பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாதச ரகசியங்கள்

287

அஷான்டி

பதினெட்டு நூல்களாவன :- 1. முமுக்ஷூப்படி- திருமந்திரம், துவயம், சரம சுலோகம் என்னும் மூன்று மந்திரங்களின் விளக்கவுரை. 2. தத்துவத்திரயம்- வைணவ சமயத்திற் கூறப்படுகின்ற சித்து, அசித்து, ஈசுவரன் என்னும் தத்துவம் மூன்றையும் பற்றிக் கூறுவது. 3. அர்த்தபஞ்சகம்- வீடுபேற்றை விரும்புவார் அறிய வேண்டிய ஐந்து கருத்துக்களை விளக்கும் நூல். ஐந்து கருத்துக்களாவன: இறைவனியல்பு, உயிர் இயல்பு, உயிர் இறைவனையடையாமல் தடுத்துநிற்கும் வினையியல்பு, அத்தடையைப் போக்கி இறைவனை யடைதற்குரிய உபாயத்தினியல்பு, இறைவனை யடைந்து பெறும்பயன் என்பன. 4. ஸ்ரீவசனபூஷணம் - வேதம் முதலிய நூல்கள், ஆழ்வார்களுடைய பாசுரங்கள், பூர்வாசாரியர்களுடைய ஒழுக்கங்கள் முதலியவற்றிலிருந்து அறிதற்குரிய நுண்பொருள்கள் பலவற்றைத் தொகுத்துரைக்கின்ற ஒரு சிறந்த நூல். 5. அர்ச்சிராதி - வைணவர்கள் வீட்டுலகை எய்தும்போது அவர்கள் செல்லும் வழி, ஆங்காங்கெய்தும் சிறப்பு இவற்றைக் கூறும் நூல். 6. பிரமேயசேகரம்- உய்தற்குரிய மக்கள் இறைவனருள் தொடங்கி வீடுபேறீறாக அடையும் நிலைமைகளைக் கூறும் நூல். 7. பிரபந்நபரித்ராணம்- வீடுபேற்றுக்குத் தன் முயற்சியைவிட்டு இறைவனையே தஞ்சமாக அடைந்த ஒருவனுக்கு அவ்விறைவனைத் தவிரப் பிறர் எவரும் ரக்ஷகரல்லர் என்பதை விளக்கும் நூல். 8. சாரசங்கிரகம்- வைணவர்களுக்கு மிக முக்கியமான மந்திரங்கள் மூன்றில் துவயம் என்னும் மந்திரத்திற்குப் பத்துப் பொருள் கூறி, அவற்றைத் திருவாய் மொழியின் பத்துப் பகுதிகளோடும், ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு பொருளாக, அமைத்துக் கூறும் நூல். 9. சம்சார சாம்ராஜ்யம்-உடம்பை ஓர் இராச்சியமாகவும், அறியாமை முதலிய தீக்குணங்களை அங்கங்களாகவும், உயிரை அரசனாகவும் உருவகப்படுத்திக் கூறிப் பின்னர், உயிர் நல்வழியடையு மாற்றைக் கூறும் நூல். 10. நவரத்ன மாலை -வைணவர்கள், இறைவனையும் அடியார்களையும் உலக மக்களையும் பிறரையும் எவ்வாறு கருதவேண்டும் என்பதுபற்றி ஒன்பது கருத்துக்களைக் கூறும் நூல். 11. நவவிதசம்பந்தம்- இறைவனுக்கும் உயிர்க்கும் உள்ள ஒன்பது விதமான சம்பந்தங்களை அட்டாக்கரமந்திரங் காட்டிக் கூறும் நூல். 12. யாத்ருச்சிகப்படி- திருமந்திரம், சரம சுலோகம், துவயம் என்னும் மூன்று மந்திரங்களைப் பற்றிக் கூறும் நூல். 13. பரந்தபடி- இதுவும் மேற்கூறிய மூன்று மந்திரங்களைப் பற்றிக் கூறுவதே. இது மிக விரிவாக உள்ளது. 14. ஸ்ரீய: பதிப்படி- இதுவும் மேற்கூறிய மூன்று மந்திரங்களைப் பற்றிக் கூறுவதே. 15. தத்துவ சேகரம் திருமாலே முழுமுதற் கடவுள் என்பதை வேதம் முதலிய பல நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி நிறுவும் நூல். 16. தனித்வயம்- துவய மந்திரத்தின் விரிவான உரை. 17. தனிச்சரமம்- சரம சுலோகத்தின் விரிவான உரை. 18. தனிப்பிரணவம் - பிரணவத்தின் விரிவுரை.

குறிப்பு : திருமந்திரம், துவயம், சரம சுலோகம் இம்மூன்றிற்கும் உரையாகப் பல நூல்கள் உள்ளன. அவை சுருக்கமாகவும் விரிவாகவும் நடுத்தரமாகவும், ஒன்றிலில்லாத கருத்துப் பிறிதொன்றில் அமையப் பெற்றும் உள்ளன. இப்பதினெட்டு நூல்களுள் முமுக்ஷுப்படி, தத்துவத்திரயம், ஸ்ரீவசனபூஷணம் ஆகிய மூன்றும் உரைநடையாக இருப்பினும் சூத்திர யாப்புப் போல் இருத்தலால் இவற்றிற்கு மணவாள மாமுனிகள் விரிவுரை இயற்றியுள்ளார். ஆ. பூ.

அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்(19ஆம் நூற். முற்பகுதி) : இவர் முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள் நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி முதலியன.

அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் சென்னைச் சூளையில் இருந்த புலவர்; விநோதரசமஞ்சரி ஆசிரியர் ; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர். விநோதரசமஞ்சரி இடைக்கால உரைநடைக்கு ஒரு சான்று. பல புலவர்களைப்பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளைத் தொகுத்தெழுதியது.

அஷ்டாவதானி (18ஆம் நூ.) ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தவர். நாகம கூளப்ப நாயக்கனைத் தலைவனாகவைத்து விறலிவிடுதூது என்னும் நூலைப் பாடியவர். இவர் இயற்பெயர் தெரியவில்லை.

அஷகாரி (Echegaray Jose, 1832-1916)19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த நாடகாசிரியர். இவர் பொறியியலும் கணிதமும் கைவந்தவர். சமூக விஷயங்களைப்பற்றி நாடகங்கள் இயற்றினார். 1904-ல் நோபெல் இலக்கியப்பரிசு பெற்றார். இவருடைய உலகமும் அவருடைய மனைவியும் (The World and His Wife) என்னும் நாடகம் பெரும்புகழ் பெற்றது.

அஷாந்தி என்போர் ஆப்பிரிக்காவிலுள்ள கோல்டு கோஸ்ட் பகுதியின் நடுப்பாகத்தில் வாழ்பவர். அவர்கள் தொகை 80 ஆயிரம். 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் வெல்வதற்குமுன் இப்பகுதியிலும், இதற்கு வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்து வந்தனர். உடல் அமைப்புப்பற்றிய அளவில் அவர்கள் நீக்கிரோ வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்களுடைய மொழி காங்கோ-நைஜர் மொழிக் குடும்பத்தின் அகான் குழுவைச் சேர்ந்ததாகும். அவர்கள் தலையாய தொழில் விவசாயம். இப்போது அவர்கள் பெரும்பாலும் கோக்கோ மரம் பயிரிடுகின்றனர். கலை, தொழில் இரண்டிலும் அவர்கள் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள். நெசவும் உலோகத் தொழிலும் சிறப்பானவை. ஆதிகாலமுதல் தங்கம் வெட்டி எடுக்கப்பெற்றது. அதை எடை போடப் பயன்படுத்திய நிறை கற்கள் தங்கத்தால் செய்தவை. இப்போதும் அவை கலை எழில் மிக்கனவாகக் கருதப்படுகின்றன. அஷாந்தி மக்களுடைய சமூக அமைப்புச் சிக்கலானது. ஒவ்வொருவரும் சமூக நிலையைத் தாயிடமிருந்தும், ஆன்மாவைத் தந்தையிடமிருந்தும் பெறுவதாகக் கருதுகிறார்கள். அரசர்களுக்குக் கீழே படிப்படியாகப் பல அரசியல் அமைப்புக்கள் உள. ஒவ்வோர் அமைப்புக்கும் ஒரு தலைவன் உண்டு. வரிப்பணத்திலிருந்து அதிகாரிகள் ஊதியம் பெறுகிறார்கள். சமயத்தின் அடிப்படை ஒபோசம் என்னும் இயற்கைத் தேவதை வழிபாடும் மூதாதையார் வணக்கமுமாகும். மதச் சடங்குகள் மிக விரிவுடையன. மெ. ஜே. ஹெ.

அஷான்டி (Ashanti) ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான கோல்டு கோஸ்ட்டுக் குடியேற்ற நாட்டைச் சார்ந்த ஒரு பகுதி. 1896-லிருந்து ஆங்கிலேயருக்குச் சொந்தமானது. பரப்பு : சு. 24.000 ச.மைல். கோல்டு கோஸ்ட்டு கவர்னரின் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு கமிஷனரின் ஆதீனத்தில் உள்ளது. இவருக்குக் கீழ் உள்ள உதவிக் கமிஷனர்கள் ஜில்லா நிருவாகத்தை நடத்துகின்றனர். முன்பு இது ஓர் ஆப்பிரிக்க இராச்சியமாயிருந்தது. மக் : சு. 6,00.000; தலைநகரம்: குமாசி; மக் : 78,483(1948). சி. எஸ். ஸ்ரீ.