பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

330

ஆங்கிலம்

(4) உரைநடையைப் போல ஒன்றைக் கூறிக் கவிதை முடிவு பெறுவதில்லை. கவிதையில் தோன்றும் மனத்தோற்றங்களும் சிந்தனைகளும் உயிர் பெற்றுத் தோன்றுவன.

இவை போன்ற கோட்பாடுகளைத் தழுவியே ஏட்ஸ் தாம் தொகுத்த தற்காலக் கவிதைத்திரட்டில் முதற்பாடலாக, பேட்டர் எழுதிய கட்டுரையிலிருந்து சில வசனங்களைத் தேர்ந்தெடுத்தார்.

தற்காலக் கவிகளுள் தலைமை வகிப்பவர் எலியட். அவர் எழுதிய பாடல்களை முதற்பாடல்கள், பாழ் நிலம் முதலிய பாடல்கள், அவர் கத்தோலிக்க மதக்கொள்கைகளை ஏற்றபின் இன்று வரை எழுதிய பாடல்கள் எனப் பிரிக்கலாம். அவர் முதலில் எழுதிய பாடல்கள் சிலவற்றில் பிரெஞ்சுக் கவிதையின் சாயலைக் காணலாம். பாழ் நிலம் என்ற கவிதையை எழுதிய பின், எலியட் ஐரோப்பியக் கவிகளின் முன்னணியில் சேர்ந்தவராய்ப் புகழ் பெற்றார். பல மொழி இலக்கியப் பகுதிகளும், விஞ்ஞானிகள் கண்ட உண்மைகளும், புராதனக் கற்பனைகளும், தற்கால நம்பிக்கைகளும், பயங்களும், கல்வி கேள்வியால் தாம் அறிந்த பண்புகள் பலவும் இந்தக் கவிதையின் வடிவில் தெரியும்படியாக எலியட் அமைத்தார். பலர் கேட்டறியாத குறிப்புக்கள் எங்கிருந்து ஆளப்பட்டன என்பதைக் கவிதைக்கேற்ற விளக்கமாய் உரைநடையில் குறித்தார். இவ்வாறு பல இடங்களில் பொறுக்கி எடுத்த கருத்துக்களின் சாயலைத் தன்னுட்கொண்ட இப்பாடல், இதுவரை வாழ்ந்த பல மாந்தரின் எண்ணங்களை அறியப்பெற்றும், தன்னுள் தடுமாற்றமும் ஏக்கமும் நிலவத்தோன்றும் தற்கால நாகரிகத்தை உருவகப்படுத்துகிறது. கல்வித் தேர்ச்சியுள்ளவரே இதன் நுட்பங்களை அறியக்கூடியவர். எனினும், இதன் அமைப்பும் கற்பனைத் திறனும், எவர் மனத்திலும் தம் சாயலைப் பிரதிபலிக்கச் செய்வன. செதுக்கிய வைரத்தின் ஒரு கோணத்திலிருந்து மற்றொரு கோணத்துக்கு ஒளி பாய்வதுபோல் இந்தப் பாடலை ஊடுருவி நிற்கும் கருத்துப் பாழ்பட்டு உருச்சிதைந்து போவதே இக்காலத்தின் பிம்பங்கள் என்பன. பாடலில் அழகும் பெருமிதமும் மேலிடும் அடிகள் திடீரென்று சிதைந்து போவதாலும் வேறு வகைகளாலும் பாட்டின் அமைப்பிலேயே இக்கருத்துத் தோன்றுகிறது. இந்தப் பொருத்தத்தை எடுத்துக் கூறி விளக்க முடியாது. மனிதரின் ஏக்கத்துக்கும் ஒரு பெருமிதமுண்டு. அதையும் இழந்து, ஏக்கம் சிதைவுண்டு சிறுமைப்படுவதை எலியட்டின் பாடல்கள் தொனிக்கச் செய்கின்றன. இந்த வழியில் மேற்செல்ல வகையின்றி எலியட் கத்தோலிக்க மதக் கொள்கைகளில் திட நம்பிக்கையை நாடினார். அதன்பின் அவர் எழுதிய பாடல்களும் புது அமைப்புப் பெற்றன. ஆனால் குறிப்புணர்த்தும் உவமைகளும் அணிகளும் முன்னளவு கவிதையில் வரவில்லை. சொல்லாட்சியில் தெளிவும் எவ்விதப் படாடோபத்தையும் துறக்கும் பண்பும் தோன்றுகின்றன. எலியட்டின் கவிதை ஓசை கருத்துக்கேற்றபடி மாறிப் பாடலில் அவருடைய முத்திரை போன்று அமைந் துள்ளது.

கவிதை முறையில், எஸ்ரா பவுண்டு தமது குரு என்று எலியட் கூறினார். ஆனால் பவுண்டு எழுதிய பாடல்கள், எலியட் கவிதையைப் போலப் பலர் மனத்தையும் கவரவில்லை. அவர் சீனக்கவிதை, லத்தீன் கவிதை முதலிய பலமொழிப் பாடல்களிலும் திண்ணிய கருத்தும் குறிப்புணர்த்தும் பாவனையுள்ள அமைப்பும் பொருந்திய பகுதிகளைப் பாராட்டினார்; சிலவற்றை மொழிபெயர்த்தார். 'செறிவே கவிதையின் அவற்றில் அழகு. விவரித்து விளங்கவைத்தல் கவிதைக்குரிய பாவனையைப் பங்கப்படுத்துவது' என்று கொண்டு இவர் எழுதிய பாடல்கள் அரிதிற்பொருள் விளங்குவதாய் அமைந்துள்ளன. இவர் ஒருவர் மட்டுமன்றி, எம்சனும் இன்னும் சிலரும் சிலவிடங்களில் அரிதில் பொருள் தோன்றும் கவிதை எழுதினார்கள். பொருள் விளங்காதிருக்க ஏழு காரணங்கள் உண்டு என்று எம்சன் எழுதினார். எலியட்டைத் தலைவராகப் பாராட்டிய பல கவிகளும் தம் பாடல்களில் தனிப்பண்புகளைத் தோற்றுவிக்க முயன்றார்கள். இவர்களுள் ஈடித் சிட்வெலும் ஆடெனும் கவிதையில் புதிய பிரிவினைகளை உண்டாக்கினார்கள் என்று சொல்லலாம்.

ஈடித் சிட்வெல் செல்வமும் கல்வியும் வாய்ந்த குடும்பத்தில் பிறந்த அம்மையார். அவருடைய சகோதரர் இருவரும் எழுத்தாளர்; கவிகள். ஆனால் ஈடித் சிட்வெல் தான் அவர்களுள் கவிவன்மையில் சிறந்தவர். உருவற்ற முறையில் எழுதப்பட்ட சில தற்காலப் பாடல்களைப் பழித்தும், போப் காலக் கவிதையைப் பாராட்டியும் அவர் எழுதினார். “மனத்தில் தோன்றியபடி யெல்லாம் எழுதப்படுவது கவிதையன்று ; ஒரு முறையுடனும் அளவுடனும் ஆக்கப்படுவதே கவிதை. இந்த விதியைப் போப்பும் அவர் காலத்தவரும் பாராட்டினர். 19ஆம் நூற்றாண்டில் கவிகள் பாராட்டிய உணர்ச்சி வேகத்தில் இந்த விதி அழிந்துபோயிற்று. அது கவிதைக்குப் பெருங் கேடாக முடிந்தது” என்று அவர் விமரிசனம் செய்தார். ஈடித் சிட்வெலின் கவிதை தேர்ந்து ஆக்கப்பட்டதே. ஆனால் சிலவிடங்களில் அதன் பொருள் பிம்பம் போல் தோன்றுவதன்றி, ஒரு கோவையாக விளங்குவதில்லை. இவர் ஹாப்கின்ஸைப்போல மொழிகளைப் புதுமுறையில் கையாண்டார். ஒரு மொழியின் ஒலியைப் பின்பற்றிப் பிறமொழிகளை வருவிக்கும் முறையை இவர் பாடலில் காணலாம். ஒலி, எதிரொலி, பிம்பம், பிரதிபிம்பம் என்ற பல புதிய தொடர்புகளை அமைத்து இவர் கவிதை எழுதினார். இவர் தோற்றுவித்த பண்புகளை வேறு சிலரும் கையாளத் தலைப்பட்டனர்.

எலியட்டுக்கு அடுத்தவராக, இளங் கவிகளுக்குத் தலைவர் என்று ஆடென் பெயர்பெற்றார். மக்நீஸ், டே லூயி, ஸ்பெண்டர் முதலியோர் ஆடென் குழுவைச் சேர்ந்தவர். இவர்கள் எலியட்டின் கவிதைப் பெருமையைப் பாராட்டுபவரே ; எனினும் இவர்களின் மனப்பான்மை எலியட்டுக்கு மாறானதாயிருந்தது. பல ஆண்டுகளாக எழுத்தாளர் மனத்தில் இருண்டு திரண்ட சலிப்பை எலியட் உருவகப்படுத்தினார். அதன்பின் அந்தச் சலிப்பின் வன்மை குறைந்தது. ஆடென் முதலியோர் தற்கால நாகரிகத்தை முற்றிலும் வெறுக்கவில்லை. பழையன கழிந்து புதியன தோன்றும் இடைக்காலம் அது என்று கொண்டனர். பல மக்களும் ஏற்கக்கூடியதாயும், சமூக இலட்சியங்களின் போக்கை எடுத்துக் காட்டுவதாயும் கவிதை இருக்கவேண்டுமென்று நினைத்தனர். இளமையில் இக்கவிகள், ஸ்பெயினில் பொதுஉடைமைக் கட்சியாரின் வெற்றியை விரும்பியவர்; அரசாங்க சமூகப் பிரச்சினைகளில் ஒரு கட்சியில் சேர்ந்து வாதித்தவர். எனவே கவிஞன் உள்ளத்தைப் பிரதிபலித்து, அவனுக்கே தன் முழுக்கருத்தையும் தெரிவிக்கும் கவிதையை இவர்கள் விரும்பவில்லை. போரையும், ஆகாயவிமானங்களையும், விமானியின் தீரத்தையும், தம் சூழ்நிலையின் வெளித் தோற்றங்கள் பலவற்றையும் கவிதைக்கு உள்ளுறையாகக் கொண்டனர். அரிய சாதனைக்கேற்ற விஞ்ஞான அறிவு பெருகியும், பொதுமக்களின் வாழ்க்கையில் இடையூறுகளும், அச்சமும், அற்ப சந்தோஷமுமே தோன்று-