பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

322

ஆங்கிலம்

சிறப்புக்களாகிய லத்தீன் சொற்றொடர்கள், ஒலிநயமுள்ள பெயர் வரிசைகள், வரிசை மாற்றம் ஆகியவை ஈண்டு அழகாக எடுத்தாளப்பட்டுள்ளன. இப்பாவகைக்கே இந்நூல் ஓர் அச்சு என்னலாம். அதே நூற்றாண்டில் போப்பும் காப்பிய நடையையும் அமைப்பையும் பின்பற்றிக் கூந்தற் சுருள் கவர்தல் (Rape of the Lock) என்னும் போலி நகைக் காப்பியம் இயற்றினார்.

1736-ல் ஐ. எச். பிரௌன் என்பவர் புகையிலைக் குழாய் (Pipe of Tobacco) என்ற நூலில் சிபர் (Cibber), யங், தாம்சன் என்னும் அந்நாளைய புலவர்களின் கருத்துக்களையும் பொருள்களையும் பழித்துப் பாடியுள்ளார். அந்நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய கானிங் (Canning) போலிநகை இலக்கியத்தில் வல்லவர். முதனூலின் வெளித்தோற்றத்தை மட்டுமன்றி, உட்கருத்தையும் நோக்கத்தையும் முதலில் எடுத்துக் காட்டியவர் இவரே. இவருடைய அம்புகளுக்கு இரையாகியோர் செருக்குற்ற ஆசிரியர்கள், பகுத்தறிவற்ற விஞ்ஞானிகள், தம் நாட்டை மதியாது பிற நாட்டைப் போற்றும் புரட்சிக்காரர்கள் முதலியோர் ஆவர். இவர் இயற்றிய நூல் ஆன்டி-ஜாக்கோபின் (Anti-Jacobin) என்பது.

போலிநகை இலக்கியத்தைக் கையாண்ட அடுத்த பெரும்புலவர் பைரன். இவர் சதேயின் தீர்ப்பின் காட்சி (Vision of J udgment) என்னும் செய்யுளைப் பின்பற்றி அதே தலைப்புக் கொண்ட பாவினை இயற்றினார். சதேயின் செய்யுளில் அறிவுச்சுமை புலமைத்திறனை அழுத்திவிட்டதாகையால் இஃது எளிதில் இகழ்ச்சிக்கு இலக்காயிற்று. பைரனின் செய்யுளில் நகைச்சுவை பொங்கித் ததும்பினாலும், முதனூலின் கருத்து, நடை முதலியவற்றின் நிழல் இல்லை.

புறக்கணிக்கப்பட்ட புகழ்மாலை (Rejected Add- resses) என்பது ஸ்மித் என்னும் பெயர் தாங்கிய உடன்பிறந்தோர் இருவர் ஒருங்கியற்றிய ஒரு கூட்டு நூல். கற்பனை நவிற்சிக் கவிஞர்கள் (Romantic poets) என்று அழைக்கப்பட்ட வர்ட்ஸ்வர்த், கோல்ரிஜ், சதே, ஸ்காட் முதலியவர்களின் நயமும் உணர்ச்சியும் இல்லா நடை, உரைநடை விரவி வந்த செய்யுள், மிகைப்படுத்திக் கூறல் போன்ற குறைகளை இஃது இகழ்கிறது.

1816-ல் ஜேம்ஸ் ஹாக் (James Hogg) எழுதிய கவிதைக் கண்ணாடி (Poetic Mirror) வெளிவந்தது. தம் காலத்தியவராகிய கோல்ரிஜ், ஸ்காட் என்பவர்கள் இயற்றியவை போன்ற பாக்களைத் தாமே எழுதி, இந்நூலுட் கோத்து இவர் வெளியிட்டார். செய்யுட்கள் மிக நீண்டவை; புலமைத்திறனும் இலக்கியச்சுவையும் நிரம்பியவை.

1843-ல் அரசவைப் புலவராக இருந்த சதே இறக்கவே, அப்பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற சிலர் எழுதிய செய்யுட்கள் போன்ற பல பாக்கள் அடங்கிய போன் கால்ட்டியர் கதைப்பாட்டு (Bon Gaultier Ballads) என்னும் நூல் வெளிவந்தது. இதனை இயற்றியவர்கள் ஐட்டன், மார்ட்டின் என்னும் இருவர். மூர், வர்ட்ஸ்வர்த், திருமதி பிரௌனிங். லீஹன்ட், டெனிசன், லிட்டன் போன்றவர்களின் தெவிட்டும் இன்னிசையை உடைய நடை, பொருளற்ற கற்பனை முதலான வழுக்களையும் அந்நாளைய தாழ்ந்த இலக்கியச் சுவையையும் திருத்த இந்நூல் முன்வந்தது.

விக்டோரியா நாளில் வாழ்ந்த நகைச் சுவைப் புலவர்களுள் கால்வர்லி சிறந்தவர். இவர் அந்நாளைய இரண்டாந்தரப் புலவர்களை எள்ளிப் பாடினார். ஸ்வின் பர்ன் எழுகிய ஹெப்டலோஜியா (Heptalogia) ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. இவரது யாப்புத் திறன் இணையற்றது. ஆனால் இவருடைய பாக்களில் சீற்றமும் கடுமையும் அதிகம். உணர்ச்சியினின்றன்றி, அறிவினின்றும் எழுவது இவரது நகைச்சுவை. ஒவ்வோர் அடியும் தேள் கொட்டுவதுபோன்று நஞ்சைக் கக்குகின்றது. போலக் என்னும் வழக்கறிஞர், 1876-ல் வழிகாட்டும் வழக்குகள் (Leading Cases) என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய செய்யுட்கள் வழக்குகள் போன்று அமைந்துள்ளன. 1891-ல் ஜே. கே. ஸ்டீபன் எழுதிய எழுதுகோல் வழக்கு (Lapsus Calami) என்னும் நூலில் மென்மையான நகைச்சுவையும், உயர் தனிப் பண்பும் காணப்படுகின்றன. வால்ட் விட்மன் என்பவரின் எதுகை இல்லாததும், யாப்பமைப்பு அற்றதுமான செய்யுள் நடை இதன் கண் வன்மையுடன் தாக்கப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டுப் புலவர்களுள் இப்பா இயற்றுவதில் சிறந்தவர் ஜே. சி. ஸ்கொயர். இவர் கையாண்ட, முறை புதியது. ஒரு கவிஞன் தன் முறையையும் நடையையுங்கொண்டு மற்றொரு கவிஞனின் கருத்தைப் பின்பற்றிச் செய்யுள் எழுதினால் எப்படியிருக்கும் என்னும் ஆராய்ச்சி போன்றுள்ளன இவர் பாக்கள். இந்நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாக்கள் கணக்கிறந்தவை. முன்பு ஓர் அருங்கலையான இப்பா இப்பொழுது பொதுக் கலையாக மாறியுள்ளது. ஆதலின், இதனின்று இப்போதைய சமூகத்தின் இலக்கியச்சுவை இத்தன்மைத்து என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

இசைப்பா (Ode) ஆங்கில இலக்கியத்தில் ஒரு பாவினத்தின் பெயர். இப்பாவினத்திற்குத் தற்பொழுதுள்ள பண்புகள் புலவர்கள் கையாண்ட முறையினாலும் மரபினாலும் வந்தவை. வீறுடைய நடை, உணர்ச்சி விரைவு, படிப்படியாகத் தொடர்ந்து விளக்கப்படும் கருத்து முதலியனவே அப்பண்புகள். ஆயினும் கிரேக்க இலக்கியத்தில் தோன்றி வளர்ந்த இந்த யாப்பு வகையில் முதற்கண் இக்கூறுகள் காணப்படவில்லை. பெரும்பாலும் சிறு சிறு செய்யுட்களையே இசைப்பா என்னும் பெயர் குறிப்பிட்டது. இது உணர்ச்சிப் பாடல் (Lyric) என்னும் செய்யுள் வகையில் முதலில் அடங்கியிருந்து, பின்பு தனியாகப் பிரிந்து, நாளடைவில் உயர்ந்த கருத்து, சொல்வளம், பொதுநோக்கம், பரந்த கட்டமைப்பு, பொருளை விளித்துப் பாடுதல் என்னும் சிறப்புத் தன்மைகளை ஏற்றது.

பல நூற்றாண்டுகளுக்குமுன் கிரீசில் சில பாக்கள் பின்னணி இசையுடனும் நடனத்துடனும் பாடப்பட்டன. இவற்றை ஆல்க்மன் என்பவர் தனிச் செய்யுள் வகையாக உருவாக்கினார். அவர்பின் வந்த ஸ்டெசிக்கோரஸ் என்பவர் இப்பாவினத்தை விரித்து முப்பகுதிகளாகப் பிரித்தார். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிண்டர் என்பவரால் இஃது அழகும் தோற்றமும் பெற்றது. அவரது இசைப்பாவில் முற்சுற்று (Strophe), எதிர்ச்சுற்று (Anti Strophe), நிலைப்பா (Epode) என்னும் முப்பகுதிகள் காணப்பட்டன. கோஷ்டி நடனத்துடனும் இசைக்கருவிகளுடனும் இவை பாடப்பெற்றன. முற்சுற்று என்னும் பகுதியில் நடனமாடுவோர் வலமிருந்து இடஞ்சென்றனர். எதிர்ச்சுற்றில் இடமிருந்து வலஞ் சென்றனர். இத்தொடர்பினால் இவ்விரு பகுதிகளும் ஒரே யாப்பமைப்பைக் கொண்டன. இறுதிப் பிரிவாகிய நிலைப்பா நின்று பாடப்பட்டது. இசையினாலும் நடனத்தினாலும் அந்நாளில் இப்பிரிவுகள் நன்கு புலனாயின. பின்னாளில் இசையும் நடனமும் வழக்கொழியவே,