பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஸ்ஸாம்

290

அஸ்ஸாம் மொழி

இது இப்போது இந்திய ஐக்கியத்தில் அடங்கிய ஒன்பது பிரிவு இராச்சியங்களில் ஒன்று. ஷில்லாங் அதன் தலைநகரம். இது 6,540 அடி உயரமுள்ள ஷில்லாங் மலையின் சரிவிலுள்ளது.

தொல்பொருளியல் : இங்கே சில புதிய கற்காலக் கருவிகளும், சில வரலாற்றுக் காலப்பொருள்களும் கிடைத்திருக்கின்றன. எனினும் அஸ்ஸாமின் முழு வரலாற்றையும் விளக்கும் அளவிற்குப் புதைபொருள்களோ மற்றைய ஆதாரங்களோ இல்லை. வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த கோயில்கள், நாணயங்கள், இன்னும் மட்பாண்டங்கள் போன்றவை முக்கியமாகக் காமரூபம், சிப்சாகரம், தர்ராங் போன்ற ஜில்லாக்களில்தான் கிடைத்திருக்கின்றன. இவற்றில் காமரூபஜில்லாவிலுள்ள தேஜ்பூரில் பல சிற்பங்களும் பாழடைந்த கோயில்களும் கண்டறியப்பட்டன. இவை 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்கோவில்களில் சிவன் கோவிலும் சூரியன் கோவிலும் குறிப்பிடத்தக்கவை. தேஜ்பூரின் அருகே உள்ளே தாஹ்பர்வதியா கிராமத்தில் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குப்த காலத்திய சிவன் கோவிலின் பாகங்கள் கிடைத்தன. இதிலுள்ள கங்கை, யமுனையின் சிற்பங்கள் மிகவும் அழகுவாய்ந்தவை. பிற்காலத்தில் அஸ்ஸாம், அஹோம் என்பவர்களால் 14ஆம் நூற்றாண்டிலிருந்து ஆளப்பட்டு வந்தது. ஆனால் இதற்குப் பிறகு சுமார் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே சமீபகாலத்திய கட்டடங்கள் முதலியவை ஏற்பட்டன. பி.ஆர்.ஸ்ரீ.

வரலாறு: இராச்சியத்தின் பழைய பெயர் காமரூபம். தற்காலம் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த கூச் பீகார் (Cooch Behar), கிழக்கு வங்காளத்தைச் சார்ந்த ரங்கபுரம் (Rangapur) ஆகிய பகுதிகளும் பண்டைய காமரூபத்தில் அடங்கியிருந்தன. பண்டைத் தலைநகர் பிராக்ஜ்யோதிஷம் (Pragjyotisha) இப்போதுள்ள கௌகத்தி நகருக்கு அருகிலிருந்தது. மௌரியரின் காலத்தில் காமரூபம் தனி அரசாகவேயிருந்தது. சமுத்திரகுப்தன் காலத்தில் குப்தப் பேரரசுக்குக் கப்பம் செலுத்தி வந்தது.

இந்நாட்டின் அர்ச வமிசத்துக்கு மூல புருஷன் பகதத்தன். முதன் முதல் புகழ் பெற்றவன் புஷ்யவர்மன் (சு. 350-650). கடைசி மன்னன் பாஸ்கரவர்மன் ஹர்ஷ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டிய சிற்றரசர்களில் ஒருவன். ஹர்ஷனுடைய அன்பையும் பாதுகாப்பையும் பெற்றவன். இவன் காலத்தில் சீனப் பேரறிஞர் ஹியூன் சாங் இந்நாட்டுக்கு வந்தார். நாட்டின் அரசன் விஷ்ணு வமிசத்தினன் என்று அவர் சொல்லுகிறார். பௌத்த மடங்கள் இங்குக் காணப்படவில்லை என்று அவர் எழுதியிருப்பது புத்த சமயம் இங்குப் பரவவில்லை என்பதைக் குறிக்கிறது. பாஸ்கரவர்மனின் வேண்டுகோட்கிணங்கியே சீனச் சக்கரவர்த்தி ஹியூன்சாங்கை லௌட்ஸு (Laotse) என்ற சீனப்பெரியாரின் அருள் மொழிகளை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கும்படி வேண்டினார்.

சாலஸ்தம்ப வமிசம் 650 முதல் 800 வரை ஆண்டது. பிராலம்ப (Pralamba) வமிசம் 800 முதல் சு. 1000 வரை ஆண்டது. ஜயபாலன், பாலவர்மன், தியாகசிம்மன் ஆகியோர் இவ்வமிசத்தவர்கள். இக்காலத்தில் காமரூபம், வங்காளத்தை ஆண்ட பால (Pala) மன்னர்களுக்குக் கீழ்ப்படியும்படி நேரிட்டது. பால்மன்னர்கள் சிவன், விஷ்ணு என்ற பேதமில்லாமல் இரு சமயத்தையும் ஆதரித்தார்கள். அடிக்கடி விடுதலைப்போர் நடந்துவந்தது. 11ஆம் நூற்றாண்டில் பால வமிசத்தின் அரசகுமாரன் ஒருவன் காமரூபத்தின் மன்னனானான். அவனுடைய தலைநகர் கெளகத்தி. 12ஆம் நூற்றாண்டில் வங்க மன்னன் ராமபாலன் காமரூபத்தைக் கைப்பற்றித் தன் அமைச்சன் போதி தேவனை அங்கு ஆளும்படி அமர்த்தினான். போதி தேவன் வமிசம் சு. 1150 வரை ஆட்சியிலிருந்தது. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காமரூப மன்னர்களுக்கும் வங்கத்தை அப்போது ஆண்ட சேன (Sens) மன்னர்களுக்கும் அடிக்கடி போர் நடந்தது.

காமரூபம் முஸ்லிம் ஆட்சிக்குள் வரவில்லை. முகம்மது பின் பக்தியார் - கில்ஜி திபெத்துக்குத் தன் வீரர்களை இந்நாட்டு வழியாக நடத்திச் செல்ல முயற்சி செய்தபோது இங்கு முறியடிக்கப்பட்டு இறந்தான். 1228-ல் ஆஹோம் என்ற ஷான் சாதியார் (Shans) இங்குக் குடியேறினார்கள். அவர்கள் இந்து மதத்தைத் தழுவி, நாட்டின் ஆட்சியைப் பெற்றார்கள். நாட்டுக்கு அஸ்ஸாம் என்ற பெயர் இந்தச் சாதியாரின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது.

ஆஹோம் ஆட்சியில் பல துறைகளில் இந்நாடு மேன்மையடைந்தது. அக்பர் காலத்தில் (1542-1605) இங்குச் சுற்றுப் பிரயாணம் செய்த ரால்ப் பிட்ச் (Ralph Fitch) தாம் இங்குக் கண்ட மருத்துவச் சாலைகளையும், கல்விச் சாலைகளையும் புகழ்ந்திருக்கிறார். ருத்ரசிம்மன் (1696-1714) என்ற அஹோம் அரசன் பெரும்படையைத் திரட்டி, மற்ற இந்து மன்னர்களின் உதவியைக் கொண்டு மொகலாயப் பேரரசைத் தாக்கச் செய்த முயற்சி அவன் அகால மரணத்தால் நின்று விட்டது.

1770 வரை ஐரோப்பியர்கள் அஸ்ஸாமுக்குள் நுழையவில்லை. 1771-ல் ஆங்கிலேயர்களுடன் முதல் வியாபார உடன்படிக்கை செய்யப்பட்டது. 1822-ல் பர்மியர் இந்நாட்டை வென்றனர். ஆங்கில-பர்மிய யுத்தத்துக்குப் பிறகு 1826-ல் செய்துகொள்ளப்பட்ட யந்தபோ (Yandabo) உடன்படிக்கையின்படி அஸ்ஸாம் ஆங்கில ஆட்சிக்குட்பட்டது.

அன்னிய ஆட்சியிலிருந்து தம் நாட்டை மீட்டுக்கொள்ள வட அஸ்ஸாமியர் பல தடவை கலகம் செய்தார்கள். 1831-ல் புரந்தர சிம்மனை அரசனாக ஆங்கிலேயர் அமர்த்தினர்; 1838-ல் அவனை நீக்கினர். அவன் பேரன் கந்தர்ப்பேசுவர சிம்மன் 1857-ல் கலகம் செய்தான். அவனையும் அவன் துணைவர்களையும் ஆங்கிலேயர் கைதுசெய்தார்கள். 1858-ல் கம்பெனியின் ஆட்சி முடிவடைந்தது; இந்தியாவின் மற்றப் பகுதிகளைப் போல அஸ்ஸாமும் ஆங்கில மன்னரின் நேராட்சியின்கீழ் வந்தது. கூ. ரா. வே.

அஸ்ஸாம் மொழி: இது கிழக்கு மகத அபப்பிரம்ச் மொழியினின்று பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரியா மொழியின் ஆதி உருவங்களும், வங்காளி மொழியின் ஆதி உருவங்களும் திபெத்து நாட்டில் காணப்பட்ட பௌத்த தோகாக்களில் காணப்படுவன போலவே, அஸ்ஸாம் மொழியின் ஆதி உருவங்களும் காணப்படுகின்றன. காமரூபம் என்று வழங்கப்பட்ட பண்டை அஸ்ஸாம் நாட்டில் பயிலப்பெற்ற மொழி மத்திய இந்தியாவில் பயிலப்பெற்ற மொழியினின்றும் சிறிது வேறுபட்டிருந்ததாக ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த ஹியூன்சாங் கூறுகிறார். ஆதி காலத்துக் கல்வெட்டுக்களில் அஸ்ஸாம் மொழி வளர்ந்து உருவான விதத்தைக் காணலாம். அஸ்ஸாம் மொழியானது ஆதிகாலத்து மங்கொலாயிடு மக்களுடைய மொழியிலிருந்தும் ஆஸ்டிரிக் மக்களுடைய மொழியிலிருந்தும் ஏராளமான சொற்களைப் பெற்-