பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

314

ஆங்கிலம்

பொருளுள்ள ஒரு பொருட் பல சொற்களை மொழிக்குத் தந்துதவி அதை வளமாக்கியுள்ளன. இதனால் ஆங்கிலச் சொற்களின் பலவேறு பொருட்சாயல்களை வேறெம் மொழியிலும் பெயர்க்க முடிவதில்லை. ஆங்கில மொழியின் தனிச்சிறப்பிற்கே இது காரணமாக உள்ளது.

ஆதார ஆங்கிலம் : சாதாரணத் தேவைகளுக்குப் போதுமான 850 அடிப்படையான சொற்களைமட்டும் கொண்ட ஆங்கில மொழியைச் சர்வதேச மொழியாக்குவது எளிதாகும் என்ற கருத்தைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆக்டன் (Ogden) என்ப வர் 1925-ல் வெளியிட்டார். ஆங்கிலம் எளிதில் கற்க ஏற்ற இத்தொகுதி, 'ஆதார ஆங்கிலம்' (Basic English) எனப்படும். இதில் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

அமெரிக்கர் ஆங்கிலம்: அமெரிக்காவில் குடியேறிய ஆங்கில மக்கள் ஆங்கில மொழியையே அங்கும் பரப்பினார்கள். இங்கிலாந்தில் வழக்கொழிந்துவிட்ட சில பழைய சொற்களும், வரலாற்றுச் சொற்களும் அமெரிக்காவில் இன்னும் வழக்கத்திலுள்ளன. பல புதுச் சொற்கள் தோன்றியுள்ளன. வியப்பையும் மற்ற உணர்ச்சிகளையும் காட்டும் சொற்கள் அமெரிக்கர் மொழியில் அதிகம். உவமைகளும், உருவகங்களும், புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் குறிக்கும் சொற்களும் இதில் மலிந்துள்ளன. எழுத்துக்கூட்டிலும் அமெரிக்கர் மொழியில் உச்சரிப்புக்கேற்ற சில மாறுதல்கள் உள்ளன. அமெரிக்கச் செவ்விந்தியரின் திசைமொழிகளிலிருந்து வந்த சில சொற்களும் இதில் வழக்கத்தில் உள்ளன. அமெரிக்க நீக்ரோ மக்களும், செவ்விந்தியரும் பேசும் ஆங்கிலத் திசைமொழிகள் தனிப்பட்ட வகையானவை.

இலக்கியம் : தற்கால ஐரோப்பியப் பண்பாட்டிற்கு மூன்று பரம்பரைகள் மூலங்களாக இருந்து வந்துள்ளன. இவை பழங்காலத்தில் மத்தியதரைக் கடற் பகுதிகளில் தோன்றி வளர்ந்த கிரேக்க-லத்தீன் பண்பாடும், பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவப் பண்பாடும், வட ஐரோப்பாவில் தோன்றிய ஜெர்மானியப் பண்பாடும் ஆகும். வேறான தன்மையுள்ள இவை தனித்தனியே இங்கிலாந்தை அடைந்து, பல நூற்றாண்டுகளுக்குப்பின் ஒன்றாக இணைந்தன. ஆங்கிலப் பண்பாட்டின் வரலாற்றை அதன் இலக்கிய வரலாற்றில் தெளிவாகக் காண்கிறோம். இங்கிலாந்தின் வரலாற்றின் ஒவ்வொரு காலமும் தனக்கேற்ற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் தோற்றுவித்தது. ஆங்கிலப் பண்பாடு கடல் கடந்து வேறு நாடுகளை அடைந்தபின், ஆங்கிலமொழியின் இலக்கியச் செல்வம் அந்த நாடுகளை வளமுறச்செய்தது. அந்நாடுகளும் ஆங்கில இலக்கிய வளர்ச்சிக்கு உதவின.

ஆங்கில இலக்கிய வளர்ச்சியின் கட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் சில சிறப்பியல்கள் காணப்படும். அவையாவன :

ஆதியிலிருந்து சாசர் காலம்வரை: 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் சாசருக்கு 7 நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலோ-சாக்சன் மொழியில் கவிதையும் உரை நடையும் சிறப்புற வளர்ந்திருந்தன. பிற்கால ஆங்கிலத்தின் வளர்ச்சிக்கு இவை அடிப்படையாக அமைந்தன.

அக்கால இலக்கியத்தில் ஆதியில் இங்கிலாந்தில் வந்து குடியேறிய மக்களின் வாழ்க்கைமுறை காணக் கிடக்கிறது. இந்த இலக்கியத்தில் காவியக் கவிதையே சிறப்பானது 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பேயவுல்ப் (Beowulf) என்ற காவியம் இக்கவிதைகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. பல அரக்கர்களைக் கொன்று புகழடைந்த வீரன் ஒருவனது வாழ்க்கைக் கதையான இக்காவியத்தில் வீரமும் சோகமும் இணைந்து தனிப்பட்ட பெருந்தன்மையுள்ள நடைக்குக் காரணமாகின்றன. இக்காலக் கவிதைகளைப்போல இதில் எதுகை நயம் மலிந்து காணப்படுகிறது. இதன் சந்தம் விரை வாகவும் நெகிழ்வுடனும் உள்ளது. காவியப் பரம்பரை அக்காலத்திலேயே முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாக விளங்குகிறது. இதை யொத்த வேறு சில காவியங்களின் பகுதிகளும் கிடைத்துள்ளன. நூற்றுக்கணக்கான சிறு பாடல்களுள் சிலுவைக் கனவு (Dream of the Rood), புதிர்கள் (Riddles), மால்டன் போர் (Battle of Maldon) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

ஆங்கிலோ-சாக்சன் கவிதை தோன்றி வளர்ந்த நெடுங்காலத்திற்குப் பின்னரே உரைநடை இலக்கியம் தோன்றியது. உரை (Gloss), சாசனம் (Charters), சட்டங்கள் (Laws) ஆகியவற்றிலேதான் முதலில் உரைநடை தோன்றியது. பிறகு உரைநடை இலக்கியத்திற்கு ஆல்பிரடு அரசர் (849-899) அடி கோலினார். இவர் இலக்கிய நயம் மிக்க நூல்களை எழுதியதோடு அறநெறி, வரலாறு, பூகோளம், தத்துவம் போன்ற துறைகளில் லத்தீன் மொழியிலிருந்து நூல்களை மொழிபெயர்க்க உதவினார். இவரது ஆதரவின்கீழ் வெளியானதாகக் கருதப்படும் ஆங்கிலோ -சாக்சன் சரித்திரக் குறிப்பு (Anglo-Saxon Chronicle) அக்கால உரைநடைக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது. இதன் நடையில் விறுவிறுப்பையும், சொல்லவேண்டியதைச் சுற்றிவளைக்காமல் நேரடியாகக் கூறும் திறனையும் காண்கிறோம். அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆல்பிரிக் (Aelfric) எளிமையும் தெளிவும் நிறைந்த நடையில் தம் நூல்களை எழுதினார். வுல்ப்ஸ்டன் நூல்கள் பேச்சாளரது நடையில் அமைந்தன. இவ்விருவர் உரைநடையிலும் ஆங்காங்கு மோனை, எதுகை முதலியவற்றைக் காணலாம்.

1066-ல் இங்கிலாந்து நார்மன் அரசருக்கு அடிமையானது ஆங்கிலோ-சாக்சன் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாயிற்று. நாட்டில் ஐரோப்பியக் கண்டத்து மொழிகளின் ஆட்சி அதிகமாகியது. அரசர் மொழியான பிரெஞ்சுக்குக் கிடைத்த பேராதரவினால் நாட்டு மொழி குன்றியது. இலக்கியம் பெரும்பாலும் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது. மதப் பாட்டுக்களும், மத சம்பந்தமான சில உரைநடை நூல்களுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. அவற்றுள் சிறந்தவை லத்தீனிலும் பிரெஞ்சிலும் நல்ல தேர்ச்சியுள்ளவர்களால் எழுதப்பட்ட இந்நூல்களின் நடை எளிதாகவும் ஓசை நயம் மிகுந்ததாகவும் இருந்தது. மேன்மையின் அளவு (Scale of Perfection), அறியாமை மேகம் (Cloud of Unknowing). முதது (Pearl), தூய்மை (Purity), பொறுமை (Patience) போன்ற சிறந்த பாட்டுக்களை இயற்றிய கவிஞர் எதுகையைத் தாராளமாகக் கையாளுகிறார். இவரது சொல் நயமும் சந்தத் திறமையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. முத்து என்ற கவிதையில் கவிஞர் தம் மகளின் மறைவினால் விளைந்த சோகத்தை அழகுபடச் சித்திரித்திருக்கிறார். சோகத்தைப் பொருளாகக்கொண்ட ஆங்கிலக் கவிதைகளுள் இதற்கு ஒரு சிறப்பிடம் உண்டு. பழங்காலத்தைச் சாசரது காலத்துடன் இணைக்கும் ஆசிரியருள் வில்லியம் லாங்லாண்டு (William Lang- Land) முக்கியமானவர். இவர் எழுதிய உழவன்