பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்காட்டிக் குருவி

341

ஆட்சிவேண்டாக் கொள்கை

அல்லது வலி படிப்படியாகக் குறைந்து, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் முழுவதும் நன்றாய்விடும். இந்த வலி காணும்போது இரத்த அழுத்தம் (Blood Pressure) அதிகரிக்கும். வலி இருக்கும்போது எலெக்ட்ரோ கார்டியோகிராப் (Electro cardiograph) வைத்துப்பார்த்தால் மாறுதல்கள் காணப்படும். ஆனாலும் வலி நின்றவுடனே அல்லது சிறிது நேரத்திற்கெல்லாம் ஒருவித மாறுதலும் காணப்படாது. முக்கியமாக இரத்த அழுத்தம் அதிகமாய் உள்ளவர்களுக்கே இந்த நோய் காண்கிறது.

நோய்க் கூறு: சாப்பிட்டவுடன் ரயிலுக்கோ பஸ்ஸுக்கோ ஓடும்போது மார்பில் வலி கண்டு, அதனால் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை என்று ஒருவர் நின்றுவிட்டால், இந்த நோய் தோன்றியிருக்கிறது என்றே நிச்சயிக்கவேண்டும். சில சமயங்களில் கிரந்தி (Syphilis) நோயினால் பெருந்தமனியில் நோய் ஏற்பட்டு இதயத் தமனிகள் வாய் குறுகிப்போவதால் இதே மாதிரியான தொந்தரவுகள் ஏற்படலாம். ஆனால் கிரந்தி நோயால் ஏற்படும் வலி மெதுவாகவே உண்டாகும்; மெதுவாகவே மறையும். இந்த நோயாளி அமைதியாய் இருந்தால் மட்டும் போதாது. நாளடைவில் கொஞ்சதூரம் நடந்தாலும் இந்த வலி ஏற்படலாம். இன்னும் சிலநாள் கழிந்த பிறகு நடக்காமலே உட்கார்ந்துகொண்டிருக்கும்பொழுதும் இந்த வலி ஏற்படலாம். அப்படி உடல் முயற்சி இல்லாமல் இருக்கும் பொழுதே வலி ஏற்படுமாயின் அது நல்ல குறியன்று.

சிகிச்சை: இந்த நோய் கண்டவுடனே என்ன காரணத்தினால் காரனெரி தமனிகள் குறுகுகின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும். உடம்பில் கிரந்தி நோய் இருக்கிறதா என்று இரத்தப் பரீட்சையால் கண்டுபிடித்துத் தக்க வைத்தியத்தைச் செய்யவேண்டும். நீரிழிவு நோய் இருந்தால் அதையும் கவனிக்கவேண்டும். வலி ஏற்பட்டிருக்கும்பொழுது வலியை நிறுத்த அமில் நைட்ராஸ் (Amyl Nitras) மருந்தை முகருவதற்குக் கொடுக்க வேண்டும். இதை முகர்ந்தவுடனேயே வலி நின்றுவிடும். உணவு மிதமாகவே இருக்கவேண்டும். உடம்பு களம் அதிகமாய் இருந்தால் அதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ரெ. சு.

ஆட்காட்டிக் குருவி: தண்ணீர் அருகிலுள்ள மணற்பாங்கான இடங்களில் இக் குருவிகளைக் காண லாம்.

ஆட்காட்டிக் குருவி

மனிதரைக் கண்டால் “கிக்-கிக் கிக்-கீ” என்று கத்தி எச்சரிக்கை செய்து வட்டமிட்டுப் பறக்கும் இயல்பு வாய்ந்திருப்பதால்தான் இவைகளுக்கு இப்பெயர். ஐயப்படக்கூடிய மற்றப் பிராணிகளைக் கண்டாலும் இவை இப்படியே பறந்து எச்சரிக்கை செய்யும்.

ஆட்காட்டிக் குருவிகளுள் இருவகையுண்டு. இரண்டும் நீண்ட மஞ்சள் கால்கள் கொண்டு, ஒரு கௌதாரி அளவில், மேற்பக்கம் கபில நிறமாகவும், அடி வெளுத்தும், தலையும் கழுத்தடியும் கறுப்பாகவும் இருக்கும். இரண்டும் இருப்பிலும் போக்கிலும் ஒன்றையொன்று ஒத்திருக்கும். ஒரு வகையில், (Red-wattled Lapwing). அலகின் மேலும் கண்முன்னும் இரத்தச் சிவப்பான தோல் ஆட்சிவேண்டாக் கொள்கை மடிப்புக்கள் இருக்கும். மற்ற வகையில் (Yellow-wattled Lapwing). இத்தோல் மடிப்புகள் மஞ்சள் நிறமாக இருக்கும். மா. கி.

ஆட்சி வேண்டாக் கொள்கை (Anarchism): உலகத்தில் ஆட்சி முறையென்பதே வேண்டாம் என்னும் கொள்கையுடைய ஒருவன் சமூக விரோதி; அழிவு வேலைக்கும் கொலைக்கும் அஞ்சாதவன் என்றெல்லாம் நாம் பொதுவாக எண்ணுகிறோம். ஆனால் ‘ஆட்சி வேண்டாக் கொள்கை’யின் நோக்கம் அது அல்ல. சமூக அமைப்பைப் பற்றி அதற்குத் தெளிவான இலட்சியமுண்டு. எவ்வித ஆட்சியையும் அது எதிர்க்கிறது. “பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் மனிதனைக் கட்டுப்படுத்தித் துன்புறுத்துகிறது; ஆகவே, சமூகத்துக்கு விடுதலை வேண்டுமானால் அது மறைந்தாக வேண்டும். ஜனநாயக ஆட்சிகூட அவ்வளவு உயர்ந்ததன்று; பெரும்பான்மைக் கட்சியினர் சிறுபான்மையோரை நிர்ப்பந்திக்கும் வழிதானே அது” என்று வாதிக்கிறது. ஆட்சி வேண்டாக்கொள்கையின் குறிக்கோள் தனி மனிதனது சுதந்திரம்.

இக்கொள்கை 19ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் தோன்றிற்று. இதை விளக்கியவர்கள் பாக்குனின் (Bakunin), கிரோபாட்கின் என்னும் இருவர். பாக்குனின் ஒரு பிரபு வமிசத்தவரென்றாலும் தமது வாழ்நாளில் பெரும் பகுதியை நாடு கடத்தப்பட்டும், சிறையிலடைபட்டும் கழித்தார். இவர் கார்ல் மார்க்ஸுடன் சில சமயம் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் இருவருக்கும் நட்பு இல்லை; கோட்பாடுகளைப் பற்றிய கருத்து வேறுபாடுதான் மிகுதி. இவர் பொதுவாகத் தமது நூல்களில் இன்றைய சமூகத்தைத் தகர்ப்பது அவசியமென்பதை வற்புறுத்துகிறாரே தவிர, புதிய சமூகத்தின் உருவைத் தெளிவுபட எடுத்துக்காட்டவில்லை. கிரோபாட்கின் இக்குறையை ஓரளவு தமது நூல்களில் நீக்கினார். “ஆட்சியில்லாச் சமூகமானது ஒருவிதக் கட்டுப்பாடுமில்லாமல் வாழும்; பல தனி மனிதர்கள் சேர்ந்த குழுக்கள் வலுக்கட்டாயமில்லாத முறையில் நிறுவப் பெறும்; அந்தக் குழுக்கள் மனித வாழ்க்கையைச் சீர்பெறச் செய்யும்” என்பது கிரோபாட்கின் கருத்து.

சோஷலிசம், ஆட்சிவேண்டாமை என்னும் இரு கொள்கைகளுக்கும், நிலமும் மூலதனமும் பொதுச் சொத்தாகிவிடுவது அவசியம் என்பது போன்ற சில அமிசங்களில் ஒற்றுமையிருக்கிறது. ஆனால் சோஷலிசம் அரசாங்க அதிகாரம் பரவ வேண்டுமென்கிறது; இதுவோ அரசாங்கம் கூடவே கூடாது என்கிறது. இக்கொள்கையின் முக்கியக் கோட்பாடு, “சமூக அமைப்புக்குச் சிறிய கிராமத் தொழிற் சங்கங்கள் அடிப்படையானவை; அவற்றிலிருந்து மேலும் மேலும் விரிவடைந்த பெரிய சங்கங்கள் இயங்க வேண்டும்” என்பதாம். சோஷலிசத்தில் அதிகாரம் மேலிருந்து கீழே இறங்கி வரும். ஆட்சியில்லாச் சமூகத்தில் ஒத்துழைப்புப் பல துளி பெருவெள்ளம் என்னும் வகையில் கீழிருந்து மேலே பெருகிக்கொண்டே போகும். இக்கொள்கையை ‘ஆட்சி வேண்டாப் பொது உடைமை’ என்பதுமுண்டு.

மேற்கூறிய கொள்கையினரைத் தவிர, “சாத்விக, தார்மிக முறையில் ஆட்சி நடைபெற இயலுமாயின், ஆட்சி வேண்டப்படுவதேயன்றிப் பலாத்காரம் இன்றி அரசாங்கம் அமையாதாயின் ஆட்சி மறைவதே நல்லது” என்றும் சிலர் கூறுவர். இக்கொள்கையினர்