பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவதூறு

228

அவதூறு

சொற்கள் அவதூறாகும். இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 499ஆம் பிரிவில் இதன் வகைகள் சில சொல்லப்பட்டிருக்கின்றன. நடத்தைத் தவறு, அறிவின்மை, இனத்தார் இழிவாகக் கருதுபவை, தொழில் முறையில் தவறிழைத்தல், பெருவியாதிபோன்ற ஒட்டுநோய், சமூகத்தில் பழகுவதற்குத் தகுதி இல்லாமை, இவைகளுள் ஒன்றோ பலவோ இருப்பதாகக் கூறுவது அவதூறாகும். மேல் தோற்றத்தில் சில மொழிகள் அவதூறல்லா தனவாகக் காணப்படினும், சங்கேத முறையில் அவதூறாக ஏற்படலாம். சில சமூகங்களிலும், சில தேசங்களிலும் சில சொற்களுக்குச் சங்கேதமாய் வேறு பொருள் வழங்கும். அது அவதூறாகலாம். பழைய காலத்தில் தஞ்சையில், கள்ளைக் கங்காசாகரமென்று சங்கேதமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முன் ஒருவரை, “இவர் கங்காசாகரத்தில் மூழ்கி இருக்கிறார்” என்றால், இவர் குடிகாரர் என்று பொருள்; அது அவதூறாகும். ஒரு பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்தது என்று பத்திரிகையில் வெளிவருகிறது. இதில் அவதூறு ஒன்றும் கிடையாது. ஆயினும் அந்தப் பெண்ணுக்கு ஒரு மாதத்திற்குமுன் தான் மணமாயிற்று என்பதைத் தெரிந்தவர்கள் அந்தப் பெண் நடத்தைத் தவறு உடையவள் என்று நினைப்பார்கள். ஆகையால் அப்படிப் பத்திரிகையில் வெளியிட்டது அவதூறாகும். இத்தகைய அவதூறுக்கு, மறை அவதூறு (Innuendo) என்று பெயர்.

அவதூறு என்பது, பேச்சு அவதூறு (Slander), எழுத்து அவதூறு (Libel) என்று இருவகைப்படும். பேச்சு அவதூறு பேச்சினால் பழிப்பது. கடிதங்களிலும் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் பழித்து எழுதுவது எழுத்து அவதூறாகும். மொழி வாயிலாகவன்றிப் படத்தின் வாயிலாகப் பழிப்பதும் எழுத்து அவதூறே. “வீரப்பன் சப்பாணியைக் கொன்றான்“ என்று கூறுவது பேச்சு அவதூறு. “வீரப்பன் சப்பாணியைக் கொன்றான்“ என்று பத்திரிகையில் எழுதினால் அது எழுத்து அவதூறாகும். வீரப்பன் கத்தியால் சப்பாணியைக் குத்துவது போலவும், அதனால் சப்பாணி கீழே விழுந்துவிட்டது போலவும் படம் எழுதினால் அதுவும் எழுத்து அவதூறு.

ஆங்கிலச் சட்டப்படி எழுத்து அவதூறு செய்தவர் தண்டனைக்கும், மான நஷ்டம் கொடுப்பதற்கும் ஆளாவராயினும், பேச்சு அவதூறு செய்தவர் சில சந்தர்ப்பங்களில் தான் தண்டனைக்கும், நஷ்டி (Damages) கொடுக்கவும் ஆளாவார். ஆனால் இந்தியச் சட்டப்படி இரண்டு வகையான அவதூறுகளுக்கும் தண்டனையும் நஷ்டியுமுண்டு.

1. அவதூறென்று வழக்காடுவதற்குப் பழிமொழிகள் தன்னையே குறிப்பனவென்று வாதி மெய்ப்பிக்கவேண்டும். பொதுவாக, மக்கள் சமூகங்களைப்பற்றி அவதூறு சொன்னால், அந்தச் சமூகத்தில் உள்ளவர் ஒருவரும் வழக்குத் தொடர முடியாது. ஆயினும், ஒருவர் பேரைச் சொல்லாமல் குலத்தைச் சொன்னாலும், அது அவரையே குறிப்பதாகக் கேட்பவர்களுக்குத் தெரியுமானால் அவதூறாகும்.

சில வேளைகளில், பேர் சொல்லாவிட்டாலும், பழி மொழிகள் யாரைக் குறிக்கின்றன என்று அறியக்கூடும். அது அவதூறாகும். ஒரு ஊரில் ஒரு குருடர் பல விவகாரங்கள் நடத்திவந்தார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி ஒருவர், “நம் கிராமத்துக் கலகங்களுக் கெல்லாம் நம்முடைய சுக்கிராசாரியரே காரணம்" என்றால், அது அந்தக் குருடரையே குறிக்குமாதலால் அது அவதூறாகும்.

பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும், ஒரு கற்பனைப் பெயர் சொல்லி, ஒருவர் செய்த தவறுகளை விவரிப்பது வழக்கம். ஓர் ஆங்கிலப் பத்திரிகை, கற்பனையாக ஒரு பாரிஸ்டர் இன்னார் இப்படியெல்லாம் செய்கிறார் என்று எழுதிற்று. உண்மையாகவே அந்தப் பெயர் வாய்ந்த ஒரு பாரிஸ்டர் இருந்தார். அவர் மானநஷ்டிக்கு வழக்குச் செய்தார். பத்திரிகை ஆசிரியர், இம்மாதிரியான பேருள்ள பாரிஸ்டர் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது என்று எதிர்வாதம் செய்தார். ஆனால் நீதிபதி அது அனாவசியம், வாதியைத் தெரிந்தவர்கள், கட்டுரையைப் படித்தால், அவரைத்தான் குறிக்கிறது என்று நினைப்பதே போதும் என்று முடிவு செய்தார். அதாவது பழிமொழிகளைப் படிப்பவர்கள் என்ன பொருள் செய்வார்கள் என்பது முக்கியமே தவிர, எழுதினவர் மனத்தில் என்ன கருத்து இருந்தது என்பது அவசியமில்லை என்பது சட்டம்.

2. அவதூறு என்று வழக்காட வேண்டுமானால், பழிமொழிகள் பிரசுரம் ஆகியுள்ளன என்று மெய்ப்பிக்க வேண்டும். பிரசுரம் என்பது பழிமொழிகளைப் பிறரிடம் கூறுவதாகும். இராமன், கிருஷ்ணனைப் பார்த்து, “நீ அயோக்கியன்“ என்று சொல்லும்போது, வேறொருவரும் இல்லாவிட்டால் அது அவதூறாகாது. பிறர் தாழ்வாக மதிப்பர் என்பதே வழக்குக்கு அடிப்படையாகும். மூன்றாவது மனிதர் இல்லாவிட்டால், வழக்குக்கு இடம் இல்லை. அம்மாதிரியே, ராமன், கிருஷ்ணனுக்கு இழிவான கடிதம் எழுதி, வேறொரு வரும் பார்க்க முடியாத வண்ணம் அனுப்பினால், அதுவும் பிரசுரமில்லாததினால் வழக்காட இடம் கொடுக்காது. அந்தக் கடிதத்தை, வாதியே யாருக்காவது காண்பித்தால், அப்போதும் வழக்குச் செய்ய முடியாது. ஏனென்றால், பிரதிவாதி அவதூறைப் பிரசுரம் செய்தால்தான் அவர் நஷ்டிக்கு ஆளாவார்.

அவதூறு என்று வாதி மெய்ப்பித்தபின், பிரதிவாதி அந்தக் குற்றச்சாட்டினின்றும் விடுவித்துக் கொள்ளச் சட்டப்படி சொல்லக்கூடிய சமாதானங்கள் மூன்று : 1. உரைத்தவையெல்லாம் உண்மை . 2. அவைகளைச் சொல்லப் பிரதிவாதிக்குச் சிறப்புரிமை (Privilege) இருக்கிறது. 3. சொன்னவை யெல்லாம் நேர்மை உரை.

1. உண்மை : உரைத்தவை எல்லாம் உண்மை என்று பிரதிவாதி மெய்ப்பித்தால் வாதியின் பிராது தள்ளுபடியாகும். திருடனைத் திருடன் என்றால், மான நஷ்டிக்கு வழக்குத் தொடர முடியாது. திருடன் என்று ஏற்பட்டால் அவனுக்கு மானம் ஏது? மானம் இருந்தால்தானே மான நஷ்டிக்கு வழக்குப் போடலாம்? உண்மை என்று வழக்காடுகிறவர்கள், தாம் உரைத்தவைகளை ஐயந்திரிபற மெய்ப்பிக்க வேண்டும். மெய்ப் பிக்காவிட்டால் நஷ்டி அதிகமாகக் கொடுக்கவேண்டியிருக்கும்.

2. சிறப்புரிமை : உரைத்தவை அவதூறாயினும், அவைகளைச் சொல்லப் பிரதிவாதிக்குச் சில சந்தர்ப்பங்களில் சிறப்புரிமை யுண்டு. அது முழுச் சிறப்புரிமை (Absolute privilege) என்றும், வரம்புச் சிறப்புரிமை (Qualified privilege) என்றும் இருவகைப்படும். முழுச் சிறப்புரிமை இருந்தால் பழிமொழிகளைப் பற்றி ஒரு பொழுதும் வழக்குத் தொடர முடியாது. குறைச் சிறப்புரிமை இருந்தால் வாதியின் மானத்தைக் கெடுக்க வேண்டுமென்று கெட்ட எண்ணத்துடன் கூறப்பட்டன என்று மெய்ப்பித்தால் மட்டுமே மானநஷ்டிக்கு வழக்குத் தொடரலாம்.

(அ) முழுச் சிறப்புரிமை : சட்டசபைகளில் அதன் உறுப்பினர் பேசிய பேச்சுக்கள், அவைகளை அச்சிட்ட