பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபூதிக்கலை

280

அனுபூதிக்கலை

ருடைய பேதாபேதக் கொள்கைக்கும் இராமானுசருடைய விசிட்டாத்வைதக் கொள்கைக்கும் இடையில் நிற்கும் ஒரு வித பேதாபேதமார்க்கத்தைப் போதித்தார். ஆந்திர நாட்டில் தோன்றிய அனுபூதிமான்களுள் வேமன்னா பேர் பெற்றவர்.

தமிழகம் : தமிழகத்தில் சைவமும் வைணவமும் அனாதிகாலந்தொட்டு இருந்துவந்த சமயங்களாயினும் சமணமும் பௌத்தமும் தழைத்த காலத்தில் அவற்றை நீக்கும்பொருட்டுப் பண்டைச் சமயங்கள் இரண்டும் வீறுகொண்டு எழுந்தன. அது முதல் தமிழ் நாட்டில் சைவசமயத்தவரும் வைணவ சமயத்தவரும் சிறந்த அனுபூதிமான்களாக விளங்கி வந்திருக்கிறார்கள்.

சைவ சமய நூல்களுள் ஆதியாகவுள்ளது திருமூலர் அருளிய திருமந்திரமாம். இந்நூலும், பின்னர் மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதமும் சைவ அனுபூதிக் கலையின் இணையற்ற தத்துவ நூல்களாகும். சீவன் மும்மலங்களால் கட்டுண்டு, அறிவிழந்து, சிவனை மறந்து துன்புறுகிறது. இந்த உண்மையை அறிந்த ஆன்மா சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு மார்க்கங்களையும் கையாண்டு, தனது மருள் நீங்கவும், சிவனுடைய அருள் கைகூடவும் பெற்றுச் சிவத்துவம் அடைந்து நித்திய இன்ப முக்தி பெறுகின்றது. இவ்வாறு சிவத்துவம் அடைவதற்கு வேண்டியது ஆண்டான் அடிமை உறவாகும். அந்த நிலையில் நின்று அனுபூதி பெற்றவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அவர்களில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வரும் சைவ சமய குரவர் எனப்படுவர். முதல் மூவரும் தேவாரம் பாடியிருக்கின்றனர். மாணிக்கவாசகர்பாடியது திருவாசகம். இவர்களைத் தவிர, காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள், பட்டினத்துப் பிள்ளையார், கபிலர், நக்கீரர் பரணர், கல்லாடர் போன்ற பலர் பாடிய பாடல்களை 9 ஆம் திருமுறையிலும் 11 ஆம் திருமுறையிலும் காணலாம்.

இவர்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்த, சைவ அனுபூதிக்கலைச் செல்வர்களுள் முக்கியமானவர்கள் அருணகிரி நாதர், குமரகுருபரர், தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், முருகதாசர் ஆவர். சமீப காலத்தில் குமரகுருதாச சுவாமிகள், இரமண மகரிஷி முதலிய அனுபூதிமான்கள் திகழ்ந்திருந்தனர்.

தமிழ் நாட்டிலிருந்த வைணவ அனுபூதிமான்களான ஆழ்வார்கள் விசிட்டாத்வைத வேதாந்தத்தைத் தழுவியவர்கள். அதனால் அவர்கள் உபய வேதாந்திகள் என்று கூறப்படுவர். ஆழ்வார்கள் கடவுளிடம் ஆழ்ந்த பக்தி உடையவர்கள். அவர்களுடைய பாடல்கள் அனைத்தும் அவர்களுடைய அனுபூதியினின்றும் எழுந்தவை. ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களுள் தலையானவர் நம்மாழ்வாரும் ஆண்டாளுமாவர். நம்மாழ்வார் பிரபத்தி அதாவது சரணாகதி வாயிலாகச் சாயுச்சிய பதவி அடையும் வழியை நிறுவியவர் எனப்படுவர். அவருடைய அனுபூதிப் பாடல்களை ஸ்ரீவைணவர்களுள் சிலர் உபநிடதங்களிலும் சிறப்புடையனவாகக் கருதுவர். ஆழ்வார்களுடைய பாடல்களை எல்லாம் நாதமுனிவர் தொகுத்தார். அத்தொகுதி திவ்வியப் பிரபந்தம் என்று பெயர் பெறும். சிவன் கோயில்களில் தேவாரம் தமிழ் வேதமாக ஒதப்பெறுவது போல, வைணவக் கோயில்களில் திவ்வியப்பிரபந்தம் தமிழ்வேதமாக ஓதப் பெறுகின்றது. இவர்களுக்குப் பின்னால் தோன்றிய இராமானுசர் விசிட்டாத்வைத பாஷ்யம் செய்தார். இவர் ஆழ்வார்களுடைய பாசுரங்களையும் உபநிடதங்களையும் ஒன்று போலவே மதித்து, அவ்விரண்டும் உபய வேதாந்தங்கள் ஆகும் என்று கூறினார். சீவன் கடவுளை இடம், காலம் இரண்டையும் கடந்த பரம்பொருளாகக் காணும்பொழுது முக்தி அடைவதாக உபதேசித்தார். இவருடைய கொள்கையை வேதாந்த தேசிகரும் பிள்ளைலோகாசாரியரும் வளர்த்தார்கள். பிரமானுபவத்திற்குத் தூய்மையும் வைராக்கியமும் தேவை என்று தேசிகர் கூறினார். அவற்றுடன் பக்தியும் அருளும் தேவை என்று பிள்ளைலோகாசாரியார் கூறினார். இவர்கட்குப் பின்வந்த மணவாள மாமுனிவர் தென்கலைப் பக்திமார்க்கத்தை உபதேசித்தார்.

மகாராஷ்டிரம்: மகாராஷ்டிரத்து அனுபூதிக்கலை அறிவை அடிப்படையாகக் கொண்டதாகும். அங்குத் தோன்றிய அனுபூதிமான்களைக் கால வரிசையில் ஐந்து குழுக்களாகப் பிரிக்கலாம், இக்குழுக்களில் சேராதவர் முகுந்தராஜர் என்னும் மகான்.

1. முதன்மையும் முக்கியமுமானது குரு ஞான தேவருடைய குழு. அவருடைய ‘அபங்கங்கள்‘ என்னும் பாடல்கள் அவர் கடவுளைத் துய்த்த அனுபவங்களைக் கூறுகின்றன. அவருடைய பாடல்களும், அவருடைய தம்பி, தங்கையர் பாடல்களும் அவர்களுடைய ஆழ்ந்த பக்தியையும் அனுபவத்தையும் காட்டுகின்றன. தங்கை முக்தாபாயின் ஆன்ம மேன்மையைக் கண்டு சங்கதேவர் எனும் சிறந்த ஹடயோகி அனுபூதிமானாக மாறினார். இது ஞானயோகத்தைவிடப் பக்தியோகமே சிறந்தது என்பதற்குத் தக்க சான்றாகும்.

2. நாமதேவரைத் தலைவராகக் கொண்ட குழுவில் எல்லாச் சாதியாரும் காணப்படுவர். எல்லா மக்களும் சகோதரர்களே என்பது அவர்கள் பாடல்களின் சாரம். அதனால் அவர்களைப் 'பொதுமக்கள் அனுபூதிமான்கள்' என்று கூறுவர். சமூகத்தில் தாழ்ந்தவர்கள் எனச் சாதாரணமாகக் கருதப்படுவோரெல்லாரும் இக்குழுவில் கலந்து கொண்டு அனுபூதி வளர்ச்சி யெய்தினர்.

3. ஏகநாதருடைய அனுபூதிக்கலையானது ஆன்ம வாழ்க்கையும் உலக வாழ்க்கையும் இணைந்ததாகும். இல்லறத்தில் இருந்துகொண்டே இறைவனை அனுபவிக்க முடியும் என்பது இவருடைய சித்தாந்தம். இவர் அனுபூதிக் கருத்துக்களைக் கூறுவதற்கு நாடோடிப் பாடல் முறையையே கையாண்டார். அவற்றைப் 'பருதங்கள்' என்று கூறுவர்.

4. துக்காராம் துய்த்த அனுபூதி நிலையினைத் தெளிவாகக் கூறுவது அவருடைய பாடல்கள். அதனால் அவருடைய மார்க்கத்தைச் ‘சொந்த அனுபூதிக்கலை’ என்பர்.

5. இராமதாசருடைய கொள்கை கருமயோக சம்பந்தமானது. அவருடைய தலைசிறந்த உபதேசங்கள் அடங்கிய நூல் 'தாசபோதம்' என்பதாம். இந்தக் குழுவினரைத் தவிர, 'மகானுபாவர் வழிபாடு,' அதாவது அனுபூதி பெற்றவர் வழிபடும் முறை என்று கூறப்படும் கொள்கையினரும் இருந்தார்கள். இவர்களை மக்கள் இழிவாகக் கருதினர். இவர்கள் நூல்கள் கிடைக்கவில்லை.

இந்தக் குழுவினர் அனைவரும் கூறும் கருத்தின் சாரம் இது : மக்களுள் சிலர் திடீரென்று மனமாற்றம் அடைந்து, உலக இன்பங்களைத் துறந்து, கடவுளைத் துய்க்க ஆசைப்படுவர். அதற்காகப் பக்குவ காலம் வந்ததும் குருவை அடைவர். குருவின் அருளின்றிக் கடவுளைத் துய்க்க முடியாது. அதனால் குருவே கடவுளை விட உயர்ந்தவர். குரு கடவுள் நாமத்தைத் துதிக்கும்படி கூறுவர். ஆதலால் மகாராஷ்டிர அனுபூதிமான்களுடைய பாடல்களில் குருவுக்குக் கூறும் புகழ்மாலை