பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறுவடை எந்திரங்கள்

269

அறுவடை எந்திரங்கள்

பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை அறுவடை செய்யும் கருவிகளாகப் பயனாயின. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேனாடுகளில் அறுவடையை எளிதிலும் திறமையாகவும் செய்யும்

அறுவடை எந்திரம்
உதவி : மார்ஷல் சன்ஸ் & கம்.. (இந்தியா) லிட்.

எந்திரங்கள் வழக்கத்திற்கு வந்தன. இந்நாளில் அங்கே பலவகையான அறுவடை எந்திரங்கள் பயன்படுகின்றன. ஆனால் இந்தியாவிலும் மற்றக் கீழ்நாடுகளிலும் இன்னும் அறிவாள் ஒன்றே விவசாயியின் ஆயுதமாக இருந்துவருகிறது. போரடிக்கும் எந்திரங்கள் சில நமது நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது விவசாயியின் பொருளாதார நிலை திருந்தாதவரை, மாட்டைக் கொண்டு போரடிக்கும் பழங்கால முறைகள் மறையமாட்டா.

புல்வெட்டி (Mower) : கால்நடைகளுக்குத் தீவனமாகும் புல்லை வெட்ட இந்த எந்திரம் பயனாகிறது. கால் நடைகளைக் கொண்டும், டிராக்டர்களைக் கொண்டும் இதை இயக்கலாம். இதில் ஓர் இருசில் பொருத்தப்பட்ட இரு சக்கரங்கள் இருக்கும். ஒரு சக்கரத்தின் அருகே சாய்வான விளிம்புள்ள பல்லிணையொன்று பொருத்தப்பட்டிருக்கும். இது ஒரு பற்சக்கரத்தை ஓட்

டும். இச்சக்கரத்திலுள்ள ஒரு முளையுடன் ஒரு மரக்கம்பு பொருத்தப்பட்டிருக்கும். எந்திரத்தின் அறுக்கும் உறுப்பை இக்கம்பு இயக்கி, அதை வயலில் இழுத்துச் செல்லும்போது மேலும் கீழும் அசைக்கிறது. அறுக்கும் உறுப்பில் மூன்றங்குல இடைவெளியில் வரிசையாகக் கூரிய முளைகள் உள்ளன. இவற்றினிடையே அகப்படும் புல்லை வேகமாக இயங்கும் கத்தி வெட்டிவிடுகிறது. அறுக்கும் சட்டத்தின் அகலத்தை ஒட்டி இந்த எந்திரத்தின் அளவு குறிப்பிடப்படுகிறது. கால்நடைகளால் இயங்கும் எந்திரத்தின் அளவு 6 அடி. டிராக்டரால் இயங்கும் புல்வெட்டியின் அளவு 12 அடி. இந்த அளவு ஓர் அடிக்கு 1½ ஏக்கர் புல்வெளியை ஒரு நாளில் அறுவடை செய்யலாம். தானியப் பயிர்களை வெட்ட இவற்றைப் பயன்படுத்தினால் சேதம் அதிகமாகும்.

பயிர்வெட்டி (Reaper) : அறுவடை எந்திரத்தின் தத்துவத்தையும் அமைப்பையும் கொண்ட இந்த எந்திரத்தில் அறுக்கும் உறுப்பிற்குப் பின்னால் ஒரு மேடை இருக்கும். அறுக்கும் சட்டத்தின்மேல் நகரும் ஓர் உருளை தானியப் பயிர்களைச் சட்டத்தின் மேல் அழுத்துகிறது. வெட்டப்படும் பயிர் மேடையின் மேல் சேரும். மேடை நிறைந்ததும் பயிரை ஒன்றாகச் சேர்த்து வெளியே தள்ளிவிடலாம். இவ்வாறு அங்கங்கே தள்ளப்படும் பயிரைப் பின்னால் ஒன்றாகச் சேகரித்துக் கொள்ளலாம்.

பயிர் கட்டி (Binder) : இது வெட்டப்படும் பயிரைக் கட்டாகக் கட்டி வெளியே தள்ளுகிறது. வெட்டும் உறுப்பின் பின்புறத்தில் ரப்பர் வைத்த கித்தான் பட்டையொன்று நகரும். இது வெட்டப்பட்ட பயிரை ஓர் உயர்த்திக்குக் கொண்டு செல்கிறது. இந்த உயர்த்தி அதை வேறொரு அமைப்பிற்குக் கடத்தும். இது பயிர்களைச் சேகரித்து நூலினால் கட்டி வெளியே தள்ளும். குதிரையினால் இழுத்துச் செல்ல ஏற்றவாறு இது முதலில் அமைக்கப்பட்டது. தற்காலத்திலே மோட்டார் எஞ்சின்களால் இயக்கப்படும் இந்த எந்திரத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கிழங்கு தோண்டி (Potato digger) : மேனாடுகளில் விளையும் கிழங்குப் பயிர்களில் உருளைக்கிழங்கு முக்கியமானது. கிழங்கு தரையினடியில் இருப்பதால் இதை அறுவடை செய்ய வேறுவகை எந்திரம் தேவையாகிறது. முன்னர் நீண்ட சட்டங்கள் கொண்ட கொழுவையுடைய கலப்பையினால் கிழங்குகளைத் தோண்டி யெடுத்தார்கள். ஆனால் இக்கருவியினால் கிழங்குகளைத் தோண்டி எடுக்கையில் அதனுடன் அதிகமான மண்ணும் கலந்து வந்தது. ஆகையால் இதைத் திருத்தி அமைத்தார்கள். இந்த எந்திரத்தின் தற்கால வடிவம் சுழலும் எந்திரம் என்றும், உயர்த்தி எந்திரம் என்றும் இருவகைப்படும். இவ்விருவகைகளிலும் வெவ்வேறு வடிவுள்ள கொழுவானது நிலத்தினுட் சென்று கிழங்கைத் தோண்டி எடுக்கிறது. மண்ணுடன் கலந்த கிழங்குகள் மேலே வந்து ஓர் அசைந்தாடும் கடத்தியை அடையும். இது எந்திரத்தின் சக்கரங்களின் சுழற்சியினால் இயங்குகிறது. கடத்தியின் அசைவினால் கிழங்கிலுள்ள மண் வேறாகப் பிரிகிறது. சுழலும் எந்திரத்தில் கடத்திக்குப் பதிலாகச் சுழலும் உறுப்பொன்று இருக்கும். இது கிழங்குகளைச் சேகரித்து உடனுக்குடன் எட்ட எறிகிறது.

போரடி எந்திரம் (Thresher) : பயிரை அறுவடை செய்த பின், அதிலிருந்து தானியத்தை வேறாகப் பிரிக்க வேண்டும். சமதளமான நிலத்தில் அதைப் போட்டுத் தடிகொண்டு அடித்தோ, கால்நடைகளை விட்டு மிதித்தோ போரடிப்பது பழைய முறையாகும். தற்கால எந்திரங்கள் தானியத்தைப் பிரிப்பதோடு, அதைத் தூற்றிப் பதரையும் மண்ணையும் அதிலிருந்து பிரிக்கின்றன. பெரிய எந்திரங்களில் தானியங்களை வகைப்படுத்தவும் மெருகூட்டவும் அமைப்புக்கள் இருப்பதுண்டு.

சுமார் 1½-2 அடி அகலமுள்ள சிறு எந்திரங்கள் முதன் முதல் பயனாகிவந்தன. குதிரைகளால் இழுக்-