பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

327

ஆங்கிலம்

அந்தப் போக்கில் எழுதப்பட்ட பாடல்களையும் குறிக்கலாம்.

டெனிசன் காலத்திலிருந்து தற்காலம்வரை உள்ள கவிதையின் பண்புகளைத் தொகுத்துக் கூறுவது சாத்தியமன்று. இதற்கு ஒரு காரணம் இது தற்காலத்தைச் சார்ந்திருப்பதே. அண்மையில் தென்படும் நுட்பமான விவரங்களும் வேறுபாடுகளும் மறைந்த பின்பு தொலைவிலேயே பொது லட்சணங்களின் சாயல் விளங்கும். வாழ்க்கையிலும் கலையிலும் இதுவரையில்லாத மாறுதல்களும் புதுமைகளும் தோன்றிய இக் காலத்தில், ஒவ்வொரு கவியும், எம்மட்டும் இப் புதுமையைத் தன் கற்பனையில் பிரதிபலிக்கச் செய்து, கவிதையில் உருவாக்கினான் என்று கூறுவது. பல கவிகளின் இலக்கிய வரலாற்றைத் தனியாகக் கூறும் நீண்ட ஆராய்ச்சியாய் முடியும். இது இயலாதாகையால், இக் கவிதைத் தொகுதியைப் பொதுப்பட மூன்று இனங்களாகப் பிரிக்கலாம்: புதிய கருத்துக்களைத் தோற்றுவித்து, அமைப்பில் மரபுடன் தொடர்பு கொண்டு விளங்கும் கவிதை ; புதுமைக்குரிய சின்னங்களைக் கொண்டு தனி உருப்பெறாத கவிதை ; புது முறையின் இலக்கணங்களை விளக்கிக் காட்டும் கவிதை. மரபை ஒட்டியும் வெட்டியும் உள்ள பாடல்களில் கவிதைச்சிறப்பு வாய்ந்தன. வாயாதன என்ற வேற்றுமையும் முக்கியமானது. கடைசி இனத்தைச் சார்ந்த கவிதைகள் நாளடைவில் அழிந்து போவன ; தோன்றி நாளாகாததால் இன்னும் நிலைத்திருக்கின்றன. அவற்றைச் சுட்டுவது ஆராய்ச்சியாளர் தம் சொந்தக் கருத்தை வெளியிடுவதேயாகும்.

தற்காலக் கவிதையை ஆராய்வதற்குச் சாதகமாக அதைக் கால அளவுகோலாலும் இரு கூறாக்கலாம். புது முறைக்குச் சான்றாக விளங்கும் டி. எஸ். எலியட் எழுதிய பாழ் நிலம் (The Waste Land) என்னும் புகழ் பெற்ற பாடல் 1922-ல் வெளியிடப்பட்டது. இது வெளிவந்ததையே ஓர் எல்லையாகக் கொள்ளலாம். டெனிசன் காலத்துக் கவிதைப் போக்கிலிருந்து மாறுதலை விரும்பியவர் பலவிதங்களில் புதுமையை நாடிய காலம் அதற்கு முற்பட்டதென்றும், தற்காலக் கவிதை தனி வடிவம் பெற்றுப் பல கிளைப்பட்டு வளரும் காலம் அதற்குப் பிற்பட்டதென்றும் கூறலாம். கவிகளின் பெயரால், முற்பகுதியை ராபர்ட் பிரிட்ஜிஸ் (Robert Bridges) முதல் எலியட்வரை உள்ள காலமென்றும், பிற்பகுதியை எலிய முதல் டிலன் தாமஸ் (Dylan Thomas) வரை உள்ள காலம் என்றும் குறிப்பிடலாம்; இவ்விதப் பிரிவினைகள் பொது ஆராய்ச்சிக்குத் துணைபுரிவன். பல பாடல்கள் இந்தப் பிரிவுகளுக்குள் அடங்காமல் தனிப் பண்புகள் கொண்டு விளங்குவதே கவிதையின் இயல்பு.

தற்காலத்தின் முற்பகுதியில் கவிதை எழுதியவரில் சிலர் பிரிட்ஜிஸ், ஹாப்கின்ஸ், ஏட்ஸ் (W. B. Yeats) ஆகியோர். பிரிட்ஜிஸ் பெரும்பாலும் மரபைத் தழுவிப் பாடல்கள் எழுதினார். அவர் எழுதிய இன்னிசைப் பாடல்கள் கருத்தும் ஒலியும் ஒத்து மிக்க அழகு வாய்ந்தவை.

“அழகின் தன்மையை விளக்குவதே தம்முடைய இலட்சியம். புலனுக்குத் தென்படுவதும், உணர்ச்சி வேகத்தில் ஒளிர்வதும் ஆகிய அழகுமட்டுமன்றி மனிதனது முயற்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் இலக்காவதும் அழகுதான். விஞ்ஞான அபிவிருத்தியும், போரும். அழகுக்கு முரண்பாடாகத் தோன்றும் வேறு நிகழ்ச்சிகளும்கூட, அழகின் இயல்பைத் தம்மில் கொள்வதாலேயே பெருமிதமடைகின்றன” என்று அவர் நினைத்தார். இந்தத் தத்துவத்தை விளக்கத் தம் வாழ்நாளின் கடைசியில் அழகின் சாசனம் (The Testament of Beauty) என்ற ஒரு நீண்ட கவிதை இயற்றினார் இந்தப் பாடலின் அமைப்பில், தற்காலக் கவிதையின், சின்னங்கள் சில தோன்றுகின்றன; முன்னாள் எழுதிய பாடல்களின் இனிமை பெரும்பாலும் காணவில்லை. கவி விரும்புவது எளிய கவர்ச்சி மட்டுமன்று ; தன் கருத்துக்கேற்ற வடிவம் அமைக்க முயல்வதும் ஆகும். எனினும் சில வேளைகளில் மட்டுமே அவன் இலட்சியம் நிறைவேறும் என்பதை இதற்கும் இவர் எழுதிய மற்றப்பாடல்களுக்கும் உள்ள வேற்றுமை ஒருவாறு விளக்குகிறது.

ஹாப்கின்ஸ் பிரிட்ஜிஸின் நண்பர். இவர் தற்காலக் கவிதையை முதலில் தோற்றுவித்தவர். இவர் ஒருகத்தோலிக்க மடத்தில், அதன் கட்டுப்பாடுகளுக்கடங்கி வாழ்ந்தார். சிந்தையை அடக்கும் பண்பாடும், வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து உணரும் உள்ளத்துடிப்பும் இவர் உள்ளத்தில் முரண்பட்டுத் தோன்றின. இந்த முரண்பாட்டை வெளியிட இவர் கவிதையில் புதுமுறைகளைக் கையாண்டார். வழக்கில் மெருகேறிய சொற்கோவையும் ஓசையும் இவர் கருத்துக்கு இசைந்தவையாகத் தோன்றவில்லை. அடியில் அசைகளின் மாத்திரையை எண்ணுவதில் ஒரு புதிய முறையைத் தழுவி, ஒரேயளவு கொண்ட ஈரடிகளுக்குள், கானத்தில் வேற்றுமைதோன்றும்படி செய்தது ஹாப்கின்ஸ் கையாண்ட புது முறைகளில் ஒன்று. உரைநடையின் இலக்கணக் கோவையைத் தவிர்த்துக் கவிதையில் சில சொற்களும் சொற்றொடர்களும் தனித்துத் தோன்றும்படி இவர் எழுதினார். இவ்வாறாகக். கவிதையின் ஓசையையும் வடிவத்தையும் மாற்றித் தாம் எழுதிய கவிதைகளையும், தாம் கையாண்ட முறைகளின் நோக்கத்தையும் பிரிட்ஜிஸுக்கு மாத்திரம் தெரிவித்தார். ஹாப்கின்ஸின் துணிவை ஓரளவே மெச்சின பிரிட்ஜிஸ் அந்தப் புதுமை மக்களுக்கு ஏற்காதென்றெண்ணித் தம் கைவசம் இருந்த ஹாப்கின்ஸின் பாடல்களையும் கடிதங்களையும் வெளியிடவில்லை. ஹாப்கின்ஸ் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின், பல கவிகள் புதுமையை நாடிக் கட்டுப்பாடற்ற கவிதை எழுதும் நாளில் இவர் அவற்றைப் பிரசுரித்தார். அதுவரை அவற்றை வெளியிடாததற்காகப் பிரிட்ஜிஸைக் குறை கூறிப் புது எழுத்தாளரும் ஆராய்ச்சியாளரும் ஹாப்கின்ஸைப் பாராட்டினர். இவர் பாடலும் கொள்கைகளும், கவி புதுமையை நாடும் உரிமையை நிலைப்படுத்தின.

ஏட்ஸ் பிறவிக்கவி ; வாக்கு வன்மையும் கற்பனைத் திறனும் மிக்கவர் ; இளமையில் பழைய முறைகளிலும், தம் வாழ்நாளின் பிற்பகுதியில் புது முறையிலும் எழுதியவர். புதிய வடிவிலும் கவிதை சிறப்புற்று விளங்கக் கூடும் என்பதை அவர் ஏற்று, இளங்கவிகளைப் பாராட்டித் தாமும் அக்கொள்கைகளைத் தழுவிக் கவிதை எழுதத் துணிந்து, புத்தெழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்தார். முதுமையில் அவர் எழுதிய பாடல்கள், அவருடைய ஆக்கவன்மை மூப்பறியாதது என்பதை விளக்கின. ஏட்ஸ் அயர்லாந்தில் பிறந்தவர்; அந்நாட்டில் நிகழ்ந்த சுதந்திரப்போராட்டத்துடனும், இலக்கிய மறுமலர்ச்சியுடனும் நெருங்கிய தொடர்புடையவர். ஆக்ஸ்பர்டு - தற்காலக் கவிதைத் தொகுதி (OxfordBook of Modern Verse) என்னும் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து தற்காலக் கவிகளைப்பற்றிய அவர் கருத்து ஓரளவு விளங்கும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலக் கவிதை வறட்சியையும் சலிப்பையுமே வெளியிட்டதென்றும், இதற்குக் காரணம் அது வாழ்க்கையுடன் தொடர்பற்றுப் போனதேயென்றும் அவர் கூறினார். சுதந்திரப் போராட்டத்திலும், இலக்-