பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலி

218

அலுமினியம்

அந்நாட்டின் முக்கியத்துவம் மிகுந்தது. 1912-ல் அலாஸ்காவிற்குப் பிரதேச அந்தஸ்து (Territorial status) அளிக்கப்பட்டது. 1942-ல் ஜப்பானியர்கள் அலாஸ்காவைச் சேர்ந்த அலியூஷன் தீவுகளைக் கைப்பற்றிக் கொண்டனர் ; அலாஸ்கா ராணுவ முக்கியத்துவம் மிகுந்த இடம் என்பதும் ஏற்பட்டது. யுத்தம் முடிந்த பிறகு அலியூஷன் தீவுகள் உட்பட அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு பகுதியாக மறுபடியும் அமைந்துள்ளது. அ. மு.

அலி (600-661) : மகம்மது நபியின் மருமகன். இவர் நாலாவது கலீபாவாக இருந்தார். மிகுந்த அறிவு படைத்தவர் என்று புகழ் பெற்றவர். யாருடைய கண்ணையேனும் புகழவேண்டியிருந்தால் அராபியர் "அயின் அலி" (அலியின் கண்கள்) என்று கூறுவர். அலியின் கண்கள் அத்துணை அழகு வாய்ந்தனவாம். இவர் காலத்திலேயே ஷியா, சுன்னி என்னும் இரண்டு இஸ்லாமிய வகுப்பினர் தோன்றினர்.

அலிகனி மலைகள்: வட அமெரிக்காவிலுள்ள அப்பலேச்சியன் தொடரின் ஒரு பகுதி. சராசரி 2,500 அடி உயரமுள்ளவை. மலைச் சரிவுகளில் காடுகளும் பள்ளத்தாக்குகளில் பயிர் நிலமும் காணப்படுகின்றன. பென்சில்வேனியாவிலும் மேற்கு வர்ஜினியாவிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள. அலிகனி, மனோஸ்கஹேலா, பொட்டாமக், ஷெனான்டோவா என்னும் ஆறுகள் இம்மலைகளில் உற்பத்தியாகின்றன.

அலிகார் உத்தரப்பிரதேச நகரம். 1759-ல் கோட்டை கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம் பல்கலைக் கழகம் உள்ளது. பல மாவு அரைக்கும் ஆலைகளும் பருத்தி ஆலைகளும், பாற்பண்ணைகளும் இருக்கின்றன. உறுதியான பூட்டுக்கள் செய்வதற்குப் பெயர் பெற்றது இந்நகரம். மக் : 1,13,000. அலிகார் மாவட்டத்தின் மக் : 1,41,618 (1951).

அலிகேட்டர் முதலை வகுப்பைச் சேர்ந்தது. இது இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அமெரிக்க அலிகேட்டர், மற்றொன்று சீன அலிகேட்டர். இவற்றின் உடலமைப்பு, பழக்கங்களெல்லாம் முதலையைப்போன்றவையே. மிகப்பழைய காலங்களிலே 18 அடி நீளமும் இன்னும் அதிக நீளமுமுள்ள அலிகேட்டர்கள் இருந்தனவென்று அவற்றின் பாசில்களால் அறியக்கிடக்கிறது. இப்போது மிகப் பெரியது 10, 11 அடி இருக்கும். ஆண்கள் பெண்களைவிடப் பெரியவை. பெண் புல் முதலிய செடிகளைக் குவித்துக் கூடு கட்டும். அது 3 அடி உயரம் 6-7 அடி விட்டமுள்ளது. அதன் நடுவில் நனைந்திருக்கும். அந்த இடத்தில் முட்டையிடும். முட்டை கெட்டியான ஓடுள்ளது. கோழி முட்டையை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும். சாதாரணமாக ஒரு தடவையில் 50 முட்டையிடும். தாய் தன் கூட்டைக் காக்கும். குஞ்சுகள் முட்டையிலிருந்து வந்ததும் 9 அங்குல நீளமிருக்கலாம். சில மாத காலம் அதாவது அடுத்த வசந்தகாலம் வரையிலும் அவை தாயோடு இருக்கும். ஓராண்டுக்கு ஓரடி நீளம் வளரும். இவ்வாறு ஆறு ஆண்டுகளுக்கு விரைவாக வளரும். பிறகு வளர்ச்சி - மிகவும் மெதுவாக உண்டாகும். அலிகேட்டர் ஐம்பது அறுபது ஆண்டு உயிரோடிருக்கலாம். பனிக்காலத்தில் அலிகேட்டர்கள், சேற்றுக்குள் ஆழமாக வளை தோண்டிப் புதைந்து கிடக்கும். அல்லது ஆற்றின் மடுக்களின் அடியில் நீரில் உறங்கிக் கிடக்கும். ஆண் அலிகேட்டர் மாடு கத்துவதுபோல ஒருவித உரத்த சத்தமிடும். அதன் தலையில் சுரப்பிகள் உண்டு. கஸ்தூரிபோன்ற மணமுள்ள ஒரு பொருள் அவற்றில் உண்டாகின்றது.

அலிகேட்டருக்கும் முதலைக்கும் சில வேறுபாடுகள் உண்டு. முதலை வாயில் கீழ்த்தாடையிலுள்ள நாலாவது பல் மேல் தாடையின் வெளிப்புறத்திலுள்ள ஒரு வளைவில் போய்ப் பொருந்தும். அலிகேட்டரில் அந்தப் பல் மேல்தாடையிலுள்ள ஒருகுழியில் போய்ப்பொருந்தும். முதலையின் முகம் சற்றுக் கூராக முடியும். அலிகேட்டருடைய முகம் அகன்றிருக்கும். இந்தியாவில் அலிகேட்டர்கள் இல்லை.

அலிபாபா : அராபிக் கதைகள் என்ற பாரசீக நூலிலுள்ள சிறந்த கதைகளுள் ஒன்றான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பதில் வரும் கதாநாயகன்.

அலிபூர் : கல்கத்தாவின் புறவூர்களில் ஒன்றான 24 பர்கானாக்களாகிய மாவட்டத்தின் தலைநகர். இங்குப் படைகளின் தண்டும், பெரிய சிறைச்சாலையும், கவர்னர் மாளிகையும், விவசாயத் தோட்டக் கலைக் கழகத்தின் சிங்காரத் தோட்டமும் உள்ளன.

அலியார் புலவர்: ஒரு முகம்மதியத் தமிழ்ப் புலவர். இந்திராயன் படைப் போர், இபுனி ஆண்டான் படைப் போர் என்னும் நூல்களின் ஆசிரியர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர்.

அலியூஷன் தீவுகள்: அலாஸ்கா தீபகற்பத்தின் தென் பகுதியிலிருந்து கொடுவாள் போல் வளைந்து நீண்டு இருக்கும் தீவுக்கூட்டம். அலாஸ்காவைச் சேர்ந்த இக்கூட்டம் சுமார் 1,000 மைலுக்கு நீண்டிருக்கிறது. இத்தீவுகளின் மொத்தப் பரப்பு : 6,400 ச.

அலியூஷன் தீவுகள்

மைல். இங்குள்ள மக்களுக்கு அலூட் என்று பெயர். மீன் பிடிப்பது இவர்கள் தொழில். மக்: சு. 1,200. இவற்றில் உனலாஸ்கா என்பது மிகப் பெரிய தீவு. இரண்டாம் உலக யுத்தத்தின்போது 1941-1943-ல் இத்தீவுகள் ஜப்பானியர் வசம் இருந்தன.

அலுமினியம் : [குறியீடு AL] அணுவெண் 13; அணு நிறை 271. 1827-ல் வலர் என்ற ரசாயன அறிஞரால் இவ்வுலோகம் பிரித்தெடுக்கப்பட்டது. இதைப் பிரித்தெடுக்கத் தற்காலத்தில் வழங்கும் முறையை ஹால் என்னும் அமெரிக்க மாணவர் கண்டுபிடித்தார்.

அலுமினியம் தனிநிலையிற் கிடைப்பதில்லை. பூமியின் மேற்புறணியில் ஆக்சிஜனுக்கும் சிலிகனுக்கும் அடுத்தபடி அதிகமாக உள்ள தனிமம் இதுதான். அப்பிரகம், கற்பலகை, பல களிமண்வகைகள் முதலியவற்றில் அலுமினியம் சிலிகேட்டு முக்கியமான பொருளாக இருக்கும். குருந்தக் கல், பதுமராகம் போன்ற மணிகள்,