பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழிஞ்சி

242

அழுத்தக்கலம்

என்பது விளங்கவில்லை. (அழிசி என ஒருவன் ஆர்க்காட்டை ஆண்டானென்று தெரிகிறது) 'ந' என்பது சிறப்பைக் குறிக்கும் எழுத்து. சாத்தனார் என்பது பெயர். (குறுந். 271).

அழிஞ்சி சிறு மரம். செடியாகவும், பரவி வளரும் புதராகவும் இருக்கும். இந்தியாவிலும் இலங்கையிலும் வெப்பமான பாகங்களில் உள்ளது. தென்னிந்தியக் காடுகளில் நன்றாக வளர்வது. சாதாரணமாக இந்தச் செடியை எங்கும் காணலாம். வேரின் பட்டை நாக்குப்பூச்சி மருந்தாகவும், பேதிக்குச் சாப்பிடவும், சுரத்துக்கும் தோல் நோய்களுக்கும் மருந்தாகவும் உதவும். இதைத் தூளாகக் கொடுக்கிறார்கள். மரம் கடினமானது, அழுத்தமானது. தென்னிந்தியாவில் இது உலக்கை, செக்குலக்கை, ஏந்திர அச்சு, ஆயுதங்களுக்குப் பிடி முதலியன செய்ய உதவுகிறது. செதுக்கு வேலைக்கும் உதவும். விறகாகவும் பயனாகிறது. பூ வெண்மையாகவும் நல்ல மணமுடையதாகவும் இருக்கும். பழம் சிறியது; சிவப்பாக இருக்கும். அதைத் தின்னலாம். குடும்பம்: அலாஞ்சியேசீ (Alangiaceae). இனம்: அலாஞ்சியம் சால்விபோலியம் (Alangium salvifolium).

அழுகணிச் சித்தர் பதினெண் சித்தர் என்று தமிழ் நாட்டில் வழங்கிவரும் சித்தர்களுள் ஒருவர். இவரும், மற்றச் சித்தர்களைப் போலவே தத்துவ ஞானத்தை ஒட்டுவமை உருவத்தில் பாடியுள்ளனர். இவர் துன்பச் சுவை மிகப் பாடுவதால் இப்பெயர் பெற்றனர் போலும்.

அழுகுதல் (Putrefaction): இயற்கையில் நிகழும் உயிர்ப்பொருள் ரசாயன விளைவுகளில் அழுகுதல் முக்கியமானது. இது நொதித்தல் (த. க.) என்ற பொது விளைவின் வகை. பாக்டீரியா என்னும் சிற்றுயிர்கள் கரிமப்பொருள்களைச் சிதைத்து, எளிய பொருள்களாக மாற்றுவதை அழுகுதல் என்கிறோம். இதில் விளையும் ரசாயன மாறுதல்களை 1876-ல் நென்கி (Nencki) என்னும் ரசாயன அறிஞர் தெளிவாக்கினார். புரோட்டீன்கள், பாஸ்பட்டைடுகள், பிரிமிடீன்கள், புயுரைன்கள் ஆகிய பொருள்கள் அழுகுவதால் டோமெயின்கள் (Ptomaines) என்னும் நச்சுப் பொருள்கள் தோன்றுகின்றன. இவை இயற்கையிற் கிடைக்கும் ஆல்கலாயிடுகளை யொத்தவை.

புரோட்டீன்களின் அழுகல் இரு படிகளில் நிகழ்கிறது. (1) புரோட்டீன்கள் நீர் முறிந்து அமினோ அமிலங்களாக மாறுகின்றன. (2) அமினோ அமிலங்கள் உப்பு மூலங்களாக மாறுகின்றன. மற்றப் பொருள்களும் இவை போலவே கரிம மூலங்களாக மாறுகின்றன. இவற்றுள் பல மனித உடலைப் பெரிதும் பாதிக்கவல்லவை. இவற்றுள் சில பொருள்கள் கொடிய நஞ்சானவை. உயிர்ப்பொருள்கள் அழுகும் போது வீசும் கெட்ட நாற்றம் ரசாயன விளைவினால் வெளிப்படும் வாயுப்பொருள்களால் தோன்றுவது. உதாரணமாக முட்டைகள் அழுகும்போது ஹைடிரஜன் சல்பைடு வாயு வெளிவந்து நாற்றமடிக்கிறது.

அழுங்கு (Pangolin or Scaly Anteater) : இது ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உண்டு. இதற்குப் பல் கிடையாது. உடலிலுள்ள உரோமங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து தட்டையான கேடகம் போன்ற செதில்களாகின்றன. அவை வீட்டோடுகள் போல ஒன்றின்மேல் ஒன்று கவிந்திருக்கும். இதைத் துரத்தினால் பந்துபோல உடலைச் சுருட்டிக்கொண்டு, வாலையுஞ் சுற்றியணைத்துக் கொண்டு, செதில்களையும் தூக்கிக் கொள்ளும். செதில்களுக்கிடையில் தனி மயிர்களைக் காணலாம். நாக்கு வெகு நீளம். இழைபோன்ற அதன் நுனியில் பிசின்போன்ற கசிவு உண்டு. கறையான், எறும்பு முதலியன இதன் முக்கிய உணவு. செல்லுப்

அழுங்கு

புற்றுக்களைக் கூர்மையான நகங்களால் தோண்டி, நீண்டநாக்கை உட் செலுத்தும். அதன் மேல் செல்லு நிரம்ப ஒட்டிக்கொள்ளும். அப்போது நாக்கை உள் இழுத்து அதைத் தின்றுவிடும். இப்படியே எறும்பையும் தின்னும். இந்திய அழுங்கு பாறைகளின் நடுவில் ஒதுங்கிக் குட்டிகளை வளர்க்கும். சில வேளைகளில் கூர் நகங்களால் சரிவான ஒரு வழியைத் தோண்டி, அதன் உட்கோடியில் சுமார் 6 அடி அகலமான ஓர் அறையை உண்டுபண்ணி, அதில் குட்டி போட்டு அவைகளை வளர்க்கும். முன்கால் விரல்களின் நகங்கள் தேய்ந்து போகாமல் அவைகளை மடக்கிக் கொண்டு, விரல்களின் புறப்பாகங்களை ஊன்றி நடக்கும் வழக்கம் இதற்குண்டு. தண்ணீர் குடிக்க நாக்கைத் தண்ணிரில் நனைத்து வாய்க்குள் இழுத்துக்கொள்ளும். பாகுபாடு : பாலூட்டி வகுப்பு ; பல்லிலி வரிசை (Edentata) ; மேனிஸ் (Manis) சாதி. பா. பா.

அழுத்தக்கலம் (Autoclave) காற்றுப் புகாமல் மூடி வைக்கத்தக்க ஒரு கலம். திரவங்களின் கொதி நிலையைவிட அதிகமான வெப்பநிலையில் இதில் அவற்றைச் சூடேற்றலாம்.

அழுத்தக்கலம்
உதவி : சென்கோ, கொகோ.

இது வலிவான எஃ கினாலான கலம். இது அதிகமான வெப்பத்தைத் தாங்குமாறு அமைக்கப்படும். அழுத்தம் குறிப்பிட்டதோர் அளவைவிட அதிகமானால் திறந்து அதைக்குறைக்கும் காப்பு வால்வும், அழுத்தமானியும் இதில் இருக்கும். இதில் பல வகைகள் உண்டு. ஆஸ்பத்திரிகளில் ரண சிகிச்சைக் கருவிகள் முதலிய வற்றைக்கிருமி சுத்தப்படுத்த அவை இதற்குள் 115° வெப்பநிலையில் கொதிக்கும் நீரில் இடப்படுகின்றன. பல ரசாயனத் தொழில்களில் பொருள்களை வேகவைக்க இது பயன்படுகிறது.