பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநூல் வரலாறு

258

அறநூல் வரலாறு

என்று குறிப்பாக ஒன்றையும் கட்டளையிடாமல், “சிந்தனை செய்து, பகுத்தறிவின் தீர்மானப்படி நட” என்றுமட்டும் கட்டளையிடுகிறது. பகுத்தறிவு ஒன்றுதான் மனிதர்கள் யாவர்க்கும் பொதுவானது; விருப்பும் வெறுப்பும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். பகுத்தறிவும் சுவாதீனமும் அறச் செயல்களுக்கு இன்றியமையாதவை. ஆகவே உணர்ச்சியின் விளைவுகளாகிய இச்சைகளை அகற்றி, அறிவின் ஆணைப்படிக் காரியங்களைச் செய்வதுதான் அறமாகும் என்று போதித்தனர்.

ஆனால் கடமைகளை வரையறுத்துப் போதிக்கும் சக்தி பகுத்தறிவுக்கு இருக்கிறதா என்று கேட்டால், கீழ்க் கண்டவாறு அவர் விடை அளிக்கிறார்: 1. அறச் செயல் என்பது எல்லோரும் முழு மனத்துடன் ஏற்றுச் செய்யக்கூடிய சட்டப்பிரமாணமாயிருக்க வேண்டும். 2. பிற மனிதர்களை நம் நலத்திற்குக் கருவிகளாகக் கருதாமல், அவர்களது நலமே நாம் மேற்கொள்ளவேண்டிய கடமையாய் இருத்தல் வேண்டும். 3. ஒவ்வொரு மனிதனும் ஆன்மாவுடன் கூடிய புருஷன், சடப்பொருள் அல்லனென்று உணர வேண்டும். இவ் வண்ணம் மூவகையான நிபந்தனையற்ற கடப்பாடுகளை, அறிவு நிலையை ஆதாரமாகக் கொண்ட தமது அறநூல் கொள்கைகளாகக் கான்ட் அமைத்தார்.

ஆனால் இவர் பகுத்தறிவை உயர்த்தி, உள்ளுணர்ச்சிகளைப் புறக்கணித்தது சரியன்று. உணர்ச்சியும் பகுத்தறிவும் தொடர்பு கொண்டவை. உணர்ச்சியற்றுப் பகுத்தறிவால் மட்டும் நடத்தப்படுவது சாரமற்ற வாழ்வாகும். மனிதன் ஓர் எந்திரமல்லன். கடமையென்று மட்டும் கருதிச் செய்யும் காரியம் உள்ளுணர்ச்சியின்மையால் ஊக்கமளிக்காது. அது நெறியாய்த் தோன்றினும் அறத்தின் சாரம் இழந்ததாகும். இதுவே கான்டின் சித்தாந்தத்திலுள்ள முக்கியமான குறை.

ஆன்மானுபவம் : ஜெர்மன் தத்துவ ஞானி ஹெகல் என்பவரின் போதனையால் வசப்பட்ட தாமஸ் ஹில்க்ரீன், பிராட்லீ, மெக்கன்சி, மூர் ஹெட் முதலிய ஆங்கில அறநூல் நிபுணர்கள், நாம் இதுவரை ஆராய்ச்சி செய்த தர்ம லட்சியப் பிரமாணங்களின் தவறுகளையும் ஊழல்களையும் அகற்றி, இக்காலத்திற்கேற்ற ஒரு புதிய இலட்சியத்தை நிருமாணித்துள்ளார்கள். அதை 'ஆன் மானுபவம்' என்றும், 'பகுத்தறிவினால் தேர்ந்தெடுத்து, ஆத்ம சக்தியினால் பக்குவப்படுத்தி ஒழுங்காக்கப்பட்ட, பரிபூரணச் சமுதாய ஸ்தாபனம்' என்றும் சொல்லலாம்.

மனிதன் பகுத்தறிவையும் சமுதாய உணர்ச்சியையும் தனக்குச் சிறப்பான பண்புகளாகப் பெற்றிருக்கிறான். ஆனால் அவை பரிணாமசேஷ வன்மையாலும், மடமையாலும், மிருகத் தன்மையாலும், சுயநலத்தாலும் மறைத்து அமுக்கப்பட்டுள்ளன. எனவே மனிதனுடைய ஞானத்தையும் சமூக உணர்ச்சியையும் வளர்த்துக் குற்றமற்ற சீரிய சமுதாயத்தை நிருமாணிப்பதுதான் அறவாழ்க்கையின் நோக்கம் என்றும், மனிதனுடைய விவேகமும் சமூக உணர்ச்சியும் வளர வளர, அவனுடைய தன்னல உணர்வு மறைந்து, நன் நலத்தை உலக நலத்துடன் இணைத்து, அதற்கு உழைப்பதே தன் கடமை என்று தீர்மானிக்கிறான் என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது. எம். எஸ். ஸ்ரீ.

இந்து அறநூல் வரலாறு : மனிதன் ஆசை வயப்பட்டவன். ஆசைகள் ஒன்றோடொன்று முரணும்போது ஓர் ஆசை வென்று செயலாகப் பரிணமிக்கும். அப்படி அந்த ஆசையைத் தேர்வது மனிதனுடைய முழு இயல்புமாகும். அதனால் ஒருவனிடம் தோன்றும் செயல் அறத்தின்பாற்பட்டதாக இருக்கவேண்டுமாயின், அவன் முழு மனத்துடன் அதைச் செய்ய ஆசைப்பட்டுப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது என்பது பெறப்படும்.

ஆனால், மனிதன் முற்றும் சுதந்திரம் உடையவன் தானா? அவன் விரும்பும் வண்ணம் செய்ய அவனுக்கு அதிகாரம் உண்டா? இந்தக் கேள்விக்கு விடையாக இந்து மதம் கருமக் கொள்கையைக் கூறுகின்றது. நாம் சில வேளைகளில் நம் விருப்பத்துக்கு மாறாக நடக்க வேண்டியிருப்பதற்குக் காரணம் நாம் முன்னால் செய்த கருமமே என்று அது சொல்லுகிறது.

நாம் விதைத்ததையே அறுக்க முடியும். இப்போதுள்ள நம்முடைய நிலைமை நாம் முன்னால் செய்த கருமங்களின் விளைவு. நாம் இனிமேல் அடையப்போகும் நிலைமை இப்போது நாம் செய்யும் கருமங்களின் விளைவு. அப்படியானால் மனிதனுக்குச் சுதந்திரம் இல்லை ; அவன் விருப்பம்போல் எதையும் செய்ய இயலாது என்று ஏற்படுகிறது அல்லவா? சுதந்திரமில்லையானால் அவன் செய்யும் செயலுக்கு அவன் பொறுப்பாளியாக மாட்டானே? பொறுப்புணர்ச்சியுடன் செய்யும் செயல்தானே அறச் செயல்?

இந்தக் கேள்விகளுக்கு இந்து மதம், கருமமானது மனிதனுடைய சுதந்திரத்தை முழுவதும் பறித்து விடுவதில்லை என்றும், மனிதன் கருமத்தை வெல்ல முடியும் என்றும் விடை கூறுகின்றது. கருமம் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என மூன்று வகைப்படும். சஞ்சிதம் என்பது அனாதியாய் ஈட்டப்பட்டுள்ள கருமத்தில் அனுபவித்துத் தீர்ந்தது போக எஞ்சியது. பிராரப்தம் என்பது இம்மையிற் பலனளிக்கும் பழவினை. ஆகாமியம் என்பது இந்தப் பிறப்பில் தேடும் கருமமாகும். ஒரு வேடன் பல அம்புகளுள்ள தனது அம்பறாத் தூணியிலிருந்து ஓர் அம்பை எய்துவிட்டு, மற்றோர் அம்பை எய்யக் கையில் எடுத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கொண்டு, முற்கூறிய மூன்று கருமப் பகுதிகளை விளக்குவதுண்டு. அம்பறாத் தூணிதான் சஞ்சிதம், எய்த அம்பு பிராரப்தம், எய்யப்போகும் அம்பு ஆகாமியம். சஞ்சிதமும் ஆகாமியமும் மனிதனுடைய வசத்திலுள்ளவை. பிராரப்த கருமத்தை அவன் துய்த்தே தீரவேண்டும். ஆகாமியம் சஞ்சிதத்துடன் சேரும். சஞ்சிதத்தில் ஒரு பகுதி அடுத்த பிறப்பின் பிராரப்தமாகும். இவ்வாறு கருமத்தின் தன்மைக்குத் தக்க பிறப்புக்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.

அப்படியானால் இந்தப் பிறப்புத் தளையை அறுத்து வீடு பெறுவது எப்படி?

நம்முடைய செயல்கள் வெண்மை (சுக்கிலம்) அதாவது அறச்செயல், கருமை (கிருஷ்ணம்) அதாவது மறச்செயல், வெண்மை கருமை (சுக்கில கிருஷ்ணம்) அதாவது அறமும் மறமுமான செயல், வெண்மை கருமையல்லன (அசுக்கில கிருஷ்ணம்) அதாவது அறமும் மறமும் அல்லாத செயல் என நான்கு வகைப்படும். நான்காவது வகையான வெண்மையுங் கருமையுமல்லாத செயல்களைச் செய்தால், அதாவது பயனில் பற்றில்லாமல் செயல்களைச் செய்தால், அப்போது ஆகாமிய கருமம் உண்டாவதில்லை. அதனுடன் கடவுளைத் துய்க்கும் மெய்யறிவு பெற்றால் சஞ்சிதம் பட்டுப்போகும். அவ்வாறு செய்துகொண்டவன் பிராரப்த கருமத்தை இந்தப் பிறப்பில் துய்த்து முடிந்ததும் வீடு பெறுவான். ஆகவே மனிதன் தான் செய்யும் கருமத்தினால் கட்டுண்டாலும் அதை அறுத்தெறியக்கூடிய சுதந்திரமும் உடையவனே என்பதும், அதனால் அறச்செயல் செய்வதற்கு வேண்டிய பொறுப்பு உடையவனே என்பதும் பெறப்பட்டன.