரோகத்தை அடியோடு ஒழித்தான். மக்கள் அரசனுக்கு விரோதமாக இரைந்து பேசவும் அஞ்சினர். தனி மனிதர்களின் சுதந்திரம் மிகவும் குறைக்கப்பட்டது. இவ்வளவையும் இராச்சியத்தில் அமைதி நிலவுவதற்காகவே தான் செய்வதாக அவன் கூறிக்கொண்டான். மொகலாயர்கள் வட இந்தியாவி னுட் புகுந்துவிடுவார்களோ என்று அஞ்சி இவன் பெரும் படையை வைத்திருந்தான். வாசாப் என்னும் வரலாற்றாசிரியர் அலாவுதீன் படையில் 4,75,000 முகம்மதியப் போர் வீரர்கள் இருந்தார்கள் என்று கூறுகிறார். இவன் மேற்கொண்ட பல போர்களின் வெற்றி காரணமாக மிகுந்த செல்வம் டெல்லியில் குவிந்துவிடவே, அங்கிருந்த பண்டங்களின் விலை அதிகமாகிவிட்டது. தன்னுடைய படைக்குப் பங்கீடு செய்வது கஷ்டமாக இருந்ததால் இவன் பண்டங்களின் விலைகளைக் குறைத்து நிருணயித்து வைத்தான். மக்களுடைய வருவாயைக் குறைத்தால் அவர்கள் அரசாங்கத்தை எதிர்க்கத் திறனற்று இருப்பார்கள் என்று கருதி அலாவுதீன் வரிகளை அதிகப்படுத்தினான். முகம்மதியர் ஆட்சி முதன் முதல் பெரிய அளவில் இந்தியாவில் நிறுவப்பட்டது இவன் காலத்தில் தான். அமீர் குஸ்ரு இவன் காலத்திலிருந்த பெரும் புலவர். இவன் 1316-ல் இறந்தான். தே. வெ. ம.

அலாஸ்கா (Alaska) வட அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் உள்ள நிலப்பரப்பு. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சொந்தமானது. அலாஸ்காவிற்கும் அ. ஐ. நாடுகளுக்கும் இடையே கானடா இருப்பதால் இது அ. ஐ. நாடுகளினின்றும் பிரிபட்டு நிற்கிறது. மொத்தப் பரப்பு: 5,86,400 ச. மைல், மக் : 1,28,643 (1950). பலுக்கான் ஆறும், அலாஸ்கா மலைத்தொடரும் இங்குள்ள முக்கியமான இயற்கைத் தோற்றங்கள். மீன் முதலிய கடல்படு பொருள்களும், தங்கம், வெள்ளி, எண்ணெய், கரி முதலிய கனிபடு பொருள்களும் கிடைக்கின்றன. கோதுமை, பார்லி, காய்கறிகள் முதலியன விளைகின்றன. முதன் முதலில் ரஷ்யர்களே இங்கு வந்து குடியேறியவர்கள். அமெரிக்க ஆதிக்குடிகள் மற்றப் பாகங்களில் காட்டிலும் இங்கு அதிகமாக வசிக்கின்றனர்.

அலாஸ்கா

சுமார் 500 மைல் நீளத்திற்கு ரெயில் பாதை போடப்பட்டிருக்கிறது. பார்பார்க்ஸ் என்னுமிடத்தில் ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறது. இங்குள்ள மக்களிற் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள்.

அமெரிக்கக் காங்கிரசுக்கு இங்கிருந்து ஒரு பிரதிநிதி அனுப்பப்படுகிறார் ; ஆனால், அவருக்குக் காங்கிரசில் வோட்டுரிமை இல்லை. உள் நாட்டில் 16. அங்கத்தினர்கள் கொண்ட செனெட்டும், 24 அங்கத்தினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையும் உண்டு. தலைநகரம்:ஜூனோ ; மக் : 5,818 (1950).

வரலாறு : வட அமெரிக்காவின் ஆதிக் குடிகள் அந்த நாட்டுக்கு ஆசிய நிலப்பரப்பிலிருந்து அலாஸ்கா வழியாகவே வந்து புகுந்தனர் என்று கருதுகிறார்கள். அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியாகிய அலாஸ்கா ஆசியாவின் வடகிழக்குப் பகுதிக்கு நெருங்கியிருப்பது இக்கருத்துக்கு ஒரு காரணமாகும். பேரிங் என்பவர் 1741-42-ல் மேற்கொண்ட ஆராய்ச்சிப் பிரயாணங்களுக்குப் பிறகு அலாஸ்காவில் ரஷ்ய ஆதிக்கம் ஏற்பட்டது. ரஷ்யர்கள் அங்கு முக்கியமாக நடத்தியது மென் மயிர் (Fur) வாணிபமே. அலெக்சாந்தர் பாரனோவ் என்னும் ரஷ்ய ஏஜண்டு காலத்தில் சிட்கா என்னுமிடம் ரஷ்ய அமெரிக்காவின் தலைநகராயிற்று (1802). 1821-ல் ரஷ்யப் பேரரசன் தனது ஆதிக்கத்தை மேலும் விரிவாக்க முயன்றான். ரஷ்யா மென்மயிர் வாணிபத்திலேயே கண்ணும் கருத்துமாயிருந்ததால் அவ்வியா பாரம் குறையத் தொடங்கியதும், ரஷ்யர்களுக்கு அலாஸ்காவில் இருந்த ஆர்வம் குறைந்தது. அதுவே தருணம் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டினர் 72,00,000 டாலருக்கு அலாஸ்காவை 1867-ல் ரஷ்யரிடமிருந்து விலைக்கு வாங்கினர். அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாகாணமாயிற்று. அங்கு 1884-ல் ஒரு தல அரசாங்கம் நிறுவப்பட்டது. 1896-ல் அங்குத் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும்