பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசந்தி

334

ஆசியா

உண்டாகும் செல்வங்களில் சிறந்தவை. ஆச்சா பெரிய மரம். கூட்டமாக வளர்வது. 100-150 அடி உயரம் வளரும். 20-25 அடி சுற்றளவு உள்ள மரங்கள் உண்டு. 60-80 அடி வரையிலும் கிளைகளில்லாது ஓங்கி நிற்கும் அடி மரங்கள் உள்ளவையும் உண்டு. 60-80 அடி உயரமும், 6-8 அடி சுற்றளவும், 30-40 அடி கிளையில்லா அடிமரமும் உள்ளவற்றைச் சாதாரணமாகக் காணலாம். வெட்டு மரத்தின் வெளிப்புற மென்பகுதி உரமில்லாதது. உட்புற வைரம் பழுப்பு நிறமானது ; கடினமானது. இலை 6-10 அங்குல நீளமிருக்கும். தனியிலை, முழு இலை. பூக்கள் இலைக் கணுச்சந்தில் அல்லது கிளை நுனியில் பெருங்கொத்தாக வளரும். புறவிதழ்கள் கனி வளரும்போது உடன் வளர்ந்து இறக்கைகள்போல இருக்கும். 3-4 அங்குல நீளமிருக்கும். அகவிதழ்கள் உள்ளே கிச்சிலி நிறமாக இருக்கும். கேசரங்கள் 25-30. சூலகம் 3 அறையுள்ளது. அறைக்கு இரண்டு சூல்கள் இருக்கும். கனியில் ஒருவிதை யிருக்கும். வெடிக்காத கனி. மரம் மார்ச்சு ஏப்ரில் மே மாதங்களில் பூக்கும். விதை ஜூன்-ஜூலையில் முற்றும்.

இந்த மரத்தில் வெண்மையான, மணமுள்ள சாம்பிராணி போன்ற ரெசின் உண்டாகின்றது. மரம் பலவிதமாகப் பயன்படுகிறது. ரெயில்வேத் தண்டவாளத்துக்கு அடியில் போடும் கட்டைகள் பெரும்பாலும் இந்த மரத்தினவே.

இந்தியாவில் இமயமலை யடிவாரத்திலும், மத்திய இந்தியா, ராஜமகால், சோட்டா நாகப்பூர், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, வடசர்க்கார் இவற்றிலும் வளர்கிறது.

ஆசந்தி (Cassiopia) : இதைக் காசியபி (அதாவது காசியப முனிவரின் மனைவி) என்றும் கூறுவர். இது வடக்கே W என்ற உருவத்தில் காணப்படும் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட மண்டலமாகும். இதை மேனாட்டார் காசியோப்பியா (செபீயஸ்) மனைவி என்றும், நாற்காலி நங்கை என்றும் கூறுவர்.

ஆசார்ய ஹ்ருதயம் அஷ்டாதச ரகசியம் அருளிச்செய்த பிள்ளை லோகாசாரியருடைய தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இயற்றியது. இது நம்மாழ்வாருடைய பெருமை, அவர் அருளிய திருவாய்மொழி முதலிய நூல்கள், ஏனைய ஆழ்வார்கள் அருளிய நூல்கள் ஆகியவற்றின் பெருமை, அவற்றின் முக்கியக் கருத்துக்கள் இவற்றை விளக்கும் நூல். பொதுவாக நம்மாழ்வாருடைய திருவாய்மொழியிலுள்ள பலவகைக் கருத்துக்களையும், அவற்றைப் பாடிய ஆழ்வாருடைய மனநிலையையும் ஆராய்ந்து கூறும் ஒரு சிறந்த ஆராய்ச்சி நூலென்றே இதனைக் கூறுதல் வேண்டும். இந்நூல் நான்கு பகுதிகளாக உள்ளது. இதன் ஆசிரியர் பெரும்பாலும் ஆழ்வார் பாசுரங்களின் அடிகளையும் தொடர்களையும் இடையிடையே தம்முடைய சில சொற்களைக் கொண்டு இணைத்து இந்நூலை ஆக்கியிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. ஆ. பூ

ஆசாரக் கோவை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. பெருவாயின் முள்ளியார் இயற்றியது. ஆசாரங்களைக் கூறும் பலவகை வெண்பாக்கள் நூற்றொன்று உடையது.

ஆசியச் சங்கம் (The Asiatic Society) 1784-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் வங்காளத்து ராயல் ஆசியச் சங்கம் என்ற பெயரால் நிறுவப்பெற்று, இப்போது ஆசியச் சங்கம் என்னும் பெயரால் கல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இருபத்தொரு வயதான எல்லா நாட்டு மக்களும் உறுப்பினராகலாம். கௌரவ உறுப்பினர்களும் உண்டு. நூல்நிலையங்கள், விஞ்ஞான ஸ்தாபனங்கள் முதலியனவும் இதில் உறுப்பினராகலாம். ஆண்டுதோறும் 'ஆண்டு நூல்' ஒன்றும், 'கால் ஆண்டு இதழ்' ஒன்றும் வெளியிடுகின்றனர். இவை தவிர நூல்களும் வெளியீடுகிறார்கள். இச்சங்கத்தின் நோக்கம் ஆசியா என்னும் பூகோள எல்லைக்குள் மனிதனால் செய்யப்படுவதும் இயற்கையில் உண்டாவதுமான எதையும் ஆராய்வது என்பதாம்.

ஆசியா கண்டங்களில் பெரியது. அனேகவிதத் தட்ப வெப்ப நிலைகளையும் நில வகைகளையும் கொண்டது. உலகிலுள்ள மக்களில் பெரும் பகுதியினர் இங்கேயே வசிக்கிறார்கள். சைபீரியாவில் மிகுந்த குளிரும், இந்தியா முதலிய பகுதிகளில் மிகுந்த வெயிலும், மழை சொட்டுக்கூடப் பெய்யாத அரேபியா, மத்திய ஆசியாப் பாலைவனங்களும், மிக அதிகமாக மழை பெய்யும் சிரபுஞ்சியும், மிக உயரமான எவரஸ்ட் முதலிய சிகரங்களையுடைய இமயம் முதலிய மலைகளும் இக்கண்டத்தில் உண்டு. காசி, மக்கா, எருசலேம், கயா, இராமேசுவரம் போன்ற புண்ணியத்தலங்கள் இக்கண்டத்திலேயே உள். இந்துமதம், பௌத்தம், ஜைனம், இஸ்லாம், கிறிஸ்தவம்,கன்பூஷியமதம், சாரதூஷ்டி மதம் முதலிய பெரிய மதங்கள் இக் கண்டத்தில் தோன்றியவையே. மக்கள் தொகை மிக அடர்த்தியான இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும், மிகக் குறைந்த மத்திய அரேபியா முதலிய பகுதிகளும் உடையது.

பரப்பு ஏறத்தாழ 180 இலட்சம் ச. மைல். ஆப்பிரிக்காக் கண்டத்தைப்போல 1 மடங்கு பெரியது; வடதுருவத்திலிருந்து பூமத்தியரேகை வரையில் படர்ந்துள்ளது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே யூரல் மலைகள், காஸ்பியன் கடல், கருங்கடல், டார்டனல்ஸ் ஜலசந்தி ஆகியவைகளும், ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையே சூயஸ் கால்வாய், செங்கடல், பாபல்மான்டெப் ஜலசந்தி, அரபிக்கடல் ஆகியவைகளும் உள்ளன. அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையே உலகிலேயே பெரிய சமுத்திரமாகிய பசிபிக் சமுத்திரம் இருக்கிறதாயினும் வடகிழக்கு ஆசியாவையும் வடமேற்கு அமெரிக்காவையும் குறுகிய பேரிங் ஜலசந்திதான் பிரிக்கிறது. ஐரோப்பியக் கடற்கரையைப் போல ஆசியக் கடற்கரை நல்ல துறைமுகங்களுக்கு ஏற்றதாக இல்லை.

'உலகத்தின் கூரை' என்று சொல்லப்படும் பாமீர் பீடபூமி இந்தியாவிற்கு வடமேற்கேயுள்ளது. இப்பீடபூமி முழுவதும் கடல் மட்டத்திற்கு 10,000 அடி உயரத்திற்குமேல் இருக்கிறது. இப் பீடபூமிக்குத் தெற்கேயுள்ள இமயமலைத்தொடரில் உலகிலேயே மிக உயரமான உச்சியாகிய எவரஸ்ட் உச்சி (29,002 அடி) இருக்கிறது. பாமீருக்குக் கிழக்கேயுள்ளது காராகோரம் மலைத்தொடர். இவ்வாறு இடையிடையே மலைத்தொடர்கள் இருப்பதால் ஆசியாவின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒருவர்க் கொருவர் அதிகத் தொடர்பின்றி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

திபெத்து, மங்கோலியா, சின் கியாங் முதலிய நாடுகள் மத்திய ஆசியாவிலும், சோவியத் ரஷ்யாவிற்குச் சொந்தமான சைபீரியா முழுவதும் வட ஆசியாவிலும், ஜப்பான், கொரியா, சீனா, பிலிப்பீன் தீவுகள் முதலியவை கிழக்கு ஆசியாவிலும், இமயமலைக்குத் தெற்கேயுள்ள இந்தியா, பர்மா, மலேயா முதலியவை தென் ஆசியாவி-