பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவதாரம்

227

அவதூறு

விரைவில் அங்கீகரிக்கவேண்டும் என்ற விதி இந்திய அரசியல் சட்டத்தின் 213ஆம் ஷரத்து ஆகும். 'ஜனநாயக அரசியலில் சட்டசபையாலன்றி நிருவாகக் குழுக்களால் பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டங்கள் மிகக் குறைவாயிருக்கவேண்டும். இல்லையேல் அது யதேச்சாதிகாரமாக மாறிவிடும் என்பது அரசியல் நூல் கருத்து.

அவதாரம் என்பது இறங்குதல், அதாவது உயர் நிலையிலிருந்து தாழ் நிலைக்கு வருதல் என்று பொருள்படும். இந்து சமயத்தில் திரிமூர்த்திகளுள் காத்தற் கடவுளான விஷ்ணு, உயிர்கள் உய்வதற்காகக் கடைப் பிடிக்க வேண்டிய அறநெறியில் நடந்து காட்டும் பொருட்டுப் பல உயிர்களாகப் பிறப்பதே அவதாரம் எனப்படும்.

உலகத்திலே எவ்வெப்பொழுது அறம் தேய்ந்து அல்லவை பெருகுகின்றனவோ, அவ்வப்பொழுதெல்லாம் இறைவர் தம்மைத் தாமே தம் மாயையிலே புகுத்தி, மானிடச் சட்டை தாங்கி வெளிப்படுகிறார் எனக் கீதை கூறுகிறது.

திருமாலின் பத்து அவதாரங்களும் பரிணாமத்தின் முக்கியப் படிகளை உணர்த்துகின்றன எனவும் கூறுவர். மனித இயற்கையினும் தாழ்ந்த விலங்குத் தன்மை நிலை, மீன், ஆமை, பன்றி என்னும் அவதாரங்களிலே குறிப்பிடப்படுகின்றது. பிறகு விலங்குலகு மனிதவுலகுக்கு மாறுவதை நரசிம்மாவதாரம் காண்பிக்கிறது. வாமனாவதாரம் மனித இயற்கை முழுவளர்ச்சி யடையாமையைக் காட்டுகிறது. மனிதனது முதல் நிலை, கொடிய விலங்குத் தன்மையான பழிவாங்கும் நாகரிகமற்ற நிலை என்பதைப் பரசுராமாவதாரம் அறிவிக்கிறது. தூய நற்குணம் நிரம்பிய மக்கட்பண்பை இராமாவதாரம் தெரிவிக்கிறது. இச்சையொன்றும் கொள்ளாமல் உலகிலுள்ள தீய சக்தியுடன் போராடி வெற்றி பெறுவதைக் கிருஷ்ணாவதாரம் குறிக்கிறது. எல்லா உயிர்களிடமும் இரக்கம் வேண்டு மென்பதைப் புத்தாவதாரம் வெளியிடுகிறது. தீமையையும் ஒழுங்கின்மையையும் வெட்டி வீழ்த்துவதை வாளோடு தோன்றும் கற்கியவதாரம் தெளிவிக்கிறது.

தேவிஜ்ஜ சுத்த என்னும் பௌத்த நூலிலும், மகா நிருவாண தந்திரம் என்னும் சாக்த ஆகமத்திலும், சாரதுஷ்டிர மதத்திலும் இவ் அவதாரக் கருத்து வந்திருக்கிறது.

அவதாரமே தெய்வத் தன்மையின் இருப்புக்குத் தக்க நேர் சான்றாகிறது. தெய்வம் மனிதனாக இறங்க இயலுமாதலின், மனிதனும் தெய்வ நிலைக்கு ஏற இயலும் என்பது பெறப்படுகின்றது. மனிதத் தன்மை வாயிலாகத் தெய்வத் தன்மை வெளிப்படக்கூடும் என்பதே அவதார ரகசியம்; இதை அறிபவர் தெய்வத் தன்மையை வெளிப்படுத்த முயன்று வெற்றி பெற்று முத்தியடைவர்.

நல்லாரை நன்கு காக்கவும், பொல்லாரை அறவே நீக்கவும், அறத்தை நன்கு நிலைநாட்டவும் இறைவனது அவதாரம் நிகழ்கிறது. காலத்தின் இயல்பிற்கும் மனிதனுடைய போக்கிற்கும் ஏற்றவாறு புதிய அறநெறிகளைக் காட்டி மக்களைப் பரம்பொருளிடம் சேர்த்தலும் அவதார நோக்கம்.

உலகம் மேலும் மேலும் உயர்ந்து முழு நலம் அடைய வேண்டும் என்னும் பெரு நோக்கம் அவதாரக் கொள்கையில் அமைந்திருக்கிறது. உத்தம வாழ்க்கை வாழ்ந்த பெரியோர்கள் தங்கள் பிரகிருதிக்குத் தாங்கள் அடிமைகளாகாமலும், குணங்களால் கட்டுப்படாமலும், வினையினால் தொடக்குண்ணாமலும் வெற்றி பெறும்பொழுது அவர்கள் தோற்றத்தை அவதாரம் என்று கருதுவது மக்கட்பிறப்பின் முன்னேற்றத்திற்கு ஊக்கந்தரும் கருத்தாகும்.

சான்றோர்கள் எய்திய இந்த உயர் நிலையை எம் மனிதனும் முயன்று பெறலாம் என்பது ஆன்ம வளர்ச்சிக்குப் பேருதவியாகும். மண்ணுலகத்தை விண்ணுலகாகத் தூய்மை செய்யும் போராட்டமோ, கடவுள் நிலையை மனிதனுக்கு வெளிப்படுத்தும் செய்கையோ, மெல்ல மெல்லப் படிப்படியாக உலகத்தின் பரிணாமத்திலே நடந்து வந்திருக்கிறது என்பர்.

அவதானம் என்பது நினைவாற்றலையும் ஊன்றிய கவனத்தையும் குறிக்கும். இதிலிருந்து அது ஒரேசமயத்தில் பல செயல்களைக் கவனித்துச்செய்யக்கூடிய ஞாபகத் திறமைக்குப் பெயராயிற்று. அவ்வாறு எத்துணைச் செயல்களைக் கவனிக்கக் கூடுமோ, அவற்றிற்கேற்றவாறு இது அஷ்டாவதானம், தசாவதானம், சோடசாவ தானம், சதாவதானம் எனப் பலவாறு சொல்லப்படும்.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவரெனக் கருதப்படும் அஷ்டாவதானம் ஆதி சரவணப்பெருமாள் கவிராயர், இலக்குமணப்பிள்ளை என்பவருக்கு எழுதிய சீட்டுக் கவியிலே அஷ்டாவதான முறையைக் குறித்துள்ளார் (பெருந்தொகை 1790).

வாய் வேலுமயிலும் என்று கூறிக்கொண்டே யிருத்தல், நால்வரை அமர்த்தி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதிய கவியின் அடியைக் கூறிப் பாட்டை முற்றும் சொல்லி எழுதச் செய்தல், காலாலும் கையாலும் கவிதையெழுதுதல், கணக்குரைத்தல், இலக்கம் உரைத்தல், திரை மறைவிலே ஆடும் சூதுக்கும் சதுரங்கத்துக்கும் இந்தக் காய்களை நகர்த்துக என்று கூறுதல், குதிரையடி கூறல், முதுகில் எறியும் பருக்கைக் கற்களையாவது நெல்லையாவது எண்ணிக் கூறுதல் ஆகியவை அஷ்டாவதானம் எனப்படும். இவற்றிற் சில மாறி வழங்கியும் இருக்கக்கூடும். பத்துச் செயல் தசாவதானம், பதினாறு செயல் சோடசாவதானம், நூறு செயல் சதாவதானம். இக்காலத்திலே இலாடசங்கிலி சேர்த்தல், பத்திரிகை கூறல் போன்ற தம் திறமைக்கேற்ற செயல்களையும் அமைத்துக்கொண்டுள்ளனர்.

அவதி வெப்பநிலை (Critical temperature): பார்க்க : வெப்பநிலை- தாழ்ந்த வெப்பநிலைகள்.

அவதூறு : ஒருவரைப் பழிப்பது அவதூறு எனப்படும். மனிதனுக்கு மானம் பெரிதாகையால் அதைக் குறைத்துச் சொல்வதை அரசாங்கம் குற்றமாகக் கொண்டு, இந்தியத் தண்டனைச் சட்டத்தில் (Indian Penal Code) அதற்குரிய தண்டனையை விதித்திருக்கிறது. மனு, யாஞ்ஞவல்கியர் போன்ற பழைய அறநூலாசிரியர்களும் அவதூறு என்பதை 'வாக்பாருஷ்யம்' என்ற குற்றமாகக் கொண்டு, அதற்குக் கொடுக்க வேண்டிய தண்டனை இன்னதென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தூற்றப்பட்டவர் தூற்றியவர்மீது மான நஷ்டத்திற்கு வழக்குத் தொடர, அவர்கள் சட்டத்தில் இடம் கிடையாது. இது ஆங்கிலச் சட்டத்தையொட்டிப் பிற்காலத்தில் ஏற்பட்ட முறை. தற்காலத்தில் அவதூறு செய்பவர் குற்றம் செய்தவர் என்ற முறையில் தண்டிக்கப்படுவதல்லாமல் தார்த்துக்(Tort) குற்றம் செய்தவர் என்ற முறையில் வாதிக்கு நஷ்டி கொடுக்கவும் கட்டுப்பட்டவர் ஆவார்.

ஒரு மனிதரைப் பற்றிக் கூறிய பழிச் சொற்களைக் கேட்பவர்கள், அவற்றைக் கேட்டதன் காரணமாக அந்த மனிதரைத் தாழ்வாக நினைக்கக்கூடுமானால் அந்தச்