பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஹிம்சை

295

அஹிம்சை

எவ்வளவு துன்பம் நமக்கு நேரிட்டாலும் அதைச் சகித்துக்கொள்ளவேண்டும். அடிபடுதல், சிறை புகுதல்,சாதல் ஆகியவற்றிற்கும் அஞ்சுதல் ஆகாது. அதேசமயத்தில் எதிரிக்குச் சிறிதேனும் துன்பம் இழைக்கக் கூடாது. அவனை அன்பினால் வெல்லவேண்டும், பகைமையால் அல்ல. நம்முடைய சகிப்புத் தன்மையாலும், சாந்த நெறியினாலும் அவனுடைய மனத்தை மாற்றவேண்டும். இவைகளே சத்தியாக்கிரகத்தின் தத்துவம். இதை அடிப்படையாகக் கொண்டு தென் ஆப்பிரிக்காவில் சாந்தப் போர் புரிந்து வெற்றி பெற்றார் காந்தியடிகள்.

தாய்நாடு திரும்பியதும், சத்தியாக்கிரக வழியில் சென்றால்தான் இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் என்று மகாத்மா காந்தி உணர்ந்தார். ஏற்கெனவே நிறுவப்பட்டிருந்த காங்கிரஸ் சபையைக் கருவியாகக்கொண்டு சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கத்தின் முக்கிய அமிசங்களாவன: 1. எதிரியோடு போர் தொடங்காதிருக்க வேண்டி எல்லா முயற்சிகளும் செய்யவேண்டும். 2. முயற்சிகள் பயன் அளிக்கவில்லையானால், எதிரி போருக்கு ஆயத்தம் ஆவதற்கு வேண்டிய அவகாசம் கொடுக்க வேண்டும். 3. சத்தியாக்கிரகிகள் தாங்கள் செய்யவேண்டியதை வெளிப்படையாகச் செய்ய வேண்டும். 4.அநீதியான சட்டங்களைச் சாந்த முறையில் எதிர்க்கவேண்டும். 5. எவ்வளவு துன்பம் ஏற்படினும், எதிரிக்குத் துன்பம் அளிக்காதிருக்க வேண்டும். 6. சட்டங்களை எதிர்ப்பதனால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். 7. இயக்கத்தின் நடுவே, சத்தியாக்கிரகிகள் தவறுகள் செய்தால், அவற்றைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். 8. சாந்த முறையில் இயக்கம் நடக்கவில்லையென்றால், தலைவர் இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும். 9. மறுபடியும் மக்களுக்குப் போதிய பயிற்சியளிக்கவேண்டும். இராட்டையில் நூல் நூற்றல், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை நாடுதல், கிராம முன்னேற்றம், ஹரிஜன சேவை முதலியவை அஹிம்சா மனப்பான்மையை வளரச் செய்யும். 10. சில சமயம் தலைவர் உண்ணாவிரதமும் இருக்க நேரிடும். இவ்வாறு மகாத்மா காந்தி அன்பு வழியில் சுதந்திரப் போரை நடத்தினார். தீமையோடு ஒத்துழைக்காமல் இருப்பது, தீமையை எதிர்த்துப் போராடுவது, தீயவர்களுக்குத் தீமை இழைக்காதிருப்பது, அவர்களின் மனத்தை மாற்றுவது முதலியவை சத்தியாக்கிரக வழி. 1947-ல் இந்தியா வெற்றி பெற்றது; அன்புப் படைக்கலங்களால் போர் புரிந்து விடுதலையடைந்தது. மத வேற்றுமை, சாதிச் சண்டைகள், உலக யுத்தங்கள் ஆகியவற்றையும் அஹிம்சா தருமத்தைக் கொண்டு நீக்கவேண்டும் என்று மகாத்மா காந்தி பாடுபட்டார். மற்ற நாடுகளின் தலைவர்கள்கூடக் காந்தியடிகள் காட்டிய வழியின் மேன்மையை இப்பொழுது உணர்ந்து வருகிறார்கள். டி. எம். பி. ம.