பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

313

ஆங்கிலம்

சொற்கள் நிகழ்காலத்தையும் இறந்த காலத்தையும் மட்டுமே குறிப்பிட்டன. தற்காலத்திலுள்ளவை போன்ற துணைவினைச்சொற்கள் இக்காலத்தின் இறுதியில் தோன்றின. வாக்கியங்களில் சொல் வரிசையானது மாறாக இலக்கண விதியினால் கட்டுப்படுத்தப்படவில்லை.

அக்காலத்து மொழி பிற மொழிக்கலப்பு அதிகமாக இல்லாமல் தூயதாகவே இருந்தது. கிறிஸ்தவ மதம் பரவிய பின், மதச் சார்புள்ள லத்தீன் சொற்கள் பல இடம்பெற்றன. ஜெர்மானியக் குடிகள் ஐரோப்பாவில் இருந்தபோதே ரோமானிய சாம்ராச்சியத்தினிடமிருந்து கற்ற சில சொற்களும் பழைய ஆங்கிலத்தில் வழங்கின. ஆனால் இக்காலத்தில் வந்து சேர்ந்த வேற்றுமொழிச் சொற்கள் மிகக் குறைவு. எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலே ஆங்கிலக் கடற்கரைகளை ஸ்காந்தினேவியர் அடிக்கடி தாக்கி வந்தார்கள்: அடுத்த நூற்றாண்டில் அவர்கள் அங்குக் குடியேறவும் தொடங்கினார்கள். ஆகையால் பழைய ஆங்கிலக் காலத்தின்போதே ஸ்காந்தினேவிய மொழிக்கலப்புத் தொடங்கிவிட்டது. வானம், ரொட்டி போன்ற சாதாரணப் பொருள்கள் பலவற்றைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள் இவ்வாறு வந்தவை. இப்போது படர்க்கைப் பன்மையும் அதன் உருபுகளும் ஆங்கிலத்தில் முதன்முதலாக வழக்கத்திற்கு வந்தன.

ஆல்பிரடு அரசரது காலத்திற்குப் பின் கவிதையிலும் வசனத்திலும் பல நூல்கள் எழுதப்பட்டன. அக்காலத்தில் கவிதை நடை என்று ஒரு தனிப்பட்ட நடையைக் கையாண்டு வந்தார்கள். கவிதையில் மட்டும் பயன்படுத்துவதற்காகப் பல சொற்கள் இருந்தன. சாதாரணப் பொருள்களுக்கும் விரிவான உருவகங்கள் இருந்தன. அவற்றை எல்லாக் கவிஞர்களும் மாறுதல்களின்றிக் கையாண்டார்கள்.

இடை ஆங்கிலம் (1100-1500): 1066-ல் பிரான்சு நாட்டைச் சேர்ந்த வில்லியம் என்ற நார்மண்டிக் கோமகன் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். இது முதல் பிரெஞ்சு மொழி அரசாங்க மொழியாகவும், அரச குடும்பத்தினரும் மற்றப் பிரபுக்களும் பேசும் மொழியாகவும் சுமார் 300 ஆண்டுகள்வரை இருந்தது. ஆனால் பொதுமக்கள் ஆங்கிலோ-சாக்சன் மொழியையே அன்றாட வாழ்க்கையில் வழங்கி வந்தார்கள்; இக்காலத்தில் இது வெறும் பேச்சு மொழியாகவே இருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மூன்று மொழிகள் வழங்கின. மக்களிடையே ஆங்கிலோ-சாக்சனும், பிரபுக்களிடையே பிரெஞ்சும், கற்றோரிடையே லத்தீனும் வழங்கின.

இக் காலத்தில் ஆங்கிலம் பல மாறுதல்களை அடைந்தது. ஆயினும் சாதாரணப் பொருள்களின் பெயர்களும், கருத்துக்களைக் குறிக்கும் சொற்களும் ஆங்கிலச் சொற்களாகவே இருந்தன. அன்பு, வெறுப்பு, சுவர், நாய், மீன், மண், நீர் முதலியவற்றைக் குறிக்கும் தற்காலச் சொற்கள் அனைத்தும் பழைய ஆங்கிலத்திலிருந்துவரும் சொற்களேயாம். பிரெஞ்சு ஆதிக்கத்தினால் பழைய மொழியின் இலக்கிய வளர்ச்சி தடைப்படவே, அதன் பொது இலக்கணமும் தொடரிலக்கணமும் மறைந்தன. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பான திசை மொழிகள் தோன்றின. பிரெஞ்சு மொழியின் ஆளுகை குறைவான வடபகுதிகளில் மொழியானது தற்கால வடிவை அடையத் தொடங்கியது. மத்தியப் பகுதியில் அக்காலத்தில் வழங்கிய திசைமொழியே தற்கால ஆங்கிலத்தைத் தோற்றுவித்தது. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள் இப்பகுதியில் இருந்ததாலும், அரசின் கேந்திர நகரமான லண்டன் இப்பகுதியிலிருந்து மற்றப் பகுதிகளிலுள்ள மக்களையெல்லாம் இங்கு ஒன்று சேர்த்ததாலும் இப்பகுதியின் திசைமொழியே முதன்மை பெற்றது. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சாசர் என்ற புகழ்பெற்ற கவிஞர் மத்தியப்பகுதியின் திசைமொழியில் தம் கவிதைகளை இயற்றினார். இவரது மேதையினால் இம்மொழி சிறப்புற்றுப் பிற்காலத்திய மொழிவளர்ச்சிக்குத் தோற்றுவாயாக அமைந்தது.

உருமாற்றங்களின் மறைவே இக்காலத்தில் ஆங்கில மொழியில் நிகழ்ந்த முக்கியமான மாறுதலாகும். சுட்டுச் சொல்லின் வேற்றுமை, பால், எண் முதலிய மாற்றங்கள் மறைந்தன. பெயர்ச்சொற்களுக்கு இரண்டாம் வேற்றுமை உருபைத் தவிர மற்றவை ஒழிந்தன. பெயர்ச்சுட்டுக்கள் தற்கால வடிவங்களைப் பெறத் தொடங்கின. படர்க்கை ஒருமை வினையின் தனி வடிவம் மெல்ல மறையத் தொடங்கியது. பழைய ஆங்கிலத்தில் வழங்கிய இணையுயிரெழுத்துக்கள் மறைந்து, உயிரெழுத்துக்களின் தற்கால உச்சரிப்புத் தோன்றியது. வினைச்சொற்கள் எளிய வடிவங்களைப் பெற்றன. இம்மாறுதல்களால் இலக்கணம் எளிதாயிற்று.

புதிய ஆங்கிலம் : லண்டனில் வழங்கிய திசை மொழியைச் சாசர் இலக்கியத்தில் பயன்படுத்தி, அதை ஆங்கிலத்தின் திட்டவடிவாக்க முயன்ற ஒரு நூற்றாண்டிற்குப் பின் வில்லியம் காக்ஸ்டன் இங்கிலாந்தில் அச்சுக் கலையைத் தொடங்கி வைத்தார். பின் பல வேறு இடங்களில் வழங்கிய திசைமொழிகள் விரைவில் மறைந்தன. சொற்களின் எழுத்துக்கூட்டுப் பலமாறுதல்களுக்குப்பின் உச்சரிப்புக்கேற்ற தற்கால வடிவத்தைப் பெற்றது. நெடிலைக் குறிக்க அதையடுத்து வரும் மெய்யெழுத்துக்குப்பின் e என்ற எழுத்து சேர்க்கப்பட்டது. (உ-ம். Stone). மெய்யெழுத்தை இரட்டித்துக் குறிலைக் குறிக்கும் முறை தோன்றியது. (உ-ம். Penny). 1623-ல் வெளியான ஷேக்ஸ்பியர் நாடகங்களை அக்காலத்தில் வாழ்ந்த ஒருவர் படிக்கக் கேட்டால் நாம் அதைப் புரிந்துகொள்வது கடினம். ஏனெனில் உச்சரிப்பு இப்போது அவ்வளவு தூரம் மாறிவிட்டது. இம்மாறுதல் ஒரேயடியாக நிகழாது சிறுகச் சிறுக நிகழ்ந்தது. தற்கால எழுத்துக்கூட்டுக்கள் 17ஆம் நூற்றாண்டில் நிலைப்பட்டன. உச்சரிப்புக்கேற்றவாறு சொற்களை எழுத்துக் கூட்டும் முறை தோன்றவேண்டும் ஓர் இயக்கம் உள்ளது. ஆனால் பல காரணங்களால் இது வலுவடையவில்லை.

இம்மாறுதலைவிடப் பெரிய புரட்சி சொற்றொகையில் நிகழ்ந்துள்ளது. இடைக்கால ஆங்கிலமுங்கூடத் தற்கால ஆங்கிலத்தைப்போல் அவ்வளவு தூரம் கலப்படையவில்லை. அச்சுக்கலையின் தோற்றத்தின் பின் உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சொற்கள் வந்து புகுந்தன. பிரெஞ்சு ஆதிக்கத்தின்போது இடைக்கால ஆங்கிலத்தில் பிரெஞ்சுமொழிச் சொற்கள் கலந்தன. மறுமலர்ச்சியின் விளைவாக ஏராளமான லத்தீன் சொற்களும் கிரேக்கச் சொற்களும் வந்தன. எலிசபெத் காலத்தில் ஆங்கிலத்தை லத்தீன் மயமாக்கும் இயக்கம் ஒன்றும், இதற்கு எதிராக ஆங்கிலத்தைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்மையாக்கும் இயக்கம் ஒன்றும் நடைபெற்றன. இவ்விரண்டும் நிறைவேறவில்லை. ஆனால் இவற்றால் மொழி வளம்பெற்றது. மற்ற ஐரோப்பிய மொழிச்சொற்களும் ஆங்கிலத்திற் சேர்ந்தன. வாணிப முன்னேற்றத்தால் நாட்டினர் உலகின் பல பகுதிகளை அடைந்து, அங்கு வழங்கும் சொற்களைக் கொண்டுவந்து தமது மொழியில் சேர்த்தனர். பழங்கால மொழிகளிலிருந்து வந்து புகுந்த சொற்கள் சிறிதே வேறுபட்ட-