பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவாய்வு

264

அறிவாய்வு

உலகம் உள்ளது. அதை அறிவால் அறிய முடியாது என்று கான்ட் என்னும் ஜெர்மன் தத்துவ சாஸ்திரி கூறினார். இதுவும் அறியொணாமைக் கொள்கை போன்றதே.

உலகத்தை உள்ளவாறு அறிய அறிவிற்கு இயலாது. இயற்கை நிகழ்ச்சிகளை மட்டுமே அறிவினால் ஆராய்ந்து அறிய முடியும் ஆதலால் சமயம் கூறும் ஆன்மா, கடவுள், நிலைபேறு ஆகியவை அறிவுக்கு அப்பாற்பட்டனவாகும். ஆகவே நாம் அறிவனவெல்லாம் இயற்கை விதிப்படி நடப்பன என்பதும், இயற்கை நிகழ்ச்சிகள் எந்தத் தேவதையின் ஆட்சிக்கும் உட்பட்டவையல்ல என்பதும், சமயத்தத்துவங்கள் என்று சொல்பவற்றை அறிவுக்கு அப்பாற்பட்டவை என்பதுமே அறியொணாமைக் கொள்கையாகும். சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாக் கண்டத்து அறிஞர்களிடையே பரவியிருந்த கொள்கை இது. ஏ. ச.

அறிவாய்வு (Reasoning) : அறிவைக்கொண்டு ஆராய்ந்து உண்மையைக் கண்டு கொள்வதற்குப் பயன்படும் கருவிகள் பிரமாணங்கள் என்று வடமொழியிலும், அளவைகள் என்று தமிழிலும் கூறப்பெறும். அவை காண்டல், கேட்டல், கருதல் என்பனவாகும். அவற்றை வடமொழியில் முறையே பிரத்தியட்சம், சப்தம், அனுமானம் என்று கூறுவர். பொறிகளின் வாயிலாகப் பொருளின் தன்மையை அறிவது காண்டலாகும். பிறர் கூறக் கேட்பது கேட்டலாகும். சிந்தித்தும் சோதனை செய்தும் அறிதல் கருதலாகும்.

காண்டல் வாயிலாகக் கிடைக்கும் அறிவு உடனேயே கிடைக்கிறது. அதனால் கிடைக்கும் அறிவை அநேகமாக உண்மை என்றே நம்பிவிடுகிறோம். ஆயினும் பொருளின் அமைப்பு, சூழ்நிலை, புலன்களின் குறைபாடு, அறிவின் குற்றம் முதலியன காண்டலுக்கு இடையூறுகளாக அமைந்து, மனத்தில் தவறான எண்ணங்களைத் தோற்றுவிக்கக்கூடும்.

புலன்களால் கண்டறிய முடியாதவற்றை நாம் பெரும்பாலும் பிறர் கூறக் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் பிறர் கூறுவதை நாம் உண்மை என்று நம்பவேண்டுமானால், அவர் தாம் கூறும் பொருளைப்பற்றி ஐயம் திரிபறத் தெரிந்தவராகவும், நம்மிடம் நல்லெண்ணம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

நேரில் காண்டல், பிறரிடம் கேட்டல் ஆகிய இரண்டும் பயன்படாத இடத்து அனுமானத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முயல்கிறோம். அனுமானத்தால் நாம் பெறும் கருத்துக்கள் உண்மையானவைகளாக இருக்கவேண்டுமானால் நம்முடைய ஆய்வுக்கு ஆதாரமாக இருக்கும் கருத்துக்கள் உண்மையாயும், நாம் ஆய்வு நடத்தும் முறை சரியானதாயும் இருத்தல் வேண்டும்.

மனத்தில் அறிவு நிலை, உணர்ச்சி நிலை, இயற்றிநிலை என மூன்று நிலைகள் உண்டு. அவற்றுள் அனுமானம் அல்லது கருதலானது அறிவுநிலையில் உயர்ந்த பகுதியாகும்.1. எண்ணங்களை அடைதல். 2. அவைகளைப் பொருத்தமாகக் கோவை செய்தல். 3. அதன் காரணமாக எழும் கருத்தை அறிதல். 4. அக்கருத்தைப் புதிதாக மனத்தில் அமைத்துக்கொள்ளுதல் ஆகிய அனைத்தும் கருதல் என்னும் செயலில் அடங்கும். ஆகவே இவ்வனுமானக் கருவி வாயிலாக, நாம் இதுகாறும் அறிந்தவற்றைத் துணையாகக்கொண்டு ஆராய்ந்து, இதுகாறும் அறியாதவற்றை அறிந்து கொள்கிறோம். குழந்தையானது தன்னுடைய சூழ் அறிந்துகொள்வதற்கு முதலில் காண்டல் நிலையை முறையையும், முயன்று தவறித் தெளியும் (TrialError) முறையையுமே கையாள்கின்றது. நாள் ஆக ஆக, அது காணும் பொள்களின் தன்மை, அவற்றிடையே காணப்பெறும் ஒப்புப் பொருத்தம், பொருளுக்கும் கருத்துக்குமுள்ள வேறுபாடு முதலியன அதன் மனத்தில் எழுகின்றன. அதனால் அது தன் அனுபவத்தையும் பிறர் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொண்டு எதையேனும் செய்ய முயலுமுன், இப்படிச் செய்யலாம் என்று ஆராய்ந்து பார்த்து நடக்கத் தொடங்குகிறது. ஆகவே கருதல் என்னும் செயல் நாம் பிறந்து வெகு நாட்கள் ஆவதற்கு முன்னதாதவே நடைபெறத் தொடங்கிவிடுகிறது. அது ஆயுள் முழுவதும் நடக்கின்றது.

நம் உள்ளத்தில் நிகழும் இயற்றி நிலை (Will) அறிவு காரணமாகவும் உண்டாகலாம், உணர்ச்சி காரணமாகவும் உண்டாகலாம், இயல்பூக்கங்கள் (Instincts ) காரணமாகவும் உண்டாகலாம். இயல்பூக்கங்களுக்கும் உணர்ச்சிக்கும் வயப்பட்டவன் எதையும் தீர ஆராய்ந்து செய்யமாட்டான். தீர ஆராய்ந்து செய்வதே செம்மையாகச் செய்யப்படும்.

இந்த ஆய்வு முறை எப்பொழுது நடைபெறுகிறது என ஆராய்வோம்: 1. இயல்பூக்கம் காரணமாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ ஒரு செயலைச் செய்யும்போது அது நனவின்றிச் செய்யும் செயல் எனப் பெறும். அத்தகைய செயல் செய்யும்போது ஆய்வு எதுவும் நடைபெறுவதில்லை. ஆனால் அந்தச் செயல் நடைபெறும்போது ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அப்பொழுது உடனே நனவு வேலை செய்யத் தொடங்குகிறது. அறிவு அந்தத் தடங்கல்களை நீக்கும் வழியைத் தேடுவதற்காக ஆய்வு முறையைக் கையாள்கிறது. 2. ஏதேனும் ஒரு செயலைச் செய்ய எண்ணும்போது அதைச் செய்யப் பல வழிகள் தோன்றக்கூடும். அவற்றுள் எது ஏற்றவழி என்று தெரிய அறிவு அப்பொழுதும் ஆய்வு முறையைப் பயன்படுத்துகிறது. 3. உலகத்தில் காணப்பெறும் எல்லாப்பொருள்களையும் நிகழ்ச்சிகளையும்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் மக்கள் உள்ளங்களில் எழுவது இயற்கை. அதன் காரணமாகவும் உள்ளத்தில் ஆய்வு முறை எழுகின்றது. அப்பொழுது காணும் உண்மைகளே விஞ்ஞானச் செல்வமாகும். இதுதான் சீவ சிருஷ்டியில் மனிதன் உயர்ந்தவன் என்னும் சிறப்பை அவனுக்குத் தருகின்றது.

நாம் உண்மை என்று கொள்வதை யெல்லாம் நம்புகின்றோம். ஆனால் நாம் நம்புவதெல்லாம் உண்மையான அறிவு என்று கூற முடியாது. தக்க ஆதாரங்களைக்கொண்ட நம்பிக்கையே உண்மையான அறிவாகும். நாம் காண்டல், கேட்டல் என்னும் இவைகளால் வருபவற்றையும், நம்முடைய இச்சையின் வழி வந்தவற்றையும் நம்பினால் அவை உண்மையான நம்பிக்கைகள் ஆய்விடமாட்டா. அடிப்படைக் கருத்துக்களிலிருந்து துலங்கும் கருத்தைக் கண்டு, அவற்றிற்கு இடையேயுள்ள தொடர்பை அறிந்து தெளிவுறும் மனத்தின் செயலே ஆய்வாகும். அத்தகைய ஆய்வு வாயிலாகப் பெறும் கருத்தே உண்மையான நம்பிக்கையாம். அதுவே உண்மை யறிவைத் தருகிறது.

ஆய்வு நடைபெறுவதற்கு இன்றியமையாத கருவியாக இருப்பது மொழியாகும். மொழியே நம் உள்ளத்தில் கருத்துக்களை உருவாக்கவும், அவற்றைப் பிறர்க்கு உரைக்கவும் உதவுகிறது. ஆதலால் எதையும் ஆராயுமுன், அதற்குப் பயன்படும் சொற்களின் பொருளை உறுதி செய்துகொள்ளவேண்டும். சொல்லும் பொருளும் வேறுபட்டிருந்தாலும், சொற்கள்; இருபொருள்