பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறியொணாமைக் கொள்கை

263

அறியொணாமைக் கொள்கை

திலும் மிகுதியாக மிகக் குறுகிய கால அளவில் கருதவும், செயல் புரியவும் கூடிய ஆற்றலைப் பொறுத்ததாகும். அறிதிறன் என்பது ஏதோ மனிதனுடைய மூளையில் பதுங்கிக்கிடக்கும் பண்பு அல்லது பொருளன்று; அறிதிறன் பற்றிய மேற்கூறிய பண்புகள் அனைத்தும் மனிதனுடைய நடத்தையின் பண்புகளேயாம்.

அறிதிறன் சோதனைகளுள் பெரும்பாலானவை பலதிறப்பட்டனவாக இருப்பதால், தொடர்புகாணும் புள்ளிவிவர முறையைப் பயன்படுத்தி, அறிதிறன் என்பதில் வேறு வேறு ஆற்றல்கள் உளவா என்பதையும், அவற்றை வேறு வேறாகப் பிரித்துக் கூற இயலுமா என்பதையும் அறிஞர்கள் ஆராய்ந்துளர். இந்த ஆராய்ச்சித் துறையில் தலையாயவர் ஸ்பீயர்மென் என்னும் ஆங்கிலேயரும், தர்ஸ்ட்டன் என்னும் அமெரிக்கருமாவர். அறிதிறனில் ஒரு பொது அமிசமும் பல்வேறு சிறப்பு அமிசங்களும் இருப்பதாக ஸ்பீயர்மென் கண்டார். அறிதிறனை ஆய்ந்தால், ஆராயும் ஆற்றல், விரைவில் காண்டல், இலக்கத்திறன், மொழித்திறன் போன்ற பல முதல்நிலை ஆற்றல்கள் (Primary abilities) காணப்படுவனவாகக் கூறுகிறார்.

வயதுக்குத் தக்கவாறு குழைந்தைகளைப் பிரித்து வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் பினே செய்த சோதனைகள் 'வயது தரச் சோதனைகள் (Age scale tests) என்று வழங்கப்பெறும். இக்காலத்தில் குழந்தைகள் எல்லோரையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரேவிதமான சோதனைகளைப் பயன்படுத்துகிறார்கள். அச்சோதனைகள் 'மார்க்குத் தரச் சோதனைகள்' (Point scale tests) எனப்படும். பினேயின் சோதனைகள் குழந்தை சூழ்நிலையிலிருந்து பெறும் அறிவை அடிநிலையாகக் கொண்டவை. ஆனால் இக்காலத்துச் சோதனைகளுள் பெரும்பாலானவை குறிப்பிட்ட பொருள்களிடையேயுள்ள தொடர்புகளை அறியும் ஆற்றலை அடிநிலையாகக் கொண்டவையாம்.

அறிதிறன் சோதனைகள் பயனுடையன என்பதைக் குறித்து இக்காலத்தில் யாரும் ஐயம் கொள்வதில்லை. பள்ளிகளில் குழந்தைகளை அறிதிறன் ஈவுக்குத் தக்கவாறு பிரித்துவைத்துக் கற்பிப்பதற்கு இவை மிகுந்த பயன் தருவனவாக இருக்கின்றன. சிறுவர்களையும் சிறுமிகளையும் இவ்வாறு பிரித்து வைக்காமல் கற்றுக் கொடுக்கும் இக்காலத்து முறை தக்க பயன் தருவதில்லை என்பது தெளிவு. அறிதிறன் சோதனைகளைக் கொண்டு, மிகுந்த அறிவுடைய குழந்தைகளையும், குறைந்த அறிவுடைய குழந்தைகளையும் வேறாகப் பிரித்து வைத்துக் கற்பிக்காவிடில், அவ்விரு இனத்துக் குழந்தைகளும் கட்டுக்கடங்காதவர்களாகின்றனர். பல வேளைகளில் அவர்கள் குற்றவாளிகளாக ஆகிவிடுவதுண்டு. இவ்வறிதிறன் சோதனைகள் கற்பிப்போர்க்குக் கண்ணைத் திறந்துவிடுவனவாக அமைந்துள்ளன.

சேனைக்கும், கல்வி அறிவு கொண்டு செய்யும் தொழில்களுக்கும், தக்கவர்களைத் தேர்வு செய்வதற்கும் இச்சோதனைகள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தொழிற்சாலைகளிலும் அவை பயனுடையன என்பது உறுதியாய்விட்டது. சுருங்கக்கூறின், அறிதிறனை அளந்து காணவேண்டிய நிலைமைகளில் எல்லாம் இச்சோதனைகள் தாம் சரியான அளவுகோல்கள் ஐயமற நிலைநாட்டப் பெற்றுவிட்டதாகும். பி. எஸ். நா.

அறியொணாமைக் கொள்கை (Agnosticism): ஆன்மா, கடவுள், நிலைபேறு என்பவற்றைப்பற்றிய கொள்கைகள் மதங்களிலே அடிநிலையாக உள்ளவை. அவற்றை அறிவு வழியாக அறிய முடியும் என்பதை டி. எச். ஹக்ஸ்லி என்பவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆதலால் அவற்றை மனிதன் தன் அறிவினால் அறியமுடியாது என்னும் தம்முடைய கருத்துக்கு அறியொணாமைக் கொள்கை என்று பெயரிட்டார்.

இயற்கையில் நிகழும் செயல்கள் பல தேவதைகளால் ஏற்படுபவை என்று மக்கள் நீண்ட காலமாக நம்பி வந்தார்கள். ஆனால் கோப்பர்நிக்கஸ், நியூட்டன், டார்வின் போன்ற பெரிய விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சிகளின் பயனாக 19ஆம் நூற்றாண்டில் இந்த நம்பிக்கை மாறியது. இயற்கை நிகழ்ச்சிகளுக்கு இயற்கைக் காரணங்கள் தவிர, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்கள் இல்லை என்ற ஒரு கருத்துப் பரவலாயிற்று. உயிருள்ளவையும் உயிரில்லாதவையும் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு நடந்துவருகின்றனவேயன்றி, சமயவாதிகள் கூறுவதுபோல, அவற்றுள் எவையும் எந்தக் காலத்திலும் தேவதைகளுக்கு உட்பட்டு நடப்பதில்லை. இந்தக் கருத்து எழுந்த சமயத்தில்தான் 'அக்னாஸ்டிசிசம்' என்னும் சொல் உண்டாக்கப்பட்டதாகும்.

மனிதனிடம் காணப்பெறும் உணர்வு நிலை அவனுடைய மூளையில் நடைபெறும் நரம்பு மண்டலத் தொழிலே; சடம்தான் பிரதானமான கருத்தா; அதன் தொழில் காரணமாக விளைவதே உணர்வுநிலை; இயற்கை விதிப்படியே எல்லாம் நிகழ்வதால் இன்னது நிலைமை என்றால் உடனே இன்னது விளையும் என்று உறுதியாக உரைக்கலாம் என்று இக்கொள்கையினர் கூறினார்கள். ஆகவே இயற்கை விதிக்கொள்கையும் அறியொணாமைக் கொள்கையும் ஒன்றே.

ஹியூம், கான்ட் என்னும் தத்துவ சாஸ்திரிகளும் அறியொணாமைக் கொள்கைபோன்ற ஒரு கொள்கையே உடையவர்களா யிருந்தார்கள். ஆயினும் ஹக்ஸ்லியின் கொள்கைக்கும் அவர்களுடைய கொள்கைக்கும் சிறிய வேறுபாடுகள் உண்டு.

லாக் என்னும் தத்துவ சாஸ்திரி, பொருள்களின் குணங்கள் மூலக் குணங்கள் என்றும் சார்புக் குணங்கள் என்றும் இருவகைப்படும் என்றும், பரப்பு முதலியவை மூலக்குணங்கள், நிறம், சுவை முதலியன சார்புக் குணங்கள் என்றும், மூலக் குணங்களே பொருள்கட்குரியவை, சார்புக் குணங்கள் அறிபவர் மனத்திற்கே உரியவை என்றும் கூறினார்.

அவருக்குப்பின் வந்த பார்க்ளே என்பவர் மூலக் குணங்களும் மனத்திற்கே உரியவை என்றும், அதனால் பொருள்கள் என்பவையெல்லாம் மனத்தின் அல்லது ஆன்மாவின் கருத்துக்களேயன்றி வேறல்ல என்றும் கூறினார்.

அவருக்குப்பின் வந்த ஹியூம் என்பவர், மனத்தை ஆராய்ந்தால் கருத்துக்கள் மட்டும் காணப்படுவதால் அவற்றிற்குப் புறம்பாக ஆன்மா அல்லது மனம் என்னும் ஒன்று உள்ளதாகக் கூறமுடியாது என்றும், இன்னது இன்னதற்குக் காரணம் என்று கூறுவதெல்லாம் அவ்விரண்டும் எப்பொழுதும் சேர்ந்து வருவதை அனுபவ மூலமாக அறிந்ததால் தோன்றும் கருத்தேயன்றி வேறன்று என்றும் கூறினார்.

இவ்வாறு ஹியூம் சமயத்தின் அடிநிலையாகவுள்ள தத்துவங்களுக்கு ஆதாரம் கிடையாது என்று கூறினார். அதனால் இவருடைய தொள்கை அறியொணாமைக் கொள்கை போன்றதேயாகும்.

அறிவைப் புலன்களின் வாயிலாகவே பெறுகிறோம் என்று லாக் கூறியது உண்மைதான். ஆனால் அவ்வாறு அறிவு காட்டும் உலகத்துக்கும் அப்பாற்பட்ட ஓர்