பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவதூறு

229

அவயவச் சீரியல்

புத்தகங்கள், நீதிமன்றங்களில் நீதிபதிகள் கூறுவன, அவர்கள் தீர்ப்புக்கள், வழக்குரைஞர் பேச்சுக்கள், சாட்சிகள் வாக்குமூலம், வாதிப் பிரதிவாதிகள் தயாரிக்கும் பிராது முதலான வழக்குரைகள், இவைகள் விஷயமாய் அவதூறு வழக்கு நடத்த முடியாது. நியாய ஸ்தலத்தில் உள்ள அதிகாரிகள் நீதிபதிகள் பார்வைக்கு எழுதும் உரைகளைப் பற்றியும், போலீஸ் அதிகாரிகள் அனுப்பும் உரைகளைப்பற்றியும், அரசியல் விஷயமாய் அதிகாரிகள் ஒருவர்க்கொருவர் எழுதிக்கொள்வதைப் பற்றியும் வழக்குத் தொடர முடியாது.

(ஆ) வரம்புச் சிறப்புரிமை : நீதிமன்றங்களில் நடப்பவற்றைப் பத்திரிகைவாயிலாகவோ, மற்ற விதங்களிலோ, பிரசுரம் செய்ய எல்லோருக்கும் உரிமையுண்டு. அப்படிச் செய்வதால் மானநஷ்டம் ஏற்பட்டால், அதற்கு வழக்குத் தொடர முடியாது. ஏனென்றால், நீதிமன்றங்களில் நடப்பதை எல்லோரும் தெரிந்து கொள்வது நலம். ஆனால் பிரசுரம் செய்வதில் தவறுகள் ஏற்பட்டால் வழக்குத் தொடரலாம். சில வேளைகளில் நீதிமன்றங்களில் சில நடவடிக்கைகளைப் பொது மக்களை விலக்கிவிட்டுத் தனிமையாக நடத்துவார்கள். அவற்றைப் பிரசுரம் செய்ய அதிகாரம் கிடையாது.

நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் பிரசுரம் செய்யவேண்டுமென்பது அவசியமில்லை. சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால், அது நடந்ததற்கு மாறான பொருள் தருவதாக இருக்கக்கூடாது. தவிர, அப்போதைக்கப்போதே பிரசுரம் செய்வதுதான் முறை. பழைய செய்தியைக் காலம் தவறிப் பிரசுரம் செய்தால், கெட்ட எண்ணத்துடன் பிரசுரம் செய்திருக்கிறது என்று ஊகிக்க இடம் கொடுக்கும்.

சில வேளைகளில் ஒருவரைப்பற்றி, மற்றொருவரிடம், தகுதி இல்லாதவர் என்று தகவல் கொடுப்பதை அவதூறு என்று வழக்குப்போட முடியாது. வழக்குப் போடாதிருக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன : 1. தகவல் கொடுப்பவர் விஷயத்தைச் சொல்லக் கடமைப்பட்டவராகவும், அதைக் கேட்பவர் அதைத் தெரிந்துகொள்ள உரிமை உடையவராகவும் இருக்கவேண்டும். 2. சொல்லுகிற விஷயம் சந்தர்ப்பத்திற்கு அவசியமாயும் இருக்கவேண்டும். ஒருவர் தம்மிடம் வேலைக்காக வந்தவனைப்பற்றி அவனுடைய பழைய எஜமானரிடம் கேட்கும்போது பழைய எஜமான் அவரிடம் கூறுவதைப்பற்றி அவதூறு என்று வழக்காட முடியாது. புது எஜமானர் கேட்காமலே பழைய எஜமானர், அவன் யோக்கியனல்லன் என்று புது எஜமானரிடம் சொன்னால், அப்போதும் வழக்குச் செய்ய முடியாது. அதேமாதிரி, வியாபாரிகள் தங்கள் சமூகத்தில் இன்னாரின்னாருக்கு நாணயம் போதாதென்று சொல்லுவது, கழகத்தார் தங்கள் கழக நன்மைக்காக நபர்களைப்பற்றிக் கூறுவது, சாதித் தலைவர்கள் சாதியின் ஆக்கத்திற்காகச் சொல்லுவது, வக்கீலும் கட்சிக்காரரும் ஒருவர்க்கொருவர் எழுதிக்கொள்வது, யுக்தமான அதிகாரிகள் முன் இன்னார் இன்னார் குற்றம் செய்தார்கள் என்று தகவல் கொடுப்பது இவைகள் விஷயமாய் வழக்குச் செய்வதற்குப் பிரதிவாதி கெட்ட எண்ணத்துடன் அவதூறு செய்தார் என்று மெய்ப்பித்தால் தான் வழக்குத் தொடர முடியும்.

3. நேர்மையுரை (Fair Comment) : குற்றங் குறைகளை எடுத்துக் கூறுவது நேர்மையுரையாகும். இது பத்திரிகைகளில் சிறப்பாகப் பார்க்கலாம். எழுதுவதோ உரைப்பதோ நேர்மையுரையாக இருக்கவேண்டுமானால் அது பொதுநலம் பற்றியதாக இருக்கவேண்டும். பொது மக்களுக்குப் பயன்படா முறையில் ஒருவரைப் பழித்தால் அது நேர்மையுரை யாகமாட்டாது. சட்ட சபைகளிலும், நீதிமன்றங்களிலும் நகராண்மைக் கழகங்களிலும் நடப்பவை, கவிதை, கலை, சிற்பம், ஓவியம் போன்றவை, கோவில், மடம். தருமசாலை, சத்திரம் முதலியவைகளைப்பற்றி எழுதலாம். ஆனால் எழுதுவதில், நடந்த தென்ன, அதன்பேரில் தம் கருத்து என்ன என்ற இரண்டையும் தனிமையாகக் காண்பிக்கவேண்டும். நடந்ததை நடந்தவாறு சொல்லவேண்டும். அதற்குமேல், கூறும் கருத்து அதுபற்றியதாயும் பொது மக்களுக்குச் சொல்லவேண்டியதாயும் இருக்கவேண்டும். நடந்தவற்றைச் சொல்வதில் தவறு இருந்தாலும், சொன்ன கருத்து நியாயமற்றதாயும், கெட்ட எண்ணத்துடன் எழுதியதாயும் இருந்தாலும், வாதி அவதூறு என்று வழக்குத் தொடரலாம்.

மானநஷ்டி : வாதிக்கு வழக்கு அனுகூலமென்றால், நஷ்டி எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பது அந்தந்த வழக்கைப் பொறுத்தது. வாதிப்பிரதிவாதிகள் நடந்து கொள்வதையும், வாதியின் தகுதியையும், பிரதிவாதி அவதூறு செய்தது தவறாக ஏற்பட்டதா என்பதையும், எல்லாவற்றையும் கருதியே நஷ்டித் தொகை தீர்மானிக்கவேண்டும். டி. எல். வெ.

அவந்தி என்பது புராணங்களில் முத்தி நகரங்கள் ஏழனுள் ஒன்றாகக் கூறப்படுவது. இங்கே ஆலமரம் ஒன்றிருப்பதாகவும், அதன் அருகிலுள்ள தீர்த்தத்தில் முழுகி அங்கிருக்கும் சிவபெருமானை வழிபடுவது முத்தி தருமென்றுங் கூறுவர். இந்நகரை உச்சயினி(உஜ்ஜயினி) என்று சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் கூறுவர். இது மாளவதேசத்தில் ஒரு பட்டணமென்றும், இங்கே பலராமனும் கண்ணனும் சாந்தீப முனிவரிடம் கல்வி கற்றனரென்றும் விஷ்ணு புராணம் கூறும். இது ஒரு நாடு என்றும், இதன் தலைநகர் உஞ்சை என்றும், இதன் அரசன் பிரச்சோதனன் என்றும் பெருங் கதை கூறும். கி. மு. 6ஆம் நூற்றாண்டில் சண்டப்பிரத்தி யோதன் முதலிய வீரர்கள் இந்நாட்டை ஆண்டுவந்ததாகப் பௌத்த நூல்கள் கூறும். இது பிற்காலத்தில் மேற்கு மாளவம் என்னும் பகுதியின் பெயராயும், உச்சயினி தலைநகரின் பெயராயும் ஆயின. முற்காலத்தில் அவந்திக் கொல்லர் பெயர் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. கதைகளில் வரும் விக்கிரமாதித்தன் இந்த நாட்டில் அரசு புரிந்தான் என்பார்கள்.

அவயவச் சீரியல் (Orthopaedics) என்பது கருவிலோ, பிறக்கும்போதோ, பிறந்த பின்னரோ எலும்பும் தசையும் சேர்ந்த உறுப்புக்களில் உண்டாகும் குறைகளை நீக்கிச் சீர் செய்யும் சிகிச்சை முறையாகும்.

சாதாரணமாகக் குழந்தை கருவிலிருக்கும்போது கருப்ப நோய்கள் குழந்தையின் எலும்புகளை நன்றாக வளரவிடாமலிருக்கலாம். சவ்வெலும்புகள் (Mem' brane bone) நன்றாக வளராமலோ, பலமற்றவைகளாகவோ இருந்துவிடலாம். குருத்தெலும்புகள் (Cartilage) வளர்ச்சிக் குறைவுடையவைகளாகவோ, மேடு பள்ளங்கள் உடையவைகளாகவோ இருந்துவிடலாம்.

குழந்தை பிரசவமாகும் வேளையில் காயங்கள் ஏற்படலாம். எலும்பு முறிதல், தசை நரம்புகள் காயப்படுதல் , மூளை அழுந்தியும் இரத்தக்குழாய் சிதறியும் நரம்புகளில் கோளாறுகள் உண்டாதல், கழுத்துச் சாய்தல் ஆகியவை நேரிடலாம்.

குழந்தை பிறந்து வளரும்போது முதுகெலும்பு பின்னால் மூடாமல் தண்டுவடத்தின் சவ்வும் நரம்புகளும் வெளியில் காணப்படலாம். முதுகெலும்பு அரைப்-