பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

326

ஆங்கிலம்

சமூகச் சூழ்நிலையில் உள்ள கொடுமையையும் கெடுதல்களையும், கார்லைல், ரஸ்கின், டிக்கன்ஸ் முதலியோர் தம் கட்டுரைகளிலும் கதைகளிலும் எடுத்துக் காட்டினர். கவிதையிற் சிலர் முற்காலத்து முறைகளைப் புதுப்பித்துக் கையாளத் தொடங்கினர். இந்த முறை முதலில் ஓவியக்கலையில் கையாளப்பட்டது. இந்தக் குழுவைச் சேர்ந்த ரொசெட்டி (Rossetti) ஓவியம் எழுதியும், கவி எழுதியும் தம் கலைத்திறனை வெளியிட்டார். கவிஞர் சிலரும் இந்தக் குழுவைச் சேர்ந்தனர். இவர்களுள் முக்கியமானவர் ரொசெட்டியும் மாரிசும். தம் கால வாழ்க்கையையும் கலைக் கொள்கைகளையும் தவிர்த்து, முற்காலப் பண்புகளைக் கலைவாயிலாக வெளியிடுவதே இவர்களுடைய நோக்கம். 19ஆம் நூற்றாண்டில் இயற்கையைச் சித்திரிக்கும் முறை, காட்சியைப் படம் பிடிப்பது போன்ற போலி முறை. இது கலைக்கு ஒவ்வாதது என்று இவர்கள் நினைத்தார்கள். நேர்காட்சியும் விவரச்செறிவும் உள்ளதாய் ஓவியம் தீட்ட முயன்றார்கள். கவிதையிலும் இந்த இலட்சியங்கள் தென்பட்டன. ரொசெட்டி முதலில் எழுதிய பேறுபெற்ற மங்கை (The Blessed Damozel) என்ற பாடலின் கதை, காதற்பாடல், வருணனை ஆகிய அனைத்திலும் இந்த நேர்காட்சியையும் விவரச் செறிவையும் காணலாம். சிலவிடங்களில் பொதுப்படவும், சிலவிடங்களில் நுட்பமான விவரங்களுடனும் சித்திரிக்கும் பாவனை ஒருவகைப் புதுமையுள்ளதாயிருந்தது. பல சானட்டுக்களையும் மத்திய கால (13வது முதல் 16ஆம் நூற்றாண்டுவரை உள்ள கால) இலக்கிய வடிவுகளை ஒத்த கதைப் பாட்டுக்களையும் அவர் எழுதினார்.

மாரிஸும்,தம் காலப்போக்கை எதிர்க்கும் கொள்கைகளைத் தழுவியிருந்தார். ஒரு வினைஞன் கையால் ஒரு பொருளை அழகுபெறச் செய்து முடிக்கும் முறையே எந்திரப்பொருள் உற்பத்தியைவிட மேலானது என்ற கொள்கையுடன் கைவேலைத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தினார். தம் கால வாழ்க்கை கவிதைக்கு ஏற்றதன்று என்று நினைத்து, மத்திய காலத்தையும் புராதன காலத்தையும் சார்ந்த கதைகளைப் பாடலாக அமைத்தார். அவர் முதலில் எழுதிய பாடல் ஒன்று டெனிசன் எழுதிய ஆர் தர் கதையையே தழுவியதெனினும், கருத்தில் டெனிசனுக்கு மாறாகத் தோற்றுவது. ஆர்தரின் மனைவி குவினவிர் (Guinevere), தன் கணவனது வலக்கை போன்ற லான்சிலாட் என்னும் வீரன் மீது காதல்கொண்டு, நெறிதவறி நடந்ததே ஆர் தருடைய வீரர்கள் சிதறிப்போய் நாடு பாழானதற்குக் காரணம் என்று டெனிசன் நீதி ஒதுவதை மாரிஸ் மறுத்தார். காதல் வயப்பட்ட குவினவிரின் உள்ளப் போராட்டமும் சோகமுமே கவிதைக்குரிய விஷயம் ; சமூக நீதியை விளக்குவதன்று என்ற கருத்து அவர் கவிதையில் தொனித்தது. எனினும், மாரிஸ் பிறவியில் பெருங்கவி அல்லர். அவர் எழுதிய சிகர்டு (Sigurd) என்ற காவியத்தின் சில பகுதிகளும், சில எளிய பாடல்களும் இன்றும் பாட்டுத் தொகுதிகளில் இடம் பெறுகின்றன. ஆனால் அவர் கவிதையிற் பெரும்பகுதி படிப்போர் மனத்தைக் கவரவில்லை. பாடலிலும், உரைநடையிலும், கைத்தொழிலிலும், சமூக இலட்சியங்களிலும் புதிய எழிலை அமைக்க விரும்பி, வாழ்நாள் முழுவதும் பல துறைகளில் ஈடுபட்ட மாரிஸ் தம் கவிதையைப்பற்றி அடக்கமாகவே எழுதியுள்ளார்.

ஸ்வின்பர்ன், பிரான்சிஸ் தாம்சன் முதலியோரும், கவிதையில் தம் காலப்போக்கை எதிர்த்தவரே. விக்டோரியா காலச் சமூக நீதிகளை எதிர்ப்பதே தம் இலட்சியம் என்று ஸ்வின்பர்ன் இளமையில் நினைத்தார். பழைய

கிரேக்க இலக்கியமும், புதிய பிரெஞ்சுக் கவிதையும் அவர் உள்ளத்தைப் பண்படுத்தின. தாபமும் உணர்ச்சி வேகமும் சமூகம் கண்டிக்கும் தீய ஒழுக்கத்திலிருந்து கிளர்ந்தனவா யிருந்தாலும் கவிதையில் சிறப்பிக்கத்தக்கன என்ற கொள்கையை விளக்க அவர் பல பாடல்கள் எழுதினார். இவை புரட்சிகரமானவை என்று பிறர் கூறியது அவருக்கு மகிழ்ச்சியே தந்தது. இன்று அவர் பாடல்களின் சிறப்பு அவற்றின் கருத்தைப் பொறுத்ததாயில்லை. தீயவற்றைப் போற்றும் பண்பு இளமைச் செருக்கின் அறிகுறியாகத் தோன்றுகிறதேயொழிய, சில பிரெஞ்சுக் கவிதைகளைப் போல, மனத்தின் மறைவிடங்களை விளக்கும் ஒளிவாய்ந்ததா யிருக்கவில்லை. ஸ்வின்பர்ன் தம் பாடலில் சொல் ஆட்சியையும் ஓசை நலனையும் விளக்கினார். உணர்ச்சி மேலிடும் வேகமும் அதன் ஓய்வும் அலையோசையைப்போல அவர் எழுதிய அடிகளில் தொனிப்பதுண்டு. சில பாடல்களில் பொருள் மயக்கம் நேரும்படி ஓசை மேலோங்கியிருக்கும். பிற்காலத்தில் அவர் நாடகங்களும் நீண்ட காவியப்பகுதிகளும் எழுதினார். இன்று அப்பாடல் தொகுதி முழுவதையும் படிப்பவர் சிலரே. பிரான்சிஸ் தாம்சன் தம் கவிதையின் உள்ளுறையிலும் நடையிலும் 17ஆம் நூற்றாண்டுக் கவிகளுடன் தொடர்புடையவராயிருந்தார். தம் காலத்துக் கவிதை பொலிவற்றுத் தோன்றியதை மாற்ற, அவர் புதிய சொற்றொடர்களையும் உவமையணிகளையும் கையாண்டார். அவர் பாடலும் கருத்தும் 17ஆம் நூற்றாண்டின் அனுபூதிக் கவிதைகளை ஒத்திருந்தன.

தாம்சனை நட்புடன் ஆதரித்த ஆலிஸ் மேனல், ரொசெட்டியின் சகோதரி கிரிஸ்டினா முதலியோர் அனுபூதிப் பாடல் வகையிலும், ப்ரான்டே சகோதரிகளுள் எமிலி வேறு வகையிலும், சிறந்த் பாடல்கள் எழுதிய பெண்மணிகள். இவர்களுடன், பிரௌனிங்கின் மனைவியான எலிசபெத் பாரெட் பிரௌனிங்கையும் சேர்த்து, இக்காலத்தில் பெண் கவிகள் தோன்றிச் சிறப்புற்றனர் என்று சொல்வதுண்டு. இம்மாதர்கள் கவிவன்மை வாய்ந்தவரே. ஆனால் புதிய கருத்துக்களையோ, அமைப்பையோ கவிதையில் தோற்றுவித்தவரல்லர்.

செல்வம் தேங்கிச் செருக்குற்ற விக்டோரியா காலத்தின் மகிழ்ச்சி 19ஆம் நூற்றாண்டு முடியுமுன்னமே சிதைந்துவிட்டது. எழுத்தாளரும் கலைஞரும் சலிப்பையே வெளியிடலாயினர்.“வாழ்க்கையை ஒட்டியதாகக் கலை இருக்கவேண்டியதில்லை. அழகுணர்ச்சிக்கும் தீரத்துக்கும் இடமளித்த முற்காலத்திலேயே இப்பொருத்தம் சாத்தியமானது. எந்திர ஆட்சி மேலோங்கி, இலட்சியங்கள் சிதைந்த தற்காலத்தின் கலை, வாழ்க்கையை ஒட்டாமலிருப்பதே தகும். தன் சூழ்நிலையினின்றும் ஒதுங்கித் தான் காணாத அழகைக் கற்பனையால் சிருஷ்டிக்க வல்லவனே கவி” என்றெல்லாம் ஒரு சாரார் கூறினர். அமெரிக்காவில் போ (Poe)வும், இங்கிலாந்தில் பேட்டர், வைல்டு முதலிய எழுத்தாளரும் இவ்விதப் பிரசாரம் செய்தனர். இதற்கு மாறாகவும் ஒரு கொள்கை தோன்றியது. ”வாழ்க்கைக்கு வரை காண முடியாதென்பதைத் தற்காலக் கவி உணர்ந்தவன். இயற்கையின் விந்தையும், எந்திரங்களின் பயனும், ஜனநாயகக்கொள்கைகளும், உள்ளத்தின் மறைந்த பண்புகளும், உலகத்தில் உள்ளவை அனைத்துமே கவிதையின் உள்ளுறையாகத் தக்கவை. வரம்பின்றிப் பரந்து தோன்றும் வாழ்க்கையின் பண்புகளை, வரம்பு கடந்த கட்டுப்பாடற்ற கவிதையிலே தோற்றுவித்தல் கூடும்” என்ற ஒரு கோட்பாடும் வழங்கியது. இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் விட்மன் பாடல்களையும், இங்கிலாந்தில்