பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழகியல் உளவியல்

240

அழகியல் உளவியல்

வாயால் வருணிக்கவும் முடியாது ; உள்முகப் பார்வையால் பாகுபடுத்திப் பார்க்கவும் முடியாது.

ஆயினும் அழகான இயற்கைப் பொருள்களைக் காணும்போது உண்டாகும் அழகு அனுபவத்தில் பல அமிசங்கள் காணப்படும். அழகான இயற்கைப் பொருள்களைக் கண்டு உண்டாகும் இன்ப உணர்ச்சிக்குக் காரணம் அப்பொருள்கள் நன்மை பயக்கும் சூழ்நிலைப் பொருள்களாயிருப்பதாகவோ அல்லது இன்பம் தரும் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையனவாகவோ அல்லது அப்பொருள்களிடம் உண்டாகும் ஒற்றுமை உணர்ச்சியாகவோ இருக்கலாம். ஒரு பொருளுடன் ஒற்றுமை உணர்ச்சி உண்டாவதே கலைப்பொருள்களை உண்டாக்குவதற்கும் துய்ப்பதற்குமான உளநிலையின் அடிப்படையாகும்.

சில உளவியலார்கள் அழகு அனுபவத்துக்கு இதனினும் அடிப்படையான காரணம் உண்டா என்று ஆராய முயன்றுளர். பிராய்டு (Freud) என்பவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் உளப்பகுப்பியலார் (Psycho analysts) கலையை உண்டாக்குவதற்கும் துய்ப்பதற்கும் அடிநிலையாகவுள்ளது பால், உந்தலே (Sex urge) என்று கூறுகிறார்கள். மனித உருவத்தைப் பார்த்து மகிழும் அனுபவம் பால் உந்தலுடன் தொடர்புடையது என்பதில் ஐயமில்லை. பெண்ணின் உருவத்தைக் கண்டு ஆண் மகிழ்வதாலும், ஆணின் உருவத்தைக் கண்டு பெண் மகிழ்வதாலும் இந்த அழகு அனுபவத்துக்கு அடிப்படையாயிருப்பது பால் உந்தலே. மனிதன் தன்னிடம் எழும் பால் உந்தலை அடக்கிக் கொள்வதால் அது அவனிடம் அழகான கலைப்பொருள் ஆக்கச் செயலாகச் செயற்படுகிறது என்பது பிராய்டு கொள்கையினர் கருத்து. பால் உந்தலால் தூண்டப்படும் கலைஞன் சமூகக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அதை அடக்கிவிடுகிறான். அது அவனுடைய கலை ஆக்கத்தில் வெளிப்படுகிறது என்பதை அவன் கையாளும் கலை அமிச வாயிலாக அறியலாம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அழகுப் பொருள் ஆக்கத்துக்கும் அனுபவத்துக்கும் சில வேளைகளில் பால் உந்தல் காரணமாயிருப்பினும் அதுவே அழகு அனுபவம் முழுவதற்கும் அடிநிலை என்று கூற இயலாது. பொருளின் அழகானது பாலின் தன்மையில் மட்டுமே அடங்கிவிடுவதில்லை.

கலை ஆக்கத்திற்கு உந்துவது கலைஞனுடைய உடலில் காணப்படும் ஏதேனும் ஒரு குறையாகவே இருக்கும் என்று ஆட்லர் (Adler) என்னும் மற்றோர் உளவியல் கொள்கையைச் சார்ந்தவர் கூறுகிறார். காது கேட்பதில் குறையுடையோர் இசையையும், கண் பார்வையில் குறையுடையோர் ஓவியத்தையும் பயில்வர் என்று அவர் கூறுகிறார். ஆனால், இக்கருத்துக்கு வேண்டிய சோதனைச் சான்று போதுமானதாக இல்லை.

பிராய்டு கூறுவதுபோன்ற பால் உந்தலை அடக்குதல், ஆட்லர் கூறுவதுபோன்ற தாழ்வு மனக்கோட்டம் ஆகியவை உட்பட, உணர்ச்சிகளிடையே உண்டாகும் முரணே கலை ஆக்கத்துக்குக் காரணம் என்பது பெரும்பாலோருடைய கருத்து. மனத்தில் உண்டாகும் முரணை மாற்றுவதற்காகவே கலை ஆக்கம் உண்டாகின்றது என்பர். ஆகவே, கலை ஆக்கம் என்பது உள்ளத்தில் உண்டாகும் ஒருவித நோயின் அடையாளமே என்று கூறுகின்றார்கள். இக்கருத்துக்குரிய தலையாய சான்றாகக் கலைஞனுடைய விபரீத நடத்தையைக் காட்டுவர். இக்கருத்திலும் உண்மை யில்லாமலில்லை.

ஆண்பாலுக்குச் சம்பந்தமான சுரப்பிகளிலிருந்து ஊறிவரும் சிலவகை நீர்களே கலை ஆக்கத்திற்குக் காரணம் என்று சிலர் கூறுவர். இதற்குச் சான்றாகப் பெண்கள். கலை ஆக்கத்தில் ஈடுபடுவது மிகவும் குறைவாக இருப்பதைக் காட்டுவர். ஆனால், கலைஞர்கள் ஆவதற்கு வேண்டிய வசதிகளைச் சமூகம் பெண்களுக்குச் செய்துகொடாமையே பெண் கலைஞர் குறைந்து காணப்படுவதற்குக் காரணமாகும்.

இனத்தையும் பாரம்பரியத்தையும் கலை ஆக்கத்திற்குக் காரணமாகக் கூறுவாறுமுளர். ஆனால் இக்கருத்து இன்னும் முடிவாகக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் சூழ்நிலை, பயிற்சி, பெற்றோர்களின் ஊக்கம் முதலியவை இவற்றிற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ இருந்து வருகின்றன. கலை உணர்ச்சியுடன் பிறக்காதவர்களும் கலைப்பயிற்சியால் கலைஞர் ஆவதுமுண்டு.

மனத்தின் மூன்று அமிசங்களில் ஒன்றாகிய 'அறிதல்' அமிசத்தை ஆராய்ச்சி செய்த பிரிட்டிஷ் உளவியலாளரான ஸ்பியர்மன், பொருள்களிடையேயுள்ள தொடர்புகளைக் கண்டுபிடிப்பது 'அறிதல்' என்பதில் மிகவும் முக்கியமாயிருத்தலால் அறிதலும் ஆக்கச் செயலே என்றும், அதனால் பொருத்தமில்லாத தொடர்புகளை நீக்கிவிட்டுப் பொருத்தமான தொடர்புகளைக் காண்பதே கலை ஆக்கத்துக்கும் அனுபவத்துக்கும் அடிப்படை என்றும் கூறுகிறார்.

சோதனை உளவியலார்கள் (Experimental Psychologists) அழகைப் பற்றிச் செய்துள்ள சோதனைகள் தனி நிறங்களைத் தேர்தல், நிறங்களைச் சேர்த்தல் போன்றவற்றைப் பற்றியனவாகும்.

நிறங்கள் தேர் தல்பற்றிய சோதனைகளிலிருந்து தேர்கின்ற உளவகை நான்கு என்பது தெரியவருகிறது : (1) அறிவுவகை : எந்த நிறம் பொருந்தும் என்று ஆராய்தல். (2) உடலியல்வகை : நிறங்களைக் கண்டு மகிழ்தல், சோர்தல் போன்ற நிலைமை அடைதல். (3) சேர்க்கை வகை : இன்ப நிகழ்ச்சியுடனோ, துன்ப நிகழ்ச்சியுடனோ நிறங்களைத் தொடர்புறுத்தல். (4) ஐக்கியவகை : நிறங்களை மனித குணங்களுடன் தொடர்புறுத்தல். இந்தச் சோதனை முடிவுகளை ஓவியத்தையும் இசையையும் கொண்டு செய்யும் சோதனைகள் வலியுறுத்து கின்றன.

ஆண்கள் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற வரிசையிலும், பெண்கள் நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்ற வரிசையிலும் நிறங்களை விரும்புவதாகச் சோதனை வாயிலாக அறிகிறோம். சிறு குழந்தைகள் மஞ்சளையும் சிவப்பையும் விரும்புகின்றனர். பொதுவாக அனைவரும் எந்த நிறமாயினும் அது மிகுந்து தோன்றுவதையே விரும்புகின்றனர்.

அழகு அனுபவம் பற்றிய சோதனைகள் மக்களிடையே வேறுபாடுகள் உண்டு என்று காட்டுகின்றன. இவ்வேறுபாடுகள் இயற்கையான புலன்வேறுபாடுகள், காட்சி வேறுபாடுகள் ஆகியவற்றின் விளைவுகளாகும். அமெரிக்க உளவியலார் கார்ல் சீஷோர் என்பவர் இசையைப் பயில்வதற்கும் நுகர்வதற்கும் வேண்டிய அடிப்படையான புலன் ஆற்றல்களை அளந்தறிவதற்கான சோதனைகளை வகுத்துள்ளார். ஆயினும் கலை ஆக்கத்துக்கும் அனுபவத்துக்கும் புலன் ஆற்றல்களைவிட உருவக் காட்சி ஆற்றலே மிகவும் இன்றியமையாதது என்று இப்பொழுது அறியப்பட்டிருக்கிறது. இன்னிசையை உணர்வதற்குச் சுருதிக்கும் சுரத்திற்குமுள்ள வேறுபாட்டை அறியும் ஆற்றலைவிட இவை அனைத்தும் ஒன்றுபட்டு ஓர் இசைவடிவை உண்டாக்குகின்றன என்று காணும் ஆற்றலே தேவையாகும். இது தான் அழகியல் உளவியலுக்கு கெஷ்ட்டால்ட்(Gestalt) உளவியல் செய்துள்ள சேவையாகும். சோ. கூ