பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசியா

335

ஆசியா

லும், அரேபியா,பாரசீகம், துருக்கி முதலியவை தென் மேற்கு ஆசியாவிலும் உள்ள நாடுகள். ஓபு, ஆமூர், யாங்க்ட்ஸீ, மேகாங், ஐராவதி, பிரமபுத்திரா, கங்கை, சிந்து, டைக்ரிஸ், யூப்ரடீஸ், கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவை ஆசியாவின் முக்கிய ஆறுகள். இந்த ஆறுகளின் கரைகளில் உள்ள நாடுகள் உலகிலேயே மிகச் செழிப்பானவற்றில் சில.

பாரசீகத்திலும், அரேபியாவிலும், ஈராக்கிலும், பர்மாவிலும் மண்ணெண்ணெய்க் கிணறுகள் மிகுதியாக இருக்கின்றன. வட சீனா, கொரியா, சைபீரியாப் பகுதிகளில் இரும்பு கிடைக்கிறது. சீனாவில் ஏராளமாக நிலக்கரி கிடைக்கிறது. ஜப்பானில் நிலக்கரி கிடைப்பதால் அது ஒரு முக்கியமான கைத்தொழில் நாடாக விளங்குகிறது. இந்தியாவில் நிலக்கரி குறைவாயினும் இரும்பு ஏராளமாகக் கிடைக்கிறது. இந்தியாவிலுள்ள இரும்புத் தொழிற்சாலைகள் உலகப்புகழ் பெற்றவை. இந்தியாவிலும் பர்மாவிலும் வைரம், மாணிக்கம் முதலிய கற்கள் கிடைக்கின்றன. ஆசியாவின் மக் : சு. 140 கோடி (1931). மஞ்சள் நிறமுடைய மங்கொலாயிடுகளும், கரு நிறமுடைய திராவிடர்களும், சிலாவிக், அயினு முதலிய இனத்தவர்களும் ஆசியாவில் உள்ளனர். ஆசிய மக்களுடைய வாழ்க்கைத்தரம் ஐரோப்பிய, அமெரிக்க மக்களுடைய வாழ்க்கைத்தரத்திற்குக் குறைந்ததாக உள்ளது. ஆயினும் இக்கண்டத்தில் வாழும் மக்கள் மூளையாலும் உடலாலும் மிகுந்த வேலை செய்யக்கூடியவர்கள். ரசாயனம், வானவியல், இயற்கணிதம் முதலிய கலைகள் பிறந்த கண்டம் இது.

விவசாயம் பெரும்பாலும் ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலும் நடைபெறுகிறது. கிழக்கு ஆசியாவின் முக்கிய உணவுத்தானியம் அரிசி; பல பகுதிகளில் கோதுமையும், சோயா அவரையும், பருத்தியும், எண்ணெய் வித்துக்களும் விளைகின்றன. மலைகளிலும் அடுக்கு நிலச்சாகுபடி (த.க.) முறையைக் கையாண்டு, உணவுத்தானியங்களை உற்பத்தி செய்கின்றனர். கிழக்கு ஆசியாவிலும், அஸ்ஸாமிலும், இலங்கையிலும் தேயிலை ஏராளமாகப் பயிராகிறது. சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் தேயிலைப் பானப் பழக்கம் அதிகம். மற்றெந்தக் கண்டத்தையும்விட ஆசியாவில்தான் மரக்கறி உணவு உண்பவர்கள் அதிகம். வங்காளத்தில் விளையும் சணல், மலேயாவில் உண்டாகும் ரப்பர், தென்னிந்தியாவில் விளையும் மிளகு, இலவங்கம் முதலியவை ஆசியாவிற்கே பெரும்பாலும் உரியவை. சோவியத் ரஷ்யாவிற்குச் சொந்தமான சைபீரியாவில் விஞ்ஞானமுறை விவசாயம் கையாளப்படுவதால் ஏராளமான உணவுத்தானியங்கள் சில ஆண்டுகளாக உற்பத்தியாகின்றன.

புலி, ஓநாய், பாம்புகளும், மயில், கிளி முதலிய பல வகைப் பறவைகளும், ஒட்டகம், குதிரை, யானை முதலியவையும் இக்கண்டத்திற் காணப்படுகின்றன. சிங்கம் ஆப்பிரிக்காவிற்போல அவ்வளவு அதிகமாக இங்கில்லை.

ஜப்பான், சோவியத் ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளைத்தவிரப் பிற நாடுகள் கைத்தொழிலில் முன்னேறவில்லை.

இந்தோ ஐரோப்பிய, அயினு, திராவிட, செமிடிக், ஜப்பானிய, யூரல்ஆல்டேயிக் மொழிவகைகள் ஆசியாவில் பேசப்படும் மொழிகளில் தலையாயவை.

டோக்கியோ, பீக்கிங், கான்டன், ஷாங்காய், கல்கத்தா முதலியவை மிகப் பெரிய நகரங்கள். பம்பாய் ஓர் அழகிய இயற்கைத் துறைமுகம். சென்னை நகரில் உள்ள கண் கவர் தோற்றமுடைய கடற்கரை உலகப் புகழ் பெற்றது.

ஆசியா மிகப் பண்டைய வரலாறுடையது. ஆசிய நாகரிகம் மிகப் பழமையானது. எகிப்தும் கிரீசும் நீங்கலாக, ஏனைய பண்டைய நாகரிகங்கள் எல்லாம் ஆசியாவிலுள்ள சீனா, மெசபொடேமியா, பாலஸ்தீனம், சிரியா, பாரசீகம், இந்தியா முதலிய நாடுகளிலேயே வளர்ந்தன. இந்தியாவில் வேதகாலம் என்பது கிறிஸ்துவிற்குப் பல நூற்றாண்டுகட்கு முந்தியது. மகா அலெக்சாந்தர் காலத்திலிருந்தே ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் தொடர்பு ஏற்பட்டதாயினும், 14-15ஆம் நூற்றாண்டுகட்குப் பின்னரே ஐரோப்பிய நாடுகளின் கடல் வாணிபத்தின் பயனாக இரு கண்டத்தவர்க்கும் தொடர்பு மிகுந்து வந்தது. ஆசியாவிலுள்ள நாடுகளைப் பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க.

மானிடவியல்: தென்கிழக்கு ஆசியா: மக்கள் இனவியலின்படி பார்த்தால், தென்கிழக்கு ஆசியாவிலுள்ள சமூகங்களின் பண்புகள் இப்பொழுதும் இதற்குச் சற்று முந்திய காலத்திலும் பல அமிசங்களைப் பொறுத்தனவாகவே உள. இந்த அமிசங்கள் சில வேளைகளில் முரண்பட்டும், சில வேளைகளில் முரண்படாமலும் இருந்திருக்கின்றன. இந்தப் பகுதியிலுள்ள நாடுகள் தூரத்தாலும் சீதோஷ்ண நிலைமையாலும் வேறுபட்டிருப்பினும், ஆதிக்குடிகளின் பண்பாடுகள் பெரும்பாலும் அதிக வேறுபாடுகளற்றவையாகவே தோன்றுகின்றன. இப்போது இந்தியாவிலும் இந்தோனீசியாவிலும் சீனாவிலும் நாகரிகம் எளிதில் எட்ட முடியாத இடங்களில் வாழும் மக்களுடைய இன்றைய நிலைமையைக் கவனித்தால், வரலாற்றுக் காலத்துக்கு முன்னிருந்த சமூகங்கள் அரசியல் விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும் பெரும்பாலும் வேறுபாடில்லாமல் இருந்திருப்பவையாகவே தெரிகின்றன. ஒவ்வொரு சமூகமும் தனக்கு ஏற்பட்ட பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குத் தக்கவாறு அமைப்புக்களை உண்டாக்கிக் கொண்டிருந்திருக்கிறது. அவ்வாறே சீனாவிலும் தாய்லாந்திலும் ஜாவாவிலும் விசாலமான பொருளாதார ஏகாதிபத்தியங்கள் தோன்றியிருந்தன.

ஆயினும், சமூகங்களிடையே ஓரளவு வேறுபாடுகள் காணப்பட்டன. சமூகங்களுக்கிடையே உண்டான உறவுகள் அவ் வேறுபாடுகளைக் குறைத்தன. தென் கிழக்கு ஆசியாவின் வரலாறும், வரலாற்று-முன்னும் இன்னும் நன்றாக அறியப்படவில்லை. ஆயினும் அப்பகுதியிலிருந்த மக்கள் குழுக்களிடையே பண்பாட்டு உறவுகளும் மக்கட்கலப்பும் நிறைய இருந்து வந்திருக்கின்றன. மத்திய சீனாவின் சீதோஷ்ண நிலைமை மாறிய காலத்தில் மக்கள் கூட்டமாகத் தெற்கு நோக்கியும் தென்கிழக்கு நோக்கியும் இடம் பெயர்ந்துளர். சில வேளைகளில் உணவுத் தட்டுப்பாடும் மக்களின் இடப் பெயர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. சீனர்கள் தென்கிழக்கு நாடுகளை அரசியலிலும் பொருளாதாரத்திலும் தம் வயப்படுத்த முயன்றதாலும் தொடர்பு உண்டாவதற்குஏது உண்டாயிற்று. இந்தியாவிலும் தாய்லாந்திலும் இந்தோனீசியாவிலும் முதலில் இந்து மதமும், பின்னர் பௌத்த மதமும் விரைவாகப் பரவியதாலும் பண்பாட்டு உறவுகள் உண்டாயின. அதுபோலவே முஸ்லிம் உறவுகள் இந்தோனீசியாவில் உண்டாயின. இறுதியாகவுள்ள காலம் ஐரோப்பியர்கள் கீழ்நாடுகளை ஆக்கிரமித்த காலமாகும்.

பூகோள், பொருளாதார, அரசியல், மத விஷயங்கள் வேறுபட்டதன் காரணமாக இந்தப் பகுதியைச் சீனாவும் தென்கிழக்குக் கடல் தீரமும், ஜப்பான், இந்தோனீசியா, இந்தியா என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றிலும் பொருளாதாரம், மதம், மொழி