பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலெக்சாந்தர்

221

அலெக்சாந்தர்

அலுமினியக் கலவைகளில் முக்கியமானது டூராலு மின். இது ஜெர்மனியிலுள்ள டூரன் என்ற ஊரில் முதலில் தயாரிக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. சூடேற்றி அவிப்பதால் இது நல்ல உறுதியைப் பெறுகிறது. தயாரித்தவுடன் இது அலுமினியத்தின் மற்றக் கலவைகளைப் போலவே மிருதுவாகவும் உறுதியாகவும் இருக்கும். ஆனால் இதை 450° முதல் 500° வரைச் சூடேற்றி நீரில் அவித்தால் இதன் தன்மை மாறிவிடுகிறது. முதலில் மிருதுவாக இருக்கும். இது நாள் செல்லச் செல்ல எஃகைப் போலக் கடினமாகிவிடுகிறது. இது அரித்தலை எதிர்க்கும் நல்லியல்பையும் உடையது. இலேசானதும் உறுதியானதுமான இக்கலவை விமான உறுப்புக்களைச் செய்யப் பெரிதும் வழங்குகிறது. ஆகாயக் கப்பலின் கூண்டை இதைக் கொண்டே செய்கிறார்கள்.

அலுமினியக் கலவைகள் அனைத்திற்கும் ஒரு குறையுண்டு. இவற்றைப் பற்றவைக்க முடியாது. இவற்றைச் சூடேற்றி இணைப்பதாலும் இவற்றின் தன்மை கெட்டுவிடக்கூடும்.

அலெக்சாந்தர் III (போப், ப.கா. 1159-1181) : 1153-ல் சான்சலராக நியமனம் பெற்றார். பிரெடரிக் பார்பரோசா என்னும் ஜெர்மன் மன்னனை எதிர்த்த மதத் தலைவர்களில் ஒருவர். 1159-ல் போப் VI-ம் ஆட்ரியனுக்குப்பின் இவர் போப்பாக நியமனம் பெற்றார். இவருக்கெதிராக நின்று சிறுபான்மையோரால் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் IV-ம் விக்டர் என்பவர். IV-ம் விக்டரை முதலில் அங்கீகரித்த பார்பரோசா வமிசத்தினர் லெக்னானோத் தோல்விக்குப் பிறகு அலெக்சாந்தரையே போப்பாக ஏற்றுக்கொண்டனர். 1179-ல் அலெக்சாந்தர் ஒரு மதகுரு மாநாட்டைக்கூட்டி ரோமன் கத்தோலிக்கச் சமய சம்பந்தமான சில சட்டங்களை இயற்றினார். இங்கிலாந்தில் அப்போது ஆண்டுவந்த II-ம் ஹென்ரியைத் தாமஸ் பெக்கட் கொலையை முன்னிட்டுப் பணியவைத்தார். I-ம் அல்பான்சோவைப் போர்ச்சுகேசிய மன்னனாக்கியவரும் இவரே. 1179க்குப் பிறகு ரோமானியக் குடியரசு இவரை ரோமில் இருக்கவிடவில்லை. அவ்வாண்டில் III-ம் இன்னசன்ட் என்பவவரைப் போட்டிக்குப் போப்பாக ஏற்படுத்தினர் ; ஆயினும் அலெக்சாந்தர் அவரையும் தம்வசப்படுத்திக் கொண்டார். III-ம் இன்னசன்ட் 1180-ல் பதவியிழந்தார். அலெக்சாந்தர் 1181-ல் ஸ்காட்லாந்து அரசரான வில்லியம் என்பவரைச் சமயநீக்கம் செய்தார். 1181 ஆகஸ்டு 30-ல் இறந்தார்.

அலெக்சாந்தர் VI (போப், 1431-1503) : அலெக்சாந்தர் என்னும் பெயருடைய போப்புக்களில் இவரே மிக்க புகழ் பெற்றவர். இவர் ஸ்பெயினிலுள்ள வாலன்சியா என்னுமிடத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது திறமை நன்கு விளங்கிற்று. III-ம் காலிக்ஸ்டஸ் என்னும் போப் இவரைக் கார்டினலாக நியமித்தார். இவர் 1492-ல் VI-ம் இன்னசன்ட் இறந்ததும் போப் பதவி ஏற்றார். இவர் பேரறிவும் துணிச்சலும் வாய்ந்தவர். இவர் காலத்தில் திருச்சபைக்கு வருவாய் அதிகரித்தது. இவர் கல்வியையும் கலைகளையும் வளர்த்தார். ரோம் நகரை அழகுபெற அமைத்தார். அமெரிக்காவிலிருந்த ஸ்பானிய, போர்ச்சுகேசியக் குடியேற்றங்களுக்கிடையே இவர் எல்லை வகுத்தார். இவர் போப்பாக இருந்த காலத்தில்தான் சவனரோலா (த. க.) எரிக்கப்பட்டார். இவர் மக்களில் சீசர் போர் ஜியா, லுக்ரிஷா போர்ஜியா என்பவர்கள் இருவரும் புகழ் பெற்றவர்கள்.

அலெக்சாந்தர், மகா (கி. மு. 356-323) மாசிடோனியா மன்னனாகிய II-ம் பிலிப்பின் புதல்வன். அரிஸ்டாட்டில் முதலிய பல தகுந்த ஆசிரியர்களிடம் கல்வி கற்றான். இவனது புத்தி நுட்பமும் வீரத் தன்மையும் இளமையிலேயே புகழ்பெற்றன. 16ஆம் வயதில் - திரேசில் தோன்றிய கலவரத்தைத் தானே சென்று அடக்கினான். இவனது 18ஆம் வயதில் பிலிப் ஈடுபட்ட கெரொனியாப் போரில் இவன் தீப்ஸ் படையைத் தோற்கடித்தான்.

கி. மு. 336-ல் பிலிப் கொலை செய்யப்பட்டதும் நாட்டில் கலவரங்கள் தலை தூக்கின. ஒரு பக்கம் கிரேக்கர்களும், மற்றொரு பக்கம் திரேசியர்களும் கிளர்ச்சி செய்தனர். சற்றேனும் அஞ்சாமல் அலெக்சாந்தர் யாவரையும் போரில் வென்று அடக்கினான். கிரீசில் தெஸ்ஸாலியரையும் தீபன்களையும் தோற்கடித்தவுடன், மற்றக் கிரேக்கர்கள்யாவரும் அவனுக்குப் பணிந்தனர். அன்றியும் காரிந்தில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்தில் ஆசியாமீது படையெடுப்பதற்கு முன்பு பிலிப்பைத் தலைவனாக ஏற்றுக்கொண்டதுபோல், இப்பொழுது அவன் மகனை அப்பதவிக்கு நியமித்தார்கள்.

திரும்பி நாட்டிற்குச் சென்ற சில நாட்களில் அலெக்சாந்தர் இறந்துவிட்டானென்ற பொய் வதந்தி கிரீசில் கிளம்பவே தீப்ஸில் கிளர்ச்சி தொடங்கியது. அதீனியர்களும் இதற்கு ஆதரவு அளித்தனர். மிக விரைவாக அலெக்சாந்தர் தீப்ஸ்மீது பாய்ந்து, கிளர்ச்சியை அடக்கி, தீப்ஸ் நகரத்தை அறவே அழித்தான் ; மக்கள் பலரை அடிமைகளாக்கி விற்றான். தான் செய்த இக்கொடிய செயல்களுக்காக அலெக்சாந்தர் பின்பு வருந்தினான் என்று கூறுகிறார்கள். எதுவாயினும் அவனது தண்டனை உடனே பலனளித்தது. கிரேக்க நகரங்கள் யாவும் அடிபணிந்தன.

மாசிடோனியாவிற்குத் திரும்பியதும் அவன் பாரசீக சாம்ராஜ்யத்தைத் தாக்குவதற்கு ஏற்பாடு செய்தான். தகுந்த படையுடன் கி. மு. 334-ல் புறப்பட்டுத் தன்னை எதிர்த்த பாரசீகப் படைகளை வென்று, பல நகரங்களைக் கைப்பற்றி, மேற்கு ஆசியாமைனர் முழுவதையும் வென்றான். மைலீட்டஸ், ஹாலிக்கர் நாசஸ் போன்ற சில நகரங்கள் முதலில் எதிர்த்த போதிலும், இறுதியில் இவனுக்குட்பட்டன.

ஆசியாமைனரிலிருந்து சைலீஷியன் கணவாய் வழியே சென்று, அலெக்சாந்தர் சிரியாவை அடைந்தான். இங்கு இஸ்ஸ்ஸ் என்னுமிடத்தில் டரையஸ் என்னும் பாரசீக மன்னனது பெரும் படையைப் போரில் வென்றான். டரையஸ் போர்க்களத்தினின்றும் ஓடிவிட்டான். உடனே அலெக்சாந்தர் மத்திய தரைக் கடலின் கீழ்ப் பக்கமிருந்த துறைமுகங்களைக் கைப்பற்றினான். டயர் துறைமுகம் மட்டும் உறுதியான கோட்டையின் பலத்தால் ஏழு மாதம் எதிர்த்து நின்றது. கடைசியில் அதுவும் பணிந்தது. பின்பு அவன் எகிப்தைத் தாக்கினான். இங்கு மக்கள் தங்களை ஆண்டுவந்த பாரசீக அரசாங்கத்திடம் வெறுப்புற்றிருந்தபடியால் நாடு முழுவதும் மிக எளிதில் அவன் கைவசமாயிற்று. அங்கு அலெக்சாந்திரியா என்ற நகரத்தை உருவாக்கினான். அதற்கப்பால், பின்னும் ஆசியாவிற்குள் சென்று, டைக்ரிஸ் ஆற்றைக் கடந்து, கி. மு. 331-ல் மறுபடியும் டரையஸின் படையைக் காகமேலா என்னும் இடத்தில் தோற்கடிக்கவே, பாரசீக மன்னன் உயிர் தப்பி ஓடினான். அலெக்சாந்தர், பாபிலோன், சூசா, பெர்சபொலிஸ், எக்பட்டானா முதலிய இடங்களை எளிதில் கைப்பற்றினான். அதற்குள் டரையஸை அவனது துணைவர்களே குத்திக் கொன்ற-